அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், மனித நேயமக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் கையெழுத்திட்டனர். இதே போல் மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
ம.தி.மு.க. மற்றும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இப்போதும் அதே தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி விருப்பம் தெரிவித்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் கூடுதலாக இடம் பெற்று இருப்பதால் ம.தி.மு.க.விடம் தொகுதிகளை குறைத்துக் கொள்ளும்படி அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தங்களுக்கு 25 தொகுதிகளாவது வேண்டும் என்று ம.தி.மு.க. கூறியது. கடைசியாக 21 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 25 தொகுதிகள் கேட்டது. அக் கட்சிக்கு முதல் கட்டமாக 10 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்தது. இறுதியாக 13 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு பிரித்து கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த தேர்தலில் தி.மு.க. ஒதுக்கீடு செய்த 10 தொகுதிகளை அப்படியே கொடுக்கப்படலாம். ம.தி.மு.க. மற்றும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீட்டை ஜெயலலிதா இறுதி செய்து அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இதற்காக அ.தி.மு.க.வின் அழைப்பை எதிர்பார்த்து ம.தி.மு.க.வும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் காத்து இருக்கின்றன. கடந்த 4-ந் தேதி அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தனர். அன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து பேசிதொகுதிகள் ஒதுக்கீட்டை இறுதி செய்தார்.
இதனால் அன்று ம.தி. மு.க.வுக்கும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் அழைப்பு இல்லை. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அக்கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி ம.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, “அ.தி.மு.க. எங்களுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். தற்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எங்கள் பேச்சு வார்த்தையை தாமதம் அடையச் செய்துள்ளது” என்றார்.