ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவ கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது.

மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.

மருத்துவ கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது.

ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் என்றார் அவர்.

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்-தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

சென்னை: நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த நினைவு தினம் நாளை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தூதரகங்கள், மதம் சார்ந்த கட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து ஹோட்டல்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள், விமான நிலையம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகத்தின் இதர முக்கிய நகரங்களான கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் ரோந்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதலே ரயில் நிலயத்திற்கு வரும் பயணிகளையும், அவர்கள் உடைமைகளையும் கடும் சோதனை செய்யப்படுகிறது.

இது குறி்தது ரயில்வே போலீஸ் எஸ்.பி. மவுரியா நிருபர்களிடம் கூறியதாவது,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார், சிறப்பு காவல்படை போலீசார் 2,500 பேரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்.) 1,000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தண்டாவளங்களை கண்காணிக்க 65 மோட்டார் சைக்கிள்களி்ல போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். மேலும், 40 சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 33 ரயில் நிலையங்களி்ல வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்வர்.

இன்றும், நாளையும் ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் வைத்திருபவர்கள் மட்டும் தான் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் பணி புரிபவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே உள்ளே செல்லலாம் என்று அவர் கூறினார்.

தமிழக வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு-ஆர்டிஐ மூலம் அம்பலம்

சென்னை: கர்நாடகத்தில் நடந்திருப்பதைப் போல ஒரு மிகப் பெரிய நில மோசடி தமிழகத்திலும் நடந்திருப்பது ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளது. நிலமற்றவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலம், நீதிபதிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சகட்டுமேனிக்கு அளிக்கப்பட்டுள்ளதை இந்த ஆர்.டி.ஐ. தகவல் அம்பலப்படுத்தியுள்ளது.

அரசு ஒதுக்கீட்டுச் சலுகையைப் பயன்படுத்தி இந்த நில ஒதுக்கீடு நடந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுக் கணக்கு இது. இந்த ஒதுக்கீட்டில் 40 சதவீதம், 2008ம் ஆண்டில் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

தமிழக நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக சொந்தமாக ஒரு வீடோ, நிலமோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வீடோ இல்லாதவர்களுக்கே வீட்டு வசதி வாரியம் நகர்ப்புறங்களில் இடங்களை கொடுப்பதில் முன்னுரிமை தர வேண்டும் என்பது கொள்கையாகவே உள்ளது. இதன் முக்கிய நோக்கமே, சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாதவர்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக ஒதுக்கீடுகள் இருப்பதை ஆர்டிஐ மூலம், அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளார் வி.கோபாலகிருஷ்ணன்.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் ஒதுக்குவதாக இருந்தாலும் கூட அதை வாங்குவோருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ வீட்டு வசதி வாரியத்தின் எல்லைக்குட்பட்ட நகர்ப் பகுதிகளில் சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால் அது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் திருவான்மியூர், முகப்பேர் பகுதிகளில் இந்த அரசு ஒதுக்கீட்டின் கீழ் பெருமளவிலான நிலங்கள் பெரும் பணக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில், மார்க்கெட் மதிப்பை விட 40 முதல் 60 சதவீத அளவுக்கு விலை குறைத்து இடம் அல்லது வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலத்தைப் பெற்றவர்களில் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் அடக்கம். மேலும் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள், முன்னாள் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் இதுபோல முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தஞ்சை வங்கியில்14 கிலோ தங்க நகைகள் திருட்டு!

தஞ்சாவூரை அடுத்த பள்ளியகரம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் வங்கியிலிருந்து சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் பள்ளியகரத்தில் உள்ள கொங்கு வங்கி என்ற அந்தத் தனியார் வங்கியில் இருந்து வெள்ளிக் கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் திருடர்கள் வங்கியில் இருந்த பணத்தை எடுக்கவில்லை என்றும் சில நகைகளை மட்டும் எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளனர் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை காலையில் வங்கிக்கு வந்த ஊழியர்கள் கொடுத்த தகவலை அடுத்து, அந்த வங்கியின் பங்குதாரர்களில் ஒருவரான துரைசாமி என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்
.

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

 ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக அமெரிக்க திருமண வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் 80 விழுக்காட்டினர், விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் புழங்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து வாங்கி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.


அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விவரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து வாங்கிக் கொடுக்கிறார்களாம்


எதிர்காலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை ஏற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் வில்லனாக உருவெடுத்துவிடுகிறதாம்!


விவகாரத்து கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் கொட்டி வைத்துள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணமுடையவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது.


இவ்வாறு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்களில் 66 விழுக்காட்டினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் கூறிவைத்துள்ளதையே காட்டுகின்றனராம்.

ஃபேஸ்புக்கை தொடர்ந்து 'மை ஸ்பேஸ்' தளம் 15 விழுக்காடும், 'ட்விட்டர்' தளம் 5 விழுக்காடும், இதர தளங்கள் 14 விழுக்காடும் வழக்கறிஞருக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம்.



அமெரிக்கா க்தை இதுவென்றால், பிரிட்டனிலோ 20 விழுக்காடு விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.


" இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது - "சாட்" செய்வது - தான்" என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்!


இதற்கு நல்ல உதாரணம் கூறுவதென்றால் சமீபத்தில் பிரபல பாஸ்கட் பால் விளையாட்டு வீரர் டோனி பார்க்கர், தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை அவரது ஃபேஸ்புக் தளம் மூலம் அறிந்து, அதனையே ஆதாரமாக காட்டி விவாகரத்து வாங்கியதைக் கூறலாம் என்கிறார் மார்க்.


அமெரிக்கா, பிரிட்டனில் காணப்படும் நிலை கூடிய விரைவில் நமது நாட்டிலும் ஏற்பட சாத்தியமுள்ளது.


எனவே ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வருபவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. அதுவும் ஒருவகை ஏமாற்றுதான் என்பதால் தங்களது திருமண பார்ட்டனருக்கு விசுவாசமாக இருப்பதே நல்லது.

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா?

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...


பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.


இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.


'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .

இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.


பிறந்த திகதியும் இடமும் :-

இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.


தாயின் கன்னிப் பெயர் :-

பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.


விலாசம் :-

நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.


விடுமுறைகள் :-

உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.


வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-

இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.


முறையற்ற படங்கள் :-

பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.


ஒப்புதல்கள் :-

இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.


தொலைபேசி இலக்கம் :-

உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.


பிள்ளைகளின் பெயர்கள் :-

இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.


பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :-

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.


ஈமானுக்கு சோதனையான காலம் இது.
விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.
நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க
மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.
தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.”  இது அல்லாஹ்வின் வாக்கு. 
பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள். 
இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும்,  அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.  
அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக!  ஆமீன். 
சிந்திப்போம் செயல்படுவோம். 
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்