திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்

நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது ஊழல். அதை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது முக்கியம் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

நாடு முழுவதும் 65வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில், செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

டெல்லியில் மழை பெய்து வந்த நிலையிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார் பிரதமர். அவரது பேச்சில் இடம்பெற்றவை:

நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், சிலர் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முறியடிக்க மக்களிடையே ஒற்றுமையும், புரிந்து கொள்ளுதலும் மிகவும் அவசியம்.

நமது தனிப்பட்ட, அரசியல் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி தேசிய முக்கியத்தும் வாய்ந்த பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை எட்டி செயல்பட வேண்டிய நேரம் இது.

எங்களது அரசியல் அரசியல் நிலைத்தன்மையையும், ஸ்திரத்தன்மையையும் கொடுத்துள்ளது. பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது.

மதநல்லிணக்கத்துடன் மக்கள் வாழ வகை செய்துள்ளது எங்களது அரசு. கடந்த ஏழு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சீராகவும், சிறப்பாகவும் உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்காக, பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எங்களது அரசு எடுத்துள்ளது. விரைவில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் வரவுள்ளது.

நமது நாடு நம்பிக்கையும், சுயமரியாதையும் நிரம்பிய நாடாக திகழ்கிறது. அதேசமயம், நமது நாட்டின் வளர்ச்சிக்கும், தேசிய முன்னேற்றத்துக்கும் ஊழல் பெரும் தடையாக, இடையூறாக விளங்குகிறது.

ஊழலை விரட்டியடிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதேசமயம், ஊழல் ஒழிப்பு விவாதம் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்து விடக் கூடாது.

ஊழலை அனைத்து மட்டத்திலும் ஒழிக்க அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் உள்ளது. அதேசமயம், ஒரே நடவடிக்கையின் மூலம் நாட்டிலிருந்து ஊழலை ஒழித்து விட முடியாது.

நமது நீதித்துறையை வலுவாக்காமல் நம்மால் ஊழலை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. உயர் மட்ட அளவில் ஊழலை ஒழிக்க கடுமையான, வலுவான லோக்பால் சட்டம் தேவை.

அதற்காக பட்டினி கிடப்பது, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது ஊழலை ஒழிக்க உதவாது. இந்தியாவின் நீதித்துறையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது.

அரசுத் திட்டங்களில் நடந்து வரும் ஊழல்களை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் கொள்முதல்கள் ஒளிவுமறைவில்லாமல், வெளிப்படையாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவையெல்லாம்தான் ஊழலை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளே தவிர வேறு எந்த மாயமந்திரமும் எந்த அரசிடமும் இல்லை.

நமது நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி நிகழ்த்தப்பட வேண்டும். விவசாயிகள் இன்று அபரிமிதமான விளைச்சலைக் கண்டு வருகிறார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்.

விளைச்சல் சிறப்பபாக இருக்கின்ற போதிலும் பணவீக்கமும் ஒருபக்கம் நிலைத்திருப்பது உண்மைதான். விலைவாசியைக் குறைத்து மக்களை நிம்மதிப் பெருமூ்ச்சு விட வைக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் எனது அரசு உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.


இந்தியாவை குடிசைகள் இல்லாத நாடாக மாற்றுவதில் எனது அரசு தீவிரமாக உள்ளது. குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை நல்ல ஆரோக்கியமான சூழலுடன் கூடிய வீடுகளில் வசிக்கச் செய்வோம்.

பெண்கள், குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச் சத்துக் குறைபாடும் எங்களைக் கவலை கொள்ளச் செய்கிறது. இதை ஒழிக்கவும் தீவிரமாக முயன்று வருகிறோம்.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. அதன் வேகத்தைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இது நீண்ட காலப் போர். மத்திய அரசும், மாநில அரசுகளும் மட்டுமின்றி மக்களும் இணைந்து பங்கேற்றுள்ள போர்.

நக்சலிசத்திற்குக் காரணமான அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு நாங்கள் தீர்வு கண்டு வருகிறோம். விரைவில் நக்சலிசம் நாட்டிலிருந்து விரட்டப்படும்.

சுதந்திரம் !

இது யாருக்கு கிடைத்தது ?

யாருக்கு யார் கொடுத்தது ?
...
சுதந்திரம் என்றால் என்ன ?

பசி, பட்டினி, கொலை , கொள்ளை ,பலாத்காரம் ,ஆகியவை நிறைந்த இந்த நாட்டிலே யாருக்கு கிடைத்தது சுதந்திரம் ?

ஏதாவது தனி சமுதாயம் இந்த நாட்டிலே சுதந்திரமாக வாழ்வதாக வரலாறுகள் உண்டா ?

பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து கொடி ஏற்றி விடுமுறை விடுவதா சுதந்திரம் ?

மேல் ஜாதி மக்கள் ஆதிக்கம் செலுத்தி சில ஜாதியினரை வளர விடாமல் தடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் இந்த நாட்டிலா சுதந்திரம் கிடைத்தது ?

சாதியின் பெயரால் சண்டை இட்டு ,டீக்கடையில் சாதியத்தை வளர்க்கும் இந்த நாட்டிலா சுதந்திரம் கிடைத்தது ?

மேல் ஜாதி கீழ் ஜாதி என்று சாதிய வர்க்கத்தின் பெயரால் சண்டையை மூட்டும் அரசியல் வாதிகள் இருக்கும் இந்த நாட்டில நாம் சுதந்திரம் பெற்றோம் ?

இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக உள்ளார்களா ?