வியாழன், 14 ஜூலை, 2011







சென்னை: வினியோகஸ்தர்களை மிரட்டிய வழக்கில், சென்னை கே.கே.நகர் போலீஸ் அனுப்பிய சம்மனில், "சன் டிவி' கலாநிதி ஆஜராகவில்லை. சேலத்தைச் சேர்ந்த கந்தன் பிலிம்ஸ் உரிமையாளர் செல்வராஜ்; இவர், கடந்த 1ம் தேதி, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், "தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் வினியோக உரிமையை, சன், "பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, சேலம் பகுதிக்கு கொடுப்பதாக, 1.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, பணத்தை பெற்றுக் கொண்டார்.
ஒப்பந்தப்படி, வினியோக உரிமையை தனக்கு கொடுக்காமல், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வினியோகித்து விட்டார். பணத்தை கேட்ட போது, அதில், 82.53 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை அடுத்து, கடந்த 3ம் தேதி, சக்சேனா கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தள்ளப்பட்டார். கோர்ட் உத்தரவின்படி, சக்சேனாவை இரண்டு நாட்கள், "கஸ்டடி'யில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது, சக்சேனா, "நான், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஊழியன் மட்டுமே. என் முதலாளி(கலாநிதி) சொன்னதைத் தான் செய்தேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சக்சேனா மீது, சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும், "மாப்பிள்ளை' படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் புகார் அளித்ததையடுத்து, அந்த வழக்குகளிலும் சக்சேனா, ஐயப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். சக்சேனா அளித்த தகவலின் அடிப்படையில், சன் குழும நிர்வாக இயக்குனரான கலாநிதியை, நேற்று(புதன் கிழமை) காலை 10 மணிக்கு ஆஜராகக் கூறி, கே.கே.நகர் போலீசார், கடந்த திங்களன்று சம்மன் அனுப்பினர். கலாநிதி, போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்தாக வேண்டும் என்பதால், பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.

பரபரப்பான சூழலில், காலை 10:15 மணிக்கு, பாட்சா என்பவர் தலைமையில் ஏழு வக்கீல்கள், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி, கலாநிதி சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கலாநிதி, சொந்த விஷயமாக தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், வரும், 26ம் தேதி சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐயப்பன், விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதால், தானும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில், கலாநிதி திடீரென வெளிநாடு பயணம் சென்றதாக தெரிகிறது. எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் கலாநிதி சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு கால அவகாசம் கொடுப்பதா அல்லது அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் கைது செய்வதா என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கலாநிதி எங்கே? : திங்களன்று சம்மனை பெற்ற கலாநிதி, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்று, அங்கிருந்து, "சுவிஸ்' விமானம் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்று விட்டார். எப்போதும், விமானத்தில் முதல் வகுப்பிலேயே பயணம் செய்யும் கலாநிதிக்கு, அந்த வகுப்பில், அப்போது, "சீட்' இல்லை எனக் கூறி விட்டனர். "பிசினஸ் வகுப்பில்' பயணம் செய்வதை தவிர்க்கும் கலாநிதி, வேறு வழியில்லாமல், "பிசினஸ்' வகுப்பிலேயே, அவரது கன்னடத்து மனைவி காவிரியுடன், "ஜூரிச்' நகரத்துக்கு பறந்து விட்டார்.