சனி, 23 அக்டோபர், 2010

அமெரிக்காவால் கொல்லப்பட்ட பல்லாயிரம் ஜப்பானியர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

ஜப்பான் நாட்டில் இவோ ஜிமா என்ற தீவில் இரண்டு பெரிய பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது 2000 ஜப்பான் போர் வீரர்கள் புதைக்கப்படிருக்கின்றனர் என்றும், இரண்டாம் உலகப் போரில் சண்டை நடந்த இடங்களில் இதுவே மிகக் கொடூரமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் உலகபோரின் முடிவில் அமெரிக்கா தனது படைகளால் கொல்லப்பட்ட 51 ஜப்பானிய படைவீரர்களின் உடலை இந்த தீவில் இரு இடங்களில் புதைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, இம்மாத தொடக்கத்தில் ஜப்பானிய ஆய்வாளர்கள் அந்த வீரர்களின் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட இந்த பிணக்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மீட்புக்குழு வெள்ளிகிழமை தனது அறிக்கையை ஜப்பான் பிரதமருக்கு தெரிவிக்கவிருந்தது.

இந்த தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்ட ஜப்பான் சுகாதார அமைச்சக அதிகாரிகள் 51 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அந்த இரு இடங்களிலும் மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்கள் உள்ளதாகவும் இத்தகவலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அங்கு புதைந்திருக்கும் வீரர்களின் எண்ணிகையை இப்போது உறுதிப்படுத்திக் கூறவோ அல்லது, இந்த தேடுதல் குழுவின் அறிக்கை பற்றிய வேறு விசயங்களைப் பற்றியோ இப்போது தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1945 ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின், இந்தத் தீவில் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த 12,000 ஜப்பானிய வீரர்களைப் பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதிய ஜப்பானிய அரசு அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த மீட்புக்குழுவின் கண்டுபிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெறும் ஜப்பானின் தேடுதலுக்கு ஒரு விடையைக் கொடுத்துள்ளது.

ஜப்பான் அரசால் இவோடோ என்று பெயரிடப்பட்ட இந்த தீவு அன்றைய அதிநவீன ரேடார் நிலையம், மூன்று விமான ஓடுதளம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் மிக முக்கிய தளமாக இருந்தது. இந்தத் தீவை கைப்பற்றுவது போரில் அமெரிக்காவிற்கு முக்கிய இலக்காக இருந்தது. இதன் மூலம் மட்டுமே ஜப்பானின் மீது அணு குண்டை போடும் தனது திட்டம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதியது. கிட்டத்தட்ட 22,000 ஜப்பானிய வீரர்களைக் கொன்று இந்த தீவைக் கைப்பற்றி பசிபிக் கடலில் தனது ஆதிக்கத்தின் அடையாளமாக இந்த தீவின் உயர்ந்த சிகரமான மவுண்ட் சுரிபசியில் தனது கொடியை அமெரிக்கா ஏற்றியது.

இப்போரில் 6,821 அமெரிக்கர்களும், 21,570 ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் டஜன் கணக்கில் பிணங்கள் தோண்டியெடுக்கப் பட்டுவந்தன. ஆனால் 12,000 ஜப்பான் மற்றும் 218 அமெரிக்க வீரர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.

தற்போதைய அறிக்கையின் படி ஜப்பானின் ஓடுதளத்திற்கு அருகில் 2000 உடல்களும் சுராபிச்சி சிகரத்தின் அடிவாரத்தில் 70 முதல் 200 உடல்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் இவற்றை மொத்தமாக மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.ஜனதாவும் ஊழல் கட்சிதான்: கூட்டணிக்காக தே.மு.தி.க. அலையவில்லை; திருப்பூரில் விஜயகாந்த் பேச்சு

மத்திய அரசின் தவறான ஏற்றுமதி கொள்கைளை கண்டித்தும், பருத்தி ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
 
தே.மு.திக. தலைவர் விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
 
மத்திய அரசு கடைபிடித்து வரும் பருத்தி ஏற்றுமதி கொள்கையால் அனைத்து ஜவுளித் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சு, நூல் விலையேற்றத்தால் விவசாயிகளுக்கும் நல்லவிலை கிடைக்கவில்லை. சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து திருப்பூரை விட்டு வெளியேறுகின்றனர்.
 
வேலை வாய்ப்பின்றி உள்ள திருப்பூர் மக்களிடம் தற்போது பசிதான் நிறைந்துள்ளது. ஆனால் டாலர் சிட்டி என்று உண்மைக்கு மாறான தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். பெருகி வரும் வேலையிழப்புக்கு காரணமான பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்து கொப்பரைத் தேங்காய்களை கொள்முதல் செய்வது போல் பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூவம் விவசாயிகளுக்கும் நல்ல விலையை கொடுக்க வேண்டும்.
 
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என இந்திய ஜவுளித்தொழில்களுக்கு போட்டியாக உள்ள நாடுகளுக்கே பருத்தி ஏற்றுமதி செய்வது கத்தியால் குத்துபவன் கையிலேயே கத்தியை கொடுப்பது போல் உள்ளது.
 
சுயமரியாதை இயக்கமான தி.மு.க.வை உருவாக்கிய அண்ணா, மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது என்றார். ஆனால் தற்போது தி.மு.க.வை வழி நடத்தும் கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி வைத்து அண்ணா உருவாக்கிய தி.மு.க.வை மாற்றிவிட்டார்.
 
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறுவதுபோல் தி.மு.க.வினர் சொத்துக்கணக்குகளை காட்ட வேண்டும். பா.ஜ.க. ஆட்சி புரியும் இடங்களில் ஊழல் இல்லை என்கிறார் அத்வானி. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 25 கோடி லஞ்சம் கொடுக்கின்றனர். அந்த வகையில் பா.ஜ.க.வும் ஊழல்தான் புரிகிறது.
 
தற்போது தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்று பேசப்படுகிறது. நான் என்னை நம்பி வந்த மக்களை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்கிறேன். கூட்டணிக்காக தே.மு.தி.க. அலையவில்லை.
 
உங்களைப் பார்த்ததும் நான் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன். அப்படி நான் நடத்தும் மாநாட்டில் குடும்பம் குடும்பமாக பிள்ளை, குட்டிகளுடன் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நமக்கு நாமே பாதுகாப்பு என்பதைபோல் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் நான்பாதுகாப்பு கொடுக்கிறேன்.
 
மேற்கண்டவாறு விஜயகாந்த் பேசினார்.
 

“பூத்” ஏஜெண்டுகள் கூட இல்லாத கட்சி: தமிழக காங்கிரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

கால் முளைச்ச நெருப்பு என்ற குறுந்தகடு வெளியிட்டு விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது.
 
விழாவில் கவிஞர் அறிவுமதி பேசும்போது, திருமாவளவனை பார்த்து பதவி விலக சொல்கிறார்கள். தலித்துகள் பாராளுமன்றம் போக காங்கிரஸ் மறுக்கிறது, தடுக்கிறது.

இதை நாங்கள் வன்மை யாக கண்டிக்கிறோம். விடுதலை சிறுத்தைகளின் செல்வாக்கை வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புரிய வைப்போம் என்றார்.
 
இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவள வன் எம்.பி. பேசியதாவது:-
 
காங்கிரஸ் கட்சியினை விமர்சிக்க எனக்கு உரிமை உண்டு. நான் அதன் கொள்கை களை ஏற்பவன் அல்ல. ஏன் என்றால் நான் அம்பேத்கரின் வழி நடப்பவன். ஆனால் காங்கிரஸ் கட்சியினை வளர்த்தவர்கள் என் பாட்டன் முப்பாட்டன்கள். என் பாட்டன் கக்கனும் அவர் தலைவர் காமராஜரும் வளர்த்த கட்சி அது.
 
என்னை பதவி விலகச் சொல்கிறார்கள் சிலர். விடுதலை சிறுத்தை கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்கள் தான் போட்டியிட்டது. 2 இடங்களில் எங்களுக்கு காங்கிரசார் தேர்தல் பணி யாற்றினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்களில் நாங்கள் பணி யாற்றினோம். எங்கள் தொண் டர்கள் காங்கிரசுக்கு பூத் ஏஜெண்டாக செயல்பட்டார்கள். பூத் ஏஜெண்டுகள் கூட காங்கிரசில் இல்லை.
 
ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற என்னை பதவி விலக சொல்கிறார்களே... காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதியில் பதவி விலகுவார் களா?
 
காங்கிரசை பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என்று சொல்கிறார்கள்? என்னுடைய மூதாதையர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள். தாத்தா கக்கனுடைய பேரனாக இருந்து கேட்கிறேன். கக்கன் மருத்துவமனையில் கேட்பா ரற்று கிடந்தார். அவரை காங்கிரசார் கண்டுகொள்ள வில்லை.
 
கக்கனுடைய தம்பி வடிவேலு வறுமையில் வாழ்ந்தார் அவரையும் கண்டு கொள்ளவில்லை. மரகதம் சந்திரசேகர், நிலக்கோட்டை பொன்னம்மாள், தென்காசி அருணாசலம் போன்ற தலித்துக்கள் போர்வையில் வளர்ந்த கட்சி தான் காங்கிரஸ். அந்த உரிமையில் தான் கேட்கிறேன். ஏதோ திடீரென காங்கிரசாரை கேள்வி கேட்கவில்லை.
 
1967-க்கு பிறகு நடந்த அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதன்பிறகு காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உரிமையை புறக்கணித்து வருகிறது. தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்து வருகிறது.
 
இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சரவை மாற்றம் - எவ்வாறு இருக்கும்?

மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு இன்று இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு இன்று (22-10-2010) வெளியாகாவிட்டால் அக்டோபர் 29ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் உறுதி செய்யப்பட்டால், மாற்றம் கீழ்க்கண்டவாறு இருக்கும் என்று இந்நேரம்.காமுக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஜெய்பால் ரெட்டி: தற்போது மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஜெய்பால் ரெட்டி ஆந்திரப் பிரதேச முதல்வராக நியமிக்கப்படுவார்.

ரோசைய்யா : ஆந்திரப் பிரதேச முதல்வராக இருந்து வரும் ரோசைய்யாவுக்கு எதிராக ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து, அவர் முதல்வர் பதவியில் நீக்கப்பட்டு மத்திய அமைச்சராகப்படுவார்.

அம்பிகாசோனி: மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்து வரும் அம்பிகா சோனி டில்லி முதல்வராக நியமிக்கப்படக் கூடும்.

ஆ.ராசா : மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் அ.ராசா மீது கூறப்படும் ஏராளமான புகார்களை அடுத்து, அவருக்கு புதிய இலாகா ஒதுக்கப்படும்.

கபிலா வாத்சயன் : மாநிலங்களவை உறுப்பினராக கபிலா வாத்சயன் புதிதாக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார். கலாச்சாரத்துறை அவருக்கு ஒதுக்கப்படும்.

சவூதி: 4 மில்லியன் ரியால் கொள்ளை - ஆறுபேர் கைது !

சுமார் 4 மில்லியன் ரியால்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ரியாத் காவல்துறையினர் சிறப்பாகச் செயற்பட்டு அறுவர் கொண்ட கொள்ளைக்கும்பலை கைது செய்துள்ளனர். இதில் ஐவர் ஆசிய நாட்டவர் என்றும் மற்ற ஒருவர் மண்ணின் மைந்தர் என்றும் தெரிய வந்துள்ளது
ரியாத் நிறுவனமொன்று வங்கியில் செலுத்த பணம் கொண்டு சென்றபோது, அந்த வாகனத்தை வழிமறித்த கொள்ளையர்கள் அதிலிருந்த ச.ரி 40 இலட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளர். வழிமறிக்க உதவியாக அவர்கள் கொண்டு வந்த வாகனமும் திருடப்பட்ட ஒன்று என்றும், சம்பவத்திற்குப் பிறகு, தடயத்தை அழிக்கும் முயற்சியில் அந்த வாகனத்தையும் திருடர்கள் தீவைத்து எரிக்க முயன்றனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
இது குறித்து நிருபர்களிடம் பேசிய ரியாத் நகர காவல்துறை மக்கள் தொடர்பாளர் சயீத் அல் கஹ்த்தானி, கொள்ளையர்களின் வசிப்பிடத்தை காவல்துறை ஆறுமணிநேரம் சோதனை செய்ததில் சுமார் 37 இலட்சம் ரியால்கள் மீட்கப்பட்டதாகவும், இஃதன்றி கைபேசிகள், கடவுச்சீட்டுகள், முத்திரைகள், இராணுவச் சீருடைகள், ச.ரி 6,000க்கான காசோலை ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
மேலும் அவர் தெரிவிக்கையில் "கொள்ளையடிக்கப்பட்டோர் முழுமையான விபரங்களைத் தராவிட்டாலும், காவல்துறை சிறப்பாகச் செயற்பட்டு பத்தே நாள்களில் இக்குற்றத்தை முறியடித்துள்ளது" என்றார்.

பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீகார் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மீது ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் 6 கட்டமாக நடைபெறுகிறது. இதன் முதல் கட்ட தேர்தல் வியாழக் கிழமையன்று நடைபெற்று முடிந்தது. இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ள லைவுரியா தொகுதியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரதா சிங்கிற்கு ஆதரவு திரட்ட, மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பிரதா சிங்கை நோக்கி செருப்பை வீசினார். உடனே நிதிஷ் குமார் பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. செருப்பை வீசியவரை போலீசார் கைது செய்தனர்....