செவ்வாய், 9 நவம்பர், 2010

அயோத்தியில் VHP மாநாடு - நவம்பர் 16ல் நடக்கிறது

இந்து மதத் துறவிகள், தலைவர்கள் இடம்பெற்றுள்ள அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக்கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டியுள்ளதாக வரும் தகவல்களை அடுத்து, இம்முடிவை எதிர்த்து  நவம்பர் 19ஆம் தேதி பாபர்மசூதி-ராமஜன்மபூமி பிரச்சனையின் இடமான அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி  செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் சுமார் 60 ஆயிரம் ராம பக்தர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

"இந்து மதத் தலைவர்களும் துறவிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை கட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணியை ராகுல் மூலம் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றும் ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார்.

இலஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிகள் அதிரடி கைது


குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.700 லஞ்சம் வாங்கியதாக  வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு பெண் ஊழியர்களை இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  கைது செய்தனர்.
கோவை காந்திபூங்கா மானாக்கா வீதியை சேர்ந்த பால்ராஜ் மகன் காசிலாபாண்டி(28) என்பவரது பெயர் குடிமைப்பொருள் வழங்கல் அட்டையில்  பெயர் கலைபாண்டியன் என தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
இதனால், தன் பெயர் மாற்றத்துக்காக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் வனிதா பிரபாவை காசிலாபாண்டி அணுகினார். அப்போது, அட்டையில் பெயர் மாற்றித்தரச்  செய்வதற்கு வனிதாபிரபா  700 ரூபாய் இலஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து, காசிலாபாண்டி கோவை இலஞ்ச ஒழிப்புத் துறையில் முறையீடு செய்தார்.
இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திட்டத்தின்படி நேற்று மாலை வேதிப்பொருள் தடவிய ரூபாய் தாள்களை காசிலாபாண்டியன் வனிதா பிரபாவிடம் அளித்தார். இதை பெற்றுக் கொண்ட வனிதா பிரபா, அதில் 200 ரூபாயை எடுத்துக் கொண்டு, 500 ரூபாயை உதவி பங்கீட்டு அலுவலர் (சரகம்-2) ராஜேஸ்வரிக்கு கொடுத்துள்ளார். இதையெல்லாம் அலுவலகத்தின் வெளியில் நின்று பார்வையிட்ட இலஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் (DSP) சண்முகப்ரியா தலைமையிலான அதிகாரிகள், விரைந்து சென்று வனிதா பிரபா, ராஜேஸ்வரியை கைது செய்தனர். அவர்களிடமிருந்த இலஞ்ச பணத்தை பறிமுதல் செய்து,வழக்கும் பதிவு செய்தனர்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி

சென்னை: சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியதால், யாரையும் தேர்வு செய்யாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிவடைந்தது.

தமிழக சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த சுதர்சனத்தின் மறைவையடுத்து அந்தப் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவிக்கு நபரை தேர்வு செய்ய இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தப் பதவியைப் பிடிக்க யசோதா, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சுதர்சனம், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சௌந்தரராஜ மூப்பனார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு இக் கூட்டம் முடிவடைந்தது.

முன்னதாகக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டப் பேரவை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து கட்சித் தலைமையுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

அழையா விருந்தாளியான காங்கிரஸ்:

இதற்கிடையே தமிழக சட்டசபைக் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

வழக்கமாக சட்டசபைக் கூட்டம் தொடர்பாக நடைபெறும் அலுவல் ஆய்வு குழுக் கூட்டங்களில் கட்சிகளின் பேரவைக் குழுத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

ஆனால், சுதர்சனம் மறைவையடுத்து துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டி.யசோதா, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். கொறடா பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏவும் உடன் சென்றார்.

ஆனால் கட்சியின் தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வக் கடிதம் வந்தால் மட்டுமே அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று அவர்களிடம் சட்டசபைச் செயலக அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும் இரு தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்படி இருவரும் கூட்டத்தில் பங்கேற்றாலும் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. சட்டசபை காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் கட்சியில் பெரும் கோஷ்டி மோதல் நடப்பதால், அந்தக் கட்சி்க்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவதாக இளங்கோவனும் கார்த்திக் சிதம்பரமும் 'கொட்டாவி' விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட்டில் நீங்கள் விரும்பி படிக்கும் மொழி எது?

இன்டர்நெட்டில் அனைவரும் விரும்பிப் படிக்கும் மொழி எது என்பது குறித்த ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது அமெரிக்காவின் வார்ட்டன் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம்.

இந்த கருத்துக் கணிப்பில் நீங்கள் விரும்பும் மொழி எது, இணையத்தளத்தில் நீங்கள் படிக்க விரும்பும் மொழி எது, எந்த மொழியில் உங்களுக்கு புலமை உள்ளது என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மேலும் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் எந்த மொழியில் இணையத்தளத்தில் செய்திகளைப் படிக்க விரும்புகிறீர்கள், எந்த மாதிரியான செய்திகளைப் படிக்க விரும்புகிறீர்கள் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் அடுக்கப்பட்டுள்ளன.

'சர்வே மங்கி' மூலம் நடத்தப்படும் இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி உள்ளே போகலாம்.

http://bit.ly/bwGbp0

இந்திய சந்தையில் 100 பில்லியன் டாலரைத் தாண்டிய வெளிநாட்டு முதலீடுகள்!

Dollorமும்பை: இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலதனம் 100 பில்லியன் டாலரைத் தாண்டியது. இந்தத் தகவலை செபி வெளியிட்டுள்ளது.

1992-ம் ஆண்டு வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது தாராளமாக அனுமதிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியப் பங்குகளில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.

இந்த வகையில் இந்தியாவுக்கு வந்த அயல்நாட்டு மூலதனம் 100 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

குறிப்பாக இந்த நவம்பர் மாதத்தின் முதல் எட்டு தினங்களில் மட்டும் 3.5 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடு இந்திய பங்குச் சந்தையில் குவிந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா பங்குகளை வாங்க 2 பில்லியன் டாலர் வெளிநாட்டிலிருந்து குவிந்துள்ளது.

பெரும்பாலான வெளிநாட்டவர்கள் அதிக பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தாலும், அவர்களுக்கு புதிய பங்குகள் விரும்பும் அளவுக்கு கிடைப்பதில்லையாம். இதனால், வெளிச்சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குகிறார்களாம்.

கோவையில் 2 குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை

 

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
கோவை: கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக்கை கடத்தி சென்று கால்வாயில் தள்ளி கொலை செய்த வேன் டிரைவர் மோகன்ராஜ் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக வேனில் அழைத்து சென்றபோது, எஸ்.ஐ.க்களை சுட்டுவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் நடத்திய என்கவுன்டரில் மோகன்ராஜ் பலியானார். கோவை ரங்கே கவுடர் வீதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித். இவரது மகள் முஸ்கான்(11), மகன் ரித்திக்(8). காந்திபுரம் சுகுணா ரிப்வி மெட்ரிக் பள்ளியில் முஸ்கான் 5ம் வகுப்பும், ரித்திக் 3ம் வகுப்பும் படித்து வந்தனர். தினசரி மாருதி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த 29ம் தேதி (வெள்ளி) காலை டிரைவர் மோகன்ராஜ் வேனில் முஸ்கானையும், ரித்திக்கையும் அழைத்து சென்றார்.

பள்ளிக்கு செல்லாமல், குழந்தைகளின் தந்தை ரஞ்சித்திடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இருவரையும் கடத்தி சென்றார். பொள்ளாச்சி அங்கலகுறிச்சியில் உள்ள தனது நண்பன் மனோகரனையும் அழைத்துக்கொண்டு உடுமலையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றனர். ரஞ்சித்துடன் போனில் பேச முயன்றுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடிய வில்லை. பின்னர் சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பாலத்தில் இருந்து முஸ்கானையும், ரித்திக்கையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தைகளின் பாட்டி கமலாபாய் தெரிவித்த தகவலின் அடிப்படையில்  டிரைவர் மோகன்ராஜையும், கூட்டாளி மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மோகன்ராஜையும், மனோகரனையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை 5வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று மனு செய்தனர். 2 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார். 11ம்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மோகன்ராஜும், மனோகரனும் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களிடம் விசாரணை நடந்தது. உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

குழந்தைகள் கொலை செய்யப்பட்ட உடுமலை சர்க்கார்புதூருக்கு 2 பேரையும் அடையாளம் காட்டச் சொல்வதற்காக அழைத்து செல்ல  போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 5 மணிக்கு மோகன்ராஜ் ஒரு வேனிலும், மனோகரன் ஒரு வேனிலும் அழைத்து செல்லப்பட்டனர். மனோகரன் சென்ற வேன் முதலில் சென்றது. பின்னால் சென்ற வேனில் மோகன்ராஜுடன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐக்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் இருந்தனர். வேனை டிரைவர் ஏட்டு அண்ணாதுரை ஓட்டினார்.
பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால், மாற்றுப்பாதையாக வெள்ளலூர் வழியாக அழைத்து சென்றனர். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, மோகன்ராஜ் திடீரென எஸ்ஐ முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை சடாரென உருவி, ‘வேனை திருப்புடா’ என டிரைவரிடம் கூறினான். எஸ்ஐ முத்துமாலை துப்பாக்கியை பறிக்க முயன்றபோது அவரை மோகன்ராஜ் துப்பாக்கியால் சுட்டான். அவரது இடுப்பில் குண்டு பாய்ந்தது. தடுத்த எஸ்ஐ ஜோதியையும் சுட்டான். அவருக்கு இடது கையில் குண்டு பாய்ந்தது. இருவரும் மயங்கி கீழே சாய்ந்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தனது துப்பாக்கியால் மோகன்ராஜை சுட்டார். இதில் தலையில் கண் அருகே 2 குண்டும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்தது. அதே இடத்தில் மோகன்ராஜ் சுருண்டு விழுந்து இறந்தார். உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே வேனில் மோகன்ராஜ் சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. காயமடைந்த எஸ்ஐக்கள் முத்துமாலையும், ஜோதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆபரேஷன் நடந்தது. பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ், சுட்டுக் கொல்லப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி பதவி பறிப்பு காங்.பாராளுமன்ற செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்

புதுடெல்லி, நவ. 9-
 
காமன்வெல்த் போட்டி ஊழல்: 
 கல்மாடி பதவி பறிப்பு
 
 காங்.பாராளுமன்ற செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்காமன்வெல்த் விளையாட்டு போட்டி டெல்லியில் கடந்த மாதம் வெற்றி கரமாக நடந்தது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சுரேஷ் கல்மாடி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு பிரதமர் மன் மோகன்சிங் போட்டி முடிந்த மறுநாளே உத்தரவிட்டார்.
 
கல்மாடி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். புனே தொகுதி எம்.பி.யாக உள்ளார். பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் உள்ளார்.
 
காமன்வெல்த் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கல்மாடியிடம் இருந்து விலகியே இருந்தது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு நடந்த பாராட்டு விழாவில் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கல்மாடியை புறக்கணித்தனர். அதோடு கல்மாடியை சந்திக்க சோனியாகாந்தி தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்த நிலையில் காமன் வெல்த் ஊழல் தொடர்பாக கல்மாடியின் பாராளுமன்ற காங்கிரஸ் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதாகவும், இதைத் தொடர்ந்து கல்மாடி ராஜினாமா செய்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறும்போது, காங்கிரஸ் பாராளுமன்ற செயலாளர் பதவியில் இருந்து கல்மாடியின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார்.
 
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் என்பதால் கல்மாடியின் பதவியை சோனியாகாந்தி பறித்ததாக கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாக்.தான் தீர்க்க வேண்டும்-ஒபாமா

Obama and  Manmohan Singh Meetingடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவால் எந்த தீர்வையும் தர முடியாது. அதை இந்தியாவும், பாகிஸ்தானும்தான் தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிபர் ஒபாமா.

ஒபாமா, இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கிட்டத்தட்ட 55 நிமிடங்கள் பேசினார். முதலில் இரு தலைவர்களும் தனியாக பேசினர். பின்னர் இரு நாட்டுக் குழுக்கள் இணைந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு இந்தியா ஒருபோதும் தயங்கியதில்லை, அஞ்சியதில்லை. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எல்லை தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்தாடும் நிலையில் மறுபக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்காது.

பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. அதேசமயம், தீவிரவாத செயல்களை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தீவிர அக்கறை காட்ட வேண்டும். அப்படி நடந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.

உலகம் முழுவதும் தீவிரவாதம் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போரை தீவிரப்படுத்துமாறு நான் கூறியதை அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா தற்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை தளர்த்துமாறு நான் அதிபரை கேட்டுக் கொண்டேன். அவரும் அதுகுறித்துப் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பல்வேறு துறைகளில் அமெரிக்கா உதவி வருகிறது. மும்பையில் நவம்பர் 6ம் தேதி கையெழுத்தான பல்வேறு ஒப்பநதங்கள், இரு நாடுகளின் உறவுகளையும் மேம்படுத்த உதவும். இந்த ஒப்பந்தங்கள் மூலம், பாதுகாப்பு, விண்வெளி, அணு சக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா இனி பெருமளவிலான உதவிகளை இந்தியாவுக்கு அளிக்கும்.

இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகளை அளித்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, அமெரிக்காவின் உற்பத்தித் திறன்தான் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வேலைகளைப் பறிக்கும் வேலையில் இந்தியா ஈடுபடவில்லை.

அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 9 முதல் 10 சதவீதமாக உயர்த்த தீவிர முயற்சிகள் எடுக்கப்படும். உறுதியான, வளமான அமெரிக்கா திகழ்வது உலகத்திற்கே நன்மை பயக்கும்.

வளர்ச்சியை அதிகரிக்கவும், ஏழ்மையை ஒழிக்கவும் பெருமளவிலான அமெரிக்க முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது. அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து ஒரு டிரில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை எதிர்பார்க்கிறோம். அதை அமெரிக்கா பூர்த்தி செய்யும் என நம்புகிறோம் என்றார் பிரதமர்.

அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியா வளர்ந்து வரும் சக்தி அல்ல. மாறாக ஏற்கனவே உலக அரங்கில் அது ஒரு வல்லரசாக உயர்ந்து விட்டது.

காஷ்மீர்ப் பிரச்சினை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இரு நாட்டுப் பிரச்சினை. இதில் அமெரிக்காவால் எந்த தீர்வையும் திணிக்க முடியாது. அதை செய்யவும் மாட்டோம். இதை இரு நாடுகளும்தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பாகிஸ்தான் அமைதியாக இருந்தால்தான் இந்தியாவுக்கு நல்லது.

இரு நாடுகளும் தெற்காசியாவில் பதட்டத்தை தணிக்கும் வகையில் செயல்படுவதில் உறுதியாக உள்ளன. இந்த சமயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா விரும்பவில்லை. இந்த இரு நாடுகளுமே தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்த முடியும்.

காஷ்மீரை முன்வைத்து இரு நாடுகளும் தங்களது பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

வருகிற ஆண்டுகளில், வருகிற மாதங்களில், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க தீவிரமாக முயல்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சாதாரணமானதல்ல. அசாதாரணமான ஒன்று இது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் தொழில்நுட்பங்களால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமே தவிர குறையாது.

மும்பையில் மேற்கொள்ளப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுக்கு 54,000 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் நான் ஏன் அதிக நேரத்தை செலவிடுகிறேன் என்று அமெரிக்காவில் கேட்பவர்களுக்கு இதுதான் எனது பதில்.

ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் தற்போது வளர்ச்சி இல்லை அல்லது மிக மெதுவான வளர்ச்சி என்ற நிலையில்தான் உள்ளன.

உலகப் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இந்தியா உள்ளது. இந்தியா பொருளாதார பிரச்சினையில் சிக்கியிருக்கவில்லை.

அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்த, வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதில் நான் உறுதியாக உள்ளேன். அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியதாகும்.

ஐ.நா.சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது தொடர்பாக இன்று மாலை நாடாளுமன்றத்தில் நான் நிகழ்த்தப் போகும் உரையில் எனது கருத்தை தெரிவிக்கிறேன் என்றார் ஒபாமா.

முன்னதாக இரு தலைவர்களும் சந்தித்தபோது, பாகிஸ்தான் மீது பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியதாக தெரிகிறது. குறிப்பாக தீவிரவாத அமைப்புகளை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரித்து வருவதையும், இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ராணுவம் விரும்பவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
  
லஷ்கர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய மிரட்டலாக இருந்து வருவதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

கோவையில் அக்கா, தம்பியை கொடூரமாகக் கொன்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Mohanakrishnanகோவை: கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்தவர் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் ஜெயின். இவரது மகள் முஷ்கின் (11), அவளது தம்பி ரித்திக் ஜெயின் (8). இருவரையும் காரில் கடத்திச்சென்று சிறுமியைக் கற்பழித்து பின்னர் இருவரையும் பி.ஏ.பி. கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்ததாக மோகனகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விசாரணைக்காக இருவரையும், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நான்கு நாள் அனுமதி கேட்டு வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி 5வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவர்களுடன் செல்ல விருப்பமா என கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர். மேலும், இவ்வழக்கில் மேலும் இரு டிரைவர்கள் எங்களுடன் இருந்தனர் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 3 நாள் காவலில் அவர்களை அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும், விசாரணை முடிவடைந்து நவம்பர் 11ம் தேதி இருவரையும் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரையும் செட்டிக்குளம் பகுதிக்கு முதலில் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வந்த போது, மோகனகிருஷ்ணன் திடீரென போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கி போலீசாரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மோகனகிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டார். இதில் நெற்றி, இடுப்பில் குண்டு பாய்ந்து மோகன கிருஷ்ணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

முன்னதாக மோகனகிருஷ்ணனையும், மனோகரனையும் போலீஸார் தனித் தனி வேனில் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸை சாடக் கூடாது-எம்.பிக்களுக்கு ஜெ. அட்வைஸ்

Jayalalithaசென்னை: சென்னையில் நேற்று நடந்த அதிமுக எம்.பிக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்றக் கூட்டத்தின் போது, எந்தப் பிரச்சினையிலும் காங்கிரஸை விமர்சித்துப் பேசக் கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளாராம்.

நாளை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதையடுத்து நேற்று தனது கட்சி எம்.பிக்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா.

அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுகவை கடுமையாக சாடிப் பேசுமாறு தனது கட்சியினருக்கு முக்கிய ஆலோசனையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இந்தப் பிரச்சினைக்கு அதிகமுக்கியத்துவம் தருமாறும் அவர் அதிமுக எம்.பிக்களை கேட்டுக் கொண்டாராம்.

அதேபோல முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் முக்கியமாக பேசுமாறு அதிமுக எம்.பிக்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி எக்காரணம் கொண்டும் யாரும் விமர்சித்தோ, கண்டித்தோ, கண்டனம் தெரிவித்தோ எந்த வகையிலும் குறை கூறி பேசக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம் ஜெயலலிதா.

காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று இன்னும் நம்பிக்கையுடன் உள்ளார் ஜெயலலிதா. இதற்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸை விமர்சித்துப் பேச வேண்டாம் என தனது கட்சி எம்.பிக்களுக்கு தடா போட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.