வெள்ளி, 4 மார்ச், 2011

ரூ. 35 லட்சம் ரொக்கப்பணம் ; 4 கிலோ தங்கம் ;சென்னை டிரேடுமார்க் துணை பதிவாளர் கைது

நாட்டில் உள்ள முக்கிய கம்பெனிகள் தங்களுடைய பிராண்ட்மார்க் ( டிரேட்மார்க்) குறியீட்டை பதிவு செய்யும் சென்னை அலுவலகத்தின் துணை பதிவாளரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்திய திருநாட்டில் அரசியல்வாதிகளுக்கோ , மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கோ பணிகள் எவ்வளவு தூரம் இருக்கிறதோ இல்லையோ நமது சி.பி.ஐ., அதிகாரிகள் தற்போது கூடுதல் பணிச்சுமையுடன் உள்ளனர். இதனால் சி.பி.ஐ., அலுவலக அதிகாரிகள் நியமனத்தை சற்று உயர்தினால் கொஞ்சம் பணிகள் வேகமாக நடைபெறும் என்ற யோசனையும் புறந்தள்ள முடியாது.

சமீப காலத்தில் சாதாரண போலீஸ் வழக்குப்பதிவு செய்யும் முறையை விட சி.பி.ஐ.,மிஞ்சியிருக்கிறது. காரணம் பெரும் ஊழல், அல்லது முக்கியப்புள்ளிகள் மீதான குற்றம் விசாரிக்கும் போது பிற தலையீட்டை விலக்கி நிற்பதற்கென சி.பி.ஐ., விசாரணை கோரப்படுகிறது. இது நியாயமாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்கள் மத்தியில் சற்று உயரமாகவே இருந்து வருகிறது என்று கூறினால் அதிகமாக இருக்க முடியாது.

போபர்ஸ் பேரம் முதல் , ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆருசீ கொலை, இது போன்று பல்வேறு வழக்குகளில் சி.பி.ஐ., கவனம் செலுத்தி வருகிறது.

நேற்று சென்னையில் டிரேட்மார்க் பதிவு துறை துணை பதிவாளர் கஸ்தூரியை லஞ்ச விழிப்பு சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.

முக்கிய நகரங்களில் பிளாட் வீடுகள்: பெண் அதிகாரியான கஸ்தூரி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்சப்புகார் அடிப்படையிலும் கைது செய்ப்பட்ட இவரது வீட்டில் இருந்து ரூ. 33 லட்சம் ரொக்கப்பணம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட தங்க நகைகள், 85 லட்சம் டிபாசிட் செய்யப்பட்ட விவரம், மற்றும் முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர். தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டார். இவருக்கு சென்னை அடையாறு, திருப்பதியில் தலா 2 பிளாட்டுகளும், ஆமதாபாத், மும்பையில் தலா ஒரு பிளாட்டும் இருப்பது தெரியவந்துள்ளது.

இன்றைய சி.பி.ஐ., பணி : இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் தொடர்பாக முக்கியஸ்தர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினர். இந்த போட்டி ஒளிபரப்பு தொடர்பான விஷயத்தில் பலகோவி பணம் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் பிரசார்பாரதி தலைமை அதிகாரி லல்லி வீடு மற்றும் டில்லியில் 4 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மேலும் பஞ்சாப், அரியான ஐகோர்ட் நீதிபதியாக இருந்த யாதவ் லஞ்ச வழக்கு தொடர்பாக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு நோட்டீஸ்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி பால் தாக்ரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. ஆனால் 2001 ல் சிபிஐ முறையீட்டை ரேபரேலி நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு ஐகோர்ட்டிலும் தள்ளுபடியானது. இந்நிலையில் இதுகுறித்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிபிஐ முறையீட்டை ஏற்று அத்வானி, தாக்கரே மற்றும் உமா பாரதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

பார்வையற்ற தமிழ்ப் பெண் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி!

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஜெ.சுஜிதா (24). பார்வையற்ற மாணவியான இவர் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஹிந்தி பட்டப் படிப்புகளை படித்துள்ளார். இவருடைய தந்தை நகைக் கடை உரிமையாளர்.

பட்டப் படிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள சுஜிதாவுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்த அவருடைய தாய், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவும் ஊக்கமளித்துள்ளார்.

இதனால் இந்திய குடிமைப் பணிகளில் ஆர்வம் ஏற்பட்டு, பயிற்சிக்காக சுஜிதா சென்னை வந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "எக்ùஸல் கேரியர் இந்தியா' பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு, முதன்மைத் தேர்வுக்காக மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி மேற்கொண்டு, அதிலும் இப்போது தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனது முயற்சி குறித்து சுஜிதா கூறியதாவது: தாயின் தொடர் ஊக்குவிப்பே என்னுடைய தொடர் வெற்றிக்கு காரணம். பயிற்சி மையங்களில் மற்றவர்களைப் போலவே பயிற்சிகளை மேற்கொள்வேன்.

ஆனால், பார்வையற்றவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆடியோ பாடங்கள் தொடர்பாக வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டேன்.

ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பயிற்சிகளை மேற்கொண்டேன்.

நேர்முகத் தேர்விலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.

சரியான தீர்ப்பு!

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸின் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து நீதி நிலைதடுமாறாமல் காத்திருக்கிறது. முதலில் பி.ஜே. தாமஸ் தன்மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது; அந்த நியமனம் விவாதப் பொருளான பிறகாவது, நிலைமையை உணர்ந்து தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றும் வகையில் பதவி விலகி இருக்க வேண்டும். இரண்டையும் செய்யாததால் இப்போது அவமானத்துடன் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.  உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்திருக்கும் தீர்ப்பில் பல முக்கியமான பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டு, இனி வரப்போகும் காலங்களில் தவறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமûஸ நியமனம் செய்த பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் செயல்பாடு பற்றியும் நீதிபதிகள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.  தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக இருந்தபோது பி.ஜே. தாமஸ், தனது துறையில் நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகளை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டவர். அவரைத் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிப்பது என்பது நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் விடுக்கப்படும் சவால் என்று எழுந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு, திருடன் கையில் சாவியைக் கொடுப்பதுபோல, பி.ஜே. தாமûஸத் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக்கியது. அதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கண்டித்திருக்கிறது.  தனது 71-பக்கத் தீர்ப்பில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, முதலில் நிராகரித்திருப்பது, இந்த நியமனத்தை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்கிற அரசின் வாதத்தை. முறைகேடான அரசியல் சட்ட நியமனங்களைக் கேள்வி கேட்கவோ, நிராகரிக்கவோ உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்திருப்பதன் மூலம், இனி தலைமைத் தேர்தல் ஆணையம், தலைமைத் தகவல் ஆணையம், மத்தியப் புலனாய்வுத் துறை, தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளின் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் "இன்டக்ரிட்டி கமிஷன்' என்கிற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நேர்மையையும் நாணயத்தையும் அரசின் செயல்பாடுகளில் உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் சட்ட நியமனங்களில் அப்பழுக்கற்றவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் உயர்மட்டக் குழு நியமிக்கப்படுகிறது என்று சுட்டிக் காட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பி.ஜே. தாமஸின் பின்னணி பற்றிக் கவலையேபடாமல், எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜின் எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் பிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழு செயல்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.  ""தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்கிற அரசியல்சட்ட நியமனப் பதவியின் கௌரவத்தையும், முக்கியத்துவத்தையும் மனதில்கொண்டு உயர்மட்டக் குழு அந்தப் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அந்த நபரின் நிர்வாகத் தகுதியை மட்டுமே கருத்தில்கொண்டு முடிவெடுக்க முடியாது'' என்கிற உச்ச நீதிமன்றத்தின் பார்வை குறிப்பிடத்தக்கது. மூன்று பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவின் பெரும்பான்மை பலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட முடியாது என்றும், ஒரு நியமனத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவிக்கப்பட்டால் அந்தக் கருத்து ஏன் நிராகரிக்கப்பட்டது என்கிற காரணம் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது.  உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருக்கும் இன்னொரு கருத்தும் அரசின் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற ஊழல் கண்காணிப்பு ஆணையர் போன்ற பதவிகளுக்கு அரசு அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சமுதாயத்தில் அப்பழுக்கற்ற தொண்டாற்றுபவர்களும், கறையே படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களும், நேர்மையாளர்களும் ஏன் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து. இதுபோன்ற பதவிகள் நேர்மையை நிலைநாட்டுவதிலும் ஊழலைத் தடுப்பதிலும் மிக முக்கியமான பங்கு வகிப்பதால், தங்களுடன் வேலைபார்த்த சக அதிகாரிகள் மீதும், தங்களுக்கு ஆதரவும் பதவி உயர்வும் தந்த அரசியல்வாதிகள்மீதும் அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இயலாது என்பதில் சந்தேகம் கிடையாது.  அதிகாரவர்க்கத்தில் இல்லாதவர்களும் நியமிக்கப்படலாம் என்பதுடன், உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதாகத்தான் இருக்கும். பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று மூன்று பேர்கள் அடங்கிய குழுவின் முடிவுகள் தாமஸின் நியமனம்போல அரசுக்கு நெருக்கமான அதிகாரிகளின் நியமனத்தில்தான் முடியும். அதனால் உயர்மட்டக் குழு விரிவுபடுத்தப்பட வேண்டும்.  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தகவல் ஆணையர், கணக்குத் தணிக்கை ஆணையர், புலனாய்வுத்துறை இயக்குநர், மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகிய பதவிகளில் உள்ளவர்களையும், பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக்கி, இதுபோன்ற பதவிகளுக்கான நியமனங்களைப் பரிசீலித்தால், தவறுகள் நேராமல் தடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தி.மு.க.-அ.தி.மு.க. அணிகள்: தொகுதி பங்கீடு இன்று முடிவு

