சனி, 5 மார்ச், 2011

காங்கிரசின் நிபந்தனை அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு

மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று 60 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்தது. இருப்பினும் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பதுடன், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. திமுக பொதுச்செயலளார் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2011 ஏப்ரல் திங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் புதுவிதமான சில பிரச்சனைகளை உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பது திமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவித முடிவும் ஏற்படாத நிலையில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அவர் முன்னிலையிலேயே நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின்பொழுது, 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பதென ஒப்புதல் அளித்தோம்.

மேலும் டெல்லி சென்று மேலிடத்தை கலந்துகொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம் நபி ஆசாத் கூறிவிட்டுச் சென்றார். பின்னர் டெல்லியில் இருந்து பேசிய குலாம் நபி ஆசாத் 60 தொகுதிகள் காங்கிரசுக்கு தந்தால் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றார். இதனைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக்கொண்டு, சென்னைக்கு வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் எண்ணியிருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது 63 தொகுதிகள் வேண்டும் என்றும், எத்தனை தொகுதிகள் ஒப்பந்தம் செய்யும்போது, எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

60 தொகுதிகளுக்கு திமுக ஒப்புதல் அளித்த பிறகும், 63 தொகுதிகள் வேண்டும் என்பதும், அந்த தொகுதிகளின் பெயரிலே பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே நிபந்தனை விதிப்பது அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாக செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக, இதையே சாக்காக வைத்து திமுகவை அணியிலிருந்தே அகன்றுவிட செய்தவற்கான காரியமோ என்று ஐயம் ஏற்பட்டது.

60 இடங்கள் கேட்டு அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களை அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும், வேண்டுமென்றே இந்த அணியில் அவர்கள் தொடர விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே திமுக தன்னை விடுவித்துக்கொள்கிறது. மத்திய அரசுக்கு பிரச்சனையின் அடிப்படையில் மட்டுமே ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்க உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு ஜெயில்: பிற மாநில ஐ.ஜி.க்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்; மத்திய பாதுகாப்பு படை வருகை

மிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்து விட்டது. தேர்தலுக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் பணப் புழக்கத்தை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
 
பண பட்டுவாடாவை தடுப்பது மற்றும் தேர்தல் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக 50 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைகள் வருகின்றன. ஒரு கம்பெனிக்கு சுமார் 100 வீரர்கள் வீதம் 5 கம்பெனிகள் இன்று வருகின்றன.
 
இன்னும் 2 நாட்களுக்குள் மேலும் 30 கம்பெனிகளும், வருகிற 13-ந்தேதிக்குள் மீதமுள்ள 15 கம்பெனிகளும் தமிழ்நாட்டுக்கு வந்து விடும். குஜராத், பீகார், ஒரிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இவர்கள் வருகிறார்கள்.   முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தமிழகம் வருகிறார்கள்.
 
இவர்கள் பண புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை தேர்தல் கமிஷனுடன் சேர்ந்து கவனிப்பார்கள். இது தவிர பொதுவான தேர்தல் பார்வையாளர்கள் மனுதாக்கல் தொடங்கும் 9-ந்தேதிக்குள் வருவார்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது 196 கம்பெனி மத்திய படைகள் வரவழைக்கப்பட்டன.
 
இந்த முறை மொத்தம் 266 கம்பெனி மத்திய படைகள் தேவை என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் தேர்தல் நேரத்தில் தேவைக்கு ஏற்ப வரவழைக்கப்படுவார்கள்.தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறி விட்டார். எனவே இனி மாற்றம் இருக்காது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
 
இரவு 11 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது போல ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அதை தலைமை தேர்தல் கமிஷன் தான் முடிவெடுக்கும். 2006 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
2009 பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்ததாக 3 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. 13 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப்பட்டால் சுமார் 2 வருடம் வரை ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
 
சில வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் தேவைப்பட்டால் ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு நடத்தப்படும். தேர்தல் சம்பந்தமாக பொதுச்சுவர்களில் வரையப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகை, தொலைக் காட்சி, இண்டர்நெட் மூலம் விளம்பரம் செய்பவர்கள் முன் அனுமதி பெற்றே விளம்பரம் செய்ய வேண்டும்.எஸ்.எம்.எஸ். விளம்பரங்களுக்கும் இது பொருந்தும்.
 
ஜாதி, மதம் இவற்றை தூண்டும் வகையில் விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுப்பது குறித்தோ, தேர்தல் முறைகேடு பற்றியோ 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப் பாட்டு அறைக்கு 1965 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட இடத்துக்கு பறக்கும் படை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி தொகுதி ஒதுக்கீடு - தேர்தல் 2006

2006 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகியவை தலைமையில் இரு கூட்டணிகளும் பாஜக மற்றும் தேமுதிக ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. இரு கூட்டணிகளில் பங்குபெற்ற கட்சிகளும் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கையும் கீழே:

திமுக கூட்டணி

எண் கட்சி தொகுதிகள்
1 திமுக 130
2 காங்கிரஸ் 48
3 பாட்டாளி மக்கள் கட்சி 31
4 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 13
5 இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10
6 முஸ்லிம் லீக் 2

மொத்தம் 234

அதிமுக கூட்டணி

எண் கட்சி தொகுதிகள்
1 அஇஅதிமுக 182
2 மதிமுக 35
3 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 9
4 Iஇந்திய தேசிய லீக் 2
5 இந்திய தேசிய தொழிலாளர் ஒன்றியம் 2
6 இ. யூ. முஸ்லிம் லீக் (தாவூத் மியான் கான்) 1
7 மக்கள் மாநாடு கட்சி 1
8 ஃபார்வார்டு ப்ளாக் 1
9 ஜனதா தளம் (எஸ்) 1

மொத்தம் 234

தீப்பிடித்தது மேலும் ஒரு நானோ கார் !

அகமதாபாத்தில் மேலும் ஒரு நானோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த விபுல் ஜானி என்பவர் தனது நானோ காரில் சிவரஞ்சனிகிராஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வரத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவரது நானோ கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுவரை ஏழு நானோ கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் மீண்டும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

அந்த காரில் கூடுதலாக செய்யப்பட்ட தவறான ஒயரிங் காரணமாக தீப்பிடித்திருக்காலம் என கருதுவதாக டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளதாகவும் இதனை காரின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நானோ கார்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்த்தட்டு மக்களின் கார் கனவை பூர்த்தி செய்யும் என்று எதிபார்க்கப்பட்ட, உலகின் விலை குறைந்த கார் என்று நம்பப்பட்ட டாடா நானோ கார், தொடர்ந்து எரிந்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக தென் மாவட்டங்களில் “சீட்” கேட்கும் பா.ம.க.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு தொகுகி பங்கீடு முடிந்ததும் எந்தெந்த தொகுதிகள் எந்த கட்சிக்கு என்பது முடிவு செய்யப்படும். இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு பா.ம.க. நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
  பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் தைலாபுரம் தோட்டத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது. விருப்ப மனு கொடுக்க 7-ந் தேதி கடைசி நாள் ஆகும். நேற்று வரை 1000 பேர் மனு கொடுத்துள்ளனர்.
மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் (வேளச்சேரி), மாவட்ட செயலாளர் ஜெயராமன் (மைலாப்பூர்), தொழிற்சங்க செயலாளர் ஞானசேகரன் (திரு.வி.க.நகர்), கே.என்.சேகர் (அம்பத்தூர்), திருக்கச்சூர் ஆறுமுகம் (திருப்போரூர்), வேல்முருகன் (நெய்வேலி), வி.ஜெ.பாண்டியன் (அண்ணாநகர்), முத்துக் குமார் (புவனகிரி) ஆகிய தொகுதிகளுக்கு மனு கொடுத்துள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி பெயரில் வில்லிவாக்கம், தியாகராயநகர், விருகம்பாக் கம் ஆகிய தொகுதிகளில் மனு கொடுத்துள்ளார்கள்.   பா.ம.க. தரப்பில் சென்னையில் 4 தொகுதிகள் மற்றும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளனர்.
முதல் முறையாக தென் மாவட்டங்களிலும் கால்பதிக்க பா.ம.க. திட்டமிட்டுள்ளது. நெல்லை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களில் தலா ஒரு தொகுதியை குறிப்பிட்டு கேட்கவும் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்.தொகுதி உடன்பாடு: தி.மு.க. உயர்நிலைகுழு இன்று ஆலோசனை

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர் கொள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 15 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து வருகிறது.
 
இன்னும் ஒரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் வேட்பாளர் தேர்வை தீவிரமாக்கவுள்ளன. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.
 
ஆனால் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு மட்டும் சிக்கலாக மாறி உள்ளது.   காங்கிரஸ் கட்சி இந்த தடவை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை தொடர்ந்து தி.மு.க.விடம் வலியுறுத்தி வருகிறது.
 
முதலில் 90 தொகுதி கேட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிறகு படிப்படியாக அந்த எண்ணிக்கையை குறைத்தனர். 85, 80, 75, 70 என்று நடந்த பேரம் கடைசியில் 60 ஆக வந்து நின்றது. 60 தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள சம்மதித்த காங்கிரஸ் தலைவர்கள் திடீரென நேற்று அந்த 60 தொகுதிகள் எவை, எவை என்று அடையாளம் கண்டு, அவற்றை இறுதி செய்ய வேண்டும் என்று புதிய நிபந்தனை விதித்தனர்.
 
இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காங்கிரஸ் நிபந்தனையை ஏற்க தி.மு.க. விரும்பவில்லை. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்து வரும் நெருக்கடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. காங்கிரஸ் திடீரென 63 இடங்கள் கேட்பதும், அவை எந்தெந்த இடங்கள் என்று கேட்பதும் முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய இரு தரப்பிலும் உள்ள சில தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் இன்று மதியம் வரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று முதலில் கூறப்பட்டது.
 
ஆனால் அவர் இன்று சென்னை வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடையும் என்பதில் கேள்விக் குறி எழுந்துள்ளது.இந்த நிலையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் இன்று (சனி) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதி கேட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
 
எனவே தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு மிக, மிக, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தி.மு. கழகத்தின் அரசியல் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக நிலவுகிறது. தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான 7 ஆண்டுகால உறவு என்ன ஆகும் என்பதற்கு இன்றைய தி.மு.க. உயர்நிலைசெயல் திட்டக்குழுக் கூட்டத்தில் விடை கிடைத்து விடும்.

திமுக கூட்டணியில் கொமுக..செங்கோட்டையனை வென்ற முத்துசாமி

முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமியின் கடும் முயற்சிகள் காரணமாகவே கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்தக் கட்சியை அதிமுக கூட்டணிக்குக் கொண்டு வர முயன்ற இன்னொரு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தோல்வி அடைந்துள்ளார்.

கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தினர் திமுக, அதிமுக என இரு தரப்பிலும் பேச்சு நடத்தி வந்தனர். அதிமுக கூட்டணியில் 5 சீட்கள் தருவதாக பேச்சு நடந்து கொண்டிருந்தது. திமுக தரப்பில் முத்துசாமி களமிறங்கிப் பேச்சு நடத்தினார். இந்தக் கட்சியின் தலைவரான பெஸ்ட் ராமசாமி திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்ட, பொதுச் செயலாளரான ஈஸ்வரன் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டினார்.

எந்தக் கட்சி அதிக இடங்கள் தருகிறதோ அவர்களுடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவில் ராமசாமியும் ஈஸ்வரனும் இருந்தனர். இதில் ஈஸ்வரனுடன் செங்கோட்டையன் 15 முறை பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைகள் இழுத்துக் கொண்டே போனதால் கடு்ப்பான ஈஸ்வரன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதையடுத்து செங்கோட்டையன்.. இதோ அம்மா கூப்பிடுவார் அதோ அம்மா கூப்பிடுவார் என்று காலத்தைக் கடத்தியிரிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை சந்திக்கும்போது எப்படி மரியாதையாக நிற்க வேண்டும், உட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்று கிளாஸ் எல்லாம் எடுத்துள்ளனர். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு காத்திருந்த ஈஸ்வரனுக்கு பல வாரம் டைம் தான் வேஸ்ட் ஆகியுள்ளது.

இந் நிலையில் முத்துசாமி வேகமாக பேச்சு நடத்தி பெஸ்ட் ராமசாமியை அறிவாலயத்துக்குக் கூட்டி வந்து முதல்வர் கருணாநிதியை சந்தி்க்க வைத்துவிட்டார். கொங்கு நாடு கட்சிக்கு 6 இடம் தருவதாகச் சொல்லி பின்னர் அதை 7 ஆக உயர்த்தி ஒப்பந்தமும் போட்டு அனுப்பிவிட்டார்.

இதையறிந்த அதிமுக வட்டாரம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. செங்கோட்டையனுக்கு செம டோஸ் விழுந்ததாகவும் சொல்கிறார்கள்.

காங்கிரஸை திமுக 'கழற்றிவிட' வேண்டும்: கி.வீரமணி

தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசை கூட்டணியில் இருந்து தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசுக்கு திமுக உடன்படக் கூடாது. கூட்டணியில் காங்கிரசை தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.

மக்களிடையே திமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கையும் இப்போது கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளையும் வைத்து தேர்தலை சந்தித்தாலே திமுக வெற்றி பெற்றுவிடும் என்றார்.

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரது அறிக்கை- நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான- நடைமுறைக்கு சாத்தியமற்ற- தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறைகளிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை, காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், திமுக அவர்களின் நிபந்தனையை ஏற்கும் கட்சியாகவும் உள்ளது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

திமுக தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இந்தக் கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும்- நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.

இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் திமுக இல்லை. எனவே, இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை பெறும் அளவுக்கு திமுக செயல் வீரர்- வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு கொள்ள வேண்டும். எனவே திமுகவின் உயர்நிலை அரசியல் செயற்குழுக் கூட்டத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது என்று கூறியுள்ளார்.

வீரமணியின் இந்த அறிக்கை-பேட்டி மூலமாக காங்கிரசுக்கு திமுக மீண்டும் தருவதாகத் தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வீரமணி வெளியிட்ட அறிக்கையில், இனியும் இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையை காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தி.க. மூலம் திமுக விடுத்துள்ள எச்சரிக்கையாகவே கருதப்பட்டது. இந் நிலையில் திமுக உயர் மட்டக் குழு இன்று மாலை கூடவுள்ள நிலையில் காங்கிரஸை தவிர்க்குமாறு வீரமணி மீண்டும் கோரியுள்ளார்.

வேட்பாளரை கண்காணிக்க 8 அதிரடிப்படை அமைப்பு

வேட்பாளர்களின் பிரசாரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். வேட்பாளர்களை கண்காணிக்க தொகுதி வாரியாக 8 அதிரடிப்படைகள் அமைக்கப்படுகின்றன. தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13&ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 19&ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவிலும், தொகுதி வாரியாகவும் போலீசார் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வில் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன.

தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. அதற்காக பல புதிய விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை கண்காணிக்க தொகுதி வாரியாக அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டன. அதுபோல தமிழகத்திலும் வேட்பாளர்களை கண்காணிக்க தொகுதி வாரியாக 8 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.வேட்பு மனு தாக்கலின்போது ஊர்வலமாக செல்லக்கூடாது, வேட்பாளருடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணிக்குமேல் பிரசாரம் செய்யக் கூடாது. பூத் சிலிப்புகளை அரசு ஊழியர்களே வழங்க வேண்டும், வாக்குச்சாவடிகளுக்கு ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சேகரிக்கும் செலவு கணக்குகளுடன் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் கணக்கு சரிபார்க்கப்படும். வேட்பாளர் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலமே செலவு செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இன்று மாலை 5.30 மணிக்கு கோட்டையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் ஏற்பாடுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கம் அளிக்கிறார்.

அப்போது தேர்தலில் கடைபிடிக்கப்பட உள்ள புதிய விதிமுறைகள் குறித்த கையேடுகள் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* தேர்தல் பிரசாரத்தின்போது சாதி, மத, மொழி உணர்வுகளை தூண்டும் விதமாகவோ, தனி நபர் விமர்சனங்களோ பேசக் கூடாது. வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக் கூடாது.

* இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.

* கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்துக்கு முன்னதாக காவல் துறையினரின் அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்தான் தட்டிகள், கொடிகள், குழல் விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் அமைக்க வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் மைதானங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது. கூட்டம் நடக்கும் வளாகத்தில் டி.வி., டிஜிட்டல் திரை போன்றவற்றை பொருத்தக் கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது.

* கூட்டம் முடிந்த 24 மணி நேரத்துக்குள் மேடை, தட்டிகள், கொடிகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் அடுத்த 3 ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்தும் : மத்திய அரசு

அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா முந்தும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தொழில் துறை சூழ்நிலைகள் குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாசு கூறியதாவது: பொருளாதார வளர்ச்சி உயர்வில் சீனாவுக்கு இணையாக நாம் இப்போது இருக்கிறோம். இது அடுத்த ஓரிரண்டு ஆண்டுகள் நீடிக்கலாம். பிறகு, 3 அல்லது 4வது ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை இந்தியா முந்திச் செல்லும்.

அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இந்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக இருக்கும். அது அடுத்த நிதி ஆண்டில் (2011&12) 9.25 சதவீதமாக அதிகரிக்கும். 2010ம் ஆண்டில் கடைசி 3 மாதங்களில் வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. அதே காலத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.8 சதவீதம். பொருளாதார வளர்ச்சியில் சீனாவை அடுத்த சில ஆண்டுகளில் நம்நாடு முந்தினாலும், தனிநபர் வருமான அடிப்படையில் சீனாவை நெருங்க நீண்ட காலம் பிடிக்கும். ஏனெனில், இந்தியாவின் தனிநபர் வருமானத்தைவிட இப்போது சீன தனிநபர் வருமானம் 3 மடங்கு அதிகம். இவ்வாறு கவுசிக் பாசு தெரிவித்தார்.

லிபிய அதிபர் கடாபி கைது ஆவாரா? எண்ணெய் வள பகுதியில் ராணுவம் குண்டு வீச்சு

போராட்டக்காரர்கள் வசம் உள்ள லிபியாவின் எண்ணெய் வள பகுதிகளை மீட்க ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் தொடர்ந்தால் கடாபி கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள பிரெகா, அஜ்படியா உள்ளிட்ட பகுதிகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இப்பகுதியை மீட்பதற்காக, இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக ராணுவம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் 12வது இடத்தில் லிபியா உள்ளது குறிப்பிடத்தக்கது. தாக்குதலை முறியடிக்கும் வகையில், போராட்டக்காரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் மீதான தாக்குதலை முறியடிக்கவும், கடாபியை பதவியிலிருந்து தூக்கி எறியவும் அந்நாட்டு ராணுவம் மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்கு பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக, கடாபி, அவரது மகன்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் கடாபி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ1.44 லட்சம் கோடி சொத்து அமெரிக்காவில் முடக்கம்

அமெரிக்காவில் லிபிய அரசு மற்றும் அதிபர் கடாபிக்கு சொந்தமாக உள்ள ஸி1.44 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் திமோதி கெய்த்னர் தெரிவித்துள்ளார். இதில் அவரது மகன்கள் மற்றும் லிபிய மத்திய வங்கி, முதலீட்டு ஆணையம் உட்பட அரசுக்கு சொந்தமான சொத்துக்களும் அடக்கம். கடாபிக்கு சொந்தமான ஸி1.33 லட்சம் கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஸி11 ஆயிரம் கோடி சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் முடக்கி உள்ளோம் என கெய்த்னர் கூறியுள்ளார்.

பிரச்னையை தீர்க்க வெனிசுலா முயற்சி

லிபியா பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சியில் வெனிசுலா அதிபர் சாவேஸ் ஈடுபட்டுள்ளார். அதாவது வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த கடாபி ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கடாபி பதவி விலகும் வரை பேச்சுக்கே இடம் இல்லை என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது


தஞ்சாவூர்: பல்வேறு சாதி, மதம், மொழி, இனத்தவர்கள் ஒன்றாக வாழும் சூழ்நிலையில் அவர்களிடையே சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:வாக்காளர் விவர சீட்டுகளை சின்னங்கள் குறிப்பிடாமல் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு அளிக்கலாம். அரசு சுவர்களில் சுவரொட்டி ஒட்டவோ, எழுதவோ தடை செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. சமூக வேறுபாட்டையோ, பகைமையை வளர்க்கும் வகையிலோ பிரசாரம் செய்யக் கூடாது.தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறினால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பிரசாரத்தில் பயன்படுத்தும் வாகனத்தில் வெளிப்புற மாற்றம் செய்யவும், ஒலிபெருக்கி அமைக்கவும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். கல்வி நிலையங்கள், விளையாட்டு மைதானங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.தேர்தல் தொடர்பாக பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த காவல் துறையினரிடம் முன்அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கிகளை அதிகாலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி எல்லையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவைத் தாண்டி தாற்காலிக அலுவலகம் அமைக்கலாம். ஒரு டேபிள், 2 நாற்காலிகள், ஒரு குடை அல்லது தார்பாலின் மட்டுமே அனுமதிக்கப்படும்.தனியார், அரசு நிலங்களை ஆக்கிரமித்தோ, மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, மருத்துவமனைகள் அருகிலோ அலுவலகம் அமைக்கக் கூடாது. வேட்பாளருக்காக அனுமதிக்கப்பட்ட வாகனத்தை தவிர வேறு வாகனத்தைப் பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கோ, அங்கிருந்து அவர்களது வசிப்பிடங்களுக்கோ வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என்றார் ஆட்சியர்.மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கபில்குமார் சி. சரட்கார், மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், அரசியல் கட்சி நிர்வாகிகள் சோம. செந்தமிழ்ச் செல்வன் (திமுக), ஆர். வைத்திலிங்கம் (அதிமுக), நாஞ்சி கி. வரதராஜன் (காங்கிரஸ்), கோ. நீலமேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏ. சந்திரகுமார் (இந்திய கம்யூ.), மகேந்திரன் (பாஜக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தவறான தீர்ப்பு!


ஒரு நபர் காணாமல் போனால், அவரது சொத்துகளை, அவர் இறந்ததாகக் கருதி அவரது வாரிசுகள் பாகப்பிரிவினை செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஆக வேண்டும். அதன்பின்னர், அவர் இல்லாதவராகக் கருதப்பட்டு, விற்பனை அல்லது பாகப்பிரிவினை செய்ய முடியும். ஓர் அரசு ஊழியர் காணாமல் போனாலும்கூட, அவருக்கான பலன்களை அவரது குடும்பத்துக்கு வழங்கிட இதே விதிமுறைகள்தான் நடைமுறையில் உள்ளன.  ஒரு வழக்கை எத்தனை காலம் நடத்தலாம் என்பதற்கு இதுவரை எந்த விதிமுறைகளும் இல்லை. ஆனால், அதிசயமாக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தில்லி பெருநகர நடுவர் மன்றத்தின் நீதிபதி வினோத் யாதவ். போபர்ஸ் பீரங்கி வழங்கில் குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மீதான வழக்கை சிபிஐ விலக்கிக் கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு. இதற்கு சொல்லியுள்ள காரணம், இந்த வழக்குக்காக இதுவரை ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளது. குவாத்ரோச்சியை நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தவும் முடியவில்லை. இதனால் மக்கள் பணத்தை இப்படி வீணாக்குவதைக் காட்டிலும், அவர் மீதான வழக்கை சிபிஐ விலக்கிக்கொள்ளலாம் என்பதே.  இந்த வழக்கில் நீதிபதி குறிப்பிடும் ரூ.200 கோடி என்பது போபர்ஸ் ஊழல் அளவைவிடப் பெரிய தொகை. ஆகையால், சுண்டக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணமா என்ற வாதத்தின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து குவாத்ரோச்சியை விலக்கிவிடலாம் என்று கூறியுள்ளார் நீதிபதி.  அவர் சொல்வதை சரி என்று எடுத்துக்கொண்டால், ரூ. 1,437 கோடி மதிப்புள்ள போபர்ஸ் பீரங்கி விற்பனையில் குவாத்ரோச்சி மற்றும் வின் சத்தாவுக்கு ரூ.41 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு, அண்மையில் வருமான வரி மேல்முறையீட்டு நடுவர்மன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த கமிஷன் தொகை இந்திய அரசு கொடுத்த பணம் என்பதால், இதற்கான வருமான வரியைச் செலுத்தியாக வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம். குவாத்ரோச்சி இந்தியாவைப் பொறுத்தவரை, அவரை இத்தனை நாள்களாக பிடிக்கவே முடியவில்லை என்பதால், இல்லாதவராகக் கருதி இந்த வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துவிட முடியுமா? அது நியாயமாகுமா?  ஒரு குற்றவாளியை சுமார் 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியவில்லை என்கிற ஒரு காரணத்துக்காக, அவர் மீதான வழக்கை முடித்துக் கொண்டுவிடலாம் என்கிற நடைமுறைக்கும் அல்லவா இந்தத் தீர்ப்பு வழிகோலுகிறது. இதேபோன்று ஒரு கொலை வழக்கில், கொலையாளியைப் பல காலமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து, வழக்கையும் முடித்துக்கொள்ள முடியுமா?  வெளிநாட்டில் ஒளிந்துவாழும் ஒரு தீவிரவாதியை, நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டுவந்து வழக்கு நடத்த முடியவில்லை என்பதற்காக, வழக்கை விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்தால் அது சரியாகுமா?  வருமான வரி மேல்முறையீட்டு நடுவர்மன்றம் குவாத்ரோச்சிக்கு எதிரான தனது தீர்ப்பை வெளியிட்ட அடுத்தநாள்தான் குவாத்ரோச்சியை வழக்கிலிருந்து விடுவித்து, இந்த வழக்கை முடித்துவிட அனுமதி கோரியது சிபிஐ என்பதுதான் இந்தச் சம்பவத்தின் மிகப்பெரிய விபரீதம். வருமான வரிக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பே இல்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் வாதாடிய அவலம் அதைவிடக் கொடுமையான ஒன்று.  1986-ம் ஆண்டு நடைபெற்ற போபர்ஸ் பீரங்கிப் பேரத்தில் இடைத்தரகில் ஊழல் நடைபெற்றுள்ளது தொடர்பாக சிபிஐ 1990-ம் ஆண்டு ஜனவரி 22-ல் வழக்குப் பதிவு செய்தது. 1997 ஜனவரி 30-ம் தேதி, சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ நியமிக்கிறது. அதாவது 7 ஆண்டுகள் கழித்துத்தான் இப்படியொரு யோசனை அரசுக்கும், அரசின் கைப்பாவையாகச் செயல்படும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் தோன்றுகிறது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.  2003-ம் ஆண்டு மலேசியாவில் சிக்கிய குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த சிபிஐ-க்கு சாத்தியப்படவில்லை. 2007-ம் ஆண்டு அர்ஜென்டினாவில் அவர் இருப்பது தெரிந்தது. அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த சிபிஐ-க்கு முடியவில்லை. ஆனால், அவர் மீதான வழக்கை, இத்தனை காலமாக நடத்திக்கொண்டிருப்பது அர்த்தமற்றது என்று மட்டும் சிபிஐ-க்குத் தோன்றுகிறது. வழக்கை முடித்துக்கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் அனுமதி கேட்கிறது. அதை நீதிமன்றமும் அனுமதிக்கிறது.  போபர்ஸ் பீரங்கிகளை வாங்குவதில் இடைத்தரகர்கள் இல்லை என்று அப்போது மத்திய அரசு கூறியது பொய் என்பது இப்போது நிரூபணமாகிவிட்ட நிலையில், குவாத்ரோச்சி இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவராக இருக்கும் சோனியா காந்தியின் குடும்ப நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி, குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும். இல்லையென்றால், இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.  மக்கள் பணம் ரூ. 200 கோடி வீணாக்கப்பட்டுள்ளது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை - இந்த வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்புப் புலனாய்வுக் குழு எந்த நடவடிக்கையும் செய்யாமல் வெட்டியாகச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததும்!. அதுவும் மக்கள் பணம்தானே! அந்தச் சம்பளத்தைத் திரும்பப் பெறுவதும்கூட நியாயம்தானே! குவாத்ரோச்சி பெயரைச்சொல்லிக் கொண்டு வெட்டிச் சம்பளம் வாங்கி வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு, குவாத்ரோச்சிக்குத் தரப்பட வேண்டிய தண்டனையை அளித்திருந்தால், ஒருவேளை அதிகாரிகள் அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அவலம் குறையவாவது வாய்ப்பிருக்கிறது.  எந்தத் தடயமும், துப்பும் கிடைக்கவில்லை என்று கைவிரித்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தேவாஸ் அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட எல்லா ஊழல்களுமே, சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடுவிழா நடத்தப்படுவதற்கான "வெள்ளோட்டம்'தானோ இந்தத் தீர்ப்பு?

முறிகிறதா திமுக - காங்கிரஸ் உறவு?


திமுக - காங்கிரஸ் கட்சி இடையிலான 7 ஆண்டு கால உறவு முறிந்துவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 90 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகளைத் தொடங்கியது காங்கிரஸ். இருந்தாலும் திமுக கூட்டணியில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு முறையே 31, 10 தொகுதிகள் என முடிவானபோது காங்கிரஸýக்குக் கிடைக்கக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து போனது.  குலாம் நபி ஆசாத் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய பிறகும் முடிவு ஏதும் ஏற்படவில்லை. அதிக தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காமலே இருந்தது.  அதன் பிறகு சிறிது நேரத்தில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. தாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக கொங்குநாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அறிவித்தனர்.  மீதி 182 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 55 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.  இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், முடிந்தவரை அதிக தொகுதிகள் பெறுவதற்கு முயற்சித்தனர். இறுதியாக 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.  அதுமட்டுமின்றி தொகுதிகளை அடையாளம் கண்டு, தொகுதிப் பெயர்களையும் இப்போதே இறுதி செய்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்பியது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரு கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் "பேக்ஸ்' மூலமாக, தொகுதிகள் பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.  ஓரளவுக்கு தொகுதிப் பங்கீடு, தொகுதிகள் அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வெள்ளிக்கிழமை இரவு கருதப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளைக் கேட்பதாகவும், எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் தர வேண்டும் என்றும் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு கேட்பது நியாயம்தானா என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.  திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. அப்போது காங்கிரஸின் இந்த நிபந்தனைகள் பற்றி விவாதித்து உரிய முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  பிற கட்சிகளுக்கு கொடுத்தது போக காங்கிரஸ் கட்சிக்கு 51 தொகுதிகள் கிடைக்கும் என்ற நிலையில் தொடங்கி, படிப்படியாக அது 60 என்ற நிலையில் முடிவாகும் சூழ்நிலையில், மறுபடியும் 63 என்று கேட்பதால் கருணாநிதி கோபம் அடைந்திருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.  எனவே சனிக்கிழமை நடக்கும் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  வெள்ளிக்கிழமை இரவு வரையில் அதிமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், இரவு 9.30 மணிக்கு ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அதன்படி தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் இனி தேமுதிகவும் அந்த அணியில் சேர முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. எனவே கூட்டணியில் புதிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:  "தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக 132 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும்,பாமக 31 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 10 இடங்களிலும் போட்டியிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.  மேலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட 23 இடங்களில், இப்போது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக மீதமுள்ள இடங்களை திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது. இவ்வாறு கணக்கிட்டபோது காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. ஆனால் இந்த இடங்களை அதிகமாக்க வேண்டுமென்று கேட்ட காரணத்தால் 51 இடங்கள் என்பதை 53 ஆக்கி, பின்னர் 55, 58 இறுதியாக 60 இடங்கள் என தெரிவிக்கப்பட்டது.  இதை கட்சி மேலிடத்தில் தெரிவித்துவிட்டு உறுதி செய்வதாக குலாம் நபி ஆசாத் கூறினார். ஆனால், அதன்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.  மேலும் அந்த 63 இடங்களையும் அவர்களே நிச்சயித்து கேட்கும் தொகுதிகள் அத்தனையையும் தரவேண்டும் என்றும் கூறுகின்றனர்.  காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் என ஒப்புக்கொண்ட நிலையில், பாமக-வுக்கு 31 இடங்கள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 10 இடங்கள், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு இடம் என ஒதுக்கியதுபோக, திமுக-வுக்கு 122 இடங்கள் மட்டுமே எஞ்சின.  இந்த நிலையில் காங்கிரஸ் 63 இடங்கள் கேட்பதும், எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என கூறுவதும் முறைதானா என்பதை அவர்களே முடிவு செய்யவேண்டும்' என்று வினவியுள்ளார் கருணாநிதி.

மானிய விலையில் வெங்காயம் - இலவசமாகத் தக்காளி!

னி நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் கால் கிலோ வெங்காயம் மானிய விலையிலும் பண்டிகைக் காலங்களில் கால் கிலோ  தக்காளி இலவசமாகவும் வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. உயர்ந்து வரும் காய்கறிகளின் தாறுமாறான விலை அப்படி நினைக்கத் தூண்டுகிறது.

கடந்த மாதம் ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெங்காயப் பயிர்கள் அழுகி சந்தைக்கு வரத்துக் குறையவே வெங்காய விலை விண்ணை முட்டியது. அரசும் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்தும் பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தும் விலைக் குறைப்புக்கு முயன்றது. அரசால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அடுத்த நாளிலேயே மார்க்கட்டில் வெங்காயத்தின் விலை 80 சதம் அளவுக்கு அதாவது கிலோ 20 ரூபாய்க்கு இறங்கி தொடர்ந்த நாட்களில் மீண்டும் பழையபடி சிகரத்தை எட்டியது. ஏற்றுமதிக்குத்
தடையும் இறக்குமதிக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்ட நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காயம் உடனடியாக மார்க்கட்டிற்கு ஒரே நேரத்தில் வந்ததன் விளைவுதான் இது என காரணம் கூறப்பட்டது. ஸ்டாக் தீர்ந்து விட்ட நிலையில் மீண்டும் வெங்காயத்தின் விலை ரூ 100 ஐக்கடக்கும் நிலையிலேயே தற்போது உள்ளது. வெங்காய விலை விண்ணை முட்டிய நிலையில் தக்காளியும் நான் என்ன சாமானியனா என்று கேட்கும் அளவுக்கு வரலாறு காணாத விலையேற்றம்  கண்டது.

காய்கறிகளின் கடுமையான விலை உயர்வு கண்டு அரசு எந்த வித மாற்றுத் திட்டங்களையும் செயல்படுத்த முனைவதாக இல்லை. இயற்கைச் சீற்றங்களினால் அல்லல் படும் விவசாயிகளின் துயர் துடைக்க அரசு எந்த வித முன்னேற்பாட்டையும் கையாளவில்லை. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணைக்கு அரசு மானியம் வழங்குவது போலக் காய்கறிகளுக்கும் மானியம் வழங்க வேண்டிய நிலை வரலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெருத்த சேதம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, விவசாயத்துக்காக வாங்கிய கடனைத் திருப்பி அளிக்க முடியாத நிலையில் இரு விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ள விவசாயிகள் குறித்துக் கவலை கொள்ளாத மகாராஷ்டிரா அரசு பணம் கொழிக்கும் ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு வரி விலக்கு அளித்துச் செல்வந்தர்களைத் திருப்திப் படுத்தி வருகிறது.

அணு உலை முதலீட்டில் பெரும் பணத்தைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் சில தனியார் நிறுவனங்களுக்கும் சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக அணு உலை விபத்துக் காப்பீடு என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தைச் செலவு செய்யத் திட்டம் தீட்டும் மத்திய அரசு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும் பட்டினியாலும் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை.

இனியாவது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டு இயற்கைச்  சீற்றங்களினால் நஷ்டப் படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீடு போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முன்வருவதோடு, மாணவர்களுக்கு உயர்படிப்புக்காக  வட்டியின்றி கடன் வழங்குவது போன்று விவசாயிகளுக்கும் வட்டியில்லா கடன் வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் மானிய விலையிலும் பண்டிகைக் காலங்களில் இலவசமாகவும் தக்காளியையும் வெங்காயத்தையும் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் அரசுக்கு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்.

சீனாவில் பத்திரிக்கையாளர்களுக்குத் தடை! இணையதளம் முடக்கம்

சீன தலைநகரான பெய்ஜிங்நகரில் உள்ள புகழ்பெற்ற வாங்பியூஜிங் பகுதியில் செய்தி  சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரசுகளுக்கு எதிராக புரட்சி நடந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய நாடுகளில், ஆட்சிக்கு எதிராக மக்கள் மல்லிகை புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், சீனாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் ஆட்சி தற்போது பயத்தில் தவித்து கொண்டிருக்கிறது. சீன அரசுக்கு தெரியாமல் பேஸ்புக், டிவிட்டர் போன்ற இணையதளங்களை மக்கள் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை பரிமாறி வந்தனர். இதை அறிந்த சீன அரசு இதுபோன்ற இணையதளங்களை முடக்கி வைத்தது.
இந்நிலையில், சீன அரசு தற்போது செய்தி சேகரிப்புக்கும் தடை விதித்துள்ளது. பெய்ஜிங் நகரின் ஷாப்பிங்கிற்கு புகழ்பெற்றது வாங்பியூஜிங். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி சேகரிக்க வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். இவர்களை போலீசார் அடித்து விரட்டியதுடன் சில வெளிநாட்டு பத்திரிகையாளர்களை துன்புறுத்தினர்.
இச்சம்பவத்தை அடுத்து வாங்பியூஜிங் பகுதியில் செய்தி சேகரிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 2000வது ஆண்டில் இருந்து நடைமுறையில் இருப்பதாகவும், 2011, ஜனவரி 1ம் தேதி முதல் எழுத்துபூர்வமாக சட்டமாக்கப்பட்டது என, சீன அரசு தற்போது தெரிவித்துள்ளது. இங்கு செய்தி சேகரிக்க அனுமதி பெற வேண்டும் என, வாங்பியூஜிங் மேலாண்மை மற்றும் கட்டமைப்பு அலுவலக அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் நெருக்கடி - பாமகவுக்குத் தொகுதிகள் குறைப்பா?

திமுக -   காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையிலும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே நேற்று நடைபெறவிருந்த பேச்சுவாரத்தையை ரத்து செய்து விட்டு குலாம் நபி ஆசாத் டெல்லி விரைந்தார்.
தொகுதி எண்ணிக்கை விசயத்தில் காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக இருந்து வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை  எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. ஏற்கனவே பாமக,விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கலக்கம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்  ஆகிய கட்சிகளுக்கு 52 தொகுதிகளை ஒதுக்கி விட்ட நிலையில் மீதமுள்ள 182 தொகுதிகளையே பிரித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.
காங்கிரசும் தொகுதி எண்ணிக்கை விசயத்தில் இறங்கி வராத நிலையில்  காங்கிரஸ் கூட்டணியை இழக்க விரும்பாத திமுக 60 தொகுதிகளை விட்டுத் தரத் தயாராக இருப்பதாக திமுக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கினால் திமுக 122 தொகுதிகளில் மட்டுமே போட்டிட முடியும். எனவே பாமகவுக்கு வழங்கப் பட்ட தொகுதிகளில் 31 தொகுதிகள் குறையக் கூடும் என்றும் தொகுதிகளை குறைத்துக் கொள்ள பாமக நிறுவனர்  ராமதாஸ் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர் வீட்டை எட்டிப்பார்க்க வேண்டாம்! S.V.சேகருக்கு காங். சூடு

சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகருக்கு, சென்னை மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசுக்கு வந்த பிறகும் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை வசைபாடும் ஜெயலலிதாவுக்கு இணையதள பேஸ் புக் மூலம் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.
இதற்குமுன் சோனியா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றோருக்குப் பிறந்த நாள் வந்த போது அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதுபோன்ற எதிர் வீட்டை எட்டி பார்க்கும் செயலை எஸ்.வி. சேகர் இனியும் தொடர வேண்டாம்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

அ.தி.மு.க - தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், தமிழக சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது.
 
ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கூட்டணி குறித்து அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு திடீரென்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்றார். அவருடன் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதீசும் சென்றார். அங்கு ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை 20 நிமிடம் நடைபெற்றது. பேசசுவார்த்தையின் போது, அ.தி.மு.க.வும் தே.மு.தி.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
 
இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பது குறித்து இரு கட்சி தலைவர்களும் விரைவில் பேசி முடிவு செய்ய உள்ளனர்.