சென்னை: ஒருவரே முதல்வராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் நாம் அல்ல. பலர் முதல்வராக வரலாம்; ஜனநாயகத்திலே அதற்கு வழியிருக்கிறது; அதற்கு முறையிருக்கிறது. ஜனநாயகம் என்றால் அதுதான். நான் 6வது முறையாக முதல்வராக வருவேனா என்பது எனது கையிலோ, உங்களது கையிலோ இல்லை. அது மக்களின் கையில் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
சென்னையில் தமிழ்நாடு கட்டுமான உயர் பயிலகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நிபந்தனையின்றி பயன்பெற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
இந்த விழாவைக் காண மழையும் வந்து மண்டபத்தின் சாளரங்கள் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த மழை நாம் விரும்புகின்ற நேரத்தில் வந்திருக்கிறது. சில பேர் எண்ணிக் கொண்டிருந்தார்கள், மழையுமில்லை, ஆறுகளில் தண்ணீரும் இல்லை, வயல்களில் விளைச்சலும் இல்லை; எல்லாம் வறண்டு போய் இந்த ஆட்சிக்கு சரியான சாபம் கிடைக்கும், எதிர்ப்பு கிளம்பும் என்றெல்லாம் எண்ணியிருந்தனர்.
இந்த வேளையில் எல்லோரையும் முந்திக் கொண்டு "நானிருக்கிறேன் தமிழக மக்களுக்கு உதவ'' என்று மழை வந்து, அணைகள் நிரம்பி, தண்ணீர் விடமாட்டேன் என்று சொன்ன கர்நாடகம் கூட, விட்டுத்தான் தீரவேண்டும் என்கிற நிலைமைக்கு மழை பொழிந்து, நம்முடைய நன்றியை மழைக்கும் தெரிவிக்க வேண்டியவர்களாக இங்கே கூடியிருக்கின்றோம்.
நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்க அழைப்பு விடுத்தீர்கள். நான் என் சார்பாக மாத்திரமல்ல, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, குறிப்பாக உழவர்கள் சார்பாக, தொழிலாளர்களின் சார்பாக மழைக்கு நன்றி கூறுகின்றேன். சிலப்பதிகார வரிகளை நினைவூட்டி - "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'' என்று சொல்லி நன்றி கூறுகின்றேன்.
இந்த நாள் மிக முக்கியமான நாள். எப்படிச் சொல்கிறேன் என்றால், தேவர் திருமகனாருடைய குருபூஜை கமுதியில் நடைபெறுகின்ற நாள். தமிழ்நாட்டிலே உள்ள எல்லா தலைவர்களும் அங்கே தங்களுடைய கட்சித் தோழர்களோடு அணிவகுத்திருக்கின்றார்கள்.
நான் எந்த ஆண்டும் தவறாமல் அந்த விழாவிற்குச் செல்லக்கூடியவன். இடையிலே உடல் நலிவுற்ற போது, ஓரிரு ஆண்டு செல்லாமல் இருந்திருப்பேனேயல்லாமல், அந்த விழாவிற்குத் தமிழக மக்களும், தமிழகத் தலைவர்களும் சென்று எந்த நினைவுச் சின்னத்தை, எந்தக் கல்லறையை எந்தத் தேவர் திருமகனுடைய சிலையை வணங்குகிறார்களோ, அந்தக் கல்லறையை தமிழகத்தினுடைய அரசுப் பொறுப்பிலே நான் இருந்த காலத்திலே தான் அமைத்துக் கொடுத்தேன்.
கமுதிக்கு செல்கின்ற வழியில், மதுரையிலே இருக்கின்ற மிகப் பிரம்மாண்டமான தேவர் திருமகனுடைய சிலையை அமைத்து, அதை அன்றைய ஜனாதிபதி கிரியை அழைத்துத் திறந்து வைத்தவனும் நான்தான். இப்போதும் தமிழ்நாட்டிலே உள்ள தேவர் சிலைகள் அனைத்தையும் விட, பிரம்மாண்டமான பெரிய சிலை மதுரையிலே இருக்கின்ற தேவர் சிலைதான் என்று மாற்றாரும் புகழ்கின்ற நிலை இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்படிப்பட்ட மகத்தான புகழ் பெற்றவர் அவர்.
தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டுமென்று பணியாற்ற வேண்டுமென்று நாம் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இன்றைய தினம் சூளுரைத்துக் கொண்டு, இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்தச் சூளுரையை தம்முடைய வாழ்நாளில் தேச பக்தராக, விடுதலை வீரராக இருந்து கொண்டு - பொறுப்பேற்றுக் கொண்டு அந்தப் போரை நடத்தியவர் தேவர் திருமகன் ஆவார்.
"நன்றி மறப்பது நன்றன்று'' என்பது தமிழர்களுடைய மரபு. அந்த மரபில் நன்றியை மறப்பவர்கள் இப்போது ஆங்காங்கு ஒருவர் இருவர் தோன்றுகின்ற இந்தக் காலக்கட்டத்தில்; அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், "நாங்கள் இருக்கிறோம் உனக்கு நன்றி பாராட்ட; நாங்கள் பாராட்டுவது நன்றி அல்ல, நாங்கள் உனக்குக் கூறுவது வாழ்த்து; இது நன்றி என்று கருதிக் கொள்ளாதே; உனக்கு வாழ்த்துக் கூறுகிறோம்'' என்று சொல்லி வாழ்த்துக் கூறியிருக்கின்றீர்கள். யாருடைய வாழ்த்து பலிக்கிறதோ, பலிக்கவில்லையோ; பாட்டாளி மக்களாகிய - தொழிலாளர் தோழர்களாகிய உங்களுடைய வாழ்த்து பலிக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த வாழ்த்துக்களை யெல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
நம்முடைய வாரியத் தலைவர்கள் பொன்குமார் ஆனாலும், மற்றும் குமரி அனந்தன் ஆனாலும், சேம நாராயணன் ஆனாலும், ரவிச்சந்திரன் ஆனாலும் அத்தனைபேரும் அமைப்புக்களுக்குத் தலைவர்களாக - வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் என்பதைவிட; அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு தலைவர்களாக இன்றைக்கு இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு.
இந்த பொன்குமார் இந்தத் தொழிலாளர்களுக்காக, பாட்டாளிகளுக்காக - அதிலும் குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்காக ஆற்றிய பணிகளை தொலைவிலே இருந்து பார்த்து - "இவர் அங்கிருக்கிறாரே?'' என்று ஏங்கியவன் நான். என்னுடைய ஏக்கத்தைப் போக்க அவர் என் பக்கத்திற்கே வந்து விட்டார்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009 முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக அரசு செயல்படுத்திவரும் 33 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி, வருமான வரம்புமின்றி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 33 நல வாரியங்களிலும் இதுவரை பதிவு செய்துள்ள 2 கோடியே 9 லட்சத்து 89 ஆயிரம் உறுப்பினர்களில் 41 ஆயிரத்து 653 பேருக்கு ரூ.108 கோடியே 42 லட்சம் செலவில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
2006, மே மாதத்திற்குப் பிறகு, இந்த 33 நல வாரியங்களின் மூலம் இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரத்து 575 அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.909 கோடியே 40 லட்சத்து 98 ஆயிரம் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் நிதி உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்குப் பிறகும் அரசியல் காரணத்திற்காக, இவை நலம் தரக்கூடிய திட்டங்கள் அல்ல; பயனுள்ள திட்டங்கள் அல்ல; என்று இழித்தும் பழித்தும் பேசுகிறவர்களும் நாட்டிலே இருக்கிறார்களே என்பதை எண்ணும்போது; அப்படிப்பட்டவர்கள் நலம் பெற என்ன திட்டத்தை அறிவிப்பது என்று புரியாமல்தான் நான் திகைக்கின்றேன். அவர்கள் உடல் நலம் கெட்டிருந்தால், நாம் அவர்களைக் காப்பாற்றலாம்; மன நலம் கெட்டவர்களை நாம் எப்படிக் காப்பாற்ற முடியும்?
பொறுப்பை உணராமல், அந்தப் பொறுப்பிலே இருந்து தங்களை விலக்கிக் கொண்டு, ஏதோ அரசாங்கம் என்றால், ஒருவரை மாற்றி விட்டு இன்னொருவர் வந்து அமரவேண்டும் என்பதுதான் அரசாங்கம் என்று ஒரு நிலை எடுத்தால்; ஜனநாயகத்தில் நான் ஒத்துக் கொள்கிறேன்; நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் ஜனநாயத்தைப் பற்றி உணராதவர்கள் அல்ல; ஒரு கட்சியே தொடர்ந்து ஆளவேண்டும்.
ஒருவரே முதல்வராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் நாம் அல்ல. பலர் முதல்-அமைச்சராக வரலாம்; ஜனநாயகத்திலே அதற்கு வழியிருக்கிறது; அதற்கு முறையிருக்கிறது. ஜனநாயகம் என்றால் அதுதான். அதற்காக ஒரே நாளில் எல்லோருமே முதல்வர் என்று சொல்லிவிட்டுப் போய் நாற்காலியிலே அமர்ந்தால், மக்கள் யார் யாரை அங்கே உட்கார வைக்க வேண்டுமோ, யார் யாரை எழுந்து வா வெளியே என்று சொல்ல வேண்டுமோ அவர்களை அப்படிச் சொல்வதற்கு, அப்படிச் செய்வதற்கு மக்கள் தயாராக இருந்தால், அதுவும் ஜனநாயகம்தான்.
எனவே, ஜனநாயகம் என்ற பெயரால் சர்வாதிகாரம் கூடாது; ஜனநாயகம் என்ற பெயரால் சர்வாதிகார ஆட்சி நடத்தக் கூடாது. ஆறாவது முறையும் நீங்களே ஆட்சிக்கு வரவேண்டும் என்றெல்லாம் இங்கே சிலர் சொன்னார்கள். அது உங்கள் கையிலும் இல்லை; என் கையிலும் இல்லை. அது இந்த நாட்டு மக்களுடைய கையில் இருக்கிறது; ஏழை, எளிய மக்களுடைய கையிலே இருக்கிறது; தொழிலாள தோழர்களுடைய கையிலே இருக்கிறது.
நண்பர்கள் சிலர் இங்கே பேசும்போது சொன்னார்கள் - இப்படித் தொழிலாளர்களுக்காக, அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட வேண்டும்; அவர்களுக்குப் பயனளிக்க வேண்டுமென்ற எண்ணம் முதல்-அமைச்சருக்கு இளமைப் பருவத்திலேயே வந்திருக்கும் போலும் என்று சொன்னார்கள். நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
"நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல; பணக்கார வீட்டுத் தாழ்வாரத்திலே தவழ்ந்தவன் அல்ல; சாதாரண மனிதன். நான் ஒன்றும் பிறக்கும்போதே வாயிலே தங்கக் கரண்டியோடு பிறந்தவன் அல்ல; வைர மாலை, முத்து மாலையைக் கழுத்திலே அணிந்து கொண்டு பிறந்தவன் அல்ல; உங்களைப் போன்ற - உங்கள் வீட்டிலேயிருக்கின்ற ஏழைத் தாய்மார்களைப் போன்ற, ஏழைத் தந்தைமார்களைப் போன்ற; சாதாரணமான தந்தை, சாதாரணமான தாய்தான் எனது தாயும், தந்தையும். அவர்கள் என்னை எப்படி வளர்த்தார்கள்?
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எனக்கு ஆருயிர் நண்பராக இருந்தவர். இன்றைக்கும் ஞாபகத்தோடு சொல்கிறேன். திருவாரூர் தெற்கு வீதியில் ராமச்சந்திரன் என்கிற ஒரு சிகையலங்காரத் தொழிலாளிதான். நான் அரசியல் தெரிந்துகொள்ள, பத்திரிகைகளைப் படிக்க நான் செல்லுகின்ற இடங்களிலே மிக முக்கியமான இடம் அவருடைய முடிதிருத்தும் நிலையம்தான். அங்கே போய் வாசக சாலைகளிலே படிப்பதைப் போல, போய் அமர்ந்ததும், அங்குள்ள பத்திரிகைகளை எடுத்துப் படிப்பேன்.
