புதன், 2 மார்ச், 2011

தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க குலாம் நபி ஆசாத் வருகிறார்

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் நிலவி வரும் சிக்கலைத் தீர்த்து சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் இன்று இரவு சென்னை வருகிறார். நாளை அவர் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவுள்ளார்.

திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி போட்டு வரும் நிபந்தனைகளுக்கு திமுக உடன்பட மறுத்து விட்டது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி காங்கிரஸுக்கு 66 சீட்கள் வரை தர திமுக தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், ஆட்சியில் பங்கு கேட்கக் கூடாது என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாம்.

இதனால் பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டைநிலவுகிறது. இந்த நிலையி்ல நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு உறுப்பினர்கள் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினர்.

அப்போது இந்தப் பிரச்சினையை தன்னிடம் விட்டு விடுமாறும் மேலிடமே நேரடியாக திமுகவுடன் பேசிக் கொள்ளும் என்று சோனியா கூறியதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தங்கபாலுவும், சோனியா காந்தியே அடுத்த கட்ட முடிவை எடுப்பார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாபம் நபி ஆசாத் இன்று இரவு சென்னை வருகிறார். இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்தும் அவர் நாளை முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது சுமூகத் தீர்வு எட்டப்பட்டு தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நாளையுடன் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

2G ஸ்பெக்ட்ரம் இழப்பில் நாங்கள் செய்தது பிழையே - பாஜக!

2ஜி அலைக்கற்றை  விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. இதன் பிறகு இந்தத் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. அதில் பேசிய பா.ஜ.க வின் அருண் ஜெட்லி, "நாங்கள் செய்த பிழைகளுடன் இன்றைய ஊழலை ஒப்பிடக்கூடாது" என்றார்.
அருண் ஜேட்லி மேலும் விவாதத்தில் கலந்துகொண்டு  பேசும்போது,
"2007, 2008-ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்களால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது கறை படிந்திருக்கிறது. இந்தக் கறையை மறைப்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியுடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிட சிலர் முயற்சிக்கிறார்கள்.  உண்மையில், தற்போதைய தொலைத் தொடர்பு பரவலை எட்டுவதற்கு அடித்தளம் அமைத்ததற்காக பாஜக ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சர்களுக்கு மத்திய அரசு நன்றி தெரிவிக்க வேண்டும்.  மேற்குவங்கம், பிகார், ஒரிசா, வடமேற்கு மாநிலங்களுக்கான தொலைத் தொடர்பு உரிமம் பெறுவதற்கு அப்போது யாரும் முன்வராத காரணத்தினாலேயே வருவாயைப் பங்கிடும் வகையிலான தொலைத்தொடர்புக் கொள்கையைப் பாஜக அரசு கொண்டுவந்தது. 
ஆனால், 2007-ல் இந்த முறையைப் பயன்படுத்தி மோசடி நடந்திருக்கிறது. 41 நிமிடங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன. 2001 விலையில் 2007-ம் ஆண்டில் அலைக்கற்றை  வழங்குவதை டிராய், அப்போதைய நிதித்துறை செயலர் சுப்பா ராவ், நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோர் எதிர்த்திருக்கின்றனர். ஆனால், அந்த எதிர்ப்புகள் புறக்கணிக்கப்பட்டன.  நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் வழங்கியதை, ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியத்துடன் பிரதமர் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவோம் என வாதிடுவது தவறானது." என்று அவர் பேசினார்.

ஓட்டு எண்ணிக்கை தாமதம்: ஓட்டு பதிவு எந்திரத்தில் அழியாமல் இருக்குமா?

தமிழ்நாடு, புதுச்சேரி கேரளாவில் ஏப்ரல் 13-ந் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து மே மாதம் 13-ந்தேதி தான் நடக்கிறது.முன்பெல்லாம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த ஒன்றிரண்டு நாளிலேயே ஓட்டு எண்ணிக்கை முடிந்து விடும் அரசியல் பதட்டம், பரபரப்பும் விரைவில் அடங்கிவிடும்.
 
இப்போது ஒரு மாதம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட இருப்பதால் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பரபரப்பை ஏற்படுத்தும்.இவை எல்லாவற்றையும் விட ஓட்டுப்பதிவு எந்திரத்தை ஒரு மாதம் வரை பத்திரமாக பாதுகாத்து வைக்க முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 
ஒரு மாதத்துக்கு எந்திரங்களை பூட்டி அறைக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இதில் சிறிய குறை ஏற்பட்டாலும் கூட அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உண்டு.ஓட்டு எந்திரத்தில் உள்ள பதிவுகள் ஒரு மாதம் வரை அழியாமல் தாங்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.
 
ஓட்டு ஏந்திரத்தில் உள்ள பேட்டரி மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யக் கூடியதாகும். ஒரு மாதம் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் இழந்து அதனால் ஓட்டு எந்திரத்தில் உள்ள பதிவுகளுக்கு பாதிப்பு வரலாம். அல்லது பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு எந்திரம் சேதம் அடையலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
 
முந்தைய காலங்களை போல ஓட்டு சீட்டு முறை இருந்தால் பெட்டியில் போடப்படும் ஓட்டுகள் அப்படியே கிடக்கும். எத்தனை காலம் ஆனாலும் அதை எண்ணி கொள்ளலாம். ஓட்டு எந்திரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இப்போது ஒரு மாதம் கழித்து எண்ணப்படுவதால் புதிய சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

முன் கூட்டியே தேர்தல்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்

தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் 13-ந் தேதி வரை உள்ளது. எனவே தமிழக சட்ட சபைக்கு மே மாதம் முதல் வாரம் தேர்தல் நடை பெறலாம் என்று தகவல்கள் வெளியானது.   இந்த நிலையில் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. வரும் 19-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.
 
தேர்தல் மே மாதம் தான் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் கட்சியினரை மிரள வைத்துள்ளது. கடந்த தடவை 2006-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி தேர்தல் நடந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 26 நாட்களுக்கு முன்பே தேர்தல் வந்து விட்டது.
 
மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுடன் தேர்தல் நடத்தப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.   தேர்தல் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே நடத்தப்பட உள்ளதால் தமிழக அரசியல் கட்சிகளிடம் நடந்து வரும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் அ.தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக்கட்சிகளும் எவ்வளவு விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கி ரத்தில் பேசி முடித்து விட்டு, வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட முனைந்துள்ளன.
 
இதனால் தமிழக அரசியல் களம் திடீரென விறு விறுப்பு ஆகியுள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய 5 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் 3 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை தி.மு.க. முடித்து விட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள், முஸ்லிம் லீக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
காங்கிரஸ், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய 2 கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன்பாட்டை உறுதி செய்ய வேண்டியதுள்ளது. காங்கிரஸ் கட்சி 90 தொகுதி, ஆட்சியில் பங்கு, குறைந்த பட்ச பொது செயல் திட்டம் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்தது. ஆனால் இதை ஏற்க தி.மு.க. திட்டவட்டமாக மறுத்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 53 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. கடந்த தடவை 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த தடவை 80 தொகுதிகளுக்கு மேல் பெற்று விட வேண்டும் என்பதில் மிக, மிகத் தீவிரமாக உள்ளது.
 
இதனால் தான் இரண்டு தடவை ஐவர் குழு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தேர்தல் முன்னதாகவே வந்து விட்டதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க. வுடனான தொகுதி பங் கீட்டை விரைந்து உறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிவரை கேட்கலாம். தி.மு.க. சம்மதிக்காத பட்சத்தில் 60 தொகுதிகளை யாவது கேட்டுப் பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
 
தி.மு.கழகத்தைப் பொருத்த வரை குறைந்த பட்சம் 135 முதல் 140 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. சட்டசபையில் தனிப் பெரும்பான்மை பலம் பெற இந்த எண்ணிக்கை அளவில் போட்டியிட வேண்டியது அவசியம் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தி.மு.க. விளக்கியுள்ளது. எனவே தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் 53 தொகுதிகளை காங்கிரஸ் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
 
தமிழக அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு சோனியா உள்பட காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் அனைவரும் தங்கள் பிடிவாதத்தில் இருந்தும், சற்று இறங்கிவந்துள்ளனர். இனியும் கூடுதல் தொகுதி கேட்டு, ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன் வைப்பது பலன் தராது என்பதை உணர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே விரைவில் சோனியா அல்லது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பேசி தொகுதி பங்கீடு உடன் பாட்டை சுமூகமாக்குவார்கள் என்று ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு தலைவர் கூறினார்.
 
கொங்கு மண்டலத்தில் 5 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு செய்வதில் தீவிரமாகி உள்ளது. அந்த கட்சியினர் தி.மு.க.விடம் 7 தொகுதிகள் கேட்கிறார்கள். ஆனால் தி.மு.க. தரப்பில் 5 தொகுதிகள் மட்டும் கொ.மு.க.வுக்கு கொடுக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யும் தொகுதியை பொறுத்தே காங்கிரசுக்கான இட விபரங்களை இறுதிக்கு வரும். தற்போதைய நிலவரப்படி தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.-135, காங்கிரஸ்-53, பா.ம.க.-31, விடுதலைச் சிறுத்தைகள்-10, கொங்கு நாடு முன்னேனற்றக் கழகம் -5, முஸ்லிம்லீக்-3 என்ற எண்ணிக்கையில் களம் இறங்கும் என்று கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாகி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி, தேசிய லீக், பார்வர்டு பிளாக், குடியரசு கட்சி, விவசாயிகள் கட்சி உள்பட 14 கட்சிகள் அங்கும் வகிக்கின்றன.
 
இந்த மெகா கூட்டணியில் இதுவரை 4 கட்சிகளுடன் தான் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. மனித நேய மக்கள் கட்சி-3, புதிய தமிழகம்-2, குடியரசு கட்சி-1, மூவேந்தர் முன்னணி-1 என்ற ரீதியில் அ.தி.மு.க.விடம் தொகுதிகளை பெற்றுள்ளன. மற்றக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள்.
 
நேற்று அவர்கள் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தினார்கள்.   கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சுமுக உடன்பாடு வந்து விட்டது. ஓரிரு நாளில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும். மேலும் கூட்டணியில் உள்ள சிறு, சிறு கட்சிகளுக்கும் அ.தி.மு.க. கொடுக்கும் தொகுதிகள் விபரமும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமை கட்சியாகத் திகழும் ம.தி.மு.க. வுக்கு இந்த தடவை அ.தி.மு.க. குறைந்த தொகுதிகளையே கொடுக்கும் என்று பேச்சு நிலவுகிறது.
 
12 முதல் 15 தொகுதிகள் வரை ம.தி.மு.க. வுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ளதாக இருக்கும் என்று உறுதி கூறப்பட்டு இருப்பதால் ம.தி.மு.க., அந்த தொகுதிகளை ஏற்க முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   அ.தி.மு.க. அணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுடன் வருகிற வெள்ளிக்கிழமை தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை அ.தி. மு.க. வெளியிடும் என்று தெரியவந்துள்ளது. 4-ந் தேதி பூரண அமாவாசை என்பதால், அன்று தொகுதி பங்கீட்டை வெளியிட அ.தி. மு.க. ஆர்வமாக உள்ளது.
 
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று தே.மு. தி.க. ஏற்கனவே கூறி விட்டது. ஆனால் சற்று கூடுதலாக தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்ததும் வேட்பாளர் தேர்வு சூடு பிடித்து விடும்.

ஓட்டு எண்ணிக்கையை 1 மாதம் தள்ளி வைப்பதா? தலைவர்கள் கடும் கண்டனம்

சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து ஓட்டு எண்ணிக்கையை வைப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன்:-
 
நான்கு அல்லது ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்தபின் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. கடந்த 6 தடவை இது கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இது ஒன்றும் புதுசு அல்ல. பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறோம். தேர்தல் நடக்கும்போது முறைகேடு நடக்காமல் தடுப்பதில் தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்:-
 
ஒரே நேரத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஒரே தேதியில் ஓட்டு எண்ணிக்கை அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்:-
 
தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதியை தள்ளி வைக்க அவசியமில்லை. தேர்தலை வேண்டுமானால் தள்ளி வைத்திருக்கலாம்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:- மற்ற மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை தள்ளி வைப்பது சரியல்ல. தேர்தலை முன் கூட்டியே வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. மார்ச் 19-ந்தேதி மனு தாக்கல் தொடங்குவது என்பது அரசியல் கட்சிகள் சற்றும் எதிர்பார்க்காதவை. மே 13-ந்தேதி ஆட்சி முடிவை கணக்கிட்டு ஓட்டு எண்ணிக்கையை தாமதமாக முடிவு செய்திருக்கிறார்கள். தேர்தலை மே மாதத்தில் நடத்தி இருக்கலாம்.

ஜெயலலிதா மட்டுமே முதல்வராக்க தமிழக மக்கள் முடிவு

கருணாநிதி குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடியை தொலைத் தொடர்பு இலாக்காவிற்கு நட்டத்தை ஏற்படுத்தி தன்னையும், கருனாநிதி, ராசாத்தி அம்மாள், கனிமொழி குடும்...பத்தை வளப்படுத்திவிட்டு தவறே நடக்கவில்லை பட்டி மன்றம் நடத்துவது எந்தவிதத்திலும் நியாயமோ தெரியவில்லை இந்த பணத்தை கொண்டுதான் தமிழக சட்ட மன்ற தேர்தலை கருணாநிதி சந்திக்க உள்ளார் என பரவலான குற்ற சாட்டு உள்ளது. இந்த லட்சணத்தில் தமிழகத்தில் எந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. என்று என்னிபார்த்தால் எல்லாமே கருணாநிதி குடும்பத்தாரின் வளத்திற்கு தான் சென்றடைந்ததே தவிர எந்த ஒரு திட்டத்தாலும் ஏழை மக்களுக்கு பயன் இல்லை ரேசனில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுகிறேன் என மார்த்தட்டும் கருனாநிதி இதனால் ஏழை மக்கள் பயன் அடைந்தார்களா இல்லையே? கட்சிக்காரன் தான் பயன் அடைகிறான் ரேசன் அரிசியை 75 சதவீதம் திமுகவினர் மற்றும் அரிசி கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு அன்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகத்திற்கு லாரி லாரியாக கடத்தப்படுகிறது இதனால் இழப்பு ஏழை மக்களுக்கு தான், லாபம் ஆட்சிக்காரர்களுக்கும், கடத்தல் காரர்களுக்கும் தான். இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு, அடுப்பும் கட்சிக்காரார்களுக்கும் தான். வழங்கப்படுகிறது ஆட்சியை மக்களுக்காக கருணாநிதி நடத்துகிறாரா என்றால் இல்லை இல்லவே இல்லை தன்னுடைய குடும்பத்திற்காக தான் நடத்துகிறார்.

வெளி மார்க்கெட்டில் அரிசி ரூ45 கிலோவிற்கு விலை. காய்கறிகளும் விலையை எண்ணிப்பார்த்தால் இனி காய்கறியை வாங்காமல் கிழங்குகளை சமைத்து பசியை ஆற்றி கொள்ள வேண்டியது தான். மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் குறித்து மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுர், திவண்ணாமலை, கடலுர், விழுப்புரம், தர்மபுரி, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, அரியலுர், பெரம்பலுர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், ஆகிய இடங்களில் உயர்மட்ட, நடுத்தர மற்றும் ஏழை மக்களை சந்தித்து கருத்து கேட்ட போது ஜெயலலிதாதான் தமிழக முதல்வராக வரவேண்டும் அப்போதுதான் ரவுடிகள் அட்டகாசம் ஒழியும் பெண்கள் தைரியமாக நடமாடுவார்கள். கட்டபஞ்சாயத்து என்ற பேச்சே இருக்காது. கந்து வட்டி, ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி கொடுமை ஒழியும் பெண்கள் தைரியமாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கலாம் வரதட்சணை கொடுமை ஒழியும் அநாதைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் ஜெயலலிதாவே அனைத்து இந்து கோவில்களிலும் அன்னதான திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான் ஒரு பெண்ணாக இருந்து தன்னந்தனியே எவருக்கும் பயப்படாமல் நல்லதை மக்களுக்கு செய்து கெட்டதை முற்றிலுமாக ஒழித்தவர் ஜெயலலிதாதான். இவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஜெயலலிதாமட்டுமே. அவர் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சமா நஞ்சமா? மக்களுக்கான திட்டங்கள் முற்றிலுமாக போய்சேர தைரியமிக்க பெண்மணி, துணிச்சல் மிக்க பெண்மணி நேர்மையான பெண்மணி ஜெயலலிதா மட்டுமே அதற்காக தான் --------வருகிற தேர்தலில் முதல்வராக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.

                                                                                      ........நன்றி கார்த்திக்கேய சேர்வை........

திட்டமிட்ட ஒதுக்கீடு!

