’’2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2001-ஆம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் வரவேற்கிறேன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினை கடைப்பிடித்ததன் காரணமாகத் தான் இது போன்றதொரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.
இந்த ஊழலின் நாயகரான முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை ஏன் விசாரிக்கவில்லை? என்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டபிறகு தான் தன்னுடைய நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத் துறை அண்மைக் காலமாக தீவிரப்படுத்தி இருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்ததோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிந்துவிடவில்லை என்று தொடர்ந்து நான் கூறி வந்துள்ளேன். இது ஓர் ஆரம்பம் தான் என்றும் கூறியிருந்தேன். இதற்குப் பிறகு தான் இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தன.
ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ராசா மத்திய அமைச்சராக இருந்த போது உச்சத்திற்கு சென்றாலும், முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழலை 2001-ஆம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
இருப்பினும், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்பதை காரணம் காட்டி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தவிர்க்கக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வரம்பு என்பது நிச்சயமாக சில வரையறைகளுக்கு உட்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பாலானோர் இந்த ஊழலின் பின்னணியிலும், இந்த ஊழலுக்குத் துணையாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்க முடியாது.
இந்த ஊழலில் உள்ள முழு உண்மையும் வெளிவர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பது தான். எனவே, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கூர்ந்து கண்காணிக்கும் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே சமயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.