ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 17:21 |
அமலாக்கப்பிரிவு அமுக்க நினைக்கும் துபாய் ஜாம்பவான்! கடந்த இதழில், டெல்லியில் இருந்து சென்னைக்கு ரகசிய விசிட் வந்துள்ள வருவாய் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டீம் பற்றி சொல்லி இருந்தோம்! சென்னை சிட்டி சென்டர், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரமாண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஏரியாக்களுக்கு அவர்கள் திடீர் விசிட் அடித்தனர். அங்கெல்லாம் அவர்கள் ஏன் சென்றார்கள் என்கிற விவரங்கள் இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல்வேறு ஊழல் அத்தியாயங்களைப் புரட்டி வரும் சி.பி.ஐ. மற்றும் ரெவின்யூ இன்டலிஜென்ஸ் இயக்குநரகம் மற்றும் வருவாய் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வெளிநாடு வாழ் இந்தியத் தொழில் அதிபர் ஒருவரை விரைவில் விசாரணைக்கு அழைக்க இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதற்கு முன்பாக, அவருக்கு சென்னையில் உள்ள அசையா சொத்துகள் மற்றும் முக்கியமான நண்பர்கள் யார் என்பது போன்ற தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிகிறது. அந்தப் பிரபலத் தொழிலதிபரின் பெயர், சையத் சலாவுதீன். 68 வயதுக்காரர். துபாயில் வசிக்கும் இவரின் பூர்வீகம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஊரான கீழக்கரை. இவர்பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. ''துபாயைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் இ.டி.ஏ. அஸ்கான் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்தான் இந்த சலாவுதீன். இந்தியா, துபாய், சவூதி அரேபியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் உலக அளவில் சுமார் 20 நாடுகளில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் குழுமம் அது. ரியல் எஸ்டேட், பல அடுக்குக் குடியிருப்புகள் கட்டுதல், கப்பல் போக்குவரத்து, ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், பூமிக்கு கீழே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதில் மின் இயந்திரவியல் பயன்பாடு எனப் பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் நிறுவனங்கள் அந்தக் குழுமத்தில் உள்ளன. இப்படி 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சலாவுதீனின் கண் அசைவில் செயல்படுகின்றன. 25 ஆயிரம் கோடி அளவில் பணப்புழக்கம் உள்ளதாகச் சொல்லப்படும் நிறுவனங்கள் அவை. 60 ஆயிரம் தொழிலாளர்கள் இவற்றில் பணிபுரிகிறார்கள்!'' என்று தமிழக தொழில் வட்டாரங்களில் தெரிவிக் கின்றனர். ''பிரபல தொழிலதிபரான சலாவுதீனுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும் என்று ஐயப்படுகிறீர்கள்?'' என்று டெல்லியில் உள்ள வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு டெண்டர் விடப்படுவதற்கு முன்பு, இங்கே குறைவான விலைக்கு வாங்கி, வெளிநாடு கம்பெனிக்குக் கூடுதல் விலைக்கு விற்க சிலர் திட்டம் போட்டனர். அந்த வகையில், 6000 கோடி அளவில் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆதாரங்கள் எங்களுக்குச் சிக்கியுள்ளன. இதில் தொடர்புடையவர்களைக் கண்காணித்த போது அவர்கள் வசமிருந்து கிடைத்த சில தகவல்கள், சலாவுதீனின் நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்க எங்களைத் தூண் டின. மேலும் விசாரணையில், 'மும்பையில் நரிமன் பாயின்ட்’ ஏரியாவில் மிகப் பெரிய கட்டடத்தின் மாடியில் ஒரு நிறுவனத்தை திடீரென ஆரம்பித்துள்ளனர். இதே நிறுவனத்தை ஏனோ திடீரென்று ஸ்வான் டெலிகாம் என்று பெயர் மாற்றம் செய்து, அதன் பெயரில் சுமார் 1500 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை டெண்டரில் எடுத்தனர். இந்த கம்பெனிக்கு வங்கி கேரன்டி கொடுத்தது, துபாயில் இயங்கும் கப்பல் போக்குவரத்து கம்பெனி ஒன்று என்று தகவல் கிடைத்தது. மிகக் குறுகிய காலத்தில், ஸ்வான் கம்பெனி பெற்ற அலைவரிசை ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை எடிசலாட் என்கிற துபாய் நாட்டு டெலிகாம் கம்பெனிக்கு விற்றுள்ளனர். இதில்தான் 4500 ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் பார்த்துள்ளனர். 'மும்பையில் இயங்கிய கம்பெனியின் பங்குதாரர்கள் யார்? அவர்களுக்கும் சலாவுதீன் தொடர்பான சிலருக்கும் ஏதாவது பழக்க வழக்கம் உண்டா? துபாயில் உள்ள கப்பல் கம்பெனி யாருடையது?’ இப்படியான பல கேள்விகளுக்குப் பதில் தேடி வருகிறோம். இந்த கம்பெனி இருந்த அதே கட்டடத்தில் தமிழகப் பிரமுகர்கள் சிலர் அங்கம் வகிக்கும் இரண்டு கம்பெனிகள் உள்ளன. அதைப் பற்றியும் விசாரித்து வருகிறோம்!'' என்று விளக்கமாகச் சொன்னார் அந்த உயர் அதிகாரி. தொழிலதிபர் சலாவுதீனின் பின்னணி பற்றி தமிழகத் தொழிலதிபர்கள் சிலரிடம் கேட்டபோது, 2007-ம் ஆண்டுத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இடம்பெற்று உள்ள புகைப்படத்தைச் சுட்டிக் காட்டினார்கள். தொடர்ந்து, ''இது, தொழிலதிபர் சலாவுதீனின் கம்பெனியும் டிட்கோவும் கூட்டாக சேர்ந்து 3,750 கோடி மதிப்பீட்டில் டவுன்ஷிப் ஒன்றை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியுடன் கையப்பம் இட்டபோது எடுத்த படம்! இதே போலவே, தமிழக அரசு கொண்டுவந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம், சென்னைஅண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டடம்., இரண்டின் பின்னணியிலும் சலாவுதீன் தொடர்பானவர்களின் பங்கு உண்டு. மெட்ரோ ரயில் திட்டத்தில் பூமிக்குக் கீழே பாதை அமைக்கப்படும்போது, முக்கியப்பணிகளுக்கான கான்ட்ராக்ட்டை யாருக்கு அளிக்கப் போகிறார்கள் என்பதை யும் கூர்ந்து கவனித்து வருகிறோம்!'' என்கிறார்கள். ''சலாவுதீன் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவர். இந்திய அளவில் காங்கிரஸ், மாநில அளவில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டுபவர். பிரபல தொழிலதிபரான பி.எஸ்.அப்துர் ரஹ்மான் இவரை, துபாய்க்கு அழைத்துப்போனார். அங்கே தனது பிசினஸ் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். கிடைத்த வாய்ப்புகளை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அதிவேகமாக வளர்ந்து, அந்த கம்பெனிகளின் உச்ச பதவி வரை வளர்ந்தார். அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து ஏழை-எளிய வீட்டு இளைஞர்களைத் துபாய்க்கு அழைத்து வேலை கொடுத்து ஊக்குவிக்கவும் செய்தார். இ.டி.ஏ. என்ற ஆங்கில வார்த்தையை 'எங்கும் தமிழ் ஆட்கள்' என்று விரிவாக்கம் செய்கிற அளவுக்கு தமிழர்களை பல மட்டத்துக்குக் கொண்டு போனது இந்த நிறுவனம். இவரது கப்பல் கம்பெனிக்கும் தமிழக அரசியல் தலைவர்களின் குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாகக்கூட பேச்சுகள் உண்டு. 2000-ம் வாக்கில் இந்தியாவில் தனது பிசினஸை பிரமாண்டமாக விரிவாக்கினார். தகவல் தொழில்நுட்பத் துறை கிடுகிடுவென வளர்ச்சி அடைந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, டெல்லி, சென்னை, பெங்களூரு நகரங்களில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் துறையில் முழு வீச்சில் கால் பதித்தார். துபாய்க்கும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில முக்கிய அரசியல் வி.ஐ.பி-களுக்கும் ஒரு பாலமாகவே இவரது நிறுவனங்கள் உதவுவதால், இந்த நிறுவனங்களின் வளர்ச்சியும் தங்கு தடையில்லாமல் உள்ளது!'' என்று சொல்லி முடித்தனர். இதற்கிடையே, 'தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் மற்றும் பல்துறை வி.ஐ.பி-க்கள் யார் யார் சமீப காலத்தில் அடிக்கடி துபாய் சென்று வந்தார்கள்? அங்கே யாரையெல்லாம் சந்தித்தார்கள்?’ என்கிற உள் விஷயங்களை எல்லாம் மொட்டை பெட்டிஷன்களாகத் தட்டிவிடத் தொடங்கி உள்ளார்களாம் சிலர். அன்று ஜெ. சொன்னது! கடந்த ஜூலை 13-ம் தேதியன்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, ''ஸ்டார் இன்ஷூரன்ஸ் என்கிற நிறுவனம், துபாயை தலைமையிடமாகக் கொண்ட, இ.டி.எ. ஸ்டார் குரூப் என்ற மிகப் பெரிய, சர்வதேச நிறுவனத்தைச் சார்ந்ததாகும். இதன் தலைமையிடம்தான் துபாய். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான், இதை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தஇ.டி.எ. குழுமம்தான், 700 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலக வளாகத்தை கட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் குழுமத்தினுடைய மற்றொரு நிறுவனம்தான், ஜெனிக்ஸ் எக்சிம். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ஆ.ராசாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு மேல், இழப்பை ஏற்படுத்திய, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனத்துக்குப் பங்கு உண்டு. 1970-களிலிருந்து, கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புள்ளதுஇ.டி.எ.குழுமம். இந்தக் குழுமத்தைச் சேர்ந்ததுதான், கிரசென்ட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு போட்டியாக, தனது மகன் மு.க. முத்துவை வைத்து, கருணாநிதியால் தயாரிக்கப் பட்ட, 'பிள்ளையோ பிள்ளை' என்ற திரைப்படத்தை, வெளியிட்டது இந்த கிரசென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான்! பல்வேறு திட்டங்களின் கீழ், ஸ்டார் குழுமத்துக்கு கொடுக்கப்படும் அரசுப் பணம், அதாவது உங்கள் பணம், துபாயில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையிடத்துக்குச் செல்கிறது!'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். நன்றி ஜுனியர் விகடன் |
திங்கள், 6 டிசம்பர், 2010
அமலாக்கப்பிரிவு அமுக்க நினைக்கும் துபாய் ஜாம்பவான்!
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரூ. 38 லட்சத்திற்கு வேலை தரும் பேஸ்புக்!
சென்னை: சென்னை ஐஐடியில் தொடங்கியுள்ள கேம்பஸ் இன்டர்வியூவில் பேஸ்புக் நிறுவனம் ரூ. 38 லட்சத்திற்கு வேலை என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐஐடி சென்னையின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் பாபு கூறுகையில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஐஐடி சென்னையில், கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் 1ம் தேதி தொடங்கியுள்ளது.
பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. இருப்பினும் பேஸ்புக் நிறுவனம்தான் அதிகபட்சமாக ரூ. 38 லட்சம் சம்பளத்தை அறிவித்து முன்னணியில் உள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 260 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இது 300ஐத் தாண்டும் என்று தெரிகிறது என்றார்.
இதுகுறித்து ஐஐடி சென்னையின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் பாபு கூறுகையில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஐஐடி சென்னையில், கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் 1ம் தேதி தொடங்கியுள்ளது.
பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. இருப்பினும் பேஸ்புக் நிறுவனம்தான் அதிகபட்சமாக ரூ. 38 லட்சம் சம்பளத்தை அறிவித்து முன்னணியில் உள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 260 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இது 300ஐத் தாண்டும் என்று தெரிகிறது என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)