வியாழன், 11 நவம்பர், 2010

சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக

TKS Elangovanடெல்லி: மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கஆரம்பித்தால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை  பார்க்க முடியாது என்று கூறியுள்ளது திமுக.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி கொடுத்துள்ள இறுதி அறிக்கையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமர் மன்மோகன் சிங்  தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இருப்பினும் ராஜா பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திமுக கூறி விட்டது.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. சிஏஜி என்பது ஒரு கணக்கு தணிக்கை அமைப்பு மட்டுமே. இதன் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கிளம்பினால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார் இளங்கோவன்.

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?

A Rajaசியோல் சென்றுள்ள பிரதமர் வெள்ளிக் கிழமையன்று நாடு திரும்பியதும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அ.ராசா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2G ஸ்பெகட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அ.ராசாவின் அணுகுமுறையே இந்த இழப்புக்கு முழு காரணம் என்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தன்னுடைய அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து அ.ராசாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஊழலுக்கு மத்திய அமைச்சரே காரணம் என்று தலைமைக் கணக்கு அதிகாரியே நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்நிலையில் இத்தகைய அமைச்சரை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்திருக்க மன்மோகன் சிங் அறவே விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

அக்டோபர் மாதத்தின் இறுதியில் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் உத்தேசித்திருந்ததாகவும் தீபாவளி, ஓபாமா வருகை மற்றும் சியோல் பயணம் என தொடர் அழுத்தத்தில் இருந்ததால் இயலவில்லை எனவும் சியோல் பயணத்திலிருந்து திரும்பியதும் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

’தாக்கி’ பேசியவர்கள் `தாங்கி’ பேசியிருக்கிறார்கள்: கருணாநிதி

சென்னை: காவலர்களை தாக்கி’ பேசும் கம்யூனிஸ்டுகள் இன்றைக்குத் `தாங்கி’ பேசியிருக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

எம். அன்பழகன்: பழனி நகரில் காவலர்களுக்கு அடுக்குமாடிக்குடியிருப்புகள் கட்ட அரசு ஆவன செய்யுமா?
முதல்வர் கருணாநிதி: 2008-2009ம் ஆண்டில் பழனி நகரில் பணிபுரியும் காவலர்களுக்கு 32 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசாணை 18-11-2008ல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப்பணி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவற்றில் இரண்டு பிரிவுகளில் முதல் தள கூரை கற்காரை அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு பிரிவுகளில் முதல் தள கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்தக் கட்டுமானப் பணிகள் வருகிற மார்ச் 2011ல் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மு. அப்பாவு: தமிழ்நாட்டில் இதுவரை காவலர்களுக்காக எத்தனை குடியிருப்புகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

முதல்வர் கருணாநிதி: தமிழகத்தில் இருக்கின்ற மொத்தம் உள்ள காவல் பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 783 ஆகும். தற்போது மொத்தம் 45 ஆயிரத்து 847 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, அந்தப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜி.கே. மணி: சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மேட்டூர் நகரில் காவலர்களுக்கு குடியிருப்பு இல்லை என்ற கோரிக்கை இருக்கிறது. மேட்டூர் காவல் நிலையம் பழமையான காவல் நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஓட்டுக் கட்டடமாகும். அது குறுகிய இடத்தில் இயங்கி வருகின்றது. இதுகுறித்து நான் ஏற்கெனவே சட்ட மன்றத்தில் பேசியபோது, முதல்வர் அவர்கள் அங்கே காவல் நிலையம் புதிதாகக் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். அது இன்னும் தொடங்கப்படவில்லை. ஆகவே, நடப்பாண்டில் மேட்டூர் வட்டக் காவல் நிலையம் கட்டப்படுமா?

மேலும் மேட்டூர் அணைதான் தமிழ்நாட்டின் வாழ்வா தாரத்தைக் கொடுக்கிற, தஞ்சைத் தரணியை உருவாக்குகிற உயிர்நாடி அணையாக இருக்கிறது. அதற்கு நிரந்தரமாகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில், காவலர்கள் வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆகவே, ஒரு அணி மேட்டூர் அணையின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுமா?

முதல்வர் கருணாநிதி: மேட்டூர் அணையைப் பாதுகாப்பது என்பது காவலர்களால் மாத்திரம் முடிகின்ற காரியமல்ல; அதற்குரிய விதிமுறைகள், சட்டங்கள், அணுகுமுறைகள் - இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் மேட்டூர் அணையானாலும் அல்லது எந்த அணையானாலும்- அவற்றைப் பாதுகாக்க முடியும். மேட்டூர் அணைப் பகுதியிலே எந்தவிதமான கலவரமும் கிடையாது. ஆகவே, அங்கே காவலர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அணையைப் பாதுகாக்க- அணையினுடைய பயன்பாட்டை யாரும் பாழ்படுத்தி விடாமல் தடுத்து நிறுத்த காவலர்கள் தேவையே தவிர, மேட்டூர் அணையைப் பாதுகாப்பதற்கு காவலர்களால் முடியாது. நாட்டை ஆளுகின்றவர்களால்தான் முடியும்-நம்மால் முடியும்.

வை. சிவபுண்ணியம்: முதல்வர் அவர்கள் தமிழகத்தில் எத்தனை காவலர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கைச் சொன்னார்கள். தமிழகத்தில் மேலும் கூடுதலாகக் காவலர்கள் தேவைப்படுவதாக நான் அறிகிறேன். பல காவல் நிலையங்களிலே போதுமான காவலர்கள் இருக்கவில்லை. அதன் காரணமாக அவர்களுக்குப் பணிச் சுமை ஏற்படுகிறது. ஆகவே, கூடுதலாகக் காவலர்களைத் தேர்வு செய்வதற்கும், கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்வதற்கு அரசிடம் உத்தேசம் இருக்கிறதா?

அவர்களுக்கு விடுமுறை என்பதே இல்லாத நிலை இருக்கிறது. ஆகவே, வாரம் ஒரு நாள் அல்லது அரை நாளாவது அவர்களுக்கு விடுமுறை விடுவதன் மூலமாக- அவர்களின் மனநிலையைச் சரிசெய்து கொள்வதற்கு- அவர்களின் குடும்பத்தோடு பொழுதைக் கழிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களின் மன நிலையில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, அதன்மூலமாக நாட்டிற்கு நற்பலனை ஏற்படுத்து வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த முயற்சியைச் செய்வதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

முதல்வர் கருணாநிதி: காவலர்களை எந்த அளவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் தாக்கிப் பேசுவார்களோ; அந்தளவிற்கு இன்றைக்குத் “தாங்கி” பேசியிருக்கின்றார்கள். அவர்களுடைய வசதி, வாய்ப்பு, எண்ணிக்கைப் பெருக்கம்- இவைகளைப் பற்றியெல்லாம் அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. வெகு விரைவிலே காவலர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அந்தக் காவலர்களுக்கான வசதிகள் சீர்படுத்தப்படும் என்றார்.

ஹஜ் பயணிகளை ஏமாற்றிய ஏஜென்டுகள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: ஹஜ் செல்லும் பயணிகளை ஏமாற்றிய தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளக்ள் மீது முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய ஹஜ், உம்ரா பயணிகள் நலச்சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தென்னிந்திய ஹஜ், உம்ரா பயணிகள் நலச்சங்கத் தலைவர் காயல்பட்டினம் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் சில கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்து தருவதாக கூறுகின்றனர். இதனால் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் தனியார் ஏற்பாட்டாளர்களை நாடிச் செல்கின்றனர். இந்தியா முழுதும் தனியார் ஏற்பாட்டாளர்களின் மூலம் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.

தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதற்கு மேல் ஒதுக்கீடு அளிக்க முடியாது என்றும் தெளிவாகக் கூறியது. இதையும் மீறி சிலர் தாங்களும் ஏற்பாட்டாளர்கள் என்றும், தங்களுக்கு ஒதுக்கீடு உண்டு என்றும் கூறி ஹஜ் பயணிகளிடம் பணம் வசூலித்துள்ளனர்.

மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஹஜ் பயணிகளை ஏமாற்றியவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இது போன்ற ஏமாற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ராஜாவை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு தந்தி அனுப்புங்கள்-ஜெ. அழைப்பு

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் மிகப் பெரிய அளவில் நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அனைத்து இந்தியர்களும் தந்தி அனுப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 76,379 கோடி ரூபாய் சுரண்டப்பட்டுள்ளது. இந்த ஊழலை செய்த ராசாவின் ராஜினாமாவை கோரும் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

காரணம் என்னவென்றால், ராசாவை விலக்கினால் கருணாநிதி
விலகி விடுவார். கருணாநிதி விலகிவிட்டால் மத்திய அரசு வீழ்ச்சி அடைந்துவிடும் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது.

ராசாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. நன்னடத்தையின் அடிப்படையில் ராசா பதவி விலகுவார் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

எனவே ராசாவை பதவி நீக்க செய்யக்கோரி குடியரசுத்தலைவருக்கு
இந்தியர்கள் தந்தி அனுப்ப வேண்டும். இந்திய நாடு காப்பாற்றப்பட வேண்டுமானால் மக்கள் இதை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும் அமளி:

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றம் கூடியதும், ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, மும்பையில் கார்கில் வீரர்களுக்கான வீடு ஒதுக்கீடு திட்டம் போன்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டு குழு அமைக்கக்கோரி பா.ஜ.க மற்றும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே ஊழல் பிரச்சனை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.