செவ்வாய், 30 நவம்பர், 2010

திமுக, காங். இடையிலான அமைச்சர் பதவி பேச்சுக்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட நீரா, பர்கா

டெல்லி:        2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவுக்காக காங்கிரஸ்  தரப்பிலும், காங்கிரஸுக்காக திமுக தரப்பிலும் புரோக்கர்கள் போல செயல்பட்டுள்ளார் நீரா ராடியா. அவருக்கு உதவியாக இருந்துள்ளனர் பர்கா தத் போன்ற பத்திரிக்கையாளர்கள்.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே அமைச்சர் பதவிகள் குறித்த பேரம் சூடு பிடித்திருந்த நேரத்தில், 2009ம் ஆண்டு மே மாதம் ராடியாவுக்கும், கனிமொழி, ராஜா, பர்கா தத், வீர் சிங்வி உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த பேச்சுக்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.

நீரா ராடியாவுக்காக பர்காவும், பர்காவுக்காக நீராவும் இரு கட்சிகளின் தலைவர்களிடமும் மாறி மாறிப் பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடல்களின் சில முக்கிய பகுதிகள் இதோ...

முதல் தொலைபேசிப் பேச்சு-2009, மே 22ம் தேதி காலை 9.48 மணி

ராடியா- ஹாய், தூக்கத்தைக் கலைத்து விட்டேனா?

பர்கா- இல்லை, இல்லை, ஏற்கனவே நான் எழுந்து விட்டேன். இரவு முழுவதும் சரியாகவே தூங்கவில்லை. இன்னும் பிரச்சினை தொடர்கிறதே..

ராடியா- பிரச்சினை என்னவென்றால் அவர்கள் (காங்), அவருடன் ( கருணாநிதி  ) நேரடியாகப் பேச வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதுதான் இப்போது பிரச்சினை.

பர்கா - ஆமாம், அதேசமயம், அவர்கள் (திமுக) வெளிப்படையாக மீடியாக்கள் மூலம் பேசி விட்டதால் பிரதமர் சற்று நெருக்கடியில் உள்ளார்.

ராடியா - ஆனால், பாலுதான் அதை செய்கிறார். இருப்பினும் அப்படிச் செய்யுமாறு கருணாநிதி அவருக்கு உத்தரவிடவில்லை.

பர்கா - அப்படியா ?

ராடியா - ஆமாம் கருணாநிதி அப்படிக் கூறவில்லை. காங்கிரஸிடம் கூறி விட்டு (திமுகவின் நிலையை) வந்து விடுமாறுதான் கருணாநிதி கூறியிருந்தார்.

பர்கா - ஆனால் பாலு எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட்டார்.

ராடியா - ஆமாம், அந்த சமயத்தில் மீடியா ஆட்கள் வெளியில் நின்றிருந்தனர்.

பர்கா - அடக் கடவுளே, இப்போது என்ன செய்யலாம், நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும். அதை சொல்லுங்கள்.

ராடியா - நான் அவரது (கருணாநிதி) மனைவியுடனும், மகளுடனும் இரவு நீண்ட நேரம் பேசினேன். பிரச்சினை என்னவென்றால் காங்கிரஸுக்கு பாலுவைப் பிடிக்கவில்லை. பாலுவைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. கருணாநிதியுடன் அவர்கள் (காங்.) நேரடியாகப் பேச வேண்டும். கருணாநிதியுடன் நேரடியாக அவர்களுக்கு நல்ல உறவு உள்ளது.

பர்கா - சரியாக சொன்னீர்கள்.

ராடியா- ஆனால் பாலு முன்போ அல்லது தயாநிதி மாறன்  முன்போ அவர்களால் (காங்கிரஸ் தலைவர்களால்) கருணாநிதியிடம் பேச முடியாது.

பர்கா - ஆமாம்.

ராடியா - எனவே அவர்கள் நேரடியாக பேச வேண்டும். இதற்கு தமிழகத்திலேய நிறைய காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பேசலாம். எனவே நேரடியாக கருணாநிதியிடம் போய் தெளிவாக அவர்கள் பேசி விடலாம். அடுத்த பெரிய பிரச்சினை என்னவென்றால், அழகிரி. பாலுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி தரும்போது, தனக்கு துணை அமைச்சர் பதவி தருவதை அழகிரி விரும்பவில்லை.

பர்கா - சரிதான். ஆனால் பாலுவை நீக்க கருணாநிதி முன்வருவாரா?

ராடியா - பாலுதான் பிரச்சினை என்றால், நிச்சயம் அவரை நீக்க கருணாநிதி முடிவெடுப்பார் என்றே நான் கருதுகிறேன்.

பர்கா - ஆனால் இப்போது பெரிய பிரச்சினை இலாகாக்கள் தொடர்பாகத்தானே?

ராடியா- இல்லை, அவர்கள் இலாகா பற்றி இப்போது சொல்லவில்லை.அதுகுறித்து விவாதிக்கக் கூட இல்லை.

பர்கா- ஆனால் போக்குவரத்து  , மின்சாரம், தொலைத் தொடர்பு, தகவல் தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய துறைகளை திமுக கேட்பதாக காங்கிரஸ் கூறுகிறதே..

ராடியா - நான் சொல்வதை தயவு செய்து கவனியுங்கள்.

பர்கா - சரி

ராடியா - கனிக்கு (கனிமொழி) தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தயாநிதி மாறன் கேபினட் அமைச்சராக இருக்கும்போது நீ இணை அமைச்சராக இருப்பது சரியல்ல என்று கனியிடம் அழகிரி கூறி வருகிறார்.

பர்கா - அப்படியா

ராடியா- அதேசமயம், மாறனும், நான்தான் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரே நபர் என்று அனைவரிடமும் (காங்கிரஸ் வட்டாரத்தில்) கூறிக் கொண்டிருக்கிறார்.

பர்கா - அது எனக்குத் தெரியும்.

ராடியா - ஆனால் அது சரி இல்லைதானே?

பர்கா -இல்லை, அதை நான் அறிவேன்.

பர்கா - ஆனால், மாறன் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று கருணாநிதியிடம் காங்கிரஸ் கூற வேண்டியது அவசியம்.

பர்கா - ஓ.கே. அதுகுறித்து மீண்டும் அவர்களுடன் பேசுகிறேன்.

ராடியா - ஆமாம், யார் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன். பாலுவுக்கு ஒரு ஒதுக்கீடு அவசியம். அதுகுறித்து அவர்களிடம் சொல்வது அவசியம். மாறன் பற்றி நாங்கள் எதுவும் இப்போது பேசவில்லை.

--

2வது அழைப்பு - 2009, மே, காலை 10.47

ராடியா - பர்கா, காங்கிரஸ் தரப்பில் நடப்பதை நேற்றே சொன்னேன். காங்கிரஸ் தரப்பிலிருந்து யார் திமுகவுடன் பேசி வருகின்றனர் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

பர்கா - ஆமாம், அனேகமாக மாறனாக இருக்கும்.

ராடியா - ஆனால் கட்டமைப்புத் துறையை மாறனுக்கோ அல்லது பாலுவுக்கோ தர முடியாது என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பர்கா - இல்லை,அதை அவர்களே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

ராடியா- பிரதமரே அதைச் சொல்லியுள்ளார்.திமுகவுக்கு தொழிலாளர் நலத்துறை, உரத்துறை, கெமிக்கல், தொலைத் தொடர்பு மற்றும் ஐடி தருவதாக கூறியுள்ளனர். ராஜாவுக்கு ஐடி, தொலைத் தொடர்பு தருவதாக கூறியுள்ளனர். இதை கருணாநிதிக்கும் தெரிவித்து விட்டனர்.

பர்கா - அப்படியா !

ராடியா - மாறன் உண்மையைப் பேசுவதில்லை என்பதால் நேரடியாக அவர்கள் கூறியிருக்கக் கூடும்.

பர்கா - இல்லை, மாறன் மூலமாகவே இதை அவர்கள் கூறியிருப்பதாக கருதுகிறேன்.

ராடியா - இப்போது அவர்கள் கனியுடன் பேச விரும்புகின்றனர். பின்னர் அவரது தந்தையுடன் பேச விரும்புகின்றனர். ஏனென்றால் பிரதமருடன் கருணாநிதி பேசியபோது கனிதான் மொழி பெயர்த்துக் கூறினார். அது 2 நிமிடமே நடந்த குறுகிய சந்திப்பு.

நீங்கள் கூறுவதை ஆலோசிக்கிறேன்.அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் கூறினாராம்.

பர்கா - அவர்கள் ஆர்சிஆரிலிருந்து (டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை இல்லம், அதாவது பிரதமரின் இல்லம்) அவர்கள் வந்தவுடன் நான் பேசுகிறேன்.

ராடியா - அவர் (கனிமொழி) என்ன நினைக்கிறார் என்றால் யாராவது ஒரு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், தன்னுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார்.

பர்கா- அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் ஆசாத்துடன் பேசுகிறேன். ஆசாத் வெளியில் (பிரதமர் இல்லத்திலிருந்து ) வந்தவுடன் நான் பேசுகிறேன்.

3வது அழைப்பு - மே 22, பிற்பகல் 3.31 மணி

ராடியா - அவருடன் (கனிமொழி) அவர்கள் பேசுகிறார்களா?

பர்கா - ஆமாம். பேசுகிறார்கள்.

ராடியா - யார், குலாமா (குலாம் நபி ஆசாத்)?

பர்கா - குலாம்தான்.

ராடியா - ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர் (கனி) ஐந்து மணி விமானத்தில் ஏறி அவர் சென்னை போகப் போகிறார். ராஜா மட்டுமே பதவியேற்பு விழாவில் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா) பங்கேற்க கட்சி மேலிடம் கூறியுள்ள போதிலும், தயாநிதி மாறனும் கலந்து கொள்கிறார். இதுகுறித்து கருணாநிதியை சந்தித்த அவர், தன்னை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அகமது படேல் குறிப்பிட்டுக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பர்கா - ஆனால் இது உண்மை அல்ல என்று அகமது கூறியுள்ளார்.

ராடியா -ஆனால் கருணாநிதி பெரும் குழப்பத்தில் உள்ளார்.

பர்கா - இல்லை, கனியும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாமே?

ராடியா - இல்லை, தனது தந்தை சொல்லி விட்டதால் பங்கேற்க கனி விரும்பவில்லை. இதனால் திரும்பப் போகிறார். தந்தை சொல்வதைத்தானே அவர் கேட்க முடியும். குலாமிடம் பேசுகிறீர்களா?

பர்கா - இப்போதே அவரிடம் பேசுகிறேன்.

ராடியா - கனி ஐந்து மணிக்குக் கிளம்புகிறார், ஐந்து மணிக்கு அவருக்கு விமானம், மறந்து விட வேண்டாம்.

4வது அழைப்பு-2009, மே 22, மாலை 6.09

பர்கா - காங்கிரஸின் நிபந்தனை என்னவென்றால், பாலுவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறை கூடாது என்பதே. பாலு என்றில்லை, திமுகவுக்கு அந்தத் துறை கிடையாது. சரியா?

ராடியா - சரிதான். ஆனால் பாலு போன்றோர் தனி நபர்கள் அல்லவே. நேற்று வரை 3 பிளஸ் 4 என்று பேசி வந்தனர். ஆனால் பின்னர் மாறனையும் சேர்த்து 4 பிளஸ் 3 என்று பேசினர்.

பர்கா- ஓ.கே.

ராடியா - தற்போது மீண்டும் 3 பிளஸ் 4 என்ற நிலைக்கே மீண்டும் வந்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்து பேசியதுதானே?

பர்கா - இல்லை, அப்படியானால், இது ஏன் முதலிலேயே அவர்களுக்கு சரி என்று படவில்லை?

ராடியா - அழகிரியால்தான். அழகிரியை அமைச்சராக்குவதாக இருந்தால் அவருக்கு கேபினட் கிடைக்காது. (பர்கா குறுக்கிட்டு அப்படியா என்கிறார்), ஆமாம், அவருக்கு கேபினட் கிடையாது.

பர்கா - அப்படியானால் அழகிரிக்கு என்ன தரப் போகிறார்கள்?

ராடியா - அவருக்கு சுகாதாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதுவும் கூட கேபினட் பொறுப்பு அல்ல. மாறன் கிடையாது, ராஜா கிடையாது, பாலுவும் கிடையாது.

பர்கா - அழகிரிக்கு சுகாதாரத் துறை கொடுத்ததே காங்கிரஸ் செய்த மிகப் பெரிய தியாகம்தான். காரணம், திமுகவுக்கு சுகாதாரத் துறை கிடையாது என்று முதலில் காங்கிரஸ் கூறி வந்தது. இப்போது அவர்கள் விட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால் அழகிரிக்கு சுகாதாரத் துறை, கேபினட் பொறுப்பு தர முடியாதா என்ன?

ராடியா - ஒத்துக் கொள்கிறேன். அப்படியானால் ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவியே கிடைக்கும். அதேபோல பாலுவுக்கும் இணை அமைச்சர் பதவி தானா?

பர்கா - இல்லை இல்லை. பாலுவுக்கு கனரக துறை கிடைக்கலாம். அப்படிக் கிடைத்தால் அழகிரிக்கு உரத்துறை கிடைக்கும். ஒருவேளை பாலுவுக்கு உரத்துறை கிடைத்தால், அழகிரிக்கு இந்த சுகாதாரத் துறை கிடைக்கும்.

ராடியா - மாறனுக்கு தொலைத் தொடர்பு ஐடி துறை.

பர்கா - ஆமாம். ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவி.

ராடியா - யாருக்கு?

பர்கா - ராஜாவுக்கு, இல்லையா?

ராடியா - இல்லை இல்லை, அப்படி இல்லை, என்னை நம்புங்கள்

4வது அழைப்பு - 2009, மே 22, இரவு 7.23

பர்கா - பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தரப்பில் அனைவரும் பங்கேற்க போய்விட்டனர். எனவே உயர் மட்டத் தலைவர்களுடன் என்னால் பேச முடியவில்லை. இப்போதுதான் திரும்பி வந்துள்ளேன். இனிமேல்தான் தொடர்ச்சியாக பேசப் போகிறேன்.

ராடியா- கனி இப்போதுதான் சென்னைக்குப் போயுள்ளார். இப்போதுதான் அவரிடம் பேசினேன்.

பர்கா - தயாநிதி மாறன் எங்கே?

ராடியா - பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. அவரை கட்சி மேலிடம் அழைத்து விட்டது. அகமது படேல் என்னை பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அவர் கருணாநிதியிடம் சொன்னபோது, அப்படியானால் நீ காங்கிரஸிலேயே சேர்ந்த விடு என்று கருணாநிதி கூறி விட்டார். இதனால் அவர் பங்கேற்கவில்லை.

ராஜாவை மட்டுமே பங்கேற்குமாறு கட்சி மேலிடம் கூறியதால் அவர் மட்டும் பங்கேற்றார். அவரும் கூட 8.40 மணிக்கு விமானம் ஏறுகிறார்.

இவ்வாறு போகிறது தொலைபேசி உரையாடல்.

இந்த அமைச்சர் பதவி தொடர்பாக திமுக, காங்கிரஸுக்கு இடையே மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில் பல புரோக்கர்களும் செயல்பட்டு, இரு தரப்புக்கும் சாதகமான முறையில் சூழ்நிலைகளை மாற்ற உதவியுள்ளனர் என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.

ஆனால், இதில் புரோக்கராக எல்லாம் தான் செயல்படவில்லை என்றும் செய்திகளை சேகரி்க்க பல தரப்பையும் தொடர்பு கொள்வது போலவே நிரா ராடியாவுடன் பேசியதாகவும் பர்கா தத் விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக மாறிய அமெரிக்கா-சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கா  விலிருந்தும் தீவிரவாதம்  பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

அதில், டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.

சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது...

மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.

ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம்  சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.

இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.
  
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி-விக்கிலீக்ஸ்

வாஷிங்டன் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது.

அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு.

ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற கருத்துக்கு ஆணித்தரமாக ஆதாரம் தருவது போல உள்ளது இந்த கசிவுகள்.

என்ன அது விக்கிலீக்ஸ்?

2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.

சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதாரதளமாக விக்கிலீக்ஸ் மாறி வருகிறது. மேலும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.

இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மூலம் பெற்று சேகரித்தது.

அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.

பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற பெருமையும் இதற்குண்டு.

ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.

இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.

இந்தியாவைப் பற்றி...

இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு முயன்று வருகிறது. இதனால் அதன் செயல்பாடுகள் குறித்துஅறிய இந்தியத் தூதர்களை உளவு பார்க்குமாறு ஹில்லாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூலை 31ம்தேதி ஹில்லாரி அமெரிக்கத் தூதர்களுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹில்லாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார்.

இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹில்லாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா.

மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது.

உலகத் தலைவர்களை கேவலமாக கிண்டலடித்த அமெரிக்கா

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது 'பெரியண்ணன்' அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். "பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌‌ரி‌ன் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளதும் அம்பலமாகியுள்ளது.

"லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்...", என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, "இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்.." என்றும் கூறியுள்ளனர்.

'டாக் புடின்'

மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, 'அ‌ல்பா டா‌க்' என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.

ஈரான் ஹிட்லர்

ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை "ஹிட்லர்" என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.

பாகிஸ்தானிடம் தோற்ற அமெரிக்கா...

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.

மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.

கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா...

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
  Read:  In English 
இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் 'விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.

அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்!

ஈழப் போரின் இறுதியில் நடந்தது என்ன... விடை தருமா விக்கிலீக்ஸ்?

லண்டன்: ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்தது என்னவென்ற மர்மத்துக்கு விக்கிலீக் ஆவணங்களில் விடை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ரகசிய தகவல் தொடர்புகள் குறித்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் ராஜரீக உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.

அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப் பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜாங்கத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களில் இவை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

போரின் இறுதி நாட்களில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டது மற்றும் புலிகளின் முதல்கட்ட தலைவர்கள் என்ன ஆனார்கள் போன்றவற்றுக்கான பதில்கள் இந்த ஆவணங்களில் இருக்கும் எனத் தெரிகிறது.

இன்று முதல் அமலுக்கு வந்தது டெலிபோனில் பேசி விளம்பரம் செய்ய தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்

செல்போன்களில் விளம்பரதாரர்கள் தரும் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. முக்கியமான அலுவல் பணியில் இருக்கும்போது கூட போன் செய்து அது வேண்டுமா? இது வேண்டுமா? என்று எதையாவது கேட்கின்றனர்.
மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி மந்திரிசபை கூட்டத்தில் இருந்தபோது கூட அவருக்கு நிதி நிறு வனம் ஒன்று போன் செய்து உங்களுக்கு லோன் வேண்டுமா? என்று கேட்ட சம்பவமும் நடந்துள்ளது.
எனவே இந்த தொல்லைகளை தடுக்க வேண்டும் என டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிடப்பட்டது. அதையடுத்து ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இதன்படி இனி டெலிபோன்களில் பேசி விளம்பரம் செய்யக்கூடாது. அதை மீறி செய்யப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
விளம்பர நிறுவனங்களுக்கு தனியாகவும், டெலிபோன் நிலையத்துக்கு தனியாகவும் அபராதம் விதிக்கப்படும். விளம்பர நிறுவனம் முதல் தடவை தவறு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது தடவை செய்தால் ரூ.72 ஆயிரமும் விதிக்கப்படும். 6 தடவை மீறினால் அபராதம் ரூ.2 லட்சமாக உயரும். டெலிபோன் நிறுவனங் களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் நிறுவனங்கள் டெலிபோனில் விளம்பரம் செய்யும்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விளம்பர நிறுவனங்களுக்கு “700”-ல் தொடங்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் இருந்து எந்த எண்ணுக்கும் அவர்கள்டயல் செய்து பேசி விளம்பரம் செய்யலாம்.
“700” எண்ணில் தொடங்கும் போன் வந்தாலே இது விளம்பர போன் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே அந்த அழைப்பை ஏற்று பேசுவதாக இருந்தால் பேசலாம். தேவை இல்லை என்றால் துண்டித்து விடலாம்.
புதிய விதியமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக டெலி போன் ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனைதமிழக சட்டசபை தேர்தல் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.
 
இதையொட்டி தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தலை எவ்வாறு நடத்து வது என்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்க மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக இன்று சென்னை கோட்டையில் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
 
மத்திய தேர்தல் துணை கமிஷனர் ஜெயபிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்டி ரெட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோர் அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோ சனை நடத்தி சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டு அறிந்தனர்.
 
ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் அதிகாரியை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அனைத்துக் கட்சியினரும் தனித்தனியாக சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
 
முதலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மகேந்திர வர்மன், கல்யாணசுந்தரம், தமிழ்மதி ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்து கருத்து கூறினார்கள். அடுத்து பாரதீய ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமலைசாமி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தமிழக சட்டசபை தேர்தலை ஒரேநாளில் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாக பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
 
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மகேந்திரன் எம்.எல்.ஏ., ஆறுமுகநயினார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராஜ்மோகன், வீரபாண்டியன், ஆகியோர் கலந்து கொண்ட னர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் வக்கீல் ராஜ்மோகன், புரசை கீதா பங்கேற்றனர்.
 
கம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் “அனைவருக்கும் வாக்காளர் அட்டை கொடுக்க வேண்டும். எந்திரத்தில் ஓட்டு போடும் போது யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கான அத்தாட்சி வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நிருபர்களிடம் கூறினார்கள்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியை சந்தித்து கருத்து தெரிவித்தனர். அப்போது தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினார்கள்.
 
தி.மு.க. சார்பில் அமைச்சர் பொன்முடி, கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது தி.மு.க. சார்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
 
அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நேர்மையான தேர்தல் ஓட்டு எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கு சான்று, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது போன்ற பல்வேறு கருத்துக்களை வற்பறுத்தினார்கள்.
 
பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி வேலு, முத்துக்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்தனர். அப்போது எந்திர ஓட்டுப்பதிவை நேர்மையாக நடத்து வது, பண வினியோகத்தை தடுத்தல் போன்ற கருத்துக் களை தெரிவித்தனர்.
 
தேர்தல் அதிகாரியுடன் அனைத்துக்கட்சி பிரமுகர் களின் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது.

ஒளிந்து கசியும் இந்துத்துவம்.

அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்.
குஜராத் துவங்கி கோவை வரை.................
இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது.
ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவதில்லை.
இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக்கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல்களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப்புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்
இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும்.
இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது.
இந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட்டாள் நானல்லஎன்றார்*.
பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதேஎன்று கோபப்பட்டிருப்பார்.
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தான் பதிவாகிறது. பதிவானவைகள் தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ?
காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.
யாருக்காக? எதற்காக?
கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.
அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ்வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது.
மற்றொரு சம்பவம். 2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.
ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரணமாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது.
இவைகள் ஒவ்வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும்.
மற்றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது.
இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர்.
பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசாரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.
குஜராத் வடிவம் மாறி கோவையில்...
2006
ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.

1998
பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள்.
மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர்.
இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது.
ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும். தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறிய டிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன.
என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமையாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி-13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.
அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது.
ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன.
சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை.
அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.
கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறையிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற்றார். வழக்கு சிபிசிஐடி-யின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார்.
ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார்.
அவரது விசாரணையின் துவக்கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது.
இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார்
பி-13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ- வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு-5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’
அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளதுஎன்று கூறுகிறார்.
அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்படவில்லை.
அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண்டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

அதிர வைக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு : இந்திய ஊழல் வரலாற்றில் புதிய சாதனை

இந்திய ஊழல் வரலாற்றுக்கு புதிய வரவு ஸ்பெக்ட்ரம். நம் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் புதிய விஷயமல்ல. கடந்த 1980களிலேயே ஊழலுக்கான வேர், இங்கு பலமாக ஊன்றப்பட்டு விட்டது. போபர்ஸ், தெகல்கா, மாட்டுத் தீவனம், ஹவாலா, லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஊழல் என, ஊழல் பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சிறிய அளவில் பரவிக் கொண்டிருந்த இந்த ஊழல் நடவடிக்கைகள், தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்து, நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்திய ஊழல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய தொகை.
சாதாரண மக்களும் திகைப்பு: "ஸ்பெக்ட்ரம், "2ஜி' அலைக்கற்றை, ஸ்வான், யுனிடெக், எஸ்.டெல்' என, மீடியாக்களில் அடிக்கடி கூறப்படுவதை, ஏதோ வேற்றுக் கிரக மக்கள் பேசும் மொழி யோ என, நினைத்து, இந்த விவகாரத்தை பொருட்படுத்தாத சாதாரண மக்கள் கூட, 1.76 லட்சம் கோடி ரூபாய் என, பேச்சு எழுந்ததுமே, ஒரு கணம் திகிலடித்து, அதிர்ச்சியுடன் கவனிக்கத் துவங்கியுள்ளனர். எங்கு முறைகேடு நடந்தது, எப்படி நடந்தது என்பது போன்ற விவகாரங்கள் எல்லாம் புரியவில்லை என்றாலும், மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது என்பதை மட்டும் தெரிந்து கொண்டுள்ளனர்.
ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டின் மூலம், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதன் மூலம், இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயையும் யாருடைய பாக்கெட்டிற்கோ, போய் விட்டதாக அர்த்தம் இல்லை. அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சட்ட, நிதி அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் மூலம், அரசுக்கு கிடைக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் கிடைக்காமல் போய் விட்டது என்பது தான், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் குற்றச்சாட்டு. தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, இந்த வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்தார் என்றும், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. முறையான விதிமுறைகளை பின்பற்றாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிமங்கள் பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால், யார், யார் லாபம் அடைந்தனரோ அவர்கள் தான் ஊழல் செய்தவர்கள். இதற்காக, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அவர்கள் எவ்வளவு லாபம் பெற்றனரோ, அந்த தொகை தான் ஊழல் தொகை. அது, சாதாரண தொகையாக இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக கூற முடியும்.
மூன்று ஆண்டுக்கு முன்பே கசிந்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்தாலும், மூன்று ஆண்டுக்கு முன்பே, இதுகுறித்து அரசல், புரசலாக மர்மங்கள் கசியத் துவங்கி விட்டன. போதிய இடைவெளிகளில் இதுகுறித்த தகவல்கள் வெளியானாலும், அப்போது யாரும் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய விஷயங்கள் வெளியில் கசியத் துவங்கியதும் தான், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
பலமுனை தாக்குதல்: பா.., - இடதுசாரி கட்சிகள், .தி.முக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் எழுப்பி, பார்லிமென்டை ஸ்தம்பிக்க வைத்தன. மறுபக்கம், மீடியாக்கள் அடிக்கடி இதுகுறித்த செய்திகளை வெளியிட்டவாறு இருந்தன. மற்றொரு பக்கம், தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளும், இந்த விஷயத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கினர். குறிப்பாக, தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை மீடியாக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். இது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை சமாளிப்பதற்காக சி.பி.., விசாரணை, பொது கணக்கு குழு ஆய்வு என, அரசு சார்பில் எவ்வளவோ சமாளிப்பு முயற்சிகள் நடந்தன. ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
மற்றொரு பக்கம், .தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா, "ராஜா விவகாரத்தில் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு தரத் தயார்' என, சமயம் பார்த்து அரசியல் காய் நகர்த்தினார். சுப்ரீம் கோர்ட்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியது. அனைத்து பக்கங்களிலும் இருந்து வந்த பலமுனை தாக்குதலில் மத்திய அரசு நிலைகுலைந்து போனது. வேறு வழியில்லாமல், இறுதிக் கட்ட நடவடிக்கையாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ராஜாவுக்கு உத்தரவு வந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு முன் பதவி வகித்தவர்கள் எந்த நடைமுறையை பின்பற்றினார்களோ, அதே நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன். பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல்படி தான், அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை'என, அடம்பிடித்த ராஜா, வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை: ராஜா ராஜினாமாவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என, நினைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாய், தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையும் இதில் உருட்டப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காத்தது என்? என, பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதால், காங்கிரஸ் மேலிடம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் பதவியும் ஊசாலாடிக் கொண்டிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தொலைத் தொடர்பு ஆணையத்தின் அதிரடி: இதுவரை மவுனம் காத்து வந்த தொலைத் தொடர்பு ஆணையமும் (டிராய்) தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 2008ல் புதிதாக நுழைந்து, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் 62 லைசென்சுகளை ரத்து செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. "டிராய்' அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: 15 மண்டலங்களில் தொலை தொடர்பு சேவை நடத்துவதற்காக அனுமதி பெற்ற எடிசலாட் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். யுனிடெக் நிறுவனத்துக்கு சொந்தமான யூனிநார் நிறுவனத்துக்கு எட்டு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஷியாம் குரூப்பிற்கு பத்து மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பத்து உரிமங்கள், லூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 19 உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
டிராயின் இந்த அதிரடி நடவடிக்கையால் உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆடிப் போய் உள்ளன.என்ன செய்யப் போகிறது சி.பி.., ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை என, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து வாங்கிக் கொண்ட வெறுப்பில் இருக்கிறது சி.பி.., தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. நாடு முழுவதும் கவனிக்கப்படும் விஷயமாகி விட்டது. எனவே, இந்த விஷயத்தில் சி.பி.., அடுத்து எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். முறைகேட்டுக்கு துணை நின்ற அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக சி.பி.., வலைவிரிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.., சுதந்திரமாக செயல்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுத்தமாகுமா இந்திய அரசியல்? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத மதுகோடா போன்ற அரசியல்வாதிகள் தான், கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாகவே உலா வருகின்றனர். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் மீடியாக்கள், தற்போது மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அடியோடு அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்து, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் நில ஊழல் தொடர்பான விவகாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி. எனவே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, அரசியலை தூய்மைப் படுத்தும் முயற்சியில் ஆளுவோர் களம் இறங்க வேண்டும்.
"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு : சி..ஜி., அறிக்கை கூறுவது என்ன?
* கடந்த 2008ல் நடந்த "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியே 645 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
* ஏல முறைக்கு பதிலாக, முதலில் வருபவர்களுக்கே ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டுள்ளது.
* உரிமம் கோரிய 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதிய நிதி மூலதனத்தை பெற்றிருக்கவில்லை. இவற்றில் 45 நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் கோருவதற்கான தகுதிகளை பெற்றிருக்கவில்லை.
* சில நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* மத்திய சட்ட மற்றும் நிதி அமைச்சகங்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு துறை (டிராய்) விதிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
* சில தனியார் நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்குவதிலும் வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்படவில்லை.
* உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன. ஸ்வான் நிறுவனம், தனது 45 சதவீத பங்குகளை "எடிசலாட்'என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. யுனிடெக் நிறுவனம், தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
* உரிமம் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றதால், பெரிய அளவில் பயன் அடைந்துள்ளன. அதே நேரத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
* உரிமம் வழங்கும் நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.
* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
* அனுபவம் இல்லாத "ஸ்வான்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்க கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 772 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? உலகம் முழுவதும் மொபைல் போன் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. எனவே, தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு தேவையான சிக்னல்களை பெறுவதற்கான அலைவரிசைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்கான அலைக்கற்றைகளின் (ஸ்பெக்ட்ரம்) கட்டுப்பாடு, அந்தந்த நாட்டு அரசுகளின் கைகளில் உள்ளன. இதை உலக அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் ஈடுபட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல, இந்த அலைக்கற்றைகள் அவசியம். எனவே, மத்திய அரசிடம் இருந்து, இந்த அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் அலைக்கற்றைகள், நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?
* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.
* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.
* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.
* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.
* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.
இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்கள்: மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:
1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி
2. சர்க்கரை ஊழல் 650 கோடி
3. போபர்ஸ் ஊழல் 65 கோடி
4. ஹவாலா ஊழல் 65 கோடி
5. எம்.பி., டிரேடிங் 32 கோடி
6. உர ஊழல் 133 கோடி
7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி
8. இந்தியன் வங்கி 1,336 கோடி
9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி
10. நில ஊழல் (பீகார்) 400 கோடி
11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி
12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்
நன்றி: தினமலர்

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தால், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான மத்திய அமைச்சர் ராஜா, நீண்ட இழுபறிக்குப் பின், தன் பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்தார். பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுவதை தடுக்கவும், மத்திய அரசுடன் சுமுகமான உறவு நீடிக்கவும் கருணாநிதி இந்த  முடிவை எடுத்தார்.கருணாநிதியின் உத்தரவையடுத்து, நேற்றிரவு டில்லி சென்ற அமைச்சர் ராஜா, பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
 "2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜா மீது, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் குற்றம் சாட்டியது. கடந்த வாரம் பார்லிமென்டில் இப்பிரச்னை கிளப்பிய பா.., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், பார்லி., கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.அதேநேரத்தில், "இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு அளிக்க தயார்' என, .தி.முக., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்ததும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய அமைச்சர் ராஜா, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். "எனக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் பின்பற்றிய நடைமுறையத் தான், நானும் பின்பற்றினேன். எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை' என, திட்டவட்டமாக கூறினார். தி.மு.., மேலிடமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், "அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்யாதவரை, கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் தெரிவித்தன. பா.., -மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதில் தீவிரமாக இருந்தன.

மேலும், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே நடந்த விசாரணையின்போது சி.பி..,யின் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது. இதனால், இன்றைய விசாரணையிலும், மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் கடுமையான கருத்துக்களை தெரிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூரும், அமைச்சர் ராஜாவுக்கு எதிராக நேற்று புகார்களை தெரிவித்தார். அது மத்திய அரசுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.இதனால்பிரச்னைகளை சமாளிப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் நேற்று தீவிரம் காட்டியது. ராஜா விவகாரம் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் டில்லியில் அவசர ஆலோசனை நடத்தினர்பின்னர்  தி.மு..,விடமும்  அவசர ஆலோசனை நடத்தினர்.

சென்னையில்  முதல்வர் கருணாநிதியை  நேற்று இருமுறை சந்தித்த அமைச்சர் ராஜா, மாலையில் டில்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், "வழக்கமாக தலைவரை சந்திப்பது போலத்தான் இன்றைய சந்திப்பு நடந்ததுநான் ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்று  கூறிவிட்டு புறப்பட்டார். உடனிருந்த  முன்னாள் அமைச்சர் டி. ஆர்.பாலு, "பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.அதே சமயம், டில்லிக்கு  தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட  அமைச்சர் துரைமுருகன், திடீரென  சென்னை திரும்ப மேலிடம் உத்தரவிட்டதுதி.மு..,வில்  முக்கிய முடிவை  எடுக்கும் உயர்மட்டக்குழு நேற்று மாலை வரை  கூடவில்லை என்றாலும்அரசியல் பரபரப்பு நீடித்தது. டில்லி சென்ற ராஜா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அவரது இல்லம் சென்றார். அவர் பிரதமர் வீட்டிற்கு செல்கிறார் என்றதுமே டில்லியில் பரபரப்பு கூடியது. அவர் ராஜினாமா  செய்யப்போகிறார் என்று செய்தி வெளியானது. பல தரப்பிலும் எதிர்பார்த்தபடிபிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து  ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜா  கூறுகையில்,""எனது கட்சி தலைவர் கருணாநிதி  ஆலோசனையின்  பேரில் பிரதமரை சந்தித்து ராஜினாமா  கடிதத்தை அளித்துள்ளேன். என் மீது குற்றம் இல்லை என்பதை, பார்லிமென்ட்டிலும், நீதிமன்றத்திலும் நிருபிப்பேன் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகள் கிளப்பும் கேள்விகளுக்கு தக்க பதிலளிப்பேன். எனது பதவிக்காலத்தில் தொலை தொடர்புத் துறை மிகுந்த மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது' என்றார்.

 ராஜாவின் ராஜினமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர், தொலைதொடர்பு துறை இலாகாவை தன் வசமே வைத்துக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜா ராஜினாமாவை தொடர்பாக தி.மு.., தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "" பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று  தி.மு.., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டது.
 ராஜாவின் ராஜினாமாவை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்ததுராஜா ராஜினாமா செய்துவிட்டாலும்ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பார்லிமென்ட்  கூட்டு குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

ஜனாதிபதி ஒப்புதல் : ராஜாவின் ராஜினாமாவை  பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ஏற்று கொண்டார்.

"2ஜி ஸ்பெக்ட்ரம்' : வளர்ந்த கதை :

2007 மே 18 : தி.மு..,வைச் சேர்ந்த ராஜா மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
ஆகஸ்ட் 28 : டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆகஸ்ட் 28 : ராஜா தலைமையிலான மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. அதாவது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய நிதி வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செப்டம்பர் 20-25 : "யூனிடெக்', "லூப்', "டாடாகாம்' மற்றும் "ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் "யூனிடெக்' மற்றும் "ஸ்வான்' ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார், அப்போது, தொலைத்தொடர்புத்துறை அமைச்சக செயலாளர் ஓய்வு பெற்றுவிட்டார். "ஸ்வான்' நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.
2008 ஜனவரி 1-10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது முன்னாள் செயலாளராக பணியாற்றிய"சித்தார்த்தா பெகுராவை', தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். பின்னர் தொலைத்தொடர்பு அமைச்சகம் 10 நாட்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
செப்டம்பர்-அக்டோபர்: "ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு ஏறத்தாழ 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைதொடர்புத் துறை லைசென்சை 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து "யூனிடெக்' நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது.
இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஜனவரி, 2008ம் ஆண்டு வரையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்தமாக 2001ம் ஆண்டு விலை நிர்ணயத்தின்படி 122 லைசன்ஸ் வழங்கி உள்ளது.
நவம்பர் 15 : மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷன் அமைச்சர் ராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பான தனது விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.
2009 அக்டோபர் 21 : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக நவம்பர் 29, 2008 , அக்டோபர் 31, 2009 , மார்ச் 8, 2010 , மார்ச் 13, 2010 ஆகிய தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கடிதங்களை எழுதி உள்ளார்.
2010 ஏப்ரல் 12 : சுப்ரமணிய சுவாமி டில்லி ஐகோர்ட்டில் "ரிட்' மனு தாக்கல்.
அக்டோபர் 29 : மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி..,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம்கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதேபோன்ற நடைமுறையை தான் அனைத்து வழக்கிலும் கடைப்பிடிப்பீர்களா', என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.
நவம்பர் 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 11: மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லை எனவே இதுகுறித்து சி.பி.., விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தது.
நவம்பர் 14: ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜா: வாழ்க்கைக் குறிப்பு :

பெயர்: . ராஜா

பிறந்த இடம்: பெரம்பலூர்
தந்தை: எஸ்.கே.ஆண்டிமுத்து
தாயார் : சின்னப்பிள்ளை
பிறந்ததேதி: 1963 அக்டோபர் 5.
கல்வி தகுதி: பி.எஸ்.சி., மற்றும் எம்.எல்.,
மனைவி : எம்..பரமேஸ்வரி
குழந்தைகள்: மகள் மயூரி
கட்சி: தி.மு..,
தொகுதி: நீலகிரி
வகித்த பதவிகள்: 1996ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். 1999 லோக்சபா தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார். பின்னர் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.
2004 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ( 2004 மே 23 - 2007 மே 17,) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரானார். பின்னர் 2007 மே 18ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 2009 மே 31ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார்.
கட்சித் தலைமையிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கால், வட்டார அளவில் செல்வாக்குப் பெற்றிருந்த அவர், மத்திய அமைச்சராகும் அளவுக்கான தகுதியை குறுகிய காலத்தில் பெற்றார். இலக்கியத்தில் ராஜாவுக்கு இருந்த திறமைதான் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர் நெருக்கமாகக் காரணமாக அமைந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு நெருக்கடி இருந்த போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.