திங்கள், 1 நவம்பர், 2010

தேர்தலுக்காக ஜெ. பேசி வருவதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்-கருணாநிதி!

சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி வருவதையும், எழுதி வருவதையும் மக்கள் ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதா, காவிரி பிரச்சினை பற்றி, தனது நிழல் எழுத்தாளர் எழுதிக்கொடுத்த அறிக்கைகளின் மூலம்; நீட்டி முழக்கியிருக்கிறார். இதே ஜெயலலிதாதான், 7.11.2003 அன்று தமிழக சட்டப் பேரவையில் காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசும்போது: ``காவிரியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், அது மாநில அரசின் குற்றம் அல்ல; பிரதமரின் குற்றம், மத்திய அரசின் குற்றம் என்று பகிரங்கமாகச் சொல்கிறேன்'' என்று பேசினார்.

2002-ம் ஆண்டில் காவிரி ஆணையத்தை, செயல்படாத ஆணையம் என்றும்; பல் இல்லாத ஆணையம் என்றும் முதல்வர் என்கிற தன் நிலை மறந்து வர்ணித்தவர் ஜெயலலிதா.

2002-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காவிரி ஆணையம் தன் கடமையைச் செய்யவில்லை என்றும், அது கர்நாடகத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றும், எனவே அதன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்தப் பிரச்சினையில் பிரதமரின் செயல்பாடும் திருப்தியாக இல்லை என்றும், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதாதான் இன்றைக்கு ஏதோ காவிரி நதிநீர் ஆணையத்தின்மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பாசாங்கு செய்துகொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

காவிரி ஆணையம் பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சபர்வால், அர்ஜித் பசாயத் ஆகியோர்; ``பிரதமருக்கு 2002 நவம்பர் 5-ந் தேதியிட்டு ஜெயலலிதா எழுதிய கடிதத்தை படித்து வேதனைப்பட்டோம். ஒரு மாநில முதல்வராக இருப்பவர் அதற்குரிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். காவிரி ஆணையத்தைப் பற்றி ஜெயலலிதா கூறியுள்ள கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது. அப்படி பேசியிருப்பது முறையற்றதுமாகும்.

காவிரி ஆணையத் தலைவரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லியிருப்பது சரியல்ல. இன்னும் நான்கு நாட்களுக்குள் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி, காவிரி ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்க வேண்டும். ஆணையத்தைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் ஜெயலலிதா சொன்ன கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று கண்டனம் தெரிவித்தவுடன், அப்படியே பல்டி அடித்து, காவிரி ஆணையத்தின்மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆணையத் தலைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பிரதமர் மற்றும் காவிரி ஆணையம் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதாதான்; இன்றைக்கு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுக்குமேயானால், கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்துக்கோ வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்றும் பொறுப்பினை காவிரி நதிநீர் ஆணையத்திடம் ஒப்படைக்கலாம் என்று; இதுவரை அவர் மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக - கடந்த காலத்தில் அவர் சொன்னவற்றையெல்லாம் பொதுமக்கள், குறிப்பாக காவிரி தீரத்து விவசாயப் பெருங்குடி மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தீய நம்பிக்கையில்; அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு எந்தப் பிரச்சினை பற்றி எழுதவும், பேசவும் உரிமை உண்டு. ஜனநாயகம் அனுமதி அளித்திருக்கும் உரிமையாகும் அது. ஆனால், அந்த உரிமையை ஜெயலலிதா தவறாகப் பயன்படுத்துவதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. பொதுவாக அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட நாம் அதை பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் முதல்வர், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு வந்ததற்குப் பிறகு; இந்தப் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியிருப்பதால்தான்; முழுக்க முழுக்க உண்மைக்கு எதிராக இருக்கிறதே என்று உள்ளம் பதை பதைக்கிறது.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் ஒன்று அமைத்திட வேண்டும் என்று முதல் முதலாக 17.1.1970-ல் மத்திய அரசு க்கு கடிதம் எழுதியது நான்தான்.

8.7.1971 அன்று நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு  சட்டப் பேரவையில் முதல்முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்ததும் நான்தான்.

1989-ல் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, இந்தியப் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களிடம், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நான்தான்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம்  கேட்டபோது, வி.பி.சிங் தொலைபேசியிலே 1990-ம் ஆண்டு என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நடுவர் மன்றம்தான் வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தியவன்தான் நான். எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசும் உச்சநீதிமன்றத்திலே கருத்தறிவித்து, அதன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு காவிரி நடுவர் மன்றம் அமைய முழுமுதல் காரணமாக இருந்தது நான் என்பதை காவிரிப் பிரச்சினை பற்றிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

நடுவர் மன்றத்தின் மூலம் இடைக்கால தீர்ப்பு வழங்கவேண்டும் என்று 28.7.1990 அன்று கழக ஆட்சியிலேதான் கேட்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பு தர தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் தெரிவித்தபோது; கழக ஆட்சியில் 10.1.1991 அன்று உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, அதன் விளைவாக, அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பு கிடைத்தது.

ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது, 9.6.1992 அன்று மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர்; நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டி கடிதம் எழுதினார். டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உயிராதாரமாக விளங்கும