நாடாளுமன்றப் பொதுக் கணக்குக்குழு கடந்தவாரம் கொஞ்சம் கோபமாகவே இருந்தது. இதற்குக் காரணம், தீவிரப்படுத்தப்பட்ட பாசனப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதுதான்.  பல திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தொடங்கி, ஒப்பந்ததாரர்களுக்கு விதிகளை மீறி அளித்த பணம், சலுகை எல்லாமும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதால், இந்தத் திட்டங்களின் உண்மைத்தன்மை என்ன, எதுவரையிலும் நடைபெற்று முடிந்துள்ளது என்கிற முழுவிவரங்களை பொதுக் கணக்குக் குழுவிடம் 6 மாதத்துக்குள் அளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள்.  2008-ம் ஆண்டில் 253 சிறிய மற்றும் பெரிய பாசனத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. இதில் 100 திட்டங்கள் முடிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. இப்படிச் சொல்லப்பட்ட திட்டங்களில் 12 பாசனத் திட்டங்கள் செய்து முடிக்கப்படாமலேயே, நடைமுறைக்கு வராமலேயே இருப்பதைக் கண்ட பொதுக் கணக்குக் குழு, இவ்வளவு பணம் செலவழித்து என்ன லாபம் என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தத் திட்டங்களை மத்திய அரசின் நீர் ஆதார அமைச்சகம் ஏன் கண்காணிக்கவில்லை என்கிற கேள்வியைக் கேட்டிருக்கிறது.  தீவிரப்படுத்தப்பட்ட பாசனப் பயன்பாட்டுத் திட்டம் 1996-97-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பாசனப் பரப்பை அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் பாசன வாய்க்கால் அமைக்கவும், நதிகளை இணைத்து அல்லது அணைகள் எழுப்பி தண்ணீரை நெடுந்தொலைவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விவசாயிகளுக்குப் பாசனம் தருவதுமே இதன் நோக்கம். அத்திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப மத்திய அரசின் நிதியுதவி அளவும் 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை இருக்கும்.  ஆனால், இத்திட்டத்தின்கீழ் நிதி பெற்ற மாநிலங்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை. பத்திரிகையாளர்களிடம் இதுபற்றிக் குறிப்பிடும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ""இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளால் மக்கள் பணம் வீணாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வாய்க்கால் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் கிடையாது. ஏனென்றால், தலைமடைப் பிரிவில் பணி முடிக்கப்படவே இல்லை. அதனால், இந்த வாய்க்காலில் தண்ணீருக்கு வழியில்லை. ஆனால், திட்டம் முடிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கி இருக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்குத் துளியும்கூட நன்மை ஏற்படவில்லை''.  இந்த நிலை குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், மணிப்பூர், கேரளம் ஆகிய மாநிலங்களில் காணப்பட்டாலும், பொதுக் கணக்குக் குழுவுக்குப் பெரும் கோபம் விளைவித்த மாநிலங்கள் இரண்டுதான். ஒன்று ஆந்திரம்; அடுத்தது கர்நாடகம்.  ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, "ஜலயக்ஞம்' என்கிற திட்டத்தைத் தொடங்கினார். பாசனம் இல்லாத பகுதியே இல்லை என்று ஆந்திர மாநிலத்தை மாற்றிவிடுவோம் என்பதுதான் அவரது தேர்தல் சபதமாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால், அவரால் இத்திட்டத்துக்கு ரூ. 2,000 கோடி வரை நிதி பெறவும் முடிந்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டங்களுக்கான பணிகள் குறித்து ஆய்வுகள் நடத்தியபோது, பொதுக் கணக்குக் குழுவினருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.  பல பாசனத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களிடம் மறுமதிப்பீடு பெற்று அதற்கான தொகையை அளித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் சிமென்ட், இரும்புக் கம்பி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களுக்கும் சுங்கவரி கிடையாது என்கிற சலுகை உள்ளதால், இத்திட்டத்துக்கு வாங்கப்பட்ட மூலப்பொருள்கள் வேறு வேலைக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் பழுது அல்லது குறை ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் பொறுப்பேற்க வேண்டும் என்கிற நிபந்தனையை மாநில அரசு வலியுறுத்தவேயில்லை. திட்டம் நிறைவேறும் முன்பாகவே பணம் வழங்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆந்திர மாநிலத்தில் கல்வாகுர்தி பாசனத் திட்டத்தில் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் அடைந்த பலன் ரூ.160 கோடி வரை இருக்கும் என்று பொதுக் கணக்குக் குழு அனுமானித்துள்ளது.  இதுபோன்று கர்நாடக மாநிலத்தில் மேல் கிருஷ்ணா பாசனத் திட்டம் நிலை-1, நிலை -2 உள்பட நான்கு திட்டங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதை, பொதுக் கணக்குத் தணிக்கைத் துறையே எடுத்துக் காட்டிவிட்டது.  இந்தத் திட்டங்களை மேற்பார்வையிடும் பொதுப்பணித் துறை, நீர் ஆதார அமைப்புகளின் உயர் அதிகாரிகளை, பொதுக் கணக்குக் குழு அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளது. "உங்கள் மீது ஏன் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது?' என்று கேட்டதாகவும்கூடச் சொல்லப்படுகிறது.  இந்த முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணம் மாநில அரசுகள் தரும் திட்டங்களின் சாத்தியத் தன்மை குறித்து மத்திய அதிகாரிகள் முறையாக மறுஆய்வு செய்யாமல் இருப்பதும்தான். ஆய்வுக்காக வரும் உயர் அதிகாரிகளை எப்படி மனம்மகிழச் செய்வது என்பதை மாநிலங்கள் தெரிந்துவைத்திருக்கின்றன.  ஓர் ஆறுதல். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பெற்ற நிதியுதவி மிகமிகச் சொற்பம். 2007-ம் ஆண்டில்தான் இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறும் முயற்சியைத் தமிழக அரசு மேற்கொண்டது. காவிரி-குந்தாறு இணைப்புத் திட்டம் ரூ.189 கோடி செலவிலும், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் ரூ.369 கோடியிலும் நிறைவேற்றக்கோரி கருத்துரு அளித்தது. 2010-ம் ஆண்டு ஆளுநர் உரையில்கூட, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிதி கிடைக்கவில்லை.  மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டு வருகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். திட்டமிடப்பட்டிருக்கிறது, திட்ட ஒதுக்கீடு என்று சொல்வதெல்லாம் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் திட்டமிடுவதால் ஏற்பட்ட காரணப்பெயர் என்று இப்போதல்லவா தெரிகிறது!

சோனியாவுடன் ஐவர் குழு சந்தித்து ஆலோசனை : பிடிவாதத்தை தளர்த்த முடிவு?

தி.மு.க.,வுடனான தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை ஐவர் குழுவிடம் சோனியா நேற்று கேட்டறிந்தார். தமிழக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடக்கவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை உடனடியாக முடிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, நேற்று அவரது இல்லத்தில் காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பு அரை மணிநேரம் நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., ஐவர் குழுவுடன், சென்னையில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை சோனியா கேட்டறிந்துள்ளார். பின்னர், அடுத்த கட்டமாக தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தையை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே 90 தொகுதிகள் வரை கேட்கப்பட்ட நிலையில், தற்போது 78 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியதை ஐவர் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், 53 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க., தயாராக உள்ளது. இதை மேலும் வலியுறுத்தி 60 இடங்கள் பெற்றுக் கொண்டு, தொகுதி உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற யோசனையும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. எனவே, இனியும் தொகுதி பங்கீட்டில் இழுபறியை ஏற்படுத்திக் கொண்டே செல்லாமல், சுமுக முடிவுக்கு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இரவு, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் வீட்டில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்யும் என்று தெரிகிறது.

அதிகாரி அணி தாவல்: திசை திரும்பும் ஸ்பெக்ட்ரம் வழக்கு

சிபிஐ அதிகாரியின் அணி தாவல் தற்போது அரசியல்வாதிகளிடையே பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது. நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு விசாரைணை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரித்து சிபிஐ தன்னுடைய முதல் தகவல் அறிக்கையை வரும் 31-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது.இந்நிலையில் சிபிஐ பிரிவில் <இணைஇயக்குனராக பதவி வகித்து வந்த ஒய்.பி.சிங் என்பவர் சிபிஐயிலிருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டுஅதிலிருந்து விலகி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,)அணி தாவியுள்ளார். இந்த அணி தாவல் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காரணம் ஐ.சி.சி.,யில் <உறுப்பினராக உள்ள பார்லி எம்.பி., ஷாகித் பால்வா என்பவர் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதே காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழல்வழக்கில்முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிறுவனங்களில் ஒன்றான டி.பி.குரூப்பின் தலைமைப்பொறுப்பு வகிக்கிறார்ஷாகித் பால்வா. இந்த டி.பி குரூப் நிறுவனம் அரேபிய நாட்டைசேர்ந்த எடிசாலட் என்ற நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மதிப்பில் அலைக்கற்றையை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐ.சி.சி.,யின் இந்திய பிரிவு வக்கீலான வேணுகோபால் என்பவர் ஒய்.பி.சிங்.,அணிதாவலால் 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு விசாரணை யில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில் அணி தாவுவது என்பது வழக்கை திசை திருப்பும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.ஒய்.பி.,சிங்கின் அணி தாவல் குறித்து சரத் பவார் மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'வாக்கு தரக் கூடாது, கொடிக் கம்பங்களை கெட்ட வழியில் பயன்படுத்தக் கூடாது'

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள்:

பதட்டம் ஏற்படுத்தக் கூடாது:

- எந்த கட்சியும் அல்லது வேட்பாளரும் பற்பல சமய அல்லது மொழிச் சாதியினர், வகுப்பினரிடையே பரஸ்பர வெறுப்பினை, பதட்ட நிலையை உருவாக்குகிற எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

- ஒரு கட்சி, பிற அரசியல் கட்சிகள் பற்றி குறை கூறும்போது, அவர்களுடைய கொள்கைகள், திட்டம், கடந்த கால சாதனைகள், பணிகள் ஆகியவை பற்றி மட்டுமே குறை கூறுவதாக இருக்க வேண்டும்.

- வாக்கு பெறுவதற்காக சாதி, இன உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது. மசூதிகள், மாதா கோவில்கள், கோவில்கள், வழிபாட்டிற்கான பிற இடங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது.

- வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணி நேர கால அளவில் பொதுக் கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு போய்வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்ற தேர்தல் சட்டத்தின்கீழ் "ஊழல்கள்'', "குற்றங்கள்'' என அமைகிற எல்லாச் செயல்களையும் அனைத்துக்கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

- அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் எவரும் அதனுடைய அல்லது அவர்களுடைய தொண்டர்களை எந்தவொரு தனி நபருடைய நிலம், கட்டிடம், மதில்சுவர் முதலியவற்றின் மீது அவருடைய அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், விளம்பரத் தட்டிகள் தொங்க விடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுதுதல் முதலியவற்றுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

ஊர்வலத்தை தடுத்தல் கூடாது:

- ஓர் கட்சியின் கூட்டம் நடைபெற்று வருகிற இடத்தின் வழியாக மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக் கூடாது. ஒரு அரசியல் கட்சி ஒட்டுகிற சுவரொட்டிகளை மற்றோர் அரசியல் கட்சி அகற்றுவது கூடாது.

- ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிற ஒரு கட்சி அல்லது வேட்பாளர், ஊர்வலம் தொடங்குகிற காலம், இடம், செல்ல இருக்கிற வழித்தடம், முடிவடைகின்ற நேரம், இடம் ஆகியவை குறித்து முன்னதாகவே முடிவு செய்து கொள்ள வேண்டும். சாதாரணமாக இம்முடிவை மாற்றக்கூடாது.

- ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள், போக்குவரத்திற்குத் தடை, தொந்தரவு ஏற்படாத வகையில் ஊர்வலம் தடையின்றிச் செல்வதற்குரிய ஏற்பாடுகளுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- ஊர்வலங்கள் இயன்றவரையில் சாலைக்கு வலதுபுறம் ஒழுங்காகச் செல்ல வேண்டும். மேலும் காவல் துறையினரின் கட்டளைகளையும் ஆலோசனைகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

- ஊர்வலத்தினர் தட்டிகள், கொடிக் கம்பங்கள் போன்ற பொருள்களை எடுத்துச் செல்லும்போது முக்கியமாக உணர்ச்சிவயப்படும் நேரங்களில் அப்பொருள்களை கெட்ட வழிகளில் பயன்படுத்தாதபடி அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ பெருமளவிற்கு கண்காணிக்க வேண்டும்.

- பிற அரசியல் கட்சியினரை அல்லது அவர்களுடைய தலைவர்களை குறிக்கிற கொடும்பாவிகளை இழுத்துச் செல்லுதல், பொது இடத்தில் அத்தகைய கொடும்பாவிகளை எரித்தல் போன்றவற்றிலும், இதுபோன்ற பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடுதலை குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும், அல்லது வேட்பாளரும் எண்ணிப் பார்க்கவே கூடாது.

- மைதானங்கள் முதலிய பொது இடங்களை தேர்தல் கூட்டம் நடத்துவதற்காக தனி உரிமையுடன் ஆளுங்கட்சியே பயன்படுத்தக்கூடாது. ஆளுங்கட்சி எந்த வரையறைகள், நிபந்தனைகளின் பேரில் பொது இடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதே வரையறைகள், நிபந்தனைகளின் பேரில் பிற கட்சிகளும், வேட்பாளர்களும் அப்பொது இடங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

அரசு கெஸ்ட் ஹவுஸ்கள் அனைவருக்கும் பொது:

- ஓய்வு இல்லங்கள், பயணியர் மாளிகைகள் அல்லது ஏனைய அரசு குடியிருப்பை ஆட்சியில் இருக்கும் கட்சியினர் அல்லது அக்கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே பயன்படுத்த கூடாது. அவற்றை ஏனைய கட்சியினரும், வேட்பாளர்களும் நியாயமான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆனால் கட்சி அல்லது வேட்பாளர் எவரும் அவற்றை (வளாகம் உள்பட) தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பிரசார அலுவலகமாக பயன்படுத்தவோ, பயன்படுத்திக் கொள்ளவோ, யாதொரு பொதுக்கூட்டத்தை நடத்தவோ அனுமதிக்கக் கூடாது.

- தேர்தல் நேரத்தில் செய்தித் தாள்களிலும், ஏனைய மக்கள் தொடர்பு அமைப்புகள் மூலமும், அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடுதல், செய்தித் தாள்கள் ஏனைய மக்கள் தொடர்பு அமைப்புகளை ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துவதும், அரசின் சாதனைகளை ஆளுங்கட்சியின் செல்வாக்கினை மேம்படுத்தும் நோக்குடன் விளம்பரப்படுத்துதல் ஆகியவை கவனமாக தவிர்க்கப்பட வேண்டும்.

- தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் நடப்பது பற்றி அறிவிப்பு வெளியிட்டது முதல், அமைச்சர்களும், பிற அதிகாரிகளும் அவர்களுடைய விருப்ப நிதிகளிலிருந்து மானியமோ, தொகைகளோ வழங்கக் கூடாது.

- தேர்தல் ஆணைக்குழு தேர்தலை அறிவித்தது முதல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை தூண்டும் வகையில் அமைச்சர்களும் பிற அதிகாரிகளும் இருக்க கூடாது.

வாக்கு தரக் கூடாது:

- ஏதேனும் ஒரு வகையில் மானியங்களை அறிவிக்கவோ, அது தொடர்பாக வாக்குறுதிகள் கொடுக்கவோ கூடாது.

- ஏதேனும் ஒரு வகைத்திட்டங்கள், செயல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் முதலானவற்றை செய்யக்கூடாது.

- சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்து தருவது போன்றவை பற்றி வாக்குறுதி கொடுக்க கூடாது.

- அரசுப்பணியில், அரசு நிறுவனங்கள் முதலியவற்றில் தனிப்பட்ட நியமனம் எதனையும் செய்யக்கூடாது.

- மத்திய, மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழையக்கூடாது. வேட்பாளர், அனுமதி பெற்ற தேர்தல் ஏஜெண்டு என்கிற முறையில்தான் அவ்வாறு நுழையலாம். வாக்காளர் என்ற முறையில் குறிப்பிட்ட வாக்கு சாவடிக்குள் சென்றிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி ஒதுக்கீடு: முக்கிய ஆவணங்கள் மாயம், சிபிஐ கண்காணிப்பில் 63 பேர்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமாகிவிட்டதாகவும், அவற்றை இதுவரை கண்டிபிடிக்க முடியவில்லை என்று டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

2ஜி ஊழல் விவகாரத்தில் கைதான மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், 2ஜி ஸ்பெக்டரம் உரிமம் பெற்ற குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஆவணங்கள் மட்டும் திடீர் என்று காணாமல் போய்விட்டன. அந்நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் தாக்கல் செய்த முக்கிய ஆவணங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சில முக்கிய ஆவணங்களும் மாயமாகியுள்ளன.

ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் வழங்கப்பட்டதில் விதி மீறல்கள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில் ஆ. ராசாவும், பெகுரியாவும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சித்தார்த் பெகுரியாவை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சியங்களையும், ஆவணங்களையும் அழித்து விடுவார் என்று கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சிபிஐ கண்காணிப்பில் 63 பேர்:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 10 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேரை கண்காணித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்சிடம் சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐயின் கண்காணிப்பின்கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவற்றின் அதிபர்கள் உள்ளிட்ட 63 பேர் உள்ளனர் என்றார்.

இதையடுத்து வரும் 10ம் தேதிக்குள் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தங்களது விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

திமுகவுக்கு ஆதரவு - மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்!

திமுக கூட்டணிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சலீமுதீன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குத் தமிழக மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் ஆதரவு தெரிவிப்பது என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும், 5 ஆண்டு காலமாக பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் நிறைவேற்றப்படுவதை உணர்ந்தும், பல்வேறு சமுதாய மக்களுடைய உணர்வுகளை மதித்து அதனை நிறைவேற்றக்கூடிய வகையில் நல்லாட்சி புரிந்து வரும் முதல் அமைச்சர் கருணாநிதியின் ஆட்சி தொடர தி.மு.க. வை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தமிழக மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் - பொதுச்செயலாளர் சலீமுதீன் பத்திரிக்ககயாளர்களிடம் கூறினார்.

காங்கிரஸ் கூட்டணி மிரட்டலுக்கு தி.க மூலம் பதிலடி

காங்கிரஸ் தி மு க அரசியல் கூட்டணியில் தொடர்கிற இழுபறி பற்றி திராவிடர் கழகத்  தலைவர் வீரமணி நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேற வேண்டும் என்ற வகையில்  கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
"கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக, ராமாயணக் காதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மீது சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்து விட்டது போல், கற்பனைக் குதிரையில் சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் வெளியிட்ட குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

"தி.மு.க. தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த, ஒரு ஜனநாயக பீனிக்ஸ் பறவை. குட்டக் குட்ட குனியும் போக்குக்குத் தி.மு.க., ஆட்பட்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.

நட்பு பேசிக்கொண்டே, கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல. "நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா; குத்திய பின் ஊதி, ஊதி தின்போம்" என்ற போக்கு நியாயமாகுமா? 1980ல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு திரும்ப வேண்டாம். எனவே, தி.மு.க., சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்." இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் 'தன்மானப் பேச்சு'க்கு பதிலடி போல் வீரமணியின் இந்த அறிக்கை தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், காங்கிரஸ் வட்டாரம் என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.
கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. "நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச, உங்களுடைய லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்." இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது. 

சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளைக் கூட உருவாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் "டெலி காலர் தேவை" என்று கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது போலீசாரின் பார்வையில் விழுந்தது.

அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்தப் பணிக்கான நேர்முக தேர்வுக்குச் சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களைப் பெற்றனர். இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களைத் தவறான வழிக்குக் கூட்டி செல்லும் நிறுவனம் அது என்பது தெரிய வந்தது.

உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி அந்நிறுவனத்திலிருந்து முக்கிய ஆவணங்களைப் பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது. ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒரு நாளைக்குத் தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதைக் கெடுத்து உள்ளனர்.

இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே விரைவில் உடன்பாடு எட்டப் படும் எனத் தெரிகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  66 இடங்கள் வரை ஒதுக்கக் கூடும் என்றும் உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு முறை தமிழக வந்து பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்து பேச்சு வார்த்தை விவரங்களைத் தெரிவித்தது.  சோனியாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அடுத்த பேச்சுவார்த்தை டெல்லியிலா அல்லது தமிழ்நாட்டிலா என்பதை சோனியா முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

ஆட்சியில் பங்கு குறித்த காங்கிரசின் கோரிக்கை காரணமாகவே உடன்பாடு எட்டப் படுவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இருப்பினும் இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப் படும் எனத் தெரிகிறது.

தேமுதிக, அதிமுக தொகுதி பங்கீடு அறிவிப்பு!

தமிழக அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, நடிகர் விஜயகாந்த்தின் கட்சியான தே.மு.தி.க.,வுடன் எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இறுதி அறிவிப்பு வரும் மார்ச் மாதம் நான்காம் தேதியன்று வெளியாகும் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து தங்களது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவுள்ளார் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவாகியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி - புதிய தமிழகம் - இந்திய குடியரசுக் கட்சி - அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் - பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.
கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஒரு தொகுதி வீதம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என்று  எதிர்பார்த்திருந்த வேளையில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடக்கவுள்ளதாக நேற்றுமாலை தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, பிரசாரத்தில் இறங்க, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
தற்போது தேய்பிறை நடந்து வரும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதை தே.மு.தி.க., விரும்பவில்லை அதனால் தேய்பிறை முடிந்து, வரும் 4ம்தேதி அமாவாசை அன்று இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் எனத்தெரிகிறது. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்கும் வகையில், வரும் 4ம்தேதி ஜெயலலிதாவை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் முடிவில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் அப்போதே ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.