வியாழன், 28 அக்டோபர், 2010

காஷ்மீர் விவகாரத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை: தொல்.திருமாவளவன் அறிக்கை !

காஷ்மீர் விவகாரத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை: தொல்.திருமாவளவன் அறிக்கைவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.

`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாக பேசினர்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சோனியாகாந்தி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: