புதன், 27 அக்டோபர், 2010

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்: மலேசிய நிறுவனங்களுக்கு மன்மோகன்சிங் அழைப்பு !

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்: மலேசிய நிறுவனங்களுக்கு மன்மோகன்சிங் அழைப்பு
ஜப்பான் சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
பின்னர் மலேசிய பிரதமர் முகமது நஜிப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கலாசார ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் பல்வேறு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.
 
இதைத் தொடர்ந்து அவர் மலேசிய பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கட்டுமான வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இத்திட்டத்தை அரசாங்கம் மட்டும் தனியாக செயல்படுத்த முடியாது. ஏனெனில் பெரிய அளவிலான திட்டங்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலர் தொகை தேவைப்படுகிறது.
 
எனவேதான் இதில் தனியார் நிறுவனங்களின் முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தனியார் நிறுவனங்கள் இதில் பங்குபெறும் வகையில் எளிய முறையிலான நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.
 
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.
 
இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். வரும் ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியுடன் சேர்ந்து மலேசிய நிறுவனங்களும் வளர வேண்டும். எனவே மலேசிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வரவேண்டும் என வரவேற்கிறேன்””.
 
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மாலேசிய வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்கிறேன்என்று பிரதமர் மன்மோகன் சிங் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.

மலேசியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரமர், மலேசியப் பிரதமர் முஹம்மது நஜீப் துன் அப்துல் ரஜாக்குடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன

கேள்வி கேட்பவர்களை சிறையில் தள்ளுவது துக்ககரமானது: அருந்ததிராய்!

உலகில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் டெல்லி கருத்தரங்கில் நான் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினேன் என பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கஷ்மீர் சுதந்திரம் குறித்து நான் பேசிய கருத்துக்களுக்காக, என் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டு கைதுச் செய்யப்படலாம் என செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன்.

கஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக தினந்தோறும் என்ன கூறுகிறார்களோ, அதைத்தான் நான் கூறினேன். வரலாற்று ஆசிரியர்களும், பல ஆண்டுகளாக எதை எழுதுகிறார்களோ அதைத்தான் நானும் பேசினேன். எனது உரையின் நகலை வாசிக்க எவராவது தயாரானால், அது அடிப்படை நீதிக்கான தேவை என காண இயலும்.

உலகத்தில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் நான் பேசினேன். பிறந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட கஷ்மீரி பண்டிட்டுகளின் துயரமான வாழ்க்கையைக் குறித்தும், சுடாலூர் கிராமத்தில் இடுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்ட கஷ்மீரில் மரணமடைந்த தலித் ராணுவ வீரர்களுக்காகவும்தான் நான் பேசினேன்.

நேற்று தெற்கு கஷ்மீரின் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு பயணம் செய்தேன். 47 தினங்கள் நீண்ட போராட்டத்திற்கு காரணமான, ஷோபியானில் ஆஸியாவும், நிலோஃபரும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் என் நினைவலையில் வந்தன. அவர்களின் கொலையாளிகள் இதுவரை நீதியின் முன்னால் நிறுத்தப்படவில்லை. ஆஸியாவின் சகோதரரையும், நிலோஃபரின் கணவரையும் நான் கண்டேன்.

துயரத்திலும் கோபத்திலும் ஆழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் நடுவில் நாங்களிருந்தோம். இந்தியாவிலிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த அவர்கள், சுதந்திரம் ஒன்றே வழி என நம்புகின்றனர்.

கண்ணின் வழியாக தோட்டக்கள் பாய்ந்து சென்ற கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை நான் கண்டேன். கல்வீசியதற்கு தண்டனையாக அனந்தநாக்கில் தனது நண்பர்களான 3 இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து கையிலுள்ள நகங்களை பிய்த்து எறிந்ததாக என்னுடன் பயணம் செய்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

நான் துவேசப் பிரசங்கம் நிகழ்த்தியதாகவும்,இந்தியாவை பிரிக்கக் கோரியதாகவும் சில பத்திரிகைகள் எழுதுகின்றன.அன்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக எழுந்ததுதான் எனது வார்த்தைகள். மக்கள் கொல்லப்படக் கூடாது, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படக் கூடாது, சிறையிலடைக்கப்படக் கூடாது, நான் இந்தியக்காரன் எனக் கூறுவதற்காக அவர்களுடைய நகங்கள் பிய்த்து எறியப்படக் கூடாது என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே எனது உரை அமைந்தது.

சமூகம் ஒன்றாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். எழுத்தாளர்களின், சிந்தையில் தோன்றுவதை, பேசுவதை தடுத்து அமைதியாக்கும் இந்த தேசத்தை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.

சமூகக் கொலைக்காரர்கள், பெரிய நிறுவனங்களை நடத்தும் ஊழல்வாதிகள், வன்புணர்ச்சியை செய்பவர்களும், ஏழைகளில் ஏழைகளான மக்களை இரையை வீசி பிடிப்பவர்களும் சுதந்திரமாக உலாவுகின்றனர். ஆனால் நீதிக்கேட்டு பேசுபவர்களை சிறையில் தள்ள நினைக்கும் இந்த தேசத்தை நினைத்து துக்கப்படுகிறேன்." இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.
 

பாப்ரி மஸ்ஜித்:வீணான பேச்சுவார்த்தைகளை நிறுத்துங்கள் -முஸ்லிம் தலைவர்களுக்கு PFI வேண்டுகோள்!

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு முஸ்லிம் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவெடுத்திருக்கும், சுன்னி வக்ஃப்போர்டு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முஸ்லிம்களில் அதிக செல்வாக்குப் பெற்ற அமைப்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியம் இந்த மாதம் கூட்டிய கூட்டத்தில் வைத்து சமரசத் தீர்வு காண்பதற்கான சந்தேகங்களுக்கு முடிவுக்கட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவும் செய்ததாகும்.

ஆதாரங்களை விட நம்பிகையை அடிப்படையாகக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பின் அபத்தங்களை திருத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டு என அக்கூட்டம் மதிப்பீடுச் செய்திருந்தது.

கோயிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதம் நிரூபிக்கப்படாத சூழலில், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கவேண்டும் என்ற வாதம் உள்ளிட்ட சில தனிப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இதுக்குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சில உறுப்பினர்களின் நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாகவும், தேவையற்றதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விமர்சிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர்களான சுவாமி சிதானந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது வீண் வேலையாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் குறித்த முஸ்லிம்களின் உரிமைக் கோரிக்கையைக் குறித்து பொதுமக்களிடம் இது சந்தேகத்தை கிளப்பவே உதவும்.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமன் பிறந்த இடம் என்பதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமலரிந்தால்தான் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காண இயலும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்
தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முடிவுச் செய்துள்ள தீர்மானங்களைக் குறித்து எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஹிந்தத்துவா அமைப்புகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் வாரியத்தின் உறுப்பினர்களை தலைவர்கள் சந்தித்து அந்த சிந்தனையிலிருந்து மாற்றவேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைக்குள் வேண்டாம் போலீஸ்!

ரசியல் கைதிகளால் நிரம்பி வழிகிறது, அமைதிப் பூங்காவான தமிழகச் சிறைச்சாலைகள்!



கைதிகள், தாங்கள் செய்த குற்றங் களை உணர்ந்து, திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தச் சிறைகள், சித்ரவதைக் கூடங்களாக விளங்குவதை... அதனுள் 13 ஆண்டுகள் இருந்து அனுபவித்த நான், எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவன்.
வெள்ளைக்காரன் ஆண்ட 1894-லிலேயே சிறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவன் இந்த நாட்டைவிட்டுப் போன பிறகும், அந்த ஷரத்துகள் இன்று வரை அமலில் இருக்கின்றன. தன்னுடைய அரசாங்கத்தை எதிர்க்கும் அடிமைகளைத் துன்புறுத்தக் கொண்டுவரப்பட்ட சிறைச் சட்டம், சுதந்திர இந்தியாவில் 'விடுதலை' இந்தியனைப் பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவதுதான் கோரமானது!
பீகார் மாநிலம் பாகல்பூர் சிறையில், கைதிகளின் கண்களையே பிடுங்கி வீசினர். 1998-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத் தில், 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். 1999-ல் பாளையங்கோட்டை சிறையில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் அதிரடியாக வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, 30 நாட்கள் நிர்வாணமாக வைக்கப்பட்டார்கள். அதே ஆண்டின் இறுதியில் மதுரை, பாளை மத்திய சிறை தவிர, மற்ற ஆறு மத்திய சிறைகளில் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தனி செல்லில் 45 நாட்கள் சூரிய வெளிச்சம்கூட படாத வகையில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.


1990-களின் தொடக்கத்தில் இருந்து சிறைகளில் 'உயர் பாதுகாப்புத் தொகுதி' என்ற தனிப் பிரிவை உருவாக்கி சித்ரவதை செய்து வருகிறார்கள். இங்கே மனித வாடையும், இயற்கைக் காற்றும் மருந்துக்குக்கூட கிடைக்காது. இதில்தான் புரட்சியாளர்கள், தமிழ் தேசிய மற்றும் இஸ்லாமியப் போராளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அரசின் சட்டபூர்வ, சட்ட விரோத வன்முறைகள் இவர்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக, மனித உரிமைகளை மீறுகிற வகையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அரசியல் சிறைவாசிகள் முழுமையாக உளவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றனர். சிறை நிர்வாகம் என்பது பெயர் அளவில்தான். உளவுத் துறையே சர்வ அதிகாரம் கொண்டதாக செயல்படுகிறது.
சிறையில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் சாதாரண மக்கள். இவர்கள் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். 'இவர்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்றால், சட்டபூர்வமான எந்தத் தண்டனையும் தரட்டும். ஆனால், சிறைக்கூடங்களில் சித்ர வதைகள் செய்வது என்ன நியாயம்?' என்பதுதான் எங்களது கேள்வி!
பணம் படைத்த அதிகாரத்தின் ஆராதனைக்கு உரிய ஒருவர், பல கோடி மோசடியில் மாட்டி, இதே சிறைக்குள் வந்தால், அவருக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது. சிறை வாசலில் நின்று அதிகாரிகள் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். நோயே இல்லை என்றாலும், சிறை மருத்துவ மனைகளில் அவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள். சொகுசான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. உள்ளே வருபவர் சாதாரணமானவர் என்றால், எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்.
'சிறைக் கட்டடத்தில் உள்ள ஒவ்வோர் தொகுதியிலும், தனித் தனி புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, அவை மாவட்ட முதன்மை நீதிபதியின் நேரடிப் பராமரிப்பில் இருக்க வேண்டும். மாத ஆய்வுக்கு மாவட்ட நீதிபதி சிறைக்கு வரும்போது, சிறை அதிகாரிகளைத் தவிர்த்து சிறைவாசிகளிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், இவை எங்கும் நடைமுறையில் இல்லை.
இந்தக் குறைபாடுகள் அனைத்தை யும் ஒரேநாளில் முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியாதுதான். அவற்றைப் படிப்படியாகச் சரிப் படுத்தினாலும்கூடப் போதும். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான ஒரு குறைந்தபட்சக் கோரிக்கை என்ன வென்றால், மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதே.
'கைதிகள் தங்களின் அடிமைகள்!' என்று நினைக்கும் போலீஸார் கையில் இன்று சிறைகள் இருக் கின்றன. காவல் துறை இயக்குநர் ஆர்.நட்ராஜ் சிறைத் துறை இயக் குநராக இருந்தபோது... இந்தியாவில் முதன் முதலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவப் பண்டிகை நாட்களில் சிறைவாசிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரே ஒரு அதிகாரி மட்டும் இப்படி இருந்தால் போதாது. போலீஸார் அனைவருக்குள் ளும் அந்த மன நிலை புகுத்தப்பட வேண்டும்.
காவல் துறையினரால்அடக்கு முறைக்கு ஆளாகி, சிறைப்பட்டு உள்ளவர்களைப் பராமரிக்கும் மனிதாபிமானம் சார்ந்த பொறுப் புக்கு, அதே காவல் துறையின் தலைவர்களை நியமனம் செய் வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இந்திய ஆட்சிப் பணி, சுகாதாரத் துறை அல்லது நீதித் துறையைச் சார்ந்தவர்களை சிறைத் தலைவராக நியமனம் செய்வதன் மூலம், மனித உரிமைகள் மீறலை பெருமளவுக்குக் கட்டுப் படுத்தலாம்!

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பிரபாகரன் பெயர் நீக்கம் : தடா கோர்ட்டு உத்தரவு !

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பிரபாகரன் பெயர் நீக்கம் : 
தடா கோர்ட்டு உத்தரவு
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கி தடா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக் கின் முதல் குற்றவாளியாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், 2-வது குற்றவாளியாக அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நளினி, அவரது கணவர் முருகன் உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிவராசன் உள்பட 12 பேர் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே இறந்துவிட்டனர். பிரபாகரன் உள்பட 4 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி அனுப்பிய கருணை மனுவை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையில் நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இருந்தாலும், பிரபாகரன் மரண சான்றிதழ் இந்தியாவிற்கு அனுப்பப்படவில்லை. 1981-ம் ஆண்டு இலங்கை தமிழ் அரசியல்வாதி அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை போலீசார், கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தன......

ஒபாமா வருவதால் அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு தயக்கம் !

ஒபாமா வருவதால் அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு தயக்கம்
காஷ்மீர் இந்திய பகுதி அல்ல என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் சமீபத்தில் கருத்து கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் இதுபற்றி விசாரணை நடத்த டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு தற்போது தயக்கம் காட்டி வருகிறது. அருந்ததிராயை கைது செய்தால் அதனால் காஷ்மீரில் பிரச்சினைகள் உருவாகலாம். நாட்டிலேயும் எதிர்ப்புகள் கிளம்பலாம்.
அமெரிக்க அதிபர் ஒபாமா 6-ந்தேதி இந்தியா வருகிறார். இந்த நேரத்தில் நாட்டில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. எனவேதான் அருந்ததிராயை கைது செய்வதில் தயக்கம் காட்டி வருகிறது.
அருந்ததிராய் உலகம் முழுவதும் தெரிந்த எழுத்தாளர். சமூக ஆர்வலர். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். அப்படிப்பட்டவரை அவர் கூறிய கருத்துக்காக கைது செய்தால் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இந்தியா இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். இதனாலும் மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் காஷ்மீர் இந்திய பகுதி அல்ல என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதற்காக அவர்களை இதுவரை கைது செய்யவில்லை. அருந்ததிராயை மட்டும் கைது செய்தால் இது வேறு மாதிரி திசை திரும்பி விடக்கூடாது என்றும் நினைக்கின்றனர்.

அஜ்மீரில் வெடிக்காத குண்டு RSS-ன் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு காட்டியது!

அஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டின் மூலம் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நடத்திய புலனாய்வில்தான் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பங்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆனால், அதற்கு முன்பே மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்காரேயின் புலனாய்வு அறிக்கையில் இக்குற்றவாளிகளைக் குறித்து குறிப்பு வழங்கப்பட்டிருந்தது.

2007 ஆம் ஆண்டு நோன்பு திறப்பதற்கு 2 நிமிடங்கள் மீதமிருக்கும் வேளையில்தான் அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டு 15 பேருக்கு காயமேற்பட்டது.

இரண்டு வெடிக்குண்டுகள் வைத்திருந்த பொழுதிலும் ஒரு குண்டுதான் வெடித்தது. முதல் குண்டு வெடித்தவுடன் பொதுமக்கள் பதட்டத்துடன் அங்குமிங்கும் ஓடும்வேளையில் இரண்டாவது குண்டுவெடிப்பதற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது குண்டு வெடிக்கவில்லை. வெடித்த மற்றும் வெடிக்காத குண்டுகளுக்கு ட்ரிகராக பயன்படுத்திய சிம்கார்டுகளை சுற்றித்தான் புலனாய்வு நடந்தது.

2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இதே ரீதியில்தான் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிக்காத குண்டுடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் ஃபோனின் ஸ்க்ரீன்ஸேவரில் 'வந்தே மாதரம்' என்று எழுதப்பட்டிருந்ததாக ஃபாரன்சிக் பரிசோதனையில் தெளிவானது.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி ஜார்கண்ட்-பீகார் ரேஞ்சில் வைத்து ஆக்டிவேட் செய்யப்பட்டதுதான் இந்த ஏர்டெல் சிம்கார்டு என்பது விசாரணையில் தெளிவானது.

மொபைல் கேர் என்ற ஜார்கண்ட் மாநிலத்திலிலுள்ள கடையிலிருந்து வெடித்த குண்டின் சிம்கார்டு வாங்கப்பட்டுள்ளது. அந்த சிம்கார்டை வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ். வெடிக்காத குண்டின் சிம்கார்டு மேற்கு வங்காளத்தில் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வோடாஃபோன் சிம்கார்டை பாபுலால் யாதவின் மகன் மனோகர் யாதவின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பெயர்களெல்லாம் போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிம்கார்டுகளை வாங்குவதற்கு 28289892 என்ற மேற்குவங்காள ஓட்டுநர் உரிம நகலும் ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி இவ்வகையில் 11 சிம்கார்டுகள் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சிம்கார்டுகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணை யோகாக் குறித்து பத்திரிகையில் எழுதிவரும் கரக்நாத் என்பவரை நோக்கிச் சென்றது. ஆனால், ஆவணங்கள் போலி என்பது தெளிவானது. இந்த போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 11 சிம் கார்டுகளில் 2 ஐ பயன்படுத்தித்தான் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது தெரியவந்தவுடன் விசாரணை சரியான திசையை நோக்கி பயணிப்பதாக உணர முடிந்தது.

ஜாம்தாரா, மிஹிஜாம் ஆகிய இடங்களின் முகவரிதான் இந்த போலி அடையாள அட்டைகளில் இடம்பெற்றிருந்தன. ஆர்.எஸ்.எஸ்ஸின் மாவட்ட பிரச்சாரக்கும் இவ்வழக்கின் குற்றவாளியுமான தேவேந்திர குப்தா பணியாற்றிய பகுதிகள் இவ்விடங்கள். இதர சிம்கார்டுகள் மற்றும் மொபைல் ஃபோன்கள் குறித்த விசாரணை மத்தியபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களான சந்திரசேகர் லேவ், ரவீந்திர படிதார், சந்தோஷ் படிதார் ஆகியோரை நோக்கி திரும்பியது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியான டாங்கே அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளுக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள 4 மொபைல் ஃபோன்களை சந்திரசேகரிடம் அளிக்க ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான கோவர்தன் சிங்கிடம் ஒப்படைத்தார். ஆனால், கோவர்தன் ஒரு மொபைல் ஃபோனை தனக்காக எடுத்துவிட்டு மீதமுள்ள 3 மொபைல் ஃபோன்களை தனது உறவினரான விஷ்ணு படிதார் என்பவரிடம் கொடுத்துள்ளார். இவர் மூலமாகத்தான் ரவீந்திர படிதார், சந்தோஷ் படிதார் ஆகியோருக்கு மொபைல் ஃபோன் கிடைக்கிறது. ஒரு ஃபோன் வேலைச் செய்யாததால் அதனை உடைத்துள்ளார் விஷ்ணு படிதார். டாங்கேயின் குண்டுவெடிப்புத் தொடர்பை புலனாய்வுக்குழு கண்டறிந்த பிறகு இதர குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்துள்ளனர்.

செய்தி:தேஜஸ்

காஷ்மீர் விவகாரம் - பாஜகவிற்கு எதிராக ஜெத்மலானி கருத்து !

புது டில்லி:காஷ்மீர் விவகாரம் குறித்து  மூத்த வழக்கறிஞரும், பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினருமான ராம் ஜெத்மலானியின் கருத்தால் பாஜகவிற்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு மூன்று நடுநிலையாளர்களை நியமித்துள்ளது. அந்த உறுப்பினர்களில் ஒருவரான திலீப் பட்கோன்கார், பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாகிஸ்தானின பங்கும் இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  பாஜகவின் இக்கருத்திற்கு எதிராக பேசிய ராம் ஜெத்மலானி, திலீப் கூறியது சரியே என்றும், நிரந்தர அமைதிக்கு பாகிஸ்தானின் பங்கும் அவசியம் என்பதை 1972 ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் வகை செய்கிறது என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாஜக பேச்சாளர், ராம் ஜெத்மலானி கூறியிருப்பது அவரின் சொந்த கருத்தும் என்றும், கட்சிக்கும் அந்த கருத்துகும் சம்மதம் இல்லை என்றார். எனினும் மூத்த தலைவர் ஒருவரே கட்சிக்கு எதிராக முக்கியமாக விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளது தேசிய அளவில் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் முன்னாள் வெளியுறவு அமைச்சருக்குத் தூக்கு!

சதாம் ஹுசைன் ஈராக்கை ஆட்சி செய்த காலத்தில் ஈராக்கின் வெளியுறவு அமைச்சராகவும், ஈராக்கின் துணைப் பிரதமராகவும் பதவி வகித்து வந்த தாரிக் அஜீசுக்கு ஈராக்கிய நீதிமன்றம் ஒன்று தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சதாம் ஹுசைன் மேற்கத்திய நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கு தாரிக் அஜீஸ் மிகவும் உதவியாக இருந்தார். சதாம் ஹுசைன் அமைச்சரவையிலும், அவருக்கு மிக நெருங்கிய வட்டத்திலும் இருந்த முஸ்லிமல்லாதவர் இவர் ஒருவரே.

ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பின், 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கப் படையினரிடம் தாரிக் அஜீஸ் சரண் அடைந்தார். மத அடிப்படையிலான அமைப்புகளின் மீது கொடும் அடக்குமுறையைப் பயன்படுத்தியதாக அவர் மீது நடந்த விசாரணை முடிவிலேயே தூக்கு வழங்கப்பட்டு உள்ளது. வேறொரு வழக்கில் சென்ற ஆண்டில் 42 ஈராக்கிய வணிகர்களைக் கொன்ற வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தது.

தமிழைப் பாதுகாக்கும் காவல் நிலையங்கள் !

கோவை, திருப்பூர் ஆகிய மாநகரங்களை உள்ளடக்கிய தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் காவல்துறை பொது ஆய்வுத் தலைவராக (ஐ.ஜி) சிவனாண்டி பதவி வகித்து வருகிறார். இவர் தம் அதிகார எல்லைக்குட்பட்ட காவல்துறையினருக்கு "கூடுமானவரை பிறமொழி தவிர்த்து அழகிய தமிழிலேயே பேசுங்கள்" என்று பரிந்துரை செய்துள்ளார்.


தன்னுடைய அதிகாரியின் வழியில் செல்ல நினைக்கும் திருப்பூர் துணண கண்காணிப்பாளர் (எஸ்.பி) அருணும் அதையே வேண்டுகோளாய்ச் சொல்லிவைக்க, கொங்குமண்டல காவல் நிலையங்களில் தமிழ் மணக்கிறது. இதைத் தொடர்ந்து, இங்கு கட்டுப்பாட்டு அறை முதல் காவல்துறை, சிறைத்துறை வரை நல்ல தமிழில் பேச்சு நடக்கிறது. இதனால் நேற்றுவரை கோலோச்சிய ஆங்கிலம் இன்று கட்டுப்பட்டு கிடக்கிறது.
90 விழுக்காடு ஆங்கிலச் சொற்களே ஓங்கிநின்ற ஒரு துறையில் இன்று ".......காவல் நிலையம், தொடர்பு கொள்ளுங்கள்... கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசுகிறோம்.... கண்காணிப்பாளர் உத்தரவு, துணை கண்காணிப்பாளர் அழைக்கிறார். அலைபேசியில், ஆய்வாளரை தொடர்பு கொள்ளுங்கள்; விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டீர்களா, இத்தகவலை உடனடியாக தங்கள் உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது,' என்பது போன்ற உரையாடல்களில் தமிழ் மீட்டெடுக்கப்படுகிறது.
இதுபற்றி குறிப்பிடுகையில்
"தூய தமிழில் பேசுவது இனிமையாக உள்ளது; ஒருவர் தூய தமிழில் பேசும்போது, எதிரில் பதில் அளிப்பவரும் எளிதில் தூய தமிழுக்கு மாறி விடுகிறார். ஆங்கிலத்தில் மிக பரிச்சயமான வார்த்தைகளை, தமிழில் பேசுவது சிரமம் என்றாலும், நாளடைவில் இது பழக்கமாகி விடும்,'  என்கின்றனர் சில காவல் அதிகாரிகள்.
தூய தமிழில் பேசுவதை உத்தரவாக இல்லாமல், இயன்றவரை பேச முயற்சியுங்கள் என்று மட்டுமே சொன்னதாக து.க. அருண் கூறியுள்ளார்.

அருந்ததி ராய் மீது வழக்குப் போட மத்திய உள்துறை அனுமதி!

டெல்லியில் நடந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாகக் கூறி பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கெனவே இந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாக ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் அண்மையில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்டு ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசப்பட்டதாக கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.