அந்தப் பத்திரிகைகளிலே "பகுத்தறிவு'', "குடியரசு'' இந்த ஏடுகள் தந்தை பெரியாருடைய கட்டுரைகள், தோழர் கைவல்ய சாமியினுடைய கட்டுரைகளை ஏந்தி வருகின்ற கட்டுரைகள் - இவற்றை எல்லாம் அந்தப் பத்திரிகைகளிலே இருக்கும். அவற்றைப் படித்துப் படித்து, நானும் சுயமரியாதை உணர்வோடு பகுத்தறிவு உணர்வோடு பெரியாருடைய கொள்கைகளை ஜாதி மதமற்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அந்த சின்னஞ்சிறு வயதிலே நாங்கள் பகுத்தறிவுப் பள்ளிக்கூடமாக அன்றைக்கு நினைத்து ஏற்றுக் கொண்டு, அந்தத் தோழமையோடு இன்றளவும் அவர்களையும் மறவாமல் எண்ணி, என்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திலேகூட அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
"முடிதிருத்துவோர்'' என்று எண்ணவில்லை. "முடி''யைத் திருத்துவோர் நாட்டிலே ஆளுகின்றவர் தவறாக நடந்தால், அந்த முடியை அமைக்கின்றவனும், திருத்துகின்றவனும் "முடி''யைத் திருத்துபவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் "முடிதிருத்துபவர்'' என்று சொன்னேன். அந்த ராமச்சந்திரன் அன்றைக்கு எனக்குக் கற்றுக் கொடுத்த, எனக்குப் பயிற்றுவித்த, எனக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை ஊக்கப்படுத்திய அந்த முறைகளெல்லாம் இன்றைக்கும் உதவுகின்றன.
நான் கலப்புத் திருமணத்தை, கூட்டத்திலே மாத்திரம் பேசுபவன் அல்ல; என்னுடைய வீட்டிலேயே அதைச் செய்து காட்டியவன். என்னுடைய மகன் அழகிரிக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் மணம் முடித்தேன்.
என்னுடைய மருமகளாக இருக்கின்ற காந்திமதி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்த பெண். "சரி, பெண்ணை எடுத்தாய் அந்தச் சமுதாயத்திற்குப் பெண்ணைக் கொடுத்தாயா?'' என்று கேட்டால்; என்னுடைய பேத்தி கலைச்செல்வியை, நாமக்கல்லிலே இருக்கின்ற ஒரு டாக்டருக்கு அருந்ததியர் வகுப்பிலே பிறந்த ஒருவருக்கு அந்தப் பெண்ணைக் கொடுத்திருக்கிறேன். எனவே, ஜாதி, மத வித்தியாசத்தை என்றைக்கும் பார்த்தவன் அல்ல நான்.
இன்றைக்கும் என்னுடைய அந்தரங்க உதவியாளராக என்னுடைய அன்புக்குரிய உதவியாளராக - இடைவிடாமல் எனக்குப் பணியாற்றுகின்ற உதவியாளராக என்னைக் காப்பாற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற உதவியாளராக இருக்கின்ற தம்பி அருந்ததிய வகுப்பைச் சேர்ந்தவர்தான். எனக்கு ஜாதி, மதம் இவைகளிலே நம்பிக்கை உள்ளவர்களைப் பிடிக்காதது மாத்திரமல்ல; நானும் ஜாதி, மத நம்பிக்கையில்லாதவனாகத்தான் என்னுடைய பொது வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றேன்.
அதனால்தான் இங்கே நண்பர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப்போல், "இவன் எப்படி இந்தத் தொழிலாளர்களுக்கெல்லாம் பாதுகாவலனாக இருக்கின்றான்? என்ன காரணம்?'' என்று யாரும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நானே சாதாரண, சாமான்ய, பின்தங்கிய, மிக மிகப் பின்தங்கிய - பின்தங்கிய, பின்தங்கிய என்று எத்தனை பின்தங்கிய என்று போட்டுக் கொண்டாலும், அவ்வளவு பின்தங்கிய சமுதாயத்திலே பிறந்தவன் என்ற காரணத்தாலேதான்.
இன்றைக்கு அந்த மக்களுக்காக உழைக்கின்ற அந்த உள்ளத்தை நான் பெற்றிருக்கின்றேன். ஏதோ பாராட்டினார்கள், முதல்வர் என்பதற்காக வாழ்த்தினார்கள் என்று அலட்சியப்படுத்தாமல், உங்களுடைய வாழ்த்துக்களை எல்லாம் பொன்னே போல் போற்றி; நீங்கள் காலால் இட்ட கட்டளையை, தலையால் செய்கின்ற ஒரு தொண்டனாக என்றென்றும் இருப்பேன்.
ஆணவத்தால், அகம்பாவத்தால் முதல்-அமைச்சர் என்ற அந்த கர்வத்தால், உங்களை நான் பார்க்கமாட்டேன். உங்களுடைய தோழன், தொண்டன், உறவினன், உடன்பிறப்பு என்ற முறையிலேதான் என்றென்றும் உங்களோடு இருப்பேன் என்றார் கருணாநிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக