திங்கள், 20 டிசம்பர், 2010

பயங்கரவாதத்தை விரும்பாதவர்கள் இந்திய முஸ்லிம்கள் - விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸ் : இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும்பபில்லை என்றும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாரி ஸ்டாக் இல்லை!

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
 
 
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
 
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
 
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில்01என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
 
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
-- 
கல்வி / அறிவு என்பது ஒரு பெரிய ஆயுதம்..