வியாழன், 28 அக்டோபர், 2010

இஸ்லாம் மீதான தாக்குதல் கலாச்சார மோதலுக்கு வழிவகுக்கும்! - அரபு நாடுகள் எச்சரிக்கை!

இஸ்லாத்திற்கு எதிராக திட்ட மிட்டு தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுக்க மேற்கத்திய நாடுகள் தயாராக வில்லை என்றால் அது சர்வதேச பாது காப்பிற்காக அச்சுறுத்தலை தோற்றுவித் திடும் என்று அரபு நாடுகள் எச்சரித்துள் ளன.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் சபையில் உரையாற்றம் போதுதான் அரபு நாடுகள் மேற்கத்திய உலகின் "இஸ்லாமிய பீதி''க்கு எதிராக எச்சரிக்கை விடுத்தன.  மேற்கத்திய உலகிற்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிளவு அதிகரித்துக் கொண்டே வருவது கலாச்சாரங்களிடையேயான மோதல்களுக்குத்தான் இட்டுச் செல்லும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
அமெரிக்க தேவாலயத்தின் குர்ஆனை கொளுத்துவோம் என்ற மிரட்டல், செப்டம்பர் 11 தாக்குதல் நிகழ்ந்த இடத்தின் அருகே கட்டப்படும் பள்ளிவாசலுக்கு எதிராக தூண்டப்படுகின்ற எதிர்ப் புக் கிளர்ச்சிகள், ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய சின்னங்கள் தாக்கப்படுவது போன்ற அராஜகங்கள், ஃபர்தா எதிர்ப்பு சட்ட மசோதாக்கள் போன்ற அத்து மீறல்கள் ஆகியவற்றையும் அரபு நாடுகளின் தலைவர்கள் தங்களது உரைகளில் சுட்டிக் காட்டினர்.
செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின் பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கின்ற அநியாய அக்கிரமங்களை கத்தார் நாட்டின் அமீர் ஷேக் ஹமது பின் கலீஃபா அல்தானி கடுமையாக விமர்சித்தார்.
பயங்கரவாதத்தை இஸ்லாம் மீது சுமத்துவதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம். அது தவறானது என்பது மட்டுமல்ல, நிகழ்கால சான்றுகளையும் கூட வேண்டுமென்றே புறக்கணிக்கின்ற வரலாற்று ரீதியானதோர் மாபெரும் அநீதியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

காமன்வெல்த் ஊழல்: வருமான வரித்துறையினர் ரெய்டு!

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்துள்ள ரூ 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் பல இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பராக காமன்வெல்த் போட்டி கான்ட்ராக்டர்களான டெல்லியில் உள்ள ஷிவ் நரேஷ் ஸ்போர்ட்ஸ் மற்றும் சத்யபிரகாஷ் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் [^] நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  
காமன்வெல்த் போட்டிக்காக சின்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியை ஷிவ் நரேஷ் ஸ்போர்ட்ஸ் மேற்கொண்டது. மைதானங்களில் தளம் அமைக்கும் பணியை சத்யபிரகாஷ் ஸ்போர்ஸ் செய்தது.

காமன்வெல்த் போட்டி ஊழல்கள் குறித்து பிரதமர் [^] மன்மோகன் சிங் [^] உத்தரவின்பேரில், முன்னாள் தலைமைக் கணக்காளர் விகே ஷுங்லு தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

நாகர்கோவில் அருகே கெட்டுபோன அரிசியில் சத்துணவு: பட்டினி கிடந்த மாணவர்கள்!

நாகர்கோவில்: கெட்டுப் போன அரிசியில் சமைத்த சத்துணவை மாணவர்கள் [^] சாப்பிட முடியாமல் போனதால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிட்டது.

நாகர்கோவிலை அடுத்த விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில தினங்களாக கெட்டுபோன அரிசியில் சமைத்த உணவு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் [^] தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அரிசியை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கெட்டு போன அரிசியிலேயே உணவு சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் குழந்தைகள் சாப்பிட முடியாமல் அந்த உணவை வாங்கி அப்படியே பள்ளியின் எதிரிலேயே கொட்டினர்.

இது பற்றி அறிந்ததும் திருமலை நகர் அதி்முக கிளை செயலாளர் முருகன், சகாயநகர் ஊராட்சி துணை தலைவர் [^] முருகன் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்தனர். குழந்தைகளிடம் அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் உபயத்துல்லா மகன் உசேன் மரணம்: திமுகவினர் அஞ்சலி!

தஞ்சை: தமிழக வணிகவரித்துறை அமைச்சர் [^] உபயத்துல்லாவின் மகன் உசேன் (40) நெஞ்சு வலியால் உயிர் இழந்தார்.

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லாவின் மகன் உசேன் (40). இவர் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் அமைச்சர் வசித்து வருகிறார்.

திருமணமான உசேனுக்கு குழந்தைகள் இல்லை. தந்தைக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் ஒரு முறை கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார்.

இன்று காலை வீட்டில் இருந்த உசேன் திடீர் என்று தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்குள் அவர் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்தார். அவரின் உடலுக்கு தஞ்சை மாவட்ட திமுகவினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காஷ்மீர் : அருந்ததிராய்க்கும், கிலானிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என டெல்லி கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் ஹூர்ரியத் தலைவர் கிலானியும் கைதுச் செய்யப்படுவர் என்ற அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அவர்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீதிக்காக அழுபவர்களை தேசத்துரோகம் என்ற பிரிட்டீஷ் காலத்து சட்டத்தின் மூலம் அமைதியாக்க அரசு முயல்கிறது என கல்கத்தாவில் வெளியிடப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களும் அடங்கும் 17 பிரமுகர்களின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

அருந்ததிராய்க்கு எதிரான நடவடிக்கை குடிமக்களின் அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை தடைச் செய்வதற்கான முயற்சி என மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கருத்தரங்கை ஏற்பாடுச் செய்த கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிடிகல் ப்ரிஸனர்ஸ் அமைப்பும் அருந்ததிராய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இந்தியாவின் அரசியல் சட்ட குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. நீதிக்கான கோரிக்கைகளை அடக்கி ஒடுக்குவதற்கு பதிலாக கஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு பரிகாரம் காண அரசு முன்வரவேண்டும்.

ஐ.நாவின் மேற்பார்வையில் கஷ்மீரில் விருப்ப வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமீத் பட்டாச்சார்யா, சுஜாதோ பத்ரா, மெஹர் எஞ்சினியர், சுதேஷன் எஞ்சினியர், திலோத்தமா முகர்ஜி, ரஞ்சன் சக்ரவர்த்தி, கல்யாண்ராய், ஹிமாத்ரி சங்கர் பானர்ஜி, ஹெச்.என்.தோபா, ரூப்குமார் மர்மன், அவிக் மஜூம்தார், சுபாஷ் சக்ரவர்த்தி, தேபாசிஷ் கோஷ்வாமி, சஞ்சீப் முகர்ஜி, அபிஜித் ராய், ஸ்மிதா கோஷ் ஆகியோர் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றிப பெற்ற எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்!

கொச்சி,அக்.28:தனது சொந்த வாக்கையே பதிவுச் செய்ய அனுமதியில்லாமல் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் 3992 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எ.எம்.குஞ்சு முஹம்மது 2089 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இடதுசாரி வேட்பாளரான யு.எஸ்.குஞ்சு முஹம்மதிற்கு 1666 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியில் பி.டி.பி, ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான ஜனகீய விகசன முன்னணி, கேரள காங்கிரஸ் மாணி பிரிவு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசியல் வரலாற்றில் சிறையிலிருந்து ஒரு வேட்பாளர் வெற்றிப் பெறுவது அபூர்வ சம்பவமாகும்.

முவாற்றுப்புழாவில் பேராசிரியர் ஜோசப் என்பவர் நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் விதமாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வினாத்தாள் தயாரித்த சம்பவத்தில் கோபமடைந்த இளைஞர்கள் யாரோ சிலர் அவருடைய கையை வெட்டினர். இதுத் தொடர்பாக போலீசாரால் பேராசிரியர் கைதுச் செய்யப்பட்டார்.

சிறைச் சட்டப்படி தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. ஆனால், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சிறை அதிகாரிகள் மேற்கண்ட சட்டத்தையே நடைமுறைப்படுத்தியதால் பேராசிரியர் அனஸ் வாக்களிக்க இயலவில்லை.

பேராசிரியர் அனஸ் கைவெட்டி வழக்கில் நிரபராதி என இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளே கூறியதால் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி தேர்தலில் களமிறங்கினார் பேராசிரியர் அனஸ்.

முவாற்றுப்புழா நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து அனுமதி கிடைத்த பிறகுதான் பேராசிரியர் அனஸ் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி போலீஸ் அழைத்ததன் பேரில் முவாற்றுப்புழா காவல் நிலையத்தில் ஆஜரான அனஸை கைதை பதிவுச் செய்யாமலேயே இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்தனர்.

சமூக-கலாச்சார களங்களில் தீவிர பணியாற்றிய முவாற்றுப்புழா இலாஹியா கல்லூரி பேராசிரியரான அனஸ் போட்டியின் துவக்கத்திலேயே தான் நிரபராதி என்பதை மக்கள் முன் விவரித்ததால் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

போலீசார் சதித்திட்டம் தீட்டி கல்வியறிவுப் பெற்ற முஸ்லிம் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றும் வகையில் செயல்பட்டதே தனது விவகாரத்திலும் நடந்ததாக பேராசிரியர் அனஸ் வாக்காளர்களை புரியவைத்ததன் பலனாக அனஸிற்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக அவரை தேர்தலில் வெற்றிப்பெற வைத்துள்ளனர் மக்கள்.

சிறையிலிருந்து தனது வெற்றியை அறிந்த பேராசிரியர் அனஸ் தனது நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொண்டார். தான் நிரபராதி என்பதை நிரூபித்து சிறையிலிருந்து விடுதலையானால் உடனடியாக ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து நன்றி தெரிவிப்பதாகவும் அனஸ் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அனஸை கைவெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்த்தைத் தொடர்ந்து இலாஹியா கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. ஆனால் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் 21 இடங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ்ஸை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்!

புதுதில்லி, அக்.28: ஆஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் கண்டுபிடித்த தகவல்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்ய பொருத்தமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார். எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர்.

தெரிந்தும் ஏன் தயக்கம்?

சுனாமி என்ற சொல்லைக் கேட்டாலே அச்சம் தருகிறபடியாக தமிழகம் மிகக் கசப்பான அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்தோனேஷியாவில் புதன்கிழமை நடைபெற்ற ஆழிப்பேரலை தாக்குதலில் 272 பேர் இறந்தனர். 400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. ஆழிப்பேரலையால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 2004-ம் ஆண்டு எப்படி சுமத்ரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஆழிப்பேரலை ஏற்பட்டு 7 நாடுகளில் 2.3 லட்சம் மனித உயிர்களைப் பலிகொண்டதோ அதே பகுதியில், ஆனால் சற்று குறைந்த அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள ஆழிப்பேரலைதான், இப்போது இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள ஆழிப்பேரலை இழப்புகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆழிப்பேரலை இந்தியாவை மீண்டும் தாக்கக்கூடாது என்பது நமது விருப்பம். பிரார்த்தனையும்கூட. ஆனால், அப்படியொரு சம்பவம் மீண்டும் நடந்தாலும் அது நம்மைப் பாதிக்காதபடி செய்துகொள்ள வேண்டிய மதிநுட்பம் நமக்குத் தேவையாக இருக்கிறது.

 எடுத்தவுடன் இயற்கை தனது சீற்றத்தைக் காட்டுவதே இல்லை. பல்வேறு விதமாக உணர்த்துகிறது. மனிதர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள பல வாய்ப்புகளைத் தருகிறது. இப்போதும்கூட, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் கடல்நீர் உள்வாங்கும் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை ஓர் எச்சரிக்கையாகவே கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிறது.

 இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதும், ஆழிப்பேரலை உருவாகி கரைவாழ் மக்களைத் தாக்குவதும் அடிக்கடி நிகழ்வதாக இருக்கும்போது, கடலோர வாழ்விடங்களில் அலையாத்திக் காடுகளை வளர்த்து, ஆழிப்பேரலைகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் அவசியம் வங்கக் கடலோரம் வாழும் அனைத்து மக்களுக்கும் இருக்கிறது.

 அலையாத்திக் காடுகள் அல்லது சுரபுன்னைக் காடுகள் என்று சொல்லப்படும் இக்காடுகள் கடலோரத்தில் வளரும் தன்மையவை. இந்தியாவில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசப் பகுதியில் சுந்தரவனம் எனப்படும் இந்த அலையாத்திக் காடுகள் சுமார் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ளன. இவை கடலோர உயிரினப் பெருக்கத்துக்கு பேருதவி புரிவதுடன், புயல்களின் தாக்கத்தைக் குறைப்பதிலும், ஆழிப்பேரலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பேருதவி புரிகின்றன என்பதுதான் இவற்றின் சிறப்பு.

 தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இத்தகைய அலையாத்திக் காடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இதற்குப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

 தமிழ்நாட்டில் பிச்சாவரம் பகுதியில் மட்டுமே இப்போது அலையாத்திக் காடுகள் உள்ளன. இத்தகைய காடுகள் நாகை பகுதியிலும், வேதாரண்யம் பகுதியிலும் பெருமளவு அழிந்துவிட்டன. அதன் விளைவுகள்தான் நாகப்பட்டினம் பகுதி 2004 ஆழிப்பேரலையின்போது ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிட்டது. உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழலுக்குப் பொருந்தாத தொழில்துறை மற்றும் மனித நடவடிக்கையால் இருபதாம் நூற்றாண்டில் மட்டும் 30 விழுக்காடு அலையாத்திக் காடுகள் அழிந்துவிட்டன என்கிறது ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு. 1980-ம் ஆண்டு முதலாக ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் கேடுகளால் மட்டுமே ஐந்தில் ஒரு பங்கு அலையாத்திக் காடுகள் அழிந்து போயின என்று புள்ளிவிவரம் தருகிறது.

 சென்னையில் அடையாறு மற்றும் கூவம் நதியும்தான் ஆழிப்பேரலையில் மிகப்பெரும் சீற்றத்தை உள்வாங்கி, நகர மக்களைக் காப்பாற்றின. மேற்கு கடற்கரைச் சாலையில் பல இடங்களில் சவுக்குத்தோப்புகள்தான் ஆழிப்பேரலையின் தீவிரத்தைச் சற்று குறைத்தன. இத்தகைய சம்பவங்களை நேரடியாகப் பார்வையிட்ட பின்னரும்கூட, கடலோரங்களில் அலையாத்திக் காடுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது சரியல்ல. எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளைகூட அலையாத்திக் காடுகள் வளர்ப்பு தொடர்பான ஆய்வுகளைச் செய்துள்ளது.

 தமிழகக் கடலோரப் பகுதியில் எங்கெல்லாம் அலையாத்திக் காடுகள் முன்பு இருந்தன, இப்போது எந்தெந்தப் பகுதியில் அலையாத்திக் காடுகளை வளர்க்க முடியும் என்கிற ஆய்வைத் தமிழக அரசு நடத்த வேண்டும். இந்த ஆய்வின் அடிப்படையில் இக்காடுகளை கடலோரத்தில் உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

 கடலோர வாழிடங்களுக்கான ஒழுங்காற்று விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி எந்தெந்தக் கடலோரப் பகுதிகளில் எத்தனை மீட்டர் தொலைவில் வசிப்பிடங்கள் தொழில்கூடங்கள் அமையலாம் என்று விதிமுறைகள் உள்ளன. இந்தச் சட்டத்தை முழுமையாகக் கடைப்படிப்பது நாளை கடலோரம் வாழும் மக்களின் உயிர்காக்க உதவும்.

 ஆழிப்பேரலை வந்தால் அது ஏற்படுத்தும் சேதத்தின் மதிப்பையும், உயிரிழப்புகளையும், அரசு செய்யும் செலவுகளையும் கணக்கிட்டால், இத்தகைய அலையாத்திக் காடுகளை வளர்க்கும் செலவுகள் மிகச் சொற்பமாகத்தான் இருக்கும். இது தெரிந்தும் தயக்கம் காட்டுவது, நமது அறியாமையையும் அரசின் அசிரத்தையையும்தான் காட்டுகிறது.....

15 பில்லியன் டாலர் வர்த்தகம் : மலேசியா இந்திய ஒப்பந்தம்!

கோலாலம்பூர்: வரும் 2015-ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டாலர் தடையில்லா வர்த்தகம் நடைபெறுவதற்கான புதிய ஒப்பந்தத்தில் இந்தியா வும் மலேசியாவும் கையெழுத்திட்டன.

ஜப்பான் சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மலேசிய பிரதமர் முகமது நஜிப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கலாசார ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் வர்த்தகம் உள்ளிட்ட 5 புதிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.

வரும் 2015-ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டாலர் அளவுக்கு இருநாடுகளும் பரஸ்பர வர்த்தகம் செய்வது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது (Comprehensive Economic Cooperation Agreement). இந்த ஒப்பந்தப்படி, இருநாடுகளும் தடையில்லா வர்த்தக உறவை மேற்கொள்ளவிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மலேசிய பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இத்திட்டத்தை அரசாங்கம் மட்டும் தனியாக செயல்படுத்த முடியாது. ஏனெனில் பெரிய அளவிலான திட்டங்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலர் தொகை தேவைப்படுகிறது.

எனவேதான் இதில் தனியார் நிறுவனங்களின் முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தனியார் நிறுவனங்கள் இதில் பங்குபெறும் வகையில் எளிய முறையிலான நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.

இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். வரும் ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியுடன் சேர்ந்து மலேசிய நிறுவனங்களும் வளர வேண்டும். எனவே மலேசிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வரவேண்டும் என வரவேற்கிறேன்.

சரத் யாதவ் அவமானப்பட்டு சாக வேண்டும் : ஷீலா தீட்சித் பாய்ச்சல் !

பேகுசாராய் (பிஹார்) : சமீபத்தில் பிஹார் தேர்தல் பிரசாரத்தில் ஷரத் யாதவ் பேசும் போது ராகுல் காந்தியை கங்கை நதியில் தூக்கி எறிய வேண்டும் என்று கடுமையாக தாக்கி பேசியதற்கு பல்வேறு மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியதை எடுத்து தான் தனிப்பட்ட முறையில் ராகுலை தாக்கி பேசவில்லை என்று சரத் யாதவ் பதிலளித்தார்.


இச்சூழலில் பிஹாரில் உள்ள பேகுசாராய் எனும் இடத்தில் தேர்தல் கூட்டமொன்றில் பேசிய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கண்ட ஷரத் யாதவின் பேச்சு ஏற்று கொள்ள முடியாது என்று கூறியவர் ஆவேசமாக இப்படிப்பட்ட கருத்துக்காக ஷரத் யாதவ் அவமானப்பட்டு சாக வேண்டும் என்றார்.
மேலும் பிஹாரிலிருந்து தில்லிக்கு குடியேறியுள்ள தொழிலாளர்கள் தில்லியை உலக தரமான நகரமாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிஹாரின் உள்கட்டமைப்பை நிதிஷ் குமாரின் அரசாங்கம் மோசமாக வைத்திருப்பதால் தான் பிஹார் முன்னேற்றமடையாமல் இருப்பதாகவும் கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை: தொல்.திருமாவளவன் அறிக்கை !

காஷ்மீர் விவகாரத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை: தொல்.திருமாவளவன் அறிக்கைவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.

`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாக பேசினர்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சோனியாகாந்தி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சோமாலியாவை முந்துமா இந்தியா?

ஊழல் குறைவாக நடக்கும் நாடுகள் குறித்த ஒரு கருத்து கணிப்பை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் இணையதளம். ௧௭௮ நாடுகளிடம் நடத்தப் பட்ட இந்த கருத்துக் கணிப்பில் டென்மார்க், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 9.3 குறியீடுகள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

அமெரிக்கா 22 வது இடத்தையும் யு.கே 20 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா 3 .3 குறியீடுகள் பெற்று 87 வது இடத்தையும், நமது அண்டைய  நாடுகளான இலங்கை 91 வது இடத்தையும், சீனா 78 வது இடத்தையும்,பாகிஸ்தான் 143 வது இடத்தையும் பிடித்துள்ளான.
சோமாலியா நாடு 1.1 குறியீடுகள் பெற்று 178 வது ( இறுதி ) இடத்தை பிடித்துள்ளது.  போரினால் பாதிக்கப் பட்ட ஆப்கானிஸ்தான் 176 வது இடத்தையும், ஈராக் 175 வது இடத்தையும் பிடித்துள்ளது. 

சவூதி மன்னர் அப்துல்லாவுக்கு ராஜபக்சே விசேட கடிதம் !

இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்சே சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இலங்கை ராஜாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4 மாதமே நிறைந்த கைக்குழந்தை ஒன்றை கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  இலங்கை பணிப்பெண் ரிஸானா நஃபீக் என்கிற 23 யுவதியை கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி இலங்கை அதிபர் அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முன்னதாக,  ரிஸானா குடும்பத்தாரின் விசர் நிரம்பிய மேல் முறையீட்டை சவுதி அரேபிய உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டிருந்தது.


சம்பவம் நடைபெற்ற போது ரிஸானா என்கிற அந்தப் பணிப்பெண்ணுக்கு 17 வயதே ஆகியிருந்தது.  பிறந்து 4 மாதமேயான கைக்குழந்தைக்க்கு பாட்டில் பால் புகட்டுகையில் அக்குழந்தை மூச்சுத்திணறி இறந்துபோனதும் 'தானே கொன்றுவிட்டதாக' அப்பணிப்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.


ஆனால் அது திறமையற்ற மொழிப் பெயர்ப்பாளரின் தவறே என்றும், அக்குழந்தை மூச்சுத் திணறி விபத்தாய் தான் இறந்தது என்றும் அந்த யுவதியின் தரப்பு இப்போது தெரிவித்துள்ளது.


ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமை ஆணையம் இதில் இலங்கை யுவதிக்கு ஆதரவாக ஊடகப் பிரச்சாரம் செய்துவருகிறது.


சவூதியில் ஐந்து முதல் ஆறு இலட்சம் இலங்கையர்கள் உள்ளதாகவும், அதில் பெரும்பாலோர் பணிப்பெண்களாகவும், ஓட்டுனர்களாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.


சில காலங்களுக்கு முன்பு, பிறிதொரு இலங்கை பணிப்பெண்ணின் உடலில் சவூதி முதலாளி ஆணி அடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே சுமூக உறவு மோசமடைந்திருந்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கையெழுத்திடவில்லை - திமுக எம்.பி.ஹெலன் டேவிடசன் விளக்கம் !

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மனுவில் தான் கையெழுத்திடவில்லை என்று எம்.பி.ஹெலன் டேவிட்சன் விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்ச்சைக்குரிய இடமாக ஆக்கப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கமிட்டி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அவரும் உடனடியாக கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்திருந்த்தது.
இந்த சர்ச்சை குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சன் விளக்கமளித்துள்ளார். மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன். ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றேன். இது குறித்து அக்டோபர் 27ம் தேதி புதன்கிழமையன்று திமுக தலைமைக் கழகத்திற்கு விரிவான விளக்கம் அனுப்பவுள்ளேன் என்று ஹெலன் டேவிட்சன் கூறினார்.
எம்.பி. ஹெலன் டேவிட்சன் கூறியுள்ள விளக்கத்தின் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.