அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்பெக்ட்ராம் பிரச்சினையில் மத்திய மந்திரி ஆ. ராசா பதவி விலக வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றாலும் அ.தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக உள்ளது என்று கூறினார். இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-
ஜெயலலிதா அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சுதந்திரம் பெற்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து சில குற்றச்சாட்டுகள் மத்திய அரசு மீது வரும்போது உண்மை இல்லை என்றாலும் கூட சம்பந்தபட்ட மந்திரிகள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி இருக்கிறார்கள்.
அரியலூரில் ரெயில் விபத்து நடந்தபோது சம்பந்தமே இல்லாத டெல்லி மந்திரி லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோன்று பல சம்பவங்களை சொல்லலாம்.இப்போது கூட குற்றம் உண்மையா பொய்யா என விசாரணை முடியும் முன்பே சவான், கல்மாடி, சசிதரூர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் இருக்கும் தி.மு.க.வை சேர்ந்த டெல்லி அமைச்சர் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர் உடனே ராஜினாமா செய்வது தான் சரியாக இருக்கும். காங்கிரசை பார்த்தாவது உடன் இருக்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் வரவேற்பீர்களா? என்ற கேள்விக்கு, கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு சொல்லி விட்டோம். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார்.