மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெரிதாக ஒன்றும் இல்லை. பெரிய அளவில் சலுகைகளை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு, சொற்பமாக, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக, பிரத்தியேக சலுகைகள் எதுவும் இல்லை. விவசாய இயந்திரங்கள் மீதான சுங்கவரியும், மிகக் குறைந்த அளவே குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தேவையான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபாவில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் உள்ளதால், பட்ஜெட்டில் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம்.குறிப்பாக, விவசாயிகளைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெறலாம். அதேபோல், மாதச் சம்பளம் பெறுவோரை திருப்திபடுத்தும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பு கணிசமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட், அதற்கு மாறாகவே இருந்தது. பெரிதாக, எந்த விதமான அறிவிப்புகளும், சலுகைகளும் இடம் பெறவில்லை. தனி நபர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு, 1.60 லட்சத்தில் இருந்து, 20 ஆயிரம் மட்டும் உயர்த்தப்பட்டு, 1.80 லட்சம் ரூபாயாகியுள்ளது. அதேபோல், மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பும், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே சலுகை தரப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை குறைத்து, வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்றதில், அரசுக்கு அதிகளவு நிதி சேர உதவியது.புதிதாக, 130 அயிட்டங்கள், கலால்வரி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு விமான கட்டணங்கள் உயரும் வகையில், சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையினர் வளர்ச்சி அடையும் வகையில், குறைந்த வருமானம் உள்ளவர்கள், எளிதாக வீடு வாங்கும் வகையிலும், 15 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு, 1 சதவீத வட்டி மானியம் தரப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தேவையான அறிவிப்புகள் இல்லை. தற்போது, மத்திய கிழக்கில் உள்ள நிலவரத்தில், கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்காது என, உலக நாடுகள் அஞ்சுகின்றன. அதை. எப்படி சமாளிப்பது என்ற வழிவகை பட்ஜெட்டில் கோடிட்டு காட்டப்படவில்லை. வேலைவாய்ப்பு தரும் திட்டங்கள் பற்றி அதிக குறிப்புகள் இல்லை.
மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்காக வழங்கப்படும் மானியம், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களை நேரடியாக சென்று சேரும் வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. அதற்கான தனி அடையாள அட்டை, அதை நிறைவேற்ற உரிய நிர்வாக நடவடிக்கை, அதற்குப் பின் சில மாவட்டங்களில் அமல் செய்து குறைநிறைகளை அறிதல் அதற்குப் பின் அமலாக்கம் என, பல தடைகள் உள்ளன. இதன்மூலம், இவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க மத்திய அரசு மறைமுகமாக முற்பட்டுள்ளது.விவசாயிகளுக்காக புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயக் கடன்களை அதிகளவில் வழங்குவதற்காக, கூடுதலாக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் மீதான சுங்கவரி, 5 சதவீதத்தில் இருந்து, மிகக் குறைந்த அளவாக, 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு, 4.5 சதவீதமாகியுள்ளது.மொத்தத்தில், இந்த பட்ஜெட், யாரையும் திருப்திபடுத்தாத ஏமாற்றம் தரும் பட்ஜெட்.
பரபரப்பு முடியாது: ""சர்வதேச அளவில் இன்னும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், முக்கிய அறிவிப்புகள் இல்லாமல், பொருளாதார சீர்திருத்தத்தை மையமாக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், அவர் கூறியதாவது:உணவுப் பணவீக்கம், 20.2 சதவீதத்தில் இருந்து, 9.3 சதவீதமாக குறைந்தாலும் கூட, நமக்கு அது சவாலாகத்தான் இருக்கிறது. இதை சமாளித்து, பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க முடியுமே தவிர, பரபரப்பான அறிவிப்புகளை வெளியிடுவது இயலாத காரியம்.விலைவாசி உயர்வு பிரச்னையை சமாளிக்க, குறிப்பாக, உணவுப் பொருட்கள் சப்ளையில் உள்ள தடைகளை களைய, முன்னுரிமை கொடுத்துள்ளோம். விவசாய விளை பொருட்கள் சரியான முறையில் சப்ளையாவதற்குரிய வழிவகைகளை மேம்படுத்த வேண்டும்.தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, வருமான வரி வசூலில் பல புரட்சிகர மாறுதல்களை கொண்டு வர முடியும். நிதி பற்றாக்குறை, நடப்பாண்டில், 5.1 சதவீதமாக உள்ளது. அடுத்தாண்டு, 4.6 சதவீதமாக குறையும்.மாநிலங்களின் ஒத்துழைப்புடன், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:* தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போதுள்ள 1.60 லட்சத்தில் ரூபாய் இருந்து, 1.80 லட்சமாக ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டதோடு 80 வயதிற்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.
* கம்பெனிகளுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதத்தில் இருந்து, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சேவை வரி 10 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.
* நேரடி வரிகளில் அளிக்கப்பட்ட சலுகைகள் மூலம், அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 11,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
* கலால்வரி மற்றும் சுங்க வரிகள் மூலம், அரசுக்கு 7,300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
* மத்திய கலால் வரி வீதம் 10 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும். சென்வாட் வரி வீதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
* வழக்கமான ஒரு சதவீத கலால் வரி வரம்பில், 130 அயிட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உணவு, எரிபொருட்கள், விலை மதிப்புமிக்க கற்கள், தங்கம், வெள்ளி நகைகள் போன்றவற்றுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
* விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் மீதான சுங்கவரி. ஐந்து சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் ஓட்டல் வாடகைகள், ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் மதுபானம், சில வகை மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் போன்றவற்றுக்கும் சேவை வரி நீட்டிக்கப்பட்டுள்ளது.
* உள்நாட்டு விமான பயணத்திற்கான சேவை வரி 50 ரூபாய் ஆகவும், சர்வதேச பயணத்திற்கான சேவை வரி 250 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர் வகுப்புகளுக்கு, விமான கட்டணத்தில் 10 சதவீதம் என்ற அளவில் சேவை வரி இருக்கும்.
* வரும் 2011 - 12ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.6 சதவீதம். நடப்பு நிதியாண்டின் மதிப்பீடான 5.1 சதவீதத்தை விட குறைவாகும்.
* நடப்பு நிதியாண்டில் மொத்த செலவு மதிப்பீடு 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய். வரிகள் மூலம் மொத்த வருவாய் 9.3 லட்சம் கோடி ரூபாய்.
* முன்னுரிமை துறைக்கான வீட்டு வசதி கடன் வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், 15 லட்சம் வரை பெறப்படும் வீட்டு வசதி கடன்களுக்கு ஒரு சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி இல்லாத கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்.
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் அளவு 3.75 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* விவசாயிகளுக்கு ஏழு சதவீத வட்டியில் வழங்கப்படும், குறுகிய கால பண்ணை கடன்களுக்கான, வட்டி மானியம் தொடரும்.
* ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனாவிற்கான ஒதுக்கீடு 6,755 கோடி ரூபாயில் இருந்து 7,860 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மழை வளம் நிறைந்த பகுதிகளில், பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க 300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. பண்ணை உற்பத்தி சாகுபடியை மேம்படுத்தவும் மற்றொரு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நபார்டின் மூலதன ஆதாரம் மேம்படுத்தப்படும். குறுகிய கால கடன் நிதிக்காக அந்த அமைப்புக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்.
* ஊரக வீட்டு வசதி நிதியத்திற்கான ஒதுக்கீடு 3 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பெண்கள் சுய உதவிக் குழு மேம்பாட்டு நிதியத்தை உருவாக்க தொகுப்பு நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும்.
* அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் மாதம் .1,500 ரூபாய் லிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* நிரந்தர ஊனம் அடைந்து பணியில் இருந்து விடுவிக்கப்படும் ராணுவத்தினர் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினருக்கு இழப்பீட்டுத் தொகையாக 9 லட்சம் ரூபாய் தரப்படும்.
* தனிநபர் வரி வரம்பு இனி ரூ. 1.80 லட்சம்
* அங்கன்வாடி ஊழியர் சம்பளம் ரூ. 3,000
* குறைகிறது நிதிப்பற்றாக்குறை
* விவசாயிகளுக்கு சலுகையில் கடன் வசதி
* 130 பொருட்களின் மீது, "சென்வாட்' வரி
* கறுப்புப் பணம், பணவீக்கத்தால் கவலை
* விளையாட்டுத் துறைக்கு நிதி குறைப்பு
* சட்ட ஆலோசனைகளுக்கும் சேவை வரி
மொபைல் போன் விலை குறையும்
* சலவை சோப், சோலார் விளக்கு, இறக்குமதி நூல், மொபைல்போன், இங்க்ஜெட் பிரின்டர், மின்உற்பத்தி நிலைய உதிரிபாகங்கள், பிரின்ட்டிங் பிரஸ் சாதனங்கள், சினிமா பிலிம், ஆம்புலன்ஸ், அகர்பத்தி, ஓமியோபதி, சானிடரி நாப்கின் போன்றவற்றின் விலை குறையும்.
* ஸ்டெயின்லஸ் ஸ்டீல், பட்டு, இரும்புத்தாது, ஜிப்சம் ஆகியவற்றிற்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலைகளும் குறையும்.
கட்டணம் அதிகரிப்பு
* நாளொன்றுக்கு, 1,000 ரூபாய் வரை வியாபாரமாகும் ஓட்டல்கள், மது அருந்தும் வசதியுடன் கூடிய, "ஏசி' ரெஸ்டாரன்டுக்கு சேவை வரி விதிக்கப்படும். உள்நாட்டு விமான பயணத்திற்கு, 50 ரூபாயும், வெளிநாட்டு பயணத்திற்கு, 250 ரூபாயும் சேவை வரி விதிக்கப்படும். இதனால், 4,000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
* சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்திற்கு, 20 கோடி ரூபாயும், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் காமர்ஸ் நிறுவனத்திற்கு, 10 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.