சனி, 18 டிசம்பர், 2010

பெண்களே உசாராக இருங்கள்... SMS மூலம் பெண்களுக்கு “உல்லாச” அழைப்பு!

சென்னை: SMS எனப்படும் குறுஞ்செய்தி மூலம் பெண்களை உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுக்கும் செல்போன் தகவல்கள் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சென்னை நகரில் வசிக்கும் ஏராளமான செல்போன்களுக்கு வந்த ஆபாச தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த ஆபாச குறுஞ்செய்தி ஏராளமான பெண்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குடும்ப பெண்களை உல்லாசத்துக்கு அழைப்பதுபோல குறுஞ்செய்திகளில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டிலிருந்து ஒரு ஆசாமி சென்னை வந்திருப்பது போலவும், அவர் ஒரு பெண்ணை உல்லாசத்துக்கு அழைப்பதுபோலவும் ஆங்கிலத்தில் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்துதான் ஆபாச தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் வந்தன.
இந்த ஆபாச குறுஞ்செய்திகள் குறித்து சென்னை விபசார தடுப்பு காவல்துறையினருக்கும்  மத்திய சைபர் குற்றப்பிரிவு காவல்துறைக்கும் ஏராளமான புகார்கள் குவிந்தன. சைபர்கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த செல்போன் குறுஞ்செய்திகள் மாலத்தீவு நாட்டில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது தெரிய வந்தது.. இதனையடுத்து அந்த நபரை பிடிப்பதற்காக இந்த செல்போனில் பெண் காவலர் ஒருவரை பேச வைத்தனர். ஆனால் மறுமுனையில் யாரும் பதில்ம் பேசவில்லை. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற ஆபாச தகவல்களால் கவுரவமான குடும்ப பெண்கள் பலர் மன நல பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள். செல்போன் மூலமும், ஆன்-லைன் மூலமும் விபசார தொழில் நடக்கிறது. எனவே இதுபோன்ற கலாசார சீரழிவுக்கு செல்போன்களையும், இன்டர்நெட்டையும் தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடல் கடந்து ஆபாச தகவல் அனுப்புவோரை சர்வதேச காவல்துறையின் உதவியோடு பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?

துபாய் :  ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அருகே உள்ள ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஷார்ஜாவில் உள்ள ஒரு தொழிலாளர்கள் விடுதியில் (Labourers camp) இந்திய மற்றும் பாகிஸ்தானி தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு கைகலப்பு மோதலாய் மாறி மிஸ்ரி நஸீர் கான் எனும் பாகிஸ்தானியர் ஜனவரி 2009ல் கொல்லப்பட்டார்.
அது சம்பந்தமான வழக்கில் 17 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம் கேட்டு கொண்டதற்கிணங்க கொலை இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று விவரித்து காட்டும் சிடியை காவல்துறை ஒப்படைத்தது. ஆனால் காவல்துறை ஆஜராகதாதல் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை என்றும் அதனால் வழக்கு குறுக்கு விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல் பிந்து சுரேஷ் செத்தூர் கூறினார். குறுக்கு விசாரணை முடிந்து அன்றே தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணம் செல்லும்-சுப்ரீம் கோர்ட்

டெல்லி: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இக்கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் பெருமளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை முறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக அரசுக்கும் ஏராளமான புகார்கள் சென்றன.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில்ஒரு நபர் கமிட்டியை தமிழக அரசு நிர்ணயித்தது. இந்த கமிட்டி கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அரசுக்குப் பரிந்துரைத்தது. இதை இந்த ஆண்டு முதலே அமல்படுத்துமாறும் அது அரசுக்குத் தெரிவித்தது. இதை ஏற்ற தமிழக அரசு புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.

ஆனால் இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக கோவிந்தராஜன் கமிட்டி கட்டண விகிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதை விசாரித்த நீதிபதி வாசுகி, கட்டண விகிதத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வில்சன் அப்பீல் செய்தார். அதேபோல பெற்றோர் சங்கங்கள் சார்பிலும் அப்பீல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்ரபால் தலைமையிலான பெஞ்ச் இடைக்காலத் தடையை ரத்து செய்தது. மேலும், நடப்பு ஆண்டு முதலே கல்விக் கட்டண நிர்ணயத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தன.

இந்தச மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிய கல்விக்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் செல்லும்.

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ஏப்ரல் மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

இரட்டை வேடம் போடுகிறார் முதல்வர் கருணாநிதி: சீமான் குற்றச்சாட்டு!

மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வில் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எம்.பி.பி.எஸ். ,எம்.டி.,பி.டி.எஸ், உள்ளிட்ட இளநிலை, முதுநிலை, மருத்துவப் படிப்புக்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் பல்வேறு இன்னல்கள் நமக்கு ஏற்படும். பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது மாநிலங்களின் உரிமையில் தலையிடும் செயலாகும். மேலும் நாம் போராடிப்பெற்ற 69 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நமது மாணவர்கள் அனைத்து வசதி வாய்ப்புக்களுடனும் படித்து வெளிவரும் டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகர மாணவர்களுடன் போட்டி போட முடியாமல் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பினை இழப்பர்.

இனி மருத்துவக் கல்வி என்பதே நம் மாணவர்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிடும். ஆனால் இதனைத் தடுக்க வேண்டிய தமிழக முதல்வரோ அதைத் தடுக்காமல் வழக்கம் போல தான் பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அறிக்கை வெளியிட்டதையும் தெரிவித்து அதனையும் ஒரு நீண்ட அறிக்கையாக இன்று வெளியிட்டு தன் கடமையை முடித்து விட்டார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கருணாநிதி இந்தப் பிரச்சனையிலும் இரட்டை வேடம் போடுகிறார். இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவு தமக்கு சம்பந்தம் இல்லாதது என்பது போல அறிக்கை வெளியிடுகிறார். மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது. பெட்ரோல் விலை உயர்வில் இருந்து நெய்வேலி பிரச்சனை வரை அனைத்திலும் இதுதான் நிலை.

தனக்கும் தன் குடும்பத்துக்கும் வேண்டிய செல்வம் கொழிக்கும் இலாகாக்களைப் பெற மத்திய அரசை பிளாக்மெயில் செய்து தள்ளாத வயதிலும் குடும்பத்துடன் விமானம் ஏறிச்சென்ற கருணாநிதி பல்லாயிரக்கணக்கான எம் தமிழ் மாணவர்களின் வாழ்க்கைப்பிரச்சனையில் கடிதம் எழுதியதோடு கடமையை முடித்து விட்டது என்ன நியாயம்?

இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை மாற்றும் வல்லமை அவருக்கு ஏன் இல்லை? மாற்றும்

வல்லமை இல்லை என்றால் இதற்கு காரணமான சுகாதார அமைச்சரையும்,பிரதமரையும் கண்டிக்கத் துப்பில்லையா?கருணாநிதி இளைஞன் படத்துக்கு வசனம் எழுதும் இடைவெளியில், ஸ்பெக்ட்ரம் ஊழலால் தனக்கு ஏற்பட்ட கறையை எப்படிப் போக்குவது என கவலைப்படுவதற்கு இடையில் மாணவர்களின் பிரச்சனைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான எம் தமிழ் மாணவர்களின் பிரச்சனையில் கவனம் செலுத்தி பொது நுழைவுத் தேர்வு முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும் இல்லையெனில் மாணவர் சக்தி அவருக்கு தக்க பாடம் புகட்டும். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.