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு மிக குறுகிய கால அவகாசமே உள்ளதால் தமிழக அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் கடந்த சில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைதான் பரபரப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதில் இன்று சுமூக முடிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 இடம், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 இடம், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 இடம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி முதலில் 90 இடங்களை எதிர்பார்த்தது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு 60 தொகுதிகளை பெற்றுக் கொள்ள காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் 60 தொகுதிகளும் தாங்கள் விரும்பும் தொகுதிகளாகவே இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் புதிய கோரிக்கை ஒன்றை தி.மு.க. விடம் வைத்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் அதிகமாகவும், தங்கள் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளும் தொகுதிகளையும் காங்கிரசார் பட்டியலாக கொடுத்துள்ளார்களாம். இது தி.மு.க. தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.காங்கிரஸ் சுட்டிக் காட்டும் 60 தொகுதிகளை அப்படியே கொடுக்க இயலாது என்று தி.மு.க. தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திடுவது தாமதம் ஆனது.காங்கிரஸ்காரர்கள் கேட்கும் 60 தொகுதிகளில் பெரும்பாலனவை கிராம தொகுதிகளாக உள்ளனவாம். ஆனால் தி.மு.க. அந்த தொகுதிகளை கொடுக்க விரும்பவில்லை.
நகர்ப்புறங்களில் உள்ள தொகுதிகளை காங்கிரசுக்கு அதிகமாக கொடுக்க தி.மு.க. முன் வந்துள்ளதால் இன்று மதியம் வரை அதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இன்றிரவுக்குள் 60 தொகுதிகளை அடையாளம் காணும் விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டு விடும் என்று இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இன்றிரவு தீர்வு ஏற்படும் பட்சத்தில் தொகுதி பங்கீடு அறிவிப்பை இன்றிரவே தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இருந்து ஐவர் குழு வருவதில் தாமதம் ஏற்பட்டால், நாளை தொகுதி பங்கீடு பற்றி உறுதியாக அறிவிக்கப்பட்டு விடும்.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் திடீரென தனது சொந்த மாநிலமான காஷ்மீருக்கு சென்று விட்டார். எனவே தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 14 கட்சிகள் உள்ளன. இதில் 4 கட்சிகளுடன் மட்டுமே அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடது சாரிகள், ம.தி.மு.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் ஏற்கனவே தொகுதி பங்கீடு விபரங்களை பேசி முடித்து விட்டதால் எந்த சிக்கலும் இல்லாமல் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 48 இடங்களை தே.மு.தி.க. கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அ.தி.மு.க. - தே.மு.தி.க. தலைவர்கள் பல தடவை சந்தித்துப் பேசி சுமூகமான ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று மாலை விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா மற்றும் கட்சி மூத்த தலைவர்களுடன் போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்போது அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், விஜய காந்தும் கையெழுத்திடுவார்கள்.
விஜயகாந்த் போயஸ் கார்டனுக்கு செல்ல இயலா விட்டால் பண்ருட்டி ராமச்சந்திரன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று மற்றொரு தகவல் பரவி உள்ளது. இன்றிரவுக்குள் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை அ.தி. மு.க. இறுதி செய்து அறிவித்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பேச்சாளர் விமான செலவை ஏற்பது யார்?அரண்டு நிற்கும் அரசியல் கட்சிகள்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் செலவுக்கு 16 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட முடியும் என்பதால், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு பிரசாரத்துக்கு வரும் நட்சத்திர பேச்சாளர்களின் விமானச் செலவை யார் ஏற்பது என்பதில், முக்கிய கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் 16 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட முடியும். இதற்கான வரவு, செலவு கணக்கும் முறையான ரசீதுகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தேர்தல் செலவுகளை மேற்கொள்ள, வங்கிகளில் தனியாக கணக்கு துவங்கி, வங்கிகள் வாயிலாக மட்டுமே தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டி, சுவரில் எழுதுவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தை விரிவாக மேற்கொள்வதில், அரசியல் கட்சிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதை விட முக்கியமாக, டில்லியில் இருந்து பிரதமர், காங்கிரஸ் கட்சி தலைவர், உள்துறை அமைச்சர் போன்ற நட்சத்திர பேச்சாளர்களை, பிரசாரத்துக்கு அழைத்து வர திட்டமிட்டிருந்த கட்சியினர், கவலையில் மூழ்கியுள்ளனர்.
நட்சத்திர பேச்சாளர்கள் ரயிலில் வந்தாலும், விமானத்தில் வந்தாலும், அதற்கான செலவும் வேட்பாளரின் கணக்கில் வந்து விடும் என்பது தான் காரணம். கூட்டணி கட்சியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர் என்றால், பிரசார மேடையில் இருக்கும் எந்த வேட்பாளரின் பெயரைக் கூறி ஓட்டுக் கேட்கிறாரோ, அவர்தான் கூட்டத்துக்கான முழு செலவையும் ஏற்க வேண்டி வரும்.டில்லியில் இருந்து தனி விமானத்தில் மத்திய அமைச்சரோ, கட்சித் தலைவர்களோ வரும் பட்சத்தில், விமானக் கட்டணமே, "லகரங்களை' விழுங்கி விடும். அத்துடன் பிரசார செலவுகளும் சேர்ந்து கொள்ளும். கோவையை பொறுத்தவரையில், திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி என எங்கு செல்ல வேண்டுமானாலும், நட்சத்திர பேச்சாளர்கள், கோவை விமான நிலையத்தில்தான் வந்திறங்கியாக வேண்டும்.அப்போது கட்சியின் உள்ளூர் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
பிற கட்சியினரை விட காங்கிரஸ், பா.ஜ., கட்சியினர்தான் டில்லி தலைவர்களை அழைத்து வர வேண்டியதிருக்கும். கட்சியினரின் அனைத்து செலவுகளையும் வீடியோவில் பதிவு செய்து, வங்கி கணக்கு வழக்குகளை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேர்தல் கமிஷன் கண்காணிப்பதால், பிற கட்சியினரை விட இந்த இரு கட்சியினர் அதிக கவலையில் மூழ்கியுள்ளனர்.தேர்தல் செலவுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி, பதவியை பிடிக்க காத்திருக்கும் அரசியல் கட்சியினர், தேர்தல் கமிஷனின் இந்த கிடுக்கிப் பிடி விதிமுறைகளை எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தால் 4 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும்; மாநகராட்சி கமிஷனர் பேட்டி

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
கூட்டம் முடிந்த பின்னர் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சென்னையில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 3,225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கூடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன.  
 
வாக்குச் சாவடிகளில் 18 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். 4 நாட்களில் அவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும். வாக்குப் பதிவின் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 
இது வரை நடந்த தேர்தல்களில் வாய்மொழியாக மட்டுமே பயிற்சி அளித்து வந்தோம். இந்த முறை குறும்படம் மூலம் அவர்களுக்கு விளக்கி உள்ளோம். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர் ஒருவர் தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறுவது போலவும், தேர்தல் பணியாளர் அவரை அழைத்துச் சென்று அதற்கு உரிய படிவத்தில் வாக்களிக்கச் செய்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது.அதனையும் தேர்தல் பணியாளர்களுக்கு போட்டு காட்டியுள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-
 
தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக என்னென்ன பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். நாளை அனைத்து கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.விரைவில் இந்த கூட்டம் நடைபெறும்.
 
தேர்தல் பிரசாரத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொதுக் கூட்டங்கள் நடத்தும் போது கடை பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்படும். 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக்கூடாது. கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 100 அடிக்குள் மட்டுமே அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும். பறக்கும் படையினரும், ரோந்து படையினரும் தேர்தல் பணிக்கு அமைக்கப்பட உள்ளது.
 
தேர்தல் பாதுகாப்புக்கு 15 கம்பெனி துணை ராணுவத்தை கேட்டுள்ளோம். உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருப்போர் தங்களது எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சுமுக உடன்பாடு ?

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து, இரு கட்சிகளின் ஐவர் குழுவினர் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 
அதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, சோனியாகாந்தியின் தூதராக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.
 
தொகுதி பங்கீடு குறித்து முதல்- அமைச்சர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குலாம்நபி ஆசாத் நடத்திய 3-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
 
 இரவில் சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் தங்கிய குலாம்நபி ஆசாத், நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் அதே விமானத்தில் சென்றார். டெல்லியில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினரை, குலாம் நபி ஆசாத் நேற்று மாலை 5.30 மணிக்குச் சந்தித்து பேசினார்.
 
ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்திநடராஜன் எம்.பி.,, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
 
குலாம்நபி ஆசாத் வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. 2 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்ததைக்குப்பின், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது- "காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், புதன்கிழமை அன்று சென்னை சென்று முதல்- அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினார்.
 
இந்த பேச்சுவார்த்தையின்போது முதல்- அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை மேலிட தலைவர்களிடம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக குலாம்நபி ஆசாத் நேற்று மத்தியானம் டெல்லி திரும்பினார். பின்னர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக ஐவர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
 
காங்கிரஸ் சார்பில் முதல்- அமைச்சருடன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பற்றி இந்த கூட்டத்தில் குலாம்நபி ஆசாத் விவரித்தார். தொகுதி உடன்பாடு குறித்து முதல்- அமைச்சரின் பதிலுக்காக காத்து இருக்கிறோம். அனேகமாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில், தொகுதி உடன்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்''.
 
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
 
இதற்கிடையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், இது தொடர்பான அதிகாரபூர்வ உடன்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிட்டது.
 
இந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. பா.ம.க.வுக்கு 31, விடுதலை சிறுத்தைகளுக்கு 10, கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு 7, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை மொத்தம் 52 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால், கைவசம் இன்னும் 182 தொகுதிகள் மட்டுமே உள்ளன.
 
காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மீதி 122 தொகுதிகள் மட்டுமே தி.மு.க.வின் வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 129 தொகுதிகளில் போட்டியிட்டு 96 இடங்களில் வெற்றி பெற்றது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு 54 ஆயிரம் வாக்குசாவடிகள்: மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 60 லட்சம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:-
 
 தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் 10-1-2011 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரத்து 295 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பேர்.
 
தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இதன் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்து 615. சிறிய தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேலூர் உள்ளது.
 
இது தனித்தொகுதி ஆகும். இதில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 181 பேர் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய மார்ச் 26-ந் தேதி கடைசிநாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ந் தேதி நடக்கிறது.
 
வேட்புமனுவை திரும்ப பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாள். அன்றுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது.
 
வாக்குகள் எண்ணிக்கை மே 13-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பணி மே 16-ந் தேதி முடிந்துவிடும். தமிழகத்தில் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இவற்றில் 19 ஆயிரத்து 560 வாக்குச்சாவடிகள் நகர்ப்புற பகுதிகளிலும் 36 ஆயிரத்து 456 வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளிலும் அமைந்துள்ளன.
 
 புகைப்பட வாக்காளர் பட்டியல் 99.85 சதவீதம் உள்ளது. தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் உள்பட மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 519 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
இந்த தேர்தலுக்காக மின்னணு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக 70 ஆயிரத்து 4 கட்டுப்பாட்டு எந்திரங்களும் 98 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

மசூதி வாசலில் போதை பொருட்கள் விற்பனை:ரவுடி கும்பல் அட்டகாசம்!

மசூதி வாசல் முன்பு ரவுடி கும்பல் போதை பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கலகம் மூளும் அபாயமும் அதிகரித்துள்ளது.
குமரிமாவட்டம் நாகர்கோவிலுள்ள இடலாக்குடி பகுதி முஸ்லிம் இன மக்கள் பெருபான்மையாக வாழும் பகுதியாகும். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் பிரதானமான பள்ளி வாசல் பாவாகாசிம் பள்ளி வாசல் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க பள்ளிவாசலின் முன் பகுதி தற்போது போதை மருந்துகள்  வியாபாரத்திற்கும் இளைஞர்கள் மது அருந்தி கூத்தடிக்கும் பகுதியாகவும்  மாறி உள்ளது குறித்து  இடலாக்குடி வாழ் பொதுமக்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது 15க்கும் மேற்பட்ட போதை பொருள் விற்கும் கும்பல் அப்பகுதிக்கு வருகிறது. இவர்களுக்கு உள்ளூர் ஏஜண்டுகள் சிலர் உதவி செய்கின்றனர். இந்தக் கும்பல் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கஞ்சா, பிரவுண்சுகர் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். படிக்கும் இளைஞர்களை எளிதில் இந்தக் கும்பல் தனது வலைக்குள் சிக்க வைத்து விடுகிறார்கள். வெளிநாட்டில் தந்தை வேலை  பார்ப்பதால் கையில் அதிக பணம் புழங்கும் இப்பகுதி இளைஞர்கள்  தங்களது எதிர்காலத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளும் இத்தகைய போதைப்பொருள் கும்பலின் கைகளில் எளிதாக சிக்கி விடுகிறார்கள்.

சமூகத்தைச் சீரழிக்கும் இப்பாதக‌ செயல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்குக்கூட அச்சப்படும் அளவுக்கு ரவுடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவர்கள்மீது காவல்துறை கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேர்தல் வாக்குறுதி - இலவச கணினி!

"தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும்  மக்களுக்கு விருப்பம் இருந்தால் கணினியே வழங்கப்படும்" என்று புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி  ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கூடுதல் சுழல் நிதி வழங்குதல் மற்றும் பாரத் நிர்மாண் ராஜீவ்காந்தி சேவக் கேந்திரா அடிக்கல் நாட்டு விழா புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி மகளிர் குழுக்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 1509 குழுக்களுக்கு ரூ.73 லட்சம் சுழல் நிதி வழங்கினார்.

மேலும் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 4 பாரத் நிர்மாண் ராஜீவ்காந்தி சேவக் கேந்திரா கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

விழாவில் மத்திய அமைச்சர் நாரயணசாமி பேசிய போது,   "தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் டி.வி. வழங்கவேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி  கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு விருப்பம் இருந்தால் கணினியே வழங்கப்படும். மகளிர் வருமானத்தைப் பெருக்கவே அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வெளி மாநிலங்களில் பெண்கள் ஒருங்கிணைந்து நூற்பாலை, பஞ்சாலை, பெரிய மளிகை கடை ஆகியவற்றை நடத்துகின்றனர்.

அதுபோல் புதுவையில் உள்ள சிறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஒரு ஒன்றியத்தை நிறுவி பெரிய அளவிலான தொழிலைச் செய்ய வேண்டும். கடன் தர வங்கிகள் உள்ளது. வங்கிக்  கடனைப் பெற்று வட்டிக்கு விடுவதால் மகளிர் வளர்ச்சி அடைய முடியாது. தொழில் செய்தால் மட்டுமே உயர முடியும். இங்கு தயாரிக்கப்படும் பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் மகளிருக்குச் சிரமம் இருக்கிறது. அதைப்போக்க, அரசு மூலம் விற்பனை மையம் அமைத்து அதன் மூலம் பொருட்களைச் சந்தைப்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயணசுவாமி பேசினார்.