வியாழன், 28 அக்டோபர், 2010

காஷ்மீர் : அருந்ததிராய்க்கும், கிலானிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என டெல்லி கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் ஹூர்ரியத் தலைவர் கிலானியும் கைதுச் செய்யப்படுவர் என்ற அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அவர்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீதிக்காக அழுபவர்களை தேசத்துரோகம் என்ற பிரிட்டீஷ் காலத்து சட்டத்தின் மூலம் அமைதியாக்க அரசு முயல்கிறது என கல்கத்தாவில் வெளியிடப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களும் அடங்கும் 17 பிரமுகர்களின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

அருந்ததிராய்க்கு எதிரான நடவடிக்கை குடிமக்களின் அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை தடைச் செய்வதற்கான முயற்சி என மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கருத்தரங்கை ஏற்பாடுச் செய்த கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிடிகல் ப்ரிஸனர்ஸ் அமைப்பும் அருந்ததிராய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இந்தியாவின் அரசியல் சட்ட குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. நீதிக்கான கோரிக்கைகளை அடக்கி ஒடுக்குவதற்கு பதிலாக கஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு பரிகாரம் காண அரசு முன்வரவேண்டும்.

ஐ.நாவின் மேற்பார்வையில் கஷ்மீரில் விருப்ப வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமீத் பட்டாச்சார்யா, சுஜாதோ பத்ரா, மெஹர் எஞ்சினியர், சுதேஷன் எஞ்சினியர், திலோத்தமா முகர்ஜி, ரஞ்சன் சக்ரவர்த்தி, கல்யாண்ராய், ஹிமாத்ரி சங்கர் பானர்ஜி, ஹெச்.என்.தோபா, ரூப்குமார் மர்மன், அவிக் மஜூம்தார், சுபாஷ் சக்ரவர்த்தி, தேபாசிஷ் கோஷ்வாமி, சஞ்சீப் முகர்ஜி, அபிஜித் ராய், ஸ்மிதா கோஷ் ஆகியோர் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: