வியாழன், 21 அக்டோபர், 2010

ஊழல் அதிகாரி அரிகரன் பதவி நீக்கம் : புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு!

பாரதியார் பல்கலைக்கூடத்தின் முன்னாள் முதல்வரும், லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியுமான அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள புதுச்சேரி அரசின் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1996 முதல் 1999 வரை அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வராக இருந்த போது பல்வேறு ஊழல், முறைகேடுகள், கையாடல், நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சி மற்றும் ஆதரவோடு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், அப்போதைய அரசு அவரை பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து லலித் கலா மற்றும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

இது குறித்து அரசு அப்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த தேவநீதிதாஸ் மற்றும் கலெக்டர் ராகேஷ் சந்திரா ஆகியோர் தலைமையில் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த விசாரணைக் குழூக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதிகாரி தேவநீதிதாஸ் தலைமையிலான விசாரணைக் குழு முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன. அதாவது, அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது அங்கு விரிவுரையாளராக பணியாற்றிய தனக்கு நெருக்கமான அன்னபூர்ணா என்பவருக்கு விதிமுறைகளை மீறி மருத்துவ செலவுக்காக ரூபாய் 20 ஆயிரத்து 727 வழங்கியது. விதிமுறைகளுக்கு மாறாக தினக் கூலி ஊழியரை காசாளராக நியமித்து பெரும் நிதி கையாடல் செய்தது. பாரதியார் பல்கலைக்கூட கட்டிடங்களுக்கு புதிதாக கூறை அமைத்ததிலும், பழைய கூறைகளை மாற்றியதிலும் அரசு முன் அனுமதியின்றி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு ஆகிய மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு கடந்த 14.10.2010 அன்று கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சரும், பாரதியார் பாரதியார் பல்கலைக்கூடத்தின் சேர்மனுமான மாண்புமிகு ஷாஜகான் அவர்கள் ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரிகரன் வெளிநாட்டில் உள்ளதால் பணிநீக்க உத்தரவினை லாஸ்பேட்டை வாசன் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒட்டியும், பத்திரிகை மூலம் அறிவிக்கையாக வெளியிட்டும் உள்ளனர். காலம் கடந்த முடிவானாலும் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது ஊழல் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறோம்.

மேலும், அரிகரன் கடந்த 2007, 2008 ஆண்டுகளில் அரசின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். அரசு ஊழியர்களின் நடத்தை விதிப்படி ஒரு அரசு ஊழியர் வெளிநாடு செல்ல அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து அரசு நியமித்த ஏ.எப்.டி. பஞ்சாலையின் இணை நிர்வாக இயக்குநர் எஸ்.டி.சுந்தரேசன் முன்பு நடந்த விசாரணையில் அரிகரன் விதிகளை மீறி வெளிநாடு சென்றது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் அடிப்படையில் அரசு உடனடியாக அரிகரன் மீது கிரிமினல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரிகரன் லலித் கலா அகாடமியின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற டிசம்பர் 1999 முதல் டிசம்பர் 2009 வரையில் எந்தவித பணியும் செய்யாமல் 30 லட்சத்து 58 ஆயிரத்து 280 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதனால், மக்கள் வரிப் பணம் பெருமளவில் வீணாக செலவிடப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு அவருக்கு அளித்த சம்பளத் தொகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவியாளர் கொலை! சவூதி இளவரசருக்கு 20 ஆண்டுகள் சிறை!

லண்டன்: தனது உதவியாளரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சவுதி இளவரசருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடியாக 20 ஆண்டுகள் சிறை தண்டணை அளித்து தீர்ப்பளித்து உள்ளது.

சவுதி அரேபிய இளவரசர் சவூத் பின் அப்துல் அஜீஸ் (வயது 34). இவர் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ்வின் பேரன் ஆவார். சென்ற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி லண்டனில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சவூது பின் அப்துல் அஜீஸ் தங்கி இருந்தார். அப்போது அங்கு தன்னுடன் இருந்த உதவியாளரை அவர் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தார்.

இளவரசர் சவூத் ஓரின சேர்க்கையில் ஈடுபட அவரது உதவியாளரை அழைத்து அதற்கு அவர் உடன்படாததால் அவரை கொலை செய்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் சவுதி அரேபிய அரச குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தி இளவரசர் சவூதை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வெளியுறவுத் துறை விதிப்படி அப்துல்லா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று சவூத் ஏற்கனவே ஒருமுறை அதிகமான மது போதையில் ஒருவரை தாக்கி உள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது இந்த கொலை தொடர்பாக சவுதி இளவரசர் சவூத் பின் அப்து அஜிஸ்க்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டணை விதித்து, லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. இதுபற்றி நீதிபதி டேவட் பீன் கூறுகையில், "கொலை வழக்கில் இளவரசர் ஒருவர் குற்றவாளியாக இருப்பது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. யார் குற்றம் செய்து இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்று தெரிவித்தார்...

இத்திஹாத் வழங்கும் இலவச விசா !

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது இத்திஹாத் விமான நிறுவனம். இந்த விமான சேவை நிறுவனம் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இலவச விசா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவின் எந்தப்பகுதியிலும் உள்ள விமான நிலையத்திலிருந்து அபுதாபி செல்பவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் படி இந்தியாவிலிருந்து அபுதாபி செல்பவர்கள் இத்திஹாத் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கவேண்டும். அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 க்குள் இந்த பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். பயணத் தேதி அக்டோபர் 20 முதல் டிசம்பர் 15 வரைக்குள் இருக்க வேண்டும்.

14 நாள் விசா மற்றும் 30 நாள் விசா ஆகியவை இந்தச் சலுகையின் படி ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.

எங்கள் உணர்வுகளை சட்டம் மதித்தால் நாங்கள் சட்டத்தை மதிப்போம்: பால் தாக்கரே!

மும்பை: சட்டம் எங்கள் உணர்வுகளை மதித்தால் நாங்கள் சட்டத்தை மதிப்போம். எங்களுக்கு யாரும் சட்டம் கற்றுத்தர வேண்டாம் என்று சிவசேனைக் கட்சியின் தலைவர் பால் தாக்கரே அக்கட்சியின் இதழான சாம்னாவின் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

தசரா விழாவினையொட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சிவாஜி பூங்காவில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து மும்பை காவல்துறை தொடுத்த வழக்கில், பேரணியின் போது ஒலிப்பெருக்கியின் அளவு 50 டெசிபல் என்ற அளவிற்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ள பால் தாக்கரே, பள்ளிவாசல்களின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகள் மூலம் சொல்லப்படும் 'அதான்' என்கிற 'பாங்கு' ஓசை, தூக்கத்திற்கும் குழந்தைகளின் கல்விக்கும் இடையூறாக இருக்கின்றது. அதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வேற்று மாநிலத்தவர்களின் பிரச்சனைகளால் ஏற்படும் பெரும் சப்தம் 500 டெசிபலையும் தாண்டுகிறது; எங்களுக்கு சட்டம் தெரியும்; எங்களுக்கு யாரும் சட்டத்தை கற்றுத்தர வேண்டாம்; சட்டம் எங்கள் உணர்வுகளை மதித்தால் நாங்கள் சட்டத்தை மதிப்போம் என்றும் அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

”சிவசேனாவின் சப்தத்தை எவராலும் வீழ்த்த முடியாது” என்றும் பால் தாக்கரே அந்த தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது, நீதி மன்றத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகின்றது.

சர்ச்சைக்குள்ளான நிலத்தில் எந்தப்பகுதியையும் விட்டு கொடுக்க முடியாது - பரிஷத் !

அயோத்தியில் அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ராமர் சிலைக்கே அளிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். உயர்நீதி மன்றம் முக்கியமான இடத்தை ராமனுக்கு அளித்ததன் மூலம் அந்த இடம் முழுமையும் ராமர் சிலைக்கே வழங்கப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார். சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலத்தில் எந்த இடத்தையும் யாருக்கும் அளிக்க முடியாது என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் அந்த இடங்களில் மசூதி கட்ட அனுமதிக்க முடியாது எனக் கூறிய அவர் , முஸ்லிம்கள் விருப்பப்பட்டால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வெளியில் கட்டிக்கொள்ளலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். அலஹாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பை விவாதிப்பதற்காக நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சிங்கால் சந்தித்தார்.

நிலத்தை ராமஜன்மபூமி நியாஸிடம் வழங்கக் கோரி பிரதமரை ஹிந்து மத துறவிகள் விரைவில் சந்திப்பார்கள் என அவர் குறிப்பிட்டார். பகவான் ராமன் சார்பாக அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். முஸ்லிம்கள் தங்களுக்கு நிலத்தில் எந்த வித உரிமையுமில்லை எனக் கூறும் வரையில் எந்த சமாதானமும் ஏற்படும் வாய்ப்பில்லை என சிங்கால் கூறினார்.

நான் முஸ்லீம் இல்லை - பொற்கோயில் தரிசனத்தை தவிர்க்கும் ஒபாமா!

வாஷிங்டன் : அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா தன் மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் செல்ல வேண்டிய இடங்களில் பஞ்சாபில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாகிய பொற்கோயிலும் இருந்தது. ஆனால் அப்படி சென்றால் தன்னை முஸ்லீம் என்று சொல்லி விடுவார்கள் என்பதால் அவரின் பயண திட்டத்தில் இருந்து பொற்கோயில் நீக்கப்பட்டுள்ளது.

பொற்கோயிலுக்கு செல்லும் நபர்கள் சீக்கியர்கள் வழமையாக தலையை மறைக்க அணியும் துணியை அணிய வேண்டும். ஏற்கனவே அமெரிக்காவில் ஒபாமா ஒரு முஸ்லீம் என்று எதிரணியினர் பிரச்சாரம் செய்வது ஒபாமாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முஸ்லீம்களை போல் தலையை மறைத்து கொண்டு போனால் மீடியாக்கள் அப்படத்தை போட்டு தாம் முஸ்லீம் என பிரச்சாரம் செய்து விடும் என்று ஒபாமா நினைப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் முஸ்லீம்கள் என்று நினைத்து சீக்கியர்கள் மேல் தாக்குதல் நடந்ததும் அரிசோனா மாநிலத்தில் ஒரு சீக்கிய கார் பழுது பார்க்கும் நிலைய அதிபர் தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த பொற்கோயில் டிரஸ்டி குருபச்சன் சிங் ஒபாமா வெறும் தொப்பி அணிந்து கொண்டு வந்தாலும் அனுமதிப்போம் என்றார். இந்திய அரசாங்க உயரதிகாரி ஒருவர் இது குறித்து கூறும் போது ஒபாமா எங்கு செல்ல வேண்டியது என்பதை முடிவு செய்ய வேண்டியது தங்கள் வேலை அல்ல என்று பதிலளித்தார்.

அமெரிக்க பென்டகன் மீது துப்பாக்கிச்சூடு !

வாஷிங்டன்: அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் தெற்கு பிளாக் பகுதியில் ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பாதுகாப்புப்படை வீர்ர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்‌படவில்‌லை. இதனையடுத்து துப்பாக்கி்ச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு! 40 பயணிகள் உயிர்தப்பினர்!

சென்னை: மாநகர பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடி டிப்போவைச் சேர்ந்த மாநகர பேருந்து எம் 59' (எண் 7497) வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்கிறது, அந்த பேருந்தை நேற்று வியாசர்பாடி பகுதி சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஓட்டுனர் மனோகரன் (50) ஓட்டிச் சென்றார். பேருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் காவல் நிலையத்திற்கு முன்பு காலை 11 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனர் திடீரென மனோகரன் மயக்கமடைந்து ஸ்டியரிங்கில் சாய்ந்தார்.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தை மோதி பெயர்த்துக் கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் புகுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் ஏறி நிலையில் காவல் நிலையம் முன் உள்ள மரத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் ஓட்டுனர் மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவத்தின் போது காயம் ஏதும் ஏற்படாத நிலையில், அவர் மாரடைப்பில் இறந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் பதட்டத்துடன் அலறியடித்துக் கொண்டு அவசர, அவசரமாக கீழே இறங்கி ஓடினர். மின்கம்பத்தில் பஸ் மோதியதில் அருகே இருந்த டிரான்ஸ்பார்மில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து கூரையின் மீது சாய்ந்த மின்சார ஒயர் இணைப்புகளில் மின்சாரம் செல்லாததால், பேருந்தில் மின்சாரம் பாயவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் டிரைவரின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.