புதன், 27 அக்டோபர், 2010

கேள்வி கேட்பவர்களை சிறையில் தள்ளுவது துக்ககரமானது: அருந்ததிராய்!

உலகில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் டெல்லி கருத்தரங்கில் நான் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினேன் என பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கஷ்மீர் சுதந்திரம் குறித்து நான் பேசிய கருத்துக்களுக்காக, என் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டு கைதுச் செய்யப்படலாம் என செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன்.

கஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக தினந்தோறும் என்ன கூறுகிறார்களோ, அதைத்தான் நான் கூறினேன். வரலாற்று ஆசிரியர்களும், பல ஆண்டுகளாக எதை எழுதுகிறார்களோ அதைத்தான் நானும் பேசினேன். எனது உரையின் நகலை வாசிக்க எவராவது தயாரானால், அது அடிப்படை நீதிக்கான தேவை என காண இயலும்.

உலகத்தில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் நான் பேசினேன். பிறந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட கஷ்மீரி பண்டிட்டுகளின் துயரமான வாழ்க்கையைக் குறித்தும், சுடாலூர் கிராமத்தில் இடுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்ட கஷ்மீரில் மரணமடைந்த தலித் ராணுவ வீரர்களுக்காகவும்தான் நான் பேசினேன்.

நேற்று தெற்கு கஷ்மீரின் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு பயணம் செய்தேன். 47 தினங்கள் நீண்ட போராட்டத்திற்கு காரணமான, ஷோபியானில் ஆஸியாவும், நிலோஃபரும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் என் நினைவலையில் வந்தன. அவர்களின் கொலையாளிகள் இதுவரை நீதியின் முன்னால் நிறுத்தப்படவில்லை. ஆஸியாவின் சகோதரரையும், நிலோஃபரின் கணவரையும் நான் கண்டேன்.

துயரத்திலும் கோபத்திலும் ஆழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் நடுவில் நாங்களிருந்தோம். இந்தியாவிலிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த அவர்கள், சுதந்திரம் ஒன்றே வழி என நம்புகின்றனர்.

கண்ணின் வழியாக தோட்டக்கள் பாய்ந்து சென்ற கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை நான் கண்டேன். கல்வீசியதற்கு தண்டனையாக அனந்தநாக்கில் தனது நண்பர்களான 3 இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து கையிலுள்ள நகங்களை பிய்த்து எறிந்ததாக என்னுடன் பயணம் செய்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

நான் துவேசப் பிரசங்கம் நிகழ்த்தியதாகவும்,இந்தியாவை பிரிக்கக் கோரியதாகவும் சில பத்திரிகைகள் எழுதுகின்றன.அன்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக எழுந்ததுதான் எனது வார்த்தைகள். மக்கள் கொல்லப்படக் கூடாது, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படக் கூடாது, சிறையிலடைக்கப்படக் கூடாது, நான் இந்தியக்காரன் எனக் கூறுவதற்காக அவர்களுடைய நகங்கள் பிய்த்து எறியப்படக் கூடாது என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே எனது உரை அமைந்தது.

சமூகம் ஒன்றாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். எழுத்தாளர்களின், சிந்தையில் தோன்றுவதை, பேசுவதை தடுத்து அமைதியாக்கும் இந்த தேசத்தை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.

சமூகக் கொலைக்காரர்கள், பெரிய நிறுவனங்களை நடத்தும் ஊழல்வாதிகள், வன்புணர்ச்சியை செய்பவர்களும், ஏழைகளில் ஏழைகளான மக்களை இரையை வீசி பிடிப்பவர்களும் சுதந்திரமாக உலாவுகின்றனர். ஆனால் நீதிக்கேட்டு பேசுபவர்களை சிறையில் தள்ள நினைக்கும் இந்த தேசத்தை நினைத்து துக்கப்படுகிறேன்." இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை: