வெள்ளி, 22 அக்டோபர், 2010

அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!

அயோத்தியில் ராமர் கோயில் ராம் ஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பால் கட்டப்படும் என்ற சாந்த் உச்சதிகார் சமிதியின் அறிவிப்புக்கு நிர்மோகி அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர் தாஸ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் மத அமைப்புமான விசுவ இந்து பரிஷத்தும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தாஸ் எச்சரித்துள்ளார். சாந்த் உச்சதிகார் சமிதி என்ற விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் பிரிவுதான் ராமர் கோயில் இயக்கதத்தை நடத்தி வருகிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகாரா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று கூறிய தாஸ், பிரச்சனைக்குரிய இடத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நிர்மோகி அகாராவுக்கே உரிமை உண்டு என்று கோருவோம் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போதைய கோயில் ராம் லாலா விராஜ்மான் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த அமைப்புக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் ஆர்எஸ்எஸ்சைச் சார்ந்தவர் என்றும் தாஸ் கூறினார்.

பிரச்சனைக்குரிய இந்த இடத்தை உயர் நீதிமன்றம் எந்த தனி நபருக்கோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிற்கோ வழங்கவில்லை என்பதை சங்பரிவாரத்திற்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் தாஸ் கூறினார். மத்திய டுமிற்குக் கீழே உள்ள பகுதிகள் ஹிந்துக்களுக்கு என்றுதான் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொள்ளும் இந்துக்களில் மிகச்சிலரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் ஆகியவை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக ஆய்ந்து கொள்ளட்டும் என்றும் தாஸ் கூறினார்.

ராம் சபுதரா மற்றும் சீதா ரஸோய் ஆகியவை நிர்மோகி அகாராவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பாகம் ராம் லாலாவுக்கும் பொதுவாக இந்துக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களிடம் மூன்றில் ஒரு பாகம் உள்ளது. ராம் லாலா விராஜ்மானுக்கு நெருக்கமான இந்துக்கள் நாங்கள்தான் என்பதால், ராமர் கோயிலைக் கட்டும் உரிமை எங்களுக்கே உள்ளது என்றும் தாஸ் கூறியுள்ளார்.

சாந்த் உச்சதிகார் சமிதி மற்றும் ராம் ஜன்மபூமி நியாஸ் கோவா மற்றும் புது டில்லியில் விசுவ இந்து பரிஷத்தால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவை இரண்டும் ஆர்எஸ்எஸ்ஸின் நிழல் அமைப்புகள் என்று குற்றம் சாட்டிய தாஸ், இத்தகைய குழுக்களை நாங்கள் அங்கீகரிப்பதில்லை. அயோத்தியில் உள்ள மக்களுக்கோ, பொதுவாக இந்துக்களுக்கோ அவர்களால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும் தாஸ் கூறினார்.

தன்னுடைய நிலையை அகில இந்திய அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் கியான் தாஸும் ஆதரிப்பதாக பாஸ்கர தாஸ் கூறினார். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாக விங்கிக் கொண்டு ராமர் கோயிலை கடத்திச் செல்ல முயல்கின்றனர். அத்தகையோர் தொடக்கம் முதலே இதற்காக முயன்று கொண்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு புதிய வியாக்கியானங்களை அவர்கள் அளிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் பாஸ்கர தாஸ் கூறினார்.

பென்டகனில் விருந்துக்கு அழைக்கப்பட்ட அல் காயிதா மதகுரு!

வாஷிங்டன் : அமெரிக்க நலனுக்கு அபாயகரமானவர் என்று அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டவர் ஏமனை சார்ந்த மதகுரு அன்வர் அல் அவ்லாகி. ஒபாமா நிர்வாகம் அவரை கண்டால் சுடுவதற்கு ஏற்கனவே தன் காவல்துறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இச்சூழலில் செப்டம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களோடு தொடர்புடையதாகவும் அமெரிக்காவுக்கு எதிரான மூன்று தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படும் ஏமனை சார்ந்த இஸ்லாமிய மதகுரு அன்வர் அல் அவ்லாகி செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த சில நாட்களில் பென்டகனில் விருந்துக்கு அழைக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இத்தகவலை முதலில் தெரிவித்த ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனல் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்கள் மேல் அமெரிக்க அரசாங்கம் காட்டிய தேவையற்ற கெடுபிடிகளால் அமெரிக்க அரசுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை நிரப்ப அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்ட சில முஸ்லீம்களை அழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்ததாகவும் அதில் பேசுவதற்காக இமாம் அன்வர் அல் அவ்லாகி அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் காலனல் டேவ் லபன் இது அமெரிக்க ராணுவம் ஏற்பாடு செய்த அதிகாரபூர்வ நிகழ்ச்சி இல்லை என்றும் அதிகாரபூர்வமுற்ற முறையில் சில அதிகாரிகள் நடத்திய நிகழ்ச்சி என்றும் கூறினர். ஆனால் அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பென்டகன் அதிகாரிகளுக்கு அன்வர் அல் அவ்லாகியை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் தேடுவது தெரியாததாலேயே அவ்லாகியை அழைத்துள்ளனர். அதை மறைக்கவே இப்படி சமாளிக்கின்றனர் என்று அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்: யுவான் ரிட்லி!


பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி

அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.
கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.
ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.
ஏகாதிபத்தியமும், சியோனிஷமும் தான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி
உரையாற்றினார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

எம்.எல்.ஏ.வுக்கு ரூ. 25 கோடி விலை பேசிய பாஜக!

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தால் ரூ. 25 கோடி வரை தரத் தயாராக இருப்பதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்றை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ளது.




குப்பி தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளத உறுப்பினரா ஸ்ரீநிவாஸை பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடா தொடர்பு கொண்டு குதிரைப்பேரம் நடத்து போன்று அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.



சுரேஷ் கவுடா ஸ்ரீநிவாசுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, நீங்கள் எனக்கு எவ்வளவு தர முடியும்? 100 கோடி ரூபாய் தர முடியமா? என்று ஸ்நீவாஸ் கேட்கிறார்.



மறுமுனையில் - நாங்கள் உங்களுக்கு ஒரு பதவியும் 15 கோடி ரூபாயும் தரலாம் என்கிறது ஒரு குரல். இது சுரேஷ் கவுடாவின் குரல் என்கிறனர் ஜனதா தளத்தினர்.



நீங்கள் எனக்கு 20 கோடி ரூபாய் தருவீர்களானால் நான் உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்வேன் என்று ஸ்ரீநிவாஸ் கூற, சரி, நான் (உள்துறை அமைச்சர்) அஷோக்கிடம் பேசிவிட்டு உங்களதை் தொடர்பு கொள்கிறேன் என்று அதற்குப் பதில் அளிக்கப்படுகிறது.



பின்னர், இது தொடர்பாக முடிவு எட்டுவதற்கு டும்கூரில் ஸ்ரீநிவாசும் கவுடாவும் சந்தித்துக் கொள்வதையும் அந்த வீடியோ காண்பிக்கிறது.



தனக்கு 15 கோடி ரூபாய் உடனடியாகத் தருவதாகவும் மீதம் உள்ள தொகையை மாலை தருவதாகவும் மொத்தம் 25 கோடி ரூபாய் என்றும் ஸ்ரீநாவஸ் கூறுகிறார்.



அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்த ஸ்ரீநிவாஸ் தன்னுடைய கட்சித் தலைவர் குமாராசாமியிடம் இந்த வீடியோவை ஒப்படைத்துள்ளார். வீடியோவை வெளியிட்டுப் பேசிய குமாரசாமி, கர்நாடக உள்துறை அமைச்சர் அஷோக்கும் ஸ்ரீநிவாஸோடு பேசியதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், அமைச்சர் இதனை மறுத்துள்ளார்.



அண்மையில் பாஜக எம்.எல்.ஏ. ரஞ்சனுக்குப் பணம் தருவதாகவும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ஜனதாதளம் பேரம் பேசியது போன்ற சிடியை பாஜக வெளியிட்டது. அதற்குப் பதில் சொல்ல இயலாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம் இத்தகைய குற்றச்சாட்டை சுமத்துகிறது என்று கூறியுள்ளார்.



மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவைத் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கோரிக்கைகளை பரிசீலிக்காமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை - கிலானி

கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுதல், அரசியல் கைதிகளை விடுதலைச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்காமல் தாங்கள் இனி பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தேவைகளை அங்கீகரிக்காத அரசு நியமிக்கும் எக்குழுவினருடனும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாரில்லை. 150 பேச்சுவார்த்தைகள் இதுவரை நடந்த பிறகும் பலன் கிடைக்கவில்லை.

மத்திய அரசு நியமித்துள்ள 3 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் எனவும், நடுவர் குழுவினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது என கஷ்மீர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கிலானி தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று 'கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி' என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது: சுதந்திரத்திற்காக நெடுங்காலம் போராடிய இந்தியர்களிடம் சுதந்திரம் என்றால் என்ன என்பதுக் குறித்து விளக்கவேண்டிய அவசியம் இல்லை. கஷ்மீரிகளும் தற்பொழுது இதே கோரிக்கையை முன்வைக்கின்றனர். கஷ்மீருக்கு சுதந்திரம் என்றால் கஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் என்றுதான் பொருள்.

வரலாற்றில் ஏராளமான சிரமங்களை தாண்டி வந்தவர்கள் கஷ்மீரிகள். ஆயிரக்கணக்கான கஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் சிறையிலடைக்கப்பட்டனர்.ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. மனிதத் தன்மையற்ற இந்த நடவடிக்கைகளா தேசிய விருப்பம்? என கிலானி கேட்கிறார்.

கஷ்மீரில் எங்குப் பார்த்தாலும் ராணுவ முகாம்கள்தான். ஒரு கஷ்மீரிக்கு அவனுடைய சொந்த மண்ணில் வீட்டிலிருந்து வெளியே இறங்கி நடப்பதற்கு வங்காளத்தைச் சார்ந்த, உ.பியைச் சார்ந்த, பீகாரைச் சார்ந்த ராணுவ வீரர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். பெண்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்க்கொண்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த மோதலில் மட்டும் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் கைதுச் செய்யப்பட்டனர். 3000 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 8080 பேர் சிகிட்சைப் பெற்று வருகின்றனர். 30 தலைவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக இந்திய மக்கள் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு கிலானி தெரிவித்தார்.

மலேரியாவால் மரணமடைவோர் அதிகம்!

இந்தியாவில் மலேரியாவில் பலியாவோரின் எண்ணிக்கையானது மிக குறைவாக மதிப்பீடப்பட்டுள்ளதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ‘ தி லான்செட்’ மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் பேர் மலேரியாவால் இந்தியாவில் பலியாவதாக கூறியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு கூறும் எண்ணிக்கையை விட பதிமூன்று மடங்கு அதிகம்.

அறிக்கையில் பலியானவர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 86 சதவீதம் பேர் மருத்துவ கவனிப்பு இல்லாமல் வீட்டிலேயே பலியாகிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது தற்போது உலக சுகாதார அமைப்பு கூறி வரும் எண்ணிக்கை என்பது நம்ப கூடியது அல்ல என்றும், அந்த எண்ணிக்கையானது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது என்றும் அறிக்கை கூறுகிறது.

ஆனால் ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள எண்ணிக்கையை மறுதலித்துள்ள உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கை வீடு வீடாக சென்று எடுக்கப்பட்டது என கூறியுள்ளது. மேலும் அறிக்கை கூறும் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால் இந்த ஆய்வை நடத்திய குழுவில் இடம்பெற்று இருந்த பேராசிரியர் பிரபாத் ஜா, தங்களுடைய அறிக்கை உண்மை நிலவரத்தை காண்பிக்கிறது என கூறியுள்ளார்.

விரைவாக சிகிச்சை கொடுத்தால் குணமாக கூடிய நோய் தான் மலேரியா. ஆனால் உயிரை காப்பாற்ற கூடிய சிகிச்சை பலருக்கு கிடைக்காமல் இருக்கிறது என்பதை தான் இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.

கஷ்மீர் மற்றும் குஜராத் பிரச்சனைகள் மூலம் இந்தியா ஜனநாயக மதசார்பற்ற நாடு என்றுக் கூற தகுதியில்லை - அருந்ததிராய்!

டெல்லி,அக்.22:டெல்லியில் நேற்று ‘கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் 'யாருக்கேனும் ’ஷு’வை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்துக் கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையை துவக்கினார் பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை போராளியுமான அருந்ததிராய்.

மேலும் அவர் கூறியதாவது: கஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி அல்ல. கஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஐ.நாவில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரி முஸ்லிம்களை கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்றுக் கூற உரிமையில்லை.

குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுக்கூற தகுதியில்லை. வலுவான ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் உரை நிகழ்த்தினார்.

இக்கருத்தரங்கில் புரட்சிக் கவிஞர் வரவரரவ், மனித உரிமை ஆர்வலர்கள் ஷேக் ஷவ்கத் ஹுசைன், அமீத் பட்டாச்சார்யா, என்.வேணு, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, பேராசிரியர்கள் எஸ்.எ.ஆர் கிலானி மற்றும் ஜி.என்.ஸாயிபாபா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கை நடத்த சிறப்பு கமிட்டு உருவாக்க வேண்டும் - செய்யத் ஷஹாபுத்தீன்!

அயோத்தி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் எல்லா முஸ்லிம் அமைப்பினரும் கட்சிதாரர்களாக இணையவேண்டும் என ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவராத்தின் தலைவர் செய்யத் ஷஹாபுத்தீன் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட நடவடிக்கைகளுக்கும், பாப்ரி மஸ்ஜிதின் புனர் நிர்மாணத்திற்காகவும் சிறப்பு கமிட்டியை உருவாக்கவேண்டும் என பாப்ரி மஸ்ஜித் மூவ்மெண்ட் கோ ஆர்டினேசன் கமிட்டியின் கண்வீனருமான ஷஹாபுத்தீன் கோரினார்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் லக்னோவில் கூட்டிய முஸ்லிம் அமைப்பினர்களின் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்தான் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

முன்னர் முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் ஒய்.ஹெச்.முச்சாலா வெளியிட்ட சிறிய அறிக்கை போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் ஷஹாபுத்தீன் புதிய அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பை அதிர்ச்சியோடுதான் தேசம் கிரகித்தது. வழக்கின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு ஹாஷிம் அன்சாரி போன்ற மனுதாரர்களை கட்சிதாரராக சேர்த்து உ.பி.சுன்னி வக்ஃப் போர்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்ய தீர்மானித்துள்ளது.

சட்டரீதியான போராட்டத்தின் மூலம் அனுகூலமான தீர்ப்பிற்காக முஸ்லிம் சமூகம் சிறப்புக் கவனத்தை செலுத்தவேண்டும். சிறிய மற்றும் பெரிய அமைப்புகளும், தனிநபர்களும் வழக்கில் கட்சிதாரராக இணைய வேண்டும். முஸ்லிம்களோடு அனுதாபம் காட்டுபவர்களையும் கட்சிதாரராக இணைக்க வேண்டும்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான மஸ்ஜிதுகள் மற்றும் தர்காக்கள் மீது உரிமை கோரும் சூழலில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என ஷஹாபுத்தீன் சுட்டிக்காட்டினார்.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கெதிராக சட்டரீதியான போராட்டம் நடத்த பத்துகோடி நிதியை உருவாக்க முஸ்லிம் தனியார் சட்டவாரியம் உதவவேண்டுமென அறிக்கையில் கூறிய ஷஹாபுத்தீன் அந்த நிதிக்காக பத்துலட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பேன் என தெரிவித்தார்.

மத அமைப்புகளுடன் வழக்கறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், மதசார்பற்ற-முற்போக்கு பிரிவினர்கள் ஆகியோரையும் இவ்வழக்கில் கட்சிதாரராக ஆக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளைக் குறித்து லக்னோ கூட்டத்தில் அபிப்ராயம் நிலவியதாக ஷஹாபுத்தீன் தெரிவித்தார்.

ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர், ஜம்யத்துல் உலமாயே ஹிந்த் தலைவர், அமீரே ஜமாஅத் ஷரீஅத் பீகார் மற்றும் ஒரிசா, அமீரே இமாரத்தே ஷரீஅத் கர்நாடகா அமீர், தாருல் உலூம் நத்வத்துல் உலமா தலைவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள், ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் ஆகியோர் லக்னோ கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

2 இலட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் இளம் பெண்கள்!

18 வயது இளம் பெண்கள் 1 இலட்சம் முதல் 2 இலட்சம் ரூபாய் வரையில் அவரவர் அழகுக்குத் தக்கவாறு விற்பனை செய்யப்படுகிறார்கள்.

இவை நடப்பது கல்வியறிவிலும் செல்வத்திலும் பின் தங்கியுள்ள பீகார் மாநிலத்திலோ ராஜஸ்தானிலோ அல்ல. இந்தியாவின் கனவுலக நகராக மாறிவரும் மென்பொருள் ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் பெங்களூரு அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தில்தான் இத்தகைய அவலம் தொடருகிறது.

குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கர்நாடகாவின் பிட்னால் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ரூ. 60 ஆயிரத்திற்கு விற்கப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதியன்று புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று சம்பவங்கள் இதுபோன்று நடப்பதாக காவல் துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு பெண்ணின் அழகும் அவளின் வயதும்தான் அவளுக்கான விலையைத் தீர்மாணிக்கின்றன. 18 வயதுக்குக் குறைவான இனம் பெண்கள் 1 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாய்கள் வரை விலை போகின்றனர். விதவைகளாக இருந்தால் அவர்களின் விலை 50 ஆயிரம் ரூபாய்களுக்கும் குறைவாக இருக்கும். சிலபோது அவர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகக் கூட விற்பனை செய்யப்பட்டுள்ளார்கள் என்று KIDS என்ற கர்நாடகா ஒருங்கிணைந்த வளர்ச்சி சேவை அமைப்பின் தலைவர் பங்கஜா கல்மாத் கூறுகிறார்.

இத்தகைய திருமணங்களை நடத்தி வைப்பதில் ஏஜெண்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர். வடக்கு கர்நாடகாவில் அனைத்து கிராமங்களிலும் இந்த ஏஜெண்டுகளுக்கு துணை ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். தங்கள் கிராமத்தில் ஏழை விதவைகள், திருமணமாகாத இளம் பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்டிர் ஆகியோர் இருந்தால் அந்தப் பெண்களின் குடும்பத்தாரிடம் தங்கள் பேரத்தை தொடங்குகின்றனர். பேரம் படிந்ததும் இளம் பெண்களை வாங்கியவர் அந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் இத்தகைய திருமணங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது என்பது எவருக்குமே தெரியாது. தங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது, தங்கள் தாய்வீட்டிற்கு இப்பெண்கள் வந்து செல்வதோடு சரி என்கிறார் ஆய்வாளர் வீரேந்திர குமார்.

இவ்வாறு காணாமல் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக உறுதி செய்கிறார் பால விகாஸ் அகாடமியின் திட்ட இயக்குநர் மாலதி. இந்தப் பெண்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தால் அது நண்மையே. இல்லை எனில், இந்தத் தவறான செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இளம் பெண்களைக் கடத்தும் ஏஜெண்டுகள் குறிவைப்பது தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையே என்று கூறுகிறார் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பட்டீல்.

தார்வாட் மாவட்டத்தின் 20 கிராமங்களில் தன்னுடைய சேவையைச் செய்து வரும் KIDS அமைப்பின் பங்கஜா, குறைந்தது 10 கிராமங்களில் இது நடைமுறையில் இருப்பதாகக் கூறுகிறார். 2003-2004ஆம் ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயாளிகளைக் கண்டறிவதற்காக தங்களுடைய அமைப்பின் மூலம், லாட்ஜ், தாபா மற்றும் தெருவோர செக்ஸ் தொழிலாளர்கள் சுமார் 1200 பேருக்கு சோதனை செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பெண்கள் இளவயதில் திருமணம் செய்விக்கப்பட்ட பெண்களே. இவர்களை விலைக்கு வாங்கி அழைத்துச் செல்வோர், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குப் பின் இவர்களை மும்பை அல்லது புனேயில் விபாச்சரம் செய்வதற்காக விற்று விடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

வல்லரசுக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் அபலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் விருப்பம்.

வீடியோ கான்ஃபரன்ஸிங் காமிரா மீது காறித் துப்பிய அஜ்மல் கசாப்!

மும்பை சிறையில் விடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க மும்பை தாக்குதல் வழக்கில் மரணதண்டனை பெற்ற தீவிரவாதி அஜ்மல் கசாப் மறுப்பு தெரிவித்தான்.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான குற்றச்சாட்டுகளில் மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து அவனுக்கு மரண தண்டனையை வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து மரண தண்டனையை உறுதி செய்வதற்கான இறுதி விவாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது.

அஜ்மல் கசாபை பாதுகாப்புக் காரணங்களுக்காக நேரடியாக நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள் கொண்டு செல்வதில்லை. இதனால் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணையில் கசாப் பங்கேற்று வருகிறான். இந்நிலையில் நீதிமன்றத்தில், கசாப் வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு நீதிமன்றம் கூடியதும் நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி. மோரே ஆகியோர் வந்து அமர்ந்தனர்.

அப்போது விடியோ கான்ஃபரன்ஸ் வசதி முன்பு நீதிமன்றத்தில் ஆஜராக கசாப் மறுப்பு தெரிவிப்பதாக நீதிபதிகளிடம் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கசாபுக்கு மரண தண்டனையை உறுதி செய்யவேண்டும் என கடந்த 3 நாள்களாக வாதாடி வருகிறார். வாதத்தின்போது வழக்கறிஞர் உஜ்வல் கூறியதாவது:

கசாபும், அவரது கூட்டாளி அபு இஸ்மாயிலும் மும்பையில் கண்மூடித்தனமாக சுட்டனர். அதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் போலீஸ் அதிகாரிகளின் சாட்சியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையிட்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் சதான் மற்றும் போலீஸ் அதிகாரி டேட் ஆகியோரின் சாட்சியங்களும் நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ளன. இந்த 2 தீவிரவாதிகளும் மும்பை காமா மருத்துவமனையில் நுழையாதவாறு அங்கிருந்த செவிலியர்கள் கதவுகளை மூடிவிட்டனர். இதனால் தீவிரவாதிகளால் அங்கு நுழைய முடியவில்லை. இதன்மூலம் ஏராளமான பேர் காப்பாற்றப்பட்டனர் என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து கசாபின் வழக்கறிஞர் அமின் சோல்கர் கூறியதாவது: என்னுடைய கட்சிக்காரரை (கசாப்) சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை. சிறையில் அனுமதிக்கப்படும் நேரத்தைக் கடந்து நான் அவரைச் சந்திக்க வந்ததால் அனுமதி தரமுடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். அவரை சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்றார் அவர். இதையடுத்து எந்த நேரத்திலும் கசாபைச் சந்திக்க அமின் சோல்கருக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என நீதிபதிகள் அப்போது அறிவித்தனர்.

மரண தண்டனையை உறுதி செய்யும் விஷயத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிமன்றம் கசாபின் மனுவை விசாரிக்கும் என்று தெரிகிறது. விடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் கசாப் செவ்வாய்க்கிழமையும் ஆஜராவில்லை. மேலும் காமிரா மீது அவர் காறி துப்பி ரகளை செய்தார். தன்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த அனுமதிக்கவேண்டும் என்று கூறிய கசாப், காமிரா மீது துப்பிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

காமன் வெல்த் போட்டியில் ரூ.8000 கோடி ஊழல்!

இந்தியாவையே அதிர வைத்துள்ள ரூ. 8000 கோடி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஏற்பாடுகளில் பெரும் அலட்சியம் காட்டியதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மீது பிரதமர் மன்மோகன்சிங் கடும் கோபத்தில் உள்ளார். மேலும் போட்டி ஏற்பாடுகளை விரைந்து செய்ய அவருக்கு உதவவில்லை என்று ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி மீதும் பிரதமருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை ரூ 8000 கோடிக்கு பயங்கர ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஊழல் குறித்த முழு விவரமும் வெளியாகும்போது அவர்கள் இருவரின் பதவியும் பறிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

நாடாளுமன்ற கட்டிட வாயில் மூடப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட மன்மோகன் சிங்!

டில்லி காவல்துறைக்கும் நாடாளுமன்ற பாதுகாவல் அலுவலர்களுக்கும் உள்ள ஈகோ மோதல் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடாளுமன்ற வாயில் மூடப்பட்டதால் வேறு பாதை வழியே திரும்பி செல்ல நேரிட்டது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆகஸ்டு 18 அன்று பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் வீட்டில் நடந்த இப்தார் விருந்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டிருந்தார். ஷா நவாஸின் வீட்டிற்கு பிரதமரின் இல்லத்திலிருந்து நாடாளுமன்ற கட்டிடம் வழியாக விரைவாக செல்லலாம். இல்லையென்றால் மிக நீண்ட பாதையில் சுற்றிப் போக வேண்டும் என்பதாலும் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்பட கூடாது என்றும் பிரதமர் நேரடியாகவே இப்தார் விருந்துக்கு நாடாளுமன்ற கதவு வழியே சென்றுள்ளார்.

இப்தார் விருந்து முடித்து பிரதமரின் வாகனம் திரும்பி வந்த போது வழமையாக திறந்திருக்கும் அக்கதவு மூடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமரின் பாதுகாப்பு காவலர்கள் உடனடியாக நாடாளுமன்ற பாதுகாவல் அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டை திறக்க சொன்ன போது முன் கூட்டியே பிரதமரின் வருகை தெரிவிக்கப்படாததால் விதிமுறைகளின் படி தங்களால் கேட்டை திறக்க முடியாது என்றும் இரவு 8 மணிக்கு வழமையாக தாங்கள் அக்கேட்டை மூடிவிடுவது வழக்கம் என்றும் கறாராக பதிலளித்தனர்.

இப்பதிலால் வேறு வழியின்றி எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுமின்றி பிரதமரின் வாகனம் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பாதை வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ள தில்லி காவல்துறை பிரதமரின் கார் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என்று தெரிவித்துள்ளனர்.