செவ்வாய், 13 செப்டம்பர், 2011

உள்ளாட்சித் தேர்தலில் பணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் சாதி, மதம் மற்றும் பணத்தின் அடிப்படையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது குறித்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு கலெக்டர் சகாயம் பேசியதாவது, மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

பிரச்சினைகள் ஏற்படும் முன், அசம்பாவிதங்களை தடுக்க காவல் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். உத்தப்புரம், வில்லூர் ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள சாதி பிரச்சினையால் பலமுறை அமைதி குழுக்கள் அமைக்கப்பட்டும், இதுவரை முடிவு காண முடியவில்லை.

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 2 சமுதாய இளைஞர்களை அழைத்து பேசி தீர்வு காண காவல்துறை மற்றும் வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும்.

அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மதம், பணத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் போடும் முறை இருக்க கூடாது. இதை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஈராக்கில் 22 பயணிகளை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்ற மர்ம ஆசாமிகள்

ஈராக்கில் உள்ள மேற்கு பாக்தாதில் சிரியாவில் இருந்து பேருந்தில் வந்த 22 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம மனிதர்கள் சுட்டுக் கொன்றனர்.

சிரியாவில் இருந்து 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து நேற்றிரவு 9.30 மணிக்கு மேற்கு பாக்தாத் பகுதியில் உள்ள நௌகைர் பாலைவனத்தில் சென்றபோது ஆயுதம் ஏந்திய சிலர் பேருந்தை வழிமறித்தனர்.

ஆயுதங்களைப் பார்த்த பேருந்து ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார். உடனே அந்த மர்ம நபர்கள் பேருந்துக்குள் உள்ள அனைவரையும் கீழே இறங்கி வருமாறு உத்தரவிட்டனர். ஆயுதங்களைப் பார்த்து பயந்துபோன அப்பாவி மக்கள் மறுபதில் சொல்லாமல் பேருந்தில் இருந்து இறங்கினர்.

இறங்கியவர்களை வரிசையாக நிற்க வைத்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் தங்கள் கைகளில் இருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக பயணிகளை நோக்கி சுட்டனர். இதில் 22 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.  
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளரான இந்த எல்மர்தான், அந்த வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றிய முழு விவரங்களை விக்கிலீக்ஸுக்கு தந்தவர். இதற்காக இருமுறை கைதானவரும்கூட. வரி ஏய்ப்பை சர்வ தேச அளவில் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ஏராளமாக உள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்து, கேமேன் ஐலேண்ட் போன்ற தீவுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

இந்தியா பெரிய நாடு. எந்த உலக நாட்டிடமும் பேசி தகவலை வாங்கும் திறன் மிக்க நாடு. ஆனாலும் ஏனோ அந்நாட்டு அரசு எந்த ஆர்வமும் இதில் காட்டவில்லை.

உண்மையில் வரி ஏய்ப்பை கடுமையாக ஒழிக்க போராடும் நாடு அமெரிக்காதான். சமீபத்தில் தங்கள் வங்கியில் கறுப்புப் பண கணக்கு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை சுவிஸ் வங்கி அமெரிக்க அரசுக்கு கொடுத்துவிட்டது.

வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் உண்மையான கிரிமினல்கள். அவர்களை இந்தியா போன்ற அரசுகள் நினைத்தால் கண்டுபிடித்து வரி ஏய்ப்பை ஒழிக்க முடியும்," என்றார்.

இந்தியர்களின் கறுப்புப் பண கணக்கு பற்றி ஏராளமான தகவல்களை எல்மர் வெளியிட்டிருந்தாலும், அவர் வெளிப்படையாக அதுகுறித்துப் பேசுவது இதுவே முதல்முறை.

இப்போதைக்கு கறுப்புப் பண கணக்கு வைத்திருப்போர் பெயரை வெளியிட எல்மர் மறுத்தாலும், விரைவில் வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பல கறுப்புப் பண முதலைகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.