பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மனுவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கையெழுத்திட்ட தகவல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை சங்பரிவாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. முஸ்லிம்களின் உரிமை கோரிக்கையான பாபரி பள்ளிவாசல் நிலத்தில், பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது. இந்த பணியினை ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி என்ற அமைப்பு முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடக்கப் பணியாக நாடு முழுவதும் கையெழுத்து வேட்டையை அந்த அமைப்பு தொடங்கியது. அந்த கையெழுத்து போடும் வைபவத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் கையெழுத்தை கன்னியாகுமரி திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் கடந்த 22ஆம் தேதி போட்டிருக்கிறார்.
சமிதி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி, ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அவரும் உடனடியாக முதல் கையெழுத்தாக தனது கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் வெளிவந்த செய்தி குறித்து வி.ஹெச்.பி.யின் பொதுச் செயலாளரும் ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி பொறுப்பாளருமான காளியப்பன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேலாயுதம் உள்ளிட்ட சங்பரிவார பிரமுகர்கள் உடனிருந்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சனை கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும், அதனால் ¬யெழுத்திடுகிறேன் என முகம் நிறைந்த சிரிப்புடன் ஹெலன் டேவிட்சன் எம்.பி. புகைப்படத்துக்காக போஸ் கொடுத்திருக்கிறார். ராமர் கோயில் கட்ட சங்பரிவாரின் கொள்கைக்காக மிகுந்த ஈடுபாட்டுடன் திமுக எம்பி கையெழுத்திட்டுள்ள விதம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களை அதிருப்தியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
திமுக எம்.பி.யின் இந்த செயல் நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடியது. தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீட்டு வாய்ப்பு இருக்கும்போது இப்படிப்பட்ட செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக&காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் வாய்ப்பு குறைவு. திருச்சியில் பேசிய சோனியாவும் திமுகவைப் பற்றி எதுவும் கூறவில்லை. தனி அடையாளம் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் போராடி வருகிறது. காங்கிரஸ் தங்களை கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில் பாஜகவோடு கை குலுக்க திட்டமிடுகிறது என்பதை உணர்த்தத்தான் திமுக எம்.பி. கையெழுத்து போட்டாரா என்ற சந்தேகம் தங்களுக்கு உள்ளதாக இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தமுமுக தலைவர் அறிவித்தார்.
தமுமுக தலைவரின் பரபரப்பான பேட்டியினால் மதச்சார்பின்மை பூமியான தமிழகம் விழிப்படைந்தது. திமுக வாரி சுருட்டி எழுந்தது. சங்பரிவாரின் லட்சியத்துக்கு ஆதரவாக திமுக எம்.பி. முதல் கையெழுத்து போட்ட விவகாரம் அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அரசியல் ரீதியிலான நெருக்கடியில் அக்கட்சி சிக்கித் திணருகிறது. விரக்தியின் விளிம்பில் சென்றுள்ள அக்கட்சி தலைமையின் ஆவேசத்தில் மாட்டிக்கொண்ட திமுக எம்.பி. சங்பரிவாரின் முக்கியப் பிரமுகர்களின் தயவினை வேண்டி தஞ்சம் பெறுகிறார். ராமர் கோயிலுக்காக எம்.பி. கையெழுத்திடவில்லை என பாஜகவின் முக்கியப் பிரமுகர் அறிக்கை வெளியிட்டார்.
தங்களின் ஆதரவு எம்.பி. பாதிக்கப்படக்கூடாதே என்ற பதைபதைப்பு காவி முகாமுக்கு வந்தது. சங்பரிவாரம் எப்படி வேண்டுமானாலும் தனது வேடத்தை மாற்றிக்கொள்ளும் என்பதற்கு தற்போதைய எடுத்துக்காட்டு இதுவாகும். தங்களை நல்ல முறையில் உபசரித்து ஆதரவாக செயல்பட்ட ஹெலன் டேவிட்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படாத வகையில் செயல்பட முடிவெடுத்திருக்கிறோம் என காவி முகாம் முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அந்த கையெழுத்து இயக்கம் ராமர் கோயிலுக்காக நடத்தப்பட்டது, அதில் கையெழுத்திட்ட திமுக எம்.பி.யின் செயலை வரவேற்கிறோம் என மாநில பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் போட்டு உடைத்திருக்கிறார். ‘‘எல்லாத்துக்கும் தீர்வு வரணும்ல...’’ என்று கூறிக்கொண்டுதான் எம்.பி. கையெழுத்து போட்டுக் கொடுத்தார் என இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்லன் கூறியிருக்கிறார்.
திமுக தனது கட்சி எம்.பி.யிடம் விளக்க நோட்டீஸ் கேட்டிருக்கிறது, விளக்கெண்ணை கேட்டிருக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தேசிய அளவில் தமிழகத்தின் மதச்சார்ப்பின்மை தத்துவத்துக்கு ஊறு நேரும் வண்ணம் செயல்படும் வண்ணம் தனது கட்சி எம்.பி.க்கு துணிச்சலை திமுக தலைமை கொடுத்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயலும் தீய சக்திகளுக்கு எதிராக குமரி மாவட்ட தமுமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை திமுக தலைமைக்கு உண்டு. நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயத்தில் திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் இருக்கிறார்.