செல்பேசிகளின் வாயிலாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை குறைந்தது 6 மாதத்திற்காவது சேமித்து வைக்குமாறு செல்பேசி நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.செல்பேசிகளின் வாயிலாக பரிமாறிக்கொள்ளப்படும் குறுஞ்செய்திகள் பாதுகாப்புத் தொடர்பான தேவைகளுக்கு அத்தியாவசியமானது என்றும், அதனை குறைந்தது 6 மாத காலத்திற்குச் சேமித்து வைப்பது அவசியம் என்றும் உளவு அமைப்புகள் கருதுவதால் இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தியா முழுவதும் 70 கோடிப் பேர் செல்பேசிகளை பயன்படுத்துகின்றனர். இவர்கள் நாள் ஒன்றிற்கு 13 முதல் 15 ஆயிரம் கோடி குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது குறிப்பிட்ட எண்களில் பரிமாறிக்கொள்ளப்படும் குறுஞ்செய்திகளை மட்டும் ‘சட்டப்பூர்வ’மாக உளவு அமைப்புகள் ஆய்வு செய்கின்றன.
ஆனால் அது போதவில்லை என்ற காரணத்தால் எல்லா குறுஞ்செய்திகளையும் 6 மாதத்திற்கு சேமித்து வைக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இது தங்களுடைய இயக்கச் செலவை கடுமையாக அதிகரிக்கும் என்று கூறியுள்ள செல்பேசி நிறுவனங்கள், இதற்கு ஆகும் செலவை தாங்கள் பயனாளர்களிடமிருந்தே வசூவிக்க வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளனவாம்.செல்பேசி மற்றும் தொலைபேசி தொடர்பான தனிமைக் கொள்கையை சட்டப்பூர்வமாக அரசு வரையறை செய்ய வேண்டும் என்று அரசிடம் செல்பேசி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதுமட்டுமின்றி, செல்பேசியில் அழைப்பவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை 50 மீட்டர் சுற்றளவிற்குள் துல்லிமாகக் கண்டுபிடிக்கும் இ911 அதி நவீன வசதிகளை எல்லா செல்பேசி டவர்களிலும் பொறுத்துமாறும் செல்பேசி நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளதாம். இந்த அதிநவீன கருவி தற்போது அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது பொறுத்தப்படும் செல்பேசி கோபுரத்திறகு அருகிலுள்ள மற்ற இரு கோபுரங்களோடு ஒரு முக்கோண கோட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அந்த செல்பேசி கோபுரத்திற்கு வரும் அழைப்பைக் கொண்டு, அழைப்பவர் எங்கிருந்து அழைக்கிறார் என்பதையும், அழைக்கப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதையும் துல்லியமாக அறிய முடியும் என்றும், இதனைக் கொண்டு, குற்றச் செயல் கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கொள்ளை, தீ, அவசர உதவி ஆகியவற்றையும் உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கருவி ஒவ்வொன்றின் விலையும் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டாலர்கள் ஆகும் என்றும், நமது நாட்டிலுள்ள நான்கரை இலட்சம் செல்பேசி கோபுரங்களிலும் இதனைப் பொறுத்துவதற்கு ஆகும் செலவினால் தங்களுடைய இயக்கச் செலவு 50 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறியுள்ள செல்பேசி நிறுவனங்கள், இத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக