ஞாயிறு, 24 அக்டோபர், 2010

குஜராத்தில் இளம்பெண் மீது திராவகம் வீச்சு!

மோடியின் தலைமையில் ஆட்சி நடந்து வரும் குஜராத் தலைநகர் அகமதாபாதில் சமீப காலமாக இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சமீபத்தில் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நேஷனல் டிசைன் இன்ஸ்டிடியூட்டின் பெண்கள் விடுதியில் நிர்வாண கோலத்தில் நுழைந்த ஒரு மனிதன் அங்கிருந்த இளம்பெண் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளான் இதனை தொடர்ந்து அவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் 25 வயது நிரம்பிய பெண் ஒருவர் மீது திராவகம் வீசிய கொடூர சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. அகமதாபாத் ஷாபூர் பகுதியை சேர்ந்த சுனிதா என்பவர், திருமணமான இவர் நேற்று ஷாகிபாக் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு முன்னால் வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுனிதா மீது திராவகத்தை வீசிவிட்டு தப்பியோடி விட்டார்.

கணநேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் நிலைகுலைந்து முகம் வெந்து துடித்த சுனிதாவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சுனிதாவுக்கு அறிகமுகமானவர் யாரோதான் திராவகம் வீசியுள்ளார், விரைவில் பிடித்து விடுவோம் என்று அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்!

புதுடெல்லி,அக்.24:தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்வதை தான் நேரடியாக கண்டதாக, குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா கண்ணீர் சாட்சி அளித்துள்ளார்.


குல்பர்கா சொசைட்டி கூட்டு இனப் படுகொலையில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் பொழுதுதான் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தார் ஸாகியா. 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.

ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்திருந்தது.

"கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பந்த் அறிவிக்கப்பட்டதால் வன்முறைக்களமாக மாறியது சூழல். அதிகாலை முதல் அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எங்கள் வீட்டை நோக்கி வரத் துவங்கினர்.

அவர்களை ஹிந்துத்துவாவாதிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க போலீஸை அழைக்க அவர்கள் ஜாஃப்ரியிடம் கோரினர்.

காலை 7.30 க்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த ஜாஃப்ரி, ஒன்றாக இருக்கக் கூறியதுடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் எனக் கூறினார்.

இந்த நேரத்திலிருந்தே ஜாஃப்ரி தொலைபேசியில் பலரையும் அழைக்க ஆரம்பித்தார். 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் பி.ஸி.பாண்டே வீட்டிற்கு வந்து ஜாஃப்ரியை வெளியே அழைத்தார். இதர முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தனது காரில் ஜாஃப்ரியையும், குடும்பத்தினரையும் மட்டும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார் பாண்டே.

ஆனால், மிரண்டுபோன இதர முஸ்லிம்களை விட்டுச்செல்ல ஜாஃப்ரி மறுத்துவிட்டார். பாண்டே திரும்பிச் சென்றபிறகு, வன்முறையாளர்கள் சிறிய கேட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டை நெருங்கிய பொழுது வீட்டின் மாடிக்கு செல்லுமாறு என்னிடம் கூறினார் ஜாஃப்ரி.

கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஜாஃப்ரியிடம் வெளியே வருமாறு கூறினர். தான் வெளியே வருவதாகவும், ஆனால் தனது வீட்டில் புகலிடம் தேடி வந்தவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் எனவும் ஜாஃப்ரி வன்முறையாளர்களிடம் கூறினார்.

வெளியேவந்த ஜாஃப்ரியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆடைகளை கீறி எறிந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி எறிந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்." -இதனை சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி பி.யு.ஜோஷியின் முன்னால் ஸாகியா தெரிவித்தார்.

"ஆனால் போலீஸ் வந்தது மாலை 5.30 மணிக்காகும். வீட்டின் உள்ளே ஒழிந்திருந்த எங்களை வெளியேவருமாறு கூறினர். 18-19 உடல்கள் வீட்டின் வராந்தாவிலும் இதர இடங்களிலும் கிடந்தன. அதில் ஒன்று, தங்களுடைய அயல் வீட்டாரான கஸம்பாயின் கர்ப்பிணியான மருமகளாவார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்து சிசு வெளியே வந்திருந்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அக்கிரமக்காரர்கள்தான் இந்தக் கொலைகளை நடத்தினர்." இவ்வாறு ஸாக்கியா கூறினார்.

அதேவேளையில், குறுக்கு விசாரணையின்போது ஸாகியாவுக்கு மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார், வழக்கறிஞர் ஷொஹைல் திர்மிஜி, ரைஸ்கான் பத்தான் ஆகியோருடன் தொடர்பிருப்பதாக கூற முயன்றார் எதிர்தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன். ஆனால், ஸாகியா அதனை மறுத்தார்.


டீஸ்டா செடல்வாட்டிடமிருந்து ஒரு உதவியையும் தான் பெறவில்லை எனவும், பல காலமாக அவரை தான் காணக்கூட செய்யவில்லை எனவும் ஸாகியா தெரிவித்தார்.


இச்சம்பவத்தில் ஸாகியா கண்ட ஏதேனும் உடல் சேதமாக்கப்பட்ட இறந்துப்போன ஒருவரின் பெயரைக் கூற இயலுமா என எதிர் தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் கேள்வி கேட்டபொழுது, தனது கணவரை கொலைச் செய்த பாதகர்களிடம்தான் இதனைக் கேட்கவேண்டும் என ஸாகியா பதிலளித்தார்.

2002 குஜராத் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்!

2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று (22.10.10) ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் இந்த குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்திரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரேஷ் குமார் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஜெய்ப்பூரில் ரகசியக் கூட்டம் போட்டனர். அதில் அஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை, அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

ஆ.எஸ்.எஸ் தான் இந்தியா முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

அலகாபாத் தீர்ப்பு அறிவார்ந்த ஒன்றல்ல; பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்மீதான தண்டனையை உறுதிபடுத்துக!- திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்கள்!

திருப்பத்தூர், அக். 23- வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசில் தனி அமைச்சகம் தேவை என்ற தீர் மானம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் திருப்பத் தூரில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அயோத்திப்பிரச்சினையும்-அலகாபாத் தீர்ப்பும்
450 ஆண்டுகளுக்குமுன்பு அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி - 1992 டிசம்பர் 6 ஆம் தேதி - பா.ஜ.க. - மற்றும் சங் பரிவார்க் கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டது.

18 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீதான தண்டனை இதுவரை வழங்கப்படாத நிலையில்,
அயோத்தி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சி.யு. கான் ஆகிய மூவரும் சட்டத்தின் அடிப்படையில், ஆவ ணங்களின் அடிப்படையில் இல்லாமல் வெறும் நம்பிக்கை என்பதை முக்கியமாக மய்யப்படுத்தி வழங்கியுள்ள தீர்ப்பு சட்டம், நீதி, மதச் சார்பின்மை, சிறு பான்மை மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துப் பொதுத் தன்மைகளையும் அடித்து நொறுக்கக் கூடிய தாகும்.

சட்டங்களையும், சாட்சியங்களையும் புறந்தள்ளி, சட்டப்படியான என்பதற்குப் பதிலாக நம்பிக்கை மன்றம் என்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

சிந்தனைக்கு இடம் கொடுக்காத நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையாளர்கள் பொதுவாகப் பயன் படுத்தும் மலிவான ஒரு சொல்லாகும். அதனை ஒரு உயர்நீதிமன்றம் பயன்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல!

யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கட்டப் பஞ் சாயத்து முறையில் பாகப் பிரிவினை வழக்காக இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் மாற்றிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில், அயோத்திப் பிரச்சினையில் இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்துக் கூறத் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், மீண்டும் அலகாபாத் தீர்ப்பினை மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் விசாரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது விசித்திரமான நிலையாகும்.

1947 ஆகஸ்ட் 15 இல் இருந்த நிலை எதுவோ அதுவேதான் தொடரப்படவேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பற்றிய சிறப்புச் சட்டம் கூறும் நிலையினை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை

450 ஆண்டு வரலாறு படைத்த முஸ்லிம் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்து நொறுக்கிய குற்றவாளிகள் கடந்த 18 ஆண்டுகாலமாக எவ்விதத் தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திர மாகத் திரிந்து வருகிறார்கள். இவர்களில் பலரும் மத்திய - மாநில அமைச்சர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்படும் நிலையில், இதில் மேலும் காலம் கடத்தாமல் உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனைக்கு உட்படுத்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுவதன்மூலம் நீதி, நிருவாகம் இவற்றின்மீது மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையை இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்றும், வன்முறைக்கு ஊக்கம் தருவதற்கு இந்தக் காலதாமதம் பெரிதும் உதவிடும் அபாயத்தையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் - தூதர்களாக தமிழர்கள் நியமனம் - தனி அமைச்சகம் உருவாக்க வேண்டுகோள்

அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடு களுக்குத் தமிழர்களையே தூதர்களாக நியமிக்கவேண் டும் என்று மத்திய அரசையும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாநில அமைச்சரவையில் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பல வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு பலமாகி, தமிழர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண முயல்வது அதன் பணியாக அமைதல் சிறப்பாகும். பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங் களில் இப்படி ஒரு தனி அமைப்பு உள்ளது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

வரும் தேர்தலில் தி மு க ஆட்சியைப் பிடிக்கத் தடையாய் இருப்பவை!

முன்னர் அலசப்பட்டவற்றில் இரண்டு செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:

1. எதிர்வரும் தேர்தலில் தி மு க வென்று, எதிர்பார்த்துள்ளபடி கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் மு.க. ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு. (http://inneram.com/2010092510823/karunanithis-retirement-and-tamilnadu-politics)

2. அனுதாப அலை ஏதும் வீசாவிட்டால் இப்போதுள்ள கூட்டணியால் ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது. (http://inneram.com/2010101611222/admk-next-ruling-party-last-part)

சென்ற வாரம் மதுரையில் திரட்டப்பட்ட மாபெரும் மக்கள் வெள்ளம், கடந்த அலசலில் சொல்லியிருந்ததைப்போல ஜெயலலிதாவுக்கு மயக்கத்தைத் தந்து விட்டது என்பது, “ஐம்பது லட்சம்” என்ற அவரது பேச்சில் தெளிவாகிறது. அதுவும் எதிர்க்கட்சிகளின் சதியால் 75% மக்கள் வராமலேயே ஐம்பது லட்சம் மக்கள் அவருக்காகக் கூடினராம்..

"மதுரைக்கு வந்துபார்; கொலை செய்வோம்" என்று மிரட்டல் கடிதங்கள் வந்ததால் தென் மாவட்டத் தொண்டர்கள் திரண்டும் மக்கள் திரட்டப்பட்டும் மதுரையில் கூடினர். "ஜெயலலிதா தம் உரையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே மக்கள் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுவிட்டனர்" என்றும் "டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து மது பாட்டில்களைக் கொள்ளையடித்துக் குடித்தனர்" என்றும் ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், மதுரையில் கூடியதில் பாதி, கட்சிக்காரர்கள் அல்லர்; திரட்டப்பட்ட கூட்டம் என்பதில் ஐயமில்லை. தொண்டர்களை உசுப்பேற்றிக் கூட்டத்தைத் திரட்டுவதற்காகக்கூட மிரட்டல் கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கலாம் என்று ஆளுங்கட்சிக்காரர்கள் கூறும் கருத்து தள்ளிவிடத் தக்கதன்று. தாக்கும் எண்ணம் உள்ளவர்கள் பல முறை மிரட்டல் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது சாதாரண அறிவுடையோருக்கும் புரியும்.

மாபெரும் கூட்டத்தைக் கூட்டித் தம் செல்வாக்கைக் காட்டி, அதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்குவதுதான் திட்டம் என்றால் ஜெயலலிதா அத்திட்டத்தின் முதல் கட்டத்தில் ஜெயித்து விட்டார் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏனெனில் நாள்தோறும் மாறும் வானிலைபோல் அரசியல் சூழ்நிலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. நேறறுப்போல் இன்றில்லை. தமிழகத்தை ஆளும் தி மு க தன் வலிமையில் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியிலும் கட்சியிலும் கருணாநிதி கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

தம்மால் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களும் இலவசங்களும் மட்டுமே வாக்குகளைச் சேகரித்துத் தந்து விடும் என நம்பும் அளவுக்குக் கருணாநிதி அரசியல் அறியாதவரல்லர். அவர் அறிவித்த திட்டங்களையும் இலவசங்களையும் மக்களிடத்தில் சேர்க்கும் பணியைச் செய்யும் வருவாய்த்துறை போன்ற பல துறை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்த அளவு ஊதிய உயர்வு கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள வேறுபாடும் தமிழக அரசின் பிற துறைகளின் ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வும் இவர்களை விரக்தியில் வைத்துள்ளன.

அடுத்து, தமிழகத்தில் திடீரென உயர்ந்துள்ள கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பி, செங்கல், மணல் போன்றவற்றின் கற்பனைக் கெட்டா விலை உயர்வு, சொந்தவீடு எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களுக்குக் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.

கருணாநிதி, எவ்வளவுதான் இலவசங்களை அள்ளி வழங்கினாலும் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதில் அக்கறைகாட்டும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய முடியா வண்ணம் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் காய்கறிகளின் விலையும் தாறுமாறாக ஏறி வரும் நிலையை அவசர நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டிவரும். ஏழை முதல் கோடீஸ்வரன்வரை அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை உயர்வும்கூட இந்தியாவை ஆண்ட ஜனதாக் கட்சி ஆட்சியை இழக்க நேர்ந்த காரணங்களுள் ஒன்றாக அப்போது கூறப்பட்டதைக் கருணாநிதிக்கு நாம் நினைவூட்டத் தேவையில்லை.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அடிக்கடி உயரும் எரிபொருள் விலைகளால் தனியார்ப் பேருந்துகள் தம் விருப்பத்திற்கேற்பக் கட்டணங்களை உயர்த்துவதையும் தனியார்ப் பள்ளிகளின் கல்விக் கட்டண உயர்வுக் குழப்பங்களும் மின்கட்டண உயர்வும் மக்களின் அதிருப்தியைக் கூட்டுகின்றன.

இந்த அதிருப்திகள் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ய்பைத் தள்ளிவிட முடியாது. ‘அடுத்த ஆட்சியும் தமதே’ எனும் தி.மு.க.வினரின் கனவு பலிப்பதற்குத் தடையாக உள்ள இவற்றை ஜெயலலிதா முறையாகப் பயன்படுத்திக் கொண்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் உள்ள பொதுவான வாக்காளர்களை வளைக்கலாம். கூடவே காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முயற்சியை விடாமல் தொடரலாம். அது தி.மு.க.வுக்குக் கடும் சவாலாகவே இருக்கும்.

அதுபோல,

. . . . அழகிரி கொடுத்து வரும் தலைவலிகள் வரும் தேர்தலில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

. . . . உட்கட்சிப் பூசலால் தி.மு.க. நொண்டியடித்தால், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தொடர விரும்பாது. வேகமாக ஓடும் குதிரையில்தான் சவாரி செய்ய எவருமே விரும்புவர்.

. . . . அடுத்து வர இருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் டெலிகாம் அமைச்சர் ராசாவின் இலாகா மாறலாம்; அல்லது பதவியே பறிக்கப்படலாம். அப்படி ஒரு நிலை வரும்போது காங்கிரஸ் தி.மு.க. உறவு ஊசலாடலாம்.

. . . . வாய்ப்புக்காககவே காத்திருக்கும் ஜெயலலிதா மாபெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுகிறார். முன்னர் ஜெயலலிதா சோனியாவைக் கீழ்த்தரமாகத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை சோனியா மறந்து விட்டால் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுக்குக் கதவு திறக்கலாம். காங்கிரஸ் கட்சியில் உள்ள இளங்கோவன் போன்ற தி.மு.க. எதிர்ப்பாளார்கள் ராகுல்காந்தியின் மூலம் இதற்கு முயலலாம்.

கருணாநிதி உடனடியாகக் களமிறங்கிக் கட்சியிலும் ஆட்சியிலும் தம் பிடியை இறுக்கி, விலைவாசிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உட்கட்சிப் பூசலையும் வெற்றிக்குத் தடையாய் உள்ளவற்றையும் களைந்து விட்டுக் காங்கிரஸ் கட்சியுடன் சிலவற்றில் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் இப்போதிருக்கும் கூட்டணி நிலைக்கும். ராமதாஸின் பா.ம.க.வும் இக்கூட்டனியில் இணைந்து விட்டால், மீண்டும் தி.மு.க. ஆட்சி எனும் தி.மு.க.வின் கனவு பலிக்கும்.

மும்பையில் விமானங்கள் மோதல்! பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!!

மும்பை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இர‌ண்டு ‌தனியார் விமான‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று மோ‌தி‌க் கொ‌ண்ட ‌நிக‌ழ்‌வில் 100க்கும் அதிகமான பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் அங்கு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது.

‌மும்பையில் உள்நாட்டு முனையத்தில் கி‌ங்‌பிஷ‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு சொ‌ந்தமான ‌விமான‌ம் ஒ‌ன்று ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் சர‌க்குகளை இற‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தது. அப்போது மு‌ம்பை‌யி‌ல் இரு‌ந்து ம‌ஸ்க‌ட் செ‌ல்லு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வே‌‌‌ஸ் ‌விமான‌ம் ஒ‌ன்று ‌கி‌ங்‌ஃபிஷ‌ர் ‌விமான‌ம் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த தட‌த்தி‌ல் மஸ்கெட் புற‌ப்பட தயாரா‌கி ஓடுபாதையில் வேகமாக வந்து கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போது ‌ ஓடுபாதையி‌ல் கிங்ஃபிஷரின் பி‌ன்‌புறமாக வ‌ந்த ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஸ் ‌விமான‌த்‌தி‌ன் இற‌க்கைக‌ள் ‌நி‌ன்று கொ‌ண்டி‌ரு‌ந்த கிங்ஃபிஷர் சர‌க்கு ‌விமான‌த்‌தி‌ன் ‌பி‌ன்புற‌ம் உர‌சி உ‌ள்ளது. இதனா‌ல் இர‌ண்டு ‌விமான‌ங்களு‌ம் பய‌ங்கர ச‌த்த‌த்துட‌ன் அ‌தி‌ர்‌ந்து‌ள்ளது. ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஸ் ‌‌விமான‌ம் ‌கி‌ங்ஃ‌பிஷ‌ர் ‌விமான‌த்துட‌ன் இடித்த ‌சி‌றிது நேர‌த்‌தி‌லேயே ‌நிறு‌த்த‌ப்‌ப‌ட்டதா‌ல் பெ‌ரிய அள‌வி‌ல் ‌நிகழவிரு‌ந்த விபத்து த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வே‌ஸ் ‌விமான‌த்‌தி‌‌‌‌ன் இற‌க்கைக‌ள் இலேசாக சேத‌ம் அடை‌ந்து‌ள்ளது. ‌உடனடியாக ஜெ‌ர் ஏ‌ர்வே‌ஸ் விமான‌த்‌தி‌ற்கு‌ள் இருந்த சுமா‌ர் 100 பய‌ணிக‌ள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகா‌ப்பாக ‌‌கீழே இற‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இச்சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் பயங்கரம்! பட்டப்பகலில் நடுரோட்டில் மீனவர் வெட்டிக்கொலை!

மோட்டார் சைக்கிளில் வந்த மீனவரை நடுரோட்டில் ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் கடலூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்தில் வசிக்கும் மீனவர் வரதன் என்பவரின் மகன் மாரியப்பன் (40). மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலளர் ஆவார். இவர் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது இவர் நேற்று மதியம் அமுது என்கிற ஆராவமுதன், நாகராஜன், புதுச்சேரி தேவா ஆகியோருடன், புதுச்சேரிக்குச் சென்று தீபாவளி பண்டிகைக்கு துணி எடுத்துக் கொண்டு, இரண்டு மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே வந்தபோது, பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மாரியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தற்செயலாக நடந்ததாக கருதிய மாரியப்பன் அதை பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த தேவனாம்பட்டினம் ஞானசேகரன், முன்னால் சென்ற மாரியப்பன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த அமுது என்கிற ஆராவமுதனை பிடித்து இழுத்தார்.

இதனால் நிலை தடுமாறி, மாரியப்பனும், அமுதுவும் கீழே விழுந்தனர். உடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஞானசேகரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல், கீழே விழுந்த மாரியப்பனை சுற்றி வளைத்து, தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதைக் கண்டு பயந்துபோன அமுது, அங்கிருந்து தப்பியோடி கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்ததும் உடனடியாக கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, ஏட்டு சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்

மாரியப்பன் படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர், தேவனாம்பட்டினம் பகுதியில் பதட்டம் நிலவி வருவதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து, ஆறு பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.