இந்தியாவில் மலேரியாவில் பலியாவோரின் எண்ணிக்கையானது மிக குறைவாக மதிப்பீடப்பட்டுள்ளதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ‘ தி லான்செட்’ மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் பேர் மலேரியாவால் இந்தியாவில் பலியாவதாக கூறியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு கூறும் எண்ணிக்கையை விட பதிமூன்று மடங்கு அதிகம்.
அறிக்கையில் பலியானவர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 86 சதவீதம் பேர் மருத்துவ கவனிப்பு இல்லாமல் வீட்டிலேயே பலியாகிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது தற்போது உலக சுகாதார அமைப்பு கூறி வரும் எண்ணிக்கை என்பது நம்ப கூடியது அல்ல என்றும், அந்த எண்ணிக்கையானது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது என்றும் அறிக்கை கூறுகிறது.
ஆனால் ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள எண்ணிக்கையை மறுதலித்துள்ள உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கை வீடு வீடாக சென்று எடுக்கப்பட்டது என கூறியுள்ளது. மேலும் அறிக்கை கூறும் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால் இந்த ஆய்வை நடத்திய குழுவில் இடம்பெற்று இருந்த பேராசிரியர் பிரபாத் ஜா, தங்களுடைய அறிக்கை உண்மை நிலவரத்தை காண்பிக்கிறது என கூறியுள்ளார்.
விரைவாக சிகிச்சை கொடுத்தால் குணமாக கூடிய நோய் தான் மலேரியா. ஆனால் உயிரை காப்பாற்ற கூடிய சிகிச்சை பலருக்கு கிடைக்காமல் இருக்கிறது என்பதை தான் இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக