தேர்தலை மனதில் வைத்து கருணாநிதிக்கு சோனியா கடிதம் எழுதி உள்ளார் என்று வைகோ குற்றம் சாட்டினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சோனியாகாந்தி, கருணாநிதிக்கு ஒரு பதில் கடிதம் எழுதி இருப்பதாகவும், அதில், இலங்கையில் முகாம்களில் உள்ள 30,000 ஈழத் தமிழ் மக்கள் மறு குடி அமர்வுக்குத் தேவையான உதவிகளையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவி களையும், மத்திய அரசு அளித்து வருவதாகவும், தமிழ் மக்களுக்கு மறு கட்டமைப்புப்பணிகள் தொடர்பாக, இலங்கை அரசோடு இந்திய அரசு பேசி வருவதாகவும், சோனியாகாந்தி குறிப்பிட்டு உள்ளதாக, செய்தி வெளியாகி உள்ளது.
2008 ஆம் ஆண்டிலும், 2009 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள், கொலை பாதக ராஜபக்சே அரசால், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில், ஈழத்தமிழர்களைப் பற்றி, ஒரு வார்த்தை சோனியாகாந்தி பேசியது உண்டா?
டெல்லிக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, போரைத் தீவிரப்படுத்தி புலிகளை முற்றாக அழிப்பேன் என்று கொக்கரித்தபோது, அதைக் கண்டித்து மன்மோகன் அரசு ஒரு வார்த்தை கூறியது உண்டா?
விடுதலைப்புலிகளைத் தடை செய்து உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று, திரும்பத்திரும்ப வலியுறுத்திய போதும், இந்திய அரசு, போர் நிறுத்தத்தை ஏன் வலியுறுத்த வில்லை?
2009 பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி, சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசினாரே? டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை இயக்குவதே சோனியாகாந்தி அம்மையார் என்பது, உலகு அறிந்த உண்மை ஆகும்.
இந்திய அரசின் உதவியால் தான், யுத்தத்தை வெற்றிகரமாக நாங்கள் நடத்த முடிந்தது என்று, சிங்கள அதிபர் ராஜபக்சே, இலங்கை நாடாளுமன்றத்திலேயே அறிவித்தாரே? இந்தியா செய்த ராணுவ உதவியால்தான், புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது என்று, இலங்கை அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்தார்களே?
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை சிங்கள அரசால் நடத்தப்பட்டதற்கு, முழுக்க முழுக்க உதவியது இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான்.
தமிழர்களை முட்டாள்களாக ஆக்கி விடலாம் என்று கருதிக்கொண்டு, மறு குடியமர்வுக்கு இந்திய அரசு முயற்சிப்பதாக, சோனியா காந்தி கருணாநிதிக்கு, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு கடிதம் எழுதி இருக்கிறார்.
உணவும் இன்றி, மருந்தும் இன்றி, சிங்கள விமானக் குண்டுவீச்சுக்கும், பீரங்கித் தாக்குதலுக்கும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பலியான போது வாய்மூடிக் கிடந்த சோனியாகாந்திக்கு, இப்போதுதான் ஈழத்தமிழர் களைப் பற்றி ஞாபகம் வந்தது போலும்.
இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறி உள்ளார்.