ஞாயிறு, 17 அக்டோபர், 2010

புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும்

இறைவன் எந்த நோக்கத்திற்காக மனிதனைப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கம் நிறைவேற மனிதன் மனிதனாக வாழவேண்டும். அப்போதுதான் மனிதன் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிப் பாதையை அடையமுடியும். ஆயினும் மனிதன் அந்த வெற்றிப் பாதையில் நடைபோட ஷைத்தான் தடையாக இருக்கிறான். அவனது சபதம் எப்படியும் மனித வர்க்கத்தை எரியும் கொடும் நரகில் கொண்டு தள்ளுவதே. எந்த மனிதனின் காரணமாக தனக்கு நரக தண்டனை கிடைத்ததோ அந்த மனிதனையும் நரகத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் ஷைத்தான்.

இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கையாக இருப்பதால் பரிட்சையின் நிமித்தம் அல்லாஹ் மனிதனுக்கு அவனது விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள இரண்டு வழிகளைக் கொடுத்துள்ளான். ஒரு வழி அவனை சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். இரண்டாவது வழி அவனை நரகில் கொண்டு சேர்க்கும். மனிதனின் படைப்பில் அடிப்படையில் அவனுக்கு இயற்கையான பல உணர்வுகள் இருக்கின்றன. பசி உணர்வு, காம உணர்வு, இன உணர்வு, மொழி உணர்வு, பிரதேச உணர்வு, தேச உணர்வு என்றெல்லாம் அந்த உணர்வுகள் பரிணமிக்கின்றன. ஷைத்தான் இந்த உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு மனிதனை மனித நிலையிலிருந்து மிருக நிலைக்கு மாற்றி விடுகிறான்.

ஷைத்தானின் இந்த முயற்சிக்கு மனித இனத்திலிருந்தே சிலர் துணை போகிறார்கள். அவர்கள் மறுமையை மறந்து இவ்வுலக சுகத்தில் மயங்கி தறி கெட்டுச் செல்கிறார்கள். இவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் மதப்புரோகிதரர்கள், அரசியல்வாதிகள். இறைவனை நெருங்கச் செய்வதாக கூறிக்கொள்ளும் புரோகிதரர்கள் அவர்கள் உண்டு கொழுப்பதற்கும், உலக சுகங்களை அடைவதற்கும் சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே அவர்கள் மக்களின் உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்; உலக ஆதாயம் அடைகிறார்கள்.

இதே போல் அரசியல்வாதிகளும் ஆட்சியில் அமரும் ஆசையில் மக்களின் வாக்குச் சீட்டைக் குறியாகக் கொண்டு இன, மொழி பிரதேச உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். உணர்வுகள் மிதமாக இருக்கும்போது மனித வர்க்கம் பலன் பெறுகிறது. அவை வெறிகளாக மாறும்போது மனிதனே மனிதனை வெட்டிச் சாய்க்கும், மனித இரத்தத்தை ஆறாக ஓடச் செய்யும் நிலை ஏற்படுகிறது.

புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும் தங்களின் அற்ப சுகங்களை தியாகம் செய்து மக்களின் நல்வாழ்வுக்கு துணை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும். எனவே மக்களே அவர்களின் கெடுதிகளைப் புரிந்து அவர்களை ஓரம் கட்டவேண்டும். ஆனால் கைசேதம் கசாப்புக் கடைக்காரர் பின்னால் செல்லும் ஆடுகளைப்போல், மக்கள் வெள்ளமும் இந்த புரோகிதரர்களின் பின்னாலும் அரசியல்வாதிகளின் பின்னாலும் செல்லுவது அதிகரித்தே வருகிறது. காரணம் மக்களிடையே போதிய சுய சிந்தனை இல்லை.

மக்களின் இந்த நிலையை மாற்றிட ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அவனது போதனைகளை கடைப்பிடிப்பதின் மூலம்தான் இவர்களிடமிருந்து இந்த மனித சமுதாயம் விடுபட முடியும். எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இந்த சுயநல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களை ஏமாற்றி அவர்கள் ஆதாயம் அடைவதில் இந்த இருசாரரும் கூட்டுள்ளவர்கள்தான். இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் இந்த அரசியல் தலைவர்கள் பின்னாலும், மதப்புரோகிதரர்கள் பின்னாலும் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிட வேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாற வேண்டும்.

இஸ்லாம் ஓர் அதிசயம்

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.

இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.

எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?

பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?

ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?

இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.

முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.

தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?

இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;

يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.

Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.

இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.

உடை கழற்றும் ஆண் வக்கிரம்!

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை
அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை
என்பது புலப்படும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக" பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

"பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்"?.
அவர் பதிலளித்தார்.
"நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்"

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல்
சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்."எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்."

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.

ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

I A S தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து IAS அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு
செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?
1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை"
அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.

சன்னி வக்ஃபோர்டு தலைவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் சந்திப்பு

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை திரும்ப அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வருவதாக உ.பி மாநில சன்னி வக்ஃபோர்டு தலைவர் சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார் அவர்.

வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பார்கள் இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.



சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன்- அன்சாரி

முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரியையும் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI, இமாம் கவுன்சில் தலைவர்கள் சந்தித்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை உலக முஸ்லிம்களின் பிரச்சனை என அன்ஸாரி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.

வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்

இப்பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள்.

அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.

அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.

பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.

இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.

அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.

அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤ம்) ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன.

முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)

ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.

அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும்.

குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை.

எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.

இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்