வியாழன், 2 டிசம்பர், 2010

தமிழர் எதிர்ப்புக்குப் பயந்து ராஜபக்சே நிகழ்ச்சியை ரத்து செய்தது ஆக்ஸ்போர்டு!

லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, இலங்கை அதிபர் ராஜபக்சே நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக யூனியன்.

இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவதற்காகவே மகிந்த ராஜபக்சே பிரிட்டன் வந்துள்ளார். ஆனால் அவரது வருகையை பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பல ஆயிரம் இளைஞர்களும் பெண்களும் இந்த எதிர்ப்பில் பங்கேற்று, போர்க்குற்றவாளி ராஜபக்சே திரும்பிப் போக வேண்டும் என முழங்கினர்.

இதனால் விமான நிலைய பின்வாசல் வழியாக தனது பரிவாரங்களுடன் வெளியேறினார் ராஜபக்சே.

இன்று வியாழக்கிழமை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மன்றத்தில் ராஜபக்சே பேசுவதாக இருந்தது. ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பிரிட்டன் தமிழர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக முறையான அனுமதியையும் பிரிட்டிஷ் போலீசாரிடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், ராஜபக்சே பங்கேற்கும் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், இந்த ரத்து காரணமாக தாம் வருந்துவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இன்று நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜபக்சே நிகழ்ச்சி பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவை கைது செய்யக் கோரி இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம்...

இதற்கிடையே, போர்க் குற்றவாளியான ராஜபக்சே ஆக்ஸ்போர்டுக்கு வருவதை எதிர்த்தும், அவரையும், இலங்கை ராணுவ அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்யக் கோரியும் பிரிட்டிஷ் வாழ் தமிழர்கள் இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கான முறையான அனுமதியை பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது. ராஜபக்சே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் லண்டன் நகரமெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான பெரிய பேனர்களை தொங்கவிட்டவாறு வேன்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டன்வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி, முஸ்லிம், சிங்கள மக்களும் பங்கேற்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ், சுவிஸ் போன்ற மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் பங்கேற்க உள்ளனர்.

பல ஆயிரம் மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வருவோருக்காக குறிப்பிட்ட நகரங்களிலிருந்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

முஷாரப் இந்தியா வர விசா மறுப்பு: மத்திய அரசு அதிரடி

டெல்லி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா வர மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

சமீபத்தி்ல் அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் இந்தியாதான் இனப் பிரச்சனைகளைத் தூண்டி விடுகிறது, இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறியிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந் நிலையில் டெல்லியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ளவதற்காக முஷாரப், இந்தியா வர விசா கோரியிருந்தார்.

இப்போது லண்டனில் அடைக்கலம் புகுந்துவிட்ட முஷாரபின் சார்பில், அவரது ஆதரவாளர்கள் சிலர் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அவர் சார்பில் விசா கோரி விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால், அவரது சமீபத்திய பேச்சுகளால் அதிருப்தியில் உள்ள மத்திய அரசு அவருக்கு விசா அளிக்க மறுத்துவிட்டது.

முஷாரபுக்கு விசா தர வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து அது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது.

மேலும் இப்போது பாகிஸ்தானில் ஆட்சியில் உள்ளவர்களும் முஷாரபுக்கு எதிரானவர்கள் என்பதால் அவருக்கு விசா வழங்குவதால் பாகிஸ்தானுடனான உறவு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறையும் கருதியது.

உள்துறை மற்றும் வெளியுறவுத்துறையினரின் கருத்தை ஏற்ற பிரதமர் அலுவலகம் முஷாரபுக்கு விசா வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுவிட்டது.

கொள்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நடிகர்கள்!-அன்புமணி

சேலம்: நடிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது, எதற்கு கட்சி தொடங்குகிறோம் என்றும் தெரியாது, என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசுகையில், "தமிழகத்தை எந்த கொள்கையும் இல்லாத திரைத் துறையைச் சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். 43 வருடமாக சினிமாக்காரர்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஆள சினிமாதான் தகுதியா... சினிமாவை வைத்துதான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இன்று வந்த நடிகர்கள் எல்லாம் நான்தான் முதல்வர் என்று கூறிக்கொள்கிறார்கள். அந்த நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் இவர்கள்? மக்களுக்காக போராடினார்களா... சிறைக்கு சென்றார்களா.... ஒரு கிராமத்தையாவது எட்டி பார்த்திருப்பார்களா...?

நடிகர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியாது. எதற்கு கட்சி தொடங்கினார்கள் என்றும் தெரியாது. ஆனால் கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி பாமகதான். தமிழகத்தில் சீரான இலவச கல்வி வழங்க பாமக தொடர்ந்து பாடுபடும்," என்றார்.

சிறிது காலம் நடிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸும், அவர் மகன் அன்புமணியும் மீண்டும் தீவிரமாக நடிகர்களைத் தாக்கிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

அதிமுகவுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி உறுதி என்று செய்திகள் வெளியாகும் நிலையில், பாமகவின் இந்த தாக்குதல் பேச்சு கவனிக்கத்தக்கது.

பயிற்சி முகாமில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணம். வரதட்சணை கொடுமையையும், குடிப் பழக்கத்தையும் அறவே ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்.

பெண்ணை கட்டிக் கொடுக்கும்போது, பெண்ணுக்கு நகை போடுவீர்காள? வேறு என்ன செய்வீர்கள் என்று கேட்கக் கூடாது. இதுபோன்ற பண்பாடுகள் ஒழிய வேண்டும். இதுபோன்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

தமிழகத்தில் குடி பழக்கத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், அதனை அரசே ஊக்குவித்து வருகிறது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

கிருஷ்ணமாச்ச்சாரிக்கு ஒரு நீதி, 'தலித்' ராஜாவுக்கு ஒரு நீதியா?-கருணாநிதி சாடல்

வேலூர்: ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்தபிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுவதற்கு ராஜா தலித். ஆச்சாரிக்கு ஒரு நியாயம்?, தலித்துக்கு ஒரு நியாயமா?, இது சமதர்மமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் கருணாநிதி நேற்று இரவு நடந்த பிரமாண்ட திமுக பொதுக் கூட்டத்தி்ல் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முதல்வரின் பேச்சு:

இன்றைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வந்தேன். வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் என்னை பார்த்து ஆண்டவன் செல்கிறார் என்று கூறியதாக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறினார். அப்படி கருதக்கூடாது என்றுதான் பெரியார், அண்ணா போராடினார்கள். அதனை நானும் மறுக்கிறேன்.

மனிதனை ஆண்டவனாக நம்பி ஏமாறுவதால்தான் அப்படி கருதக்கூடாது என்று பெரியார் கூறினார். அவருடைய குருகுலத்தில் பயின்றவன் நான். இங்கு என்னை ஆண்டவன் என்று கூறாமல் ஆள்பவன் போகிறான் என்று கூறியிருக்க வேண்டும். ஆண்டவனாக இருந்தால் லாபம் தான். மக்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு அப்படியே இருக்கலாம். தூங்கலாம். ஆனால் ஆள்பவனாகவே பணியாற்ற விரும்புகிறேன். ஆண்டவன் என்று கூறி மக்களை ஏமாற்றும் கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தை வீழ்த்துவது நமது கடமை.

ஆண்டவன் பெயராலும், மதத்தின் பெயராலும் ஏமாற்றமாட்டேன், ஏமாற்றவும் விடமாட்டேன். எழுச்சியுடன் இருக்கும் இளைஞர்கள் எதிர்கால இந்தியாவை உருவாக்க பெரியார், அண்ணா வழியில் வீறுநடை போடவேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் அவர்களாக ஒதுங்கி விட்டார்கள். எதற்காக பிரிந்தார்கள். என்ன தவறு செய்தோம். சோனியாகாந்தியுடன் கூட்டணி வைத்ததை தவிர வேறு எதை சொல்ல முடியும். அது தவறா?. நீங்களும், நாங்களும் சேர்ந்துதான் வெற்றிபெற்றோம்.

காங்கிரஸ் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சோனியாகாந்தி, பிரணாப்முகர்ஜி, மன்மோகன்சிங் ஆகியோருடன் பேசினோம். எனது வீடு, கட்சி அலுவலகத்திற்கு வந்து கம்யூனிஸ்டு கட்சியின் பிரகாஷ்கரத் காரத், ராஜா ஆகியோர் பேசினர். பேச்சு நடந்து கொண்டிருந்த போதே வெளியேறி விட்டார்கள். இது தொழிலாளர்களுக்கு எதிரான அரசு என அறிக்கை வெளியிட்டார்கள். என்னை பற்றியும், எனது குடும்பம் பற்றியும், கட்சி பற்றியும் பேசும் உச்சக்கட்டத்துக்கு சென்றார்கள்.

அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் காங்கிரசுடன் கைகோர்த்ததுதான். அது நீங்களும் சேர்ந்து ஏற்படுத்திய ஒப்பந்தம்தானே. தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் ஒன்றாக இருந்த கூட்டணி முறிந்தது. லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட நிறுவனம். அதை பிளவு படுத்தியதால் கம்யூனிஸ்டு வெற்றிபெற முடியாமல் போனது. அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை. கம்யூனிஸ்டு வெற்றி பெறாதது வருத்தம்தான்.

கம்யூனிஸ்டுகளை கேட்கிறேன், இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்.

தி.மு.க. இன்று காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசும், தமிழக அரசுக்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. அதை சில காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவது பிடிக்கவில்லை. சில விஷமிகள் தூண்டிவிட்டு உறவை கெடுக்க நினைக்கிறார்கள். உறவை யார் துண்டித்தாலும், துண்டிப்பவர்களுக்குதான் நஷ்டம்.

மேலே இருப்பவர்களுக்கு இனியும் இப்படி பேசாமல் பார்த்து கொள்ளும் பொறுப்பு உள்ளது. நான் இதைவிட பெரிய பெரிய கூட்டங்களையும், மாநாடுகளையும் பார்த்தவன். அடக்கத்தோடு இருக்கிறேன்.

நாம் இரு சக்திகளாக இருந்து மதவாத சக்தியை தமிழ்நாட்டில், இந்தியாவில் அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் மதவாதம் புகுந்துவிடும். ஆகவே மதவாதத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தி.மு.க. அதை காங்கிரஸ் வலுப்படுத்தும் என்பதை அறிவுரையாக கூறுகிறேன். நாம் கைகோர்த்தால் மதவாதத்தை அழிக்க முடியும்.

இப்போது சட்டம் வென்றது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ராசா பற்றி பாராளுமன்றத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கூச்சல் போடுவற்கு பாராளுமன்றம் சந்தை அல்ல. அது கூடி பேசும் இடம்.

ராசா ராஜினாமா செய்தால் பாராளுமன்றம் அமைதியாக நடக்கும் என்றதால் ஜனநாயக முறையில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு குழு விசாரணை வேண்டும் என்றார்கள். முந்த்ரா ஊழலில் மத்திய மந்திரி கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் அறிவுரையை ஏற்று அவர் ராஜினாமா செய்தார். அதோடு கூச்சல்-குழப்பம் நின்று விட்டது. விமர்சனம் இல்லை. தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் எழுத கைஓடவில்லை.

ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்தபிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுவதற்கு ராஜா தலித். ஆச்சாரிக்கு ஒரு நியாயம்?, தலித்துக்கு ஒரு நியாயமா?, இது சமதர்மமா?.

எனது அரசில் உமாசங்கர் மீது புகார் வந்ததும் விளக்கம் கேட்டோம். கம்யூனிஸ்டும், அ.தி.மு.க.வும் சேர்ந்து உமாசங்கர் தலித் என்ற காரணத்தால் அவரை கருணாநிதி ஒழிக்க பார்க்கிறார் என்றார்கள். அவரை ஒழிக்கவில்லை. விலக்கி வைத்தோம். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கியது கருணாநிதிதான்.

இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா?. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை முடிவில் அதற்கு ஏற்ப தி.மு.க. முடிவு செய்யும். இந்த அளவுக்கு வெறியாட்டம் போடுகிறார்கள். இதில் எத்தனை லட்சம் கோடி ஊழல் என்பதை நிரூபிக்க முடியுமா.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 10 ஆண்டுகளாக நடக்கிறது. இன்னும் தீர்ப்பு கூறப்படவில்லை. இன்னும் எத்தனை வாய்தா வாங்குவார்களோ தெரியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க இருந்தும் அதை வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார்கள்.

1972-ம் ஆண்டு பெரியார் சொன்னார், இப்போது நடப்பது ஆரிய, திராவிட யுத்தம் என்றார். இப்போது அரசியல் ரீதியாக இந்த போராட்டம் நடக்கிறது. அதை சமாளிக்கும் பொறுப்பு நமது தோளுக்கு இருக்கிறது. திராவிட ஆட்சியில், அதிகாரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க, எதிர்கால சமுதாயத்தை காக்க, நாம் வைத்திருப்பது ஒட்டு மீசை இல்லை என்பதை நிரூபிக்க, தமிழ்நாட்டில் இன்னும் ஓரணியில் திரள தி.மு.க. கை உயர்த்தி உள்ளது. அதில் நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கைகோர்த்து எழுச்சிபெற்று ஆரிய சூழ்ச்சியை ஒழிப்போம் என்றார் கருணாநிதி.

பிரதமர் அறிவுரைகளை மதிக்கவில்லை ராஜா-மத்திய அரசு அதிரடி பல்டி!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை ராஜாவுக்கும் சேர்த்தே வாதாடி வந்த மத்திய அரசு  முதல் முறையாக ராஜாவைக் கைவிட்டுள்ளது. பிரதமர் கூறிய அறிவுரைகளை ராஜா மதிக்கவே இல்லை என்று இன்று உச்சநீதின்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களை சம்பாதித்து வருகிறது மத்திய அரசு. முதலில் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களை சந்தித்தது. தற்போது கடந்த 2 வாரங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை அவசியம் என்று கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.

பிரதமர் மன்மோகன் சிங்  இதுவரை இந்த விவகாரத்தில் வாய் திறந்து பேசாமலேயே உள்ளார். ஆனால் ராஜாவைக் கைவிடாமல் தொடர்ந்து அவருக்கும் சேர்த்தே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வாதாடி வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் கூட முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் ராஜாவைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறுவது போல நடந்து கொண்டார். இதையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கின.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதிரடி அந்தர் பல்டியாக ராஜாவை கீழே தூக்கிப் போட்டுள்ளது. மொத்தப் பழியையும் தற்போது ராஜா மீது திருப்பும் வகையில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிரதமரும், சட்ட அமைச்சரும் சில கருத்துக்களை வைத்திருந்தனர். அதற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் (ராஜா) உரிய முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பிரதமரின் அறிவுரைகளை தொலைத் தொடர்பு அமைச்சர்  பின்பற்றவில்லை. மதிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்புத்துறை மிகவும் வெளிப்படையான துறையாக இருந்திருக்க வேண்டும் என்றார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமருக்காக முதலில் கோபால் சுப்ரமணியம்தான் ஆஜராகி வந்தார். பின்னர் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த அரசு, அட்டர்னி ஜெனரலை இதில் இறக்கியது. தற்போது தொலைத் தொடர்புத் துறைக்காக ஆஜராகி வருகிறார் கோபால் சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜாவை அம்போ என கைவிடும் வகையில் கோபால் சுப்ரமணியம் இன்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் : தா.பாண்டியன்!

தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட, ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சியே அடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என இந்திய கம்யூனிஸ் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனைத்து மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் கூறியதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை காங்கிரஸ் மறுப்பது அதர்மச் செயல். இந்த ஊழலில் பயன்பெற்றவை உயர் வகுப்பு நிறுவனங்கள். இதை தலித் கவசம் காட்டி, மூட முயல்வது அந்த சமூகத்தை அவமானப்படுத்தும் செயல்.

காமன்வெல்த் போட்டியில் ஊழல், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு ஊழல், வங்கி காப்பீட்டு நிறுவனங்களில் ஊழல் என தொடர்ந்து இப்போது தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்குவது தொடர்பாக ரூ.81 ஆயிரம் கோடி ஊழல் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் அதிகரித்து வருவதால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 6ஆம் தேதி முதல் இந்திய கம்யூனிஸ்டு ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்குகிறது.


தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகே இறுதி முடிவு எடுப்போம். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் பலத்தை முறியடிப்பதே எங்கள் கடமை. ஊழலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்.

2ஜி வருவாய் இழப்பு உத்தேசமானதே : ஆ. ராசா!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகளால், மத்திய அரசிற்கு ரூ.1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது மண்டையைக் குழப்பும்  தொகை என்றும் உத்தேசமான தொகையே என்றும் தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா கூறியள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ நடத்திவரும் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் முன் ஆ.இராசா சார்பாக ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா இவ்வாறு கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முறைகேடுகளால், மத்திய அரசிற்கு மண்டையைக் குழப்பும் ரூ.1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது உத்தேசமானது என்றும், அது நீதிமன்ற ஆய்வுக்கு நிற்காது என்றும் அந்தியர்ஜூனா கூறியுள்ளார்.

தலைமை தணிக்கை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் விசாரணையில் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வழக்கமாக மதிப்புகளைக் கணக்கிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை தலைமைக் கணக்கு அதிகாரியின் தன்னுடைய தணிக்கையின்போது கடைப்பிடிக்கவில்லை என்றும் அந்தியர்ஜூனா கூறியுள்ளார்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி 2003ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒதுக்கீடுகளைக் கேள்விக்குட்படுத்துகிறார். ஆ. ராசா மே 16, 2007ஆம் ஆண்டுதான் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னர் இத்துறை அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறன் மற்றும் அருண் ஷோரி ஆகியோர் கடைப்பிடித்த வழிமுறைகளையே ஆ. ராசா கடைப்பிடித்தார். ஆ. ராசாவுக்கு முன்னர் பதவியில் இருந்த இருவரும் 53 உரிமங்களை வழங்கியுள்ளனர் என்றும் அந்தியர்ஜூனா கூறியுள்ளார்.

என் சொத்து 6 கோடி மட்டுமே : கருணாநிதி!

வங்கிக் கணக்கில் ரூபாய் 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 வைப்பு நிதி தவிர, சேமிப்பு கணக்கில் சுமார் ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆகியவையே தன்னுடைய சொத்துகள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

"கணக்கு காட்டுகிறேன். கண்ணுடையோர் காண" என்ற தலைப்பில் தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

18 வயதில் முரசொலி வாரப்பத்திரிகையை தொடங்கினேன். திராவிடர் கழகப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். கடந்த 1949ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டரில் எழுத்தாளராகப் பணியில் அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன்.

1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டு, விருநகர் நாடார் லாட்ஜில் தங்கினேன்.

சேலத்தில் குடும்பத்தோடு வசித்தபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மணமகள் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றேன். இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக உரையாடலை எழுதியபோது, அந்தப் படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியதால் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தைத் தவிர்த்து மேலும் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாகத் தந்தார். இவைகளைத் தொடர்ந்து 75 திûப்படங்களுக்கு மேல் திரைக்கதை - வசனம் எழுதி, ஊதியம் பெற்றுள்ளேன்.

கடந்த 1957ஆம் ஆண்டு முதல் இதுவரை, தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்துள்ளேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் வீடுகளையும் ஒப்பிடும்பொழுது வசதி குறைவான வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன். அமைச்சர் ஆவதற்கு முன்பே 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. இன்றும் தெரு வரிசையில் உள்ள கோபாலபுரம் வீட்டில்தான் வசித்து வருகிறேன். அந்த கோபாலபுரம் வீட்டையும் மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக்கொடுள்ள நிலையில், சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் தமிழரிஞர்களுக்கு விருதுகளும், ஏழை - எளியோருக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மண்ணின் மைந்தன், உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக கிடைத்த பல லட்சம் ரூபாய் தொகையின் மூலம் சுனாமி நிவாரணம், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி, அருந்ததியின மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பணத்தில் 10 கோடி ரூபாய் கிடைத்தது. அதில் 5 கோடி ரூபாயை வங்கியில் இருப்பு செய்து கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டு ஏழை - எளியோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வங்கிக் கணக்கில் ரூபாய் 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 வைப்பு நிதி தவிர, சேமிப்பு கணக்கில் சுமார் ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 உள்ளது. இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு.

எஞ்சிய காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன். ஏழை - எளிய மக்களின் கவலை தீர்ப்பதையும் கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன்.

கண்ணுடையோர் காண்பதற்காகவே, இந்தக் கணக்கை காட்டுகிறேன். முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கு அல்ல.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இணைய தளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் விரிவாக்கம்!

இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி முதலில் சென்னையிலும் அதன் பின் கோவையிலும் தொடங்கப் பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் மின்கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி '' மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தால் பொதுமக்கள் இனி வரிசையில் நின்று காத்துக் கிடக்காமல் வீட்டில் இருந்த படியே மின்கட்டணத்தை செலுத்தலாம் என்றார்.

மேலும் 7 வங்கிகள் மூலம் மட்டுமே தற்போது மின்கட்டணம் வசூல் செய்ய படுவதாகவும் இனி வரும் காலங்களில்  பல்வேறு வங்கிகளுக்கும் மின்கட்டணம் வசூல் செய்ய அனுமதிவழங்கப் படும் என்றும் கிராமப் புறங்களில் வீடு வீடாக வந்து மின்கட்டணம் வசூல் செய்யும் திட்டமும்
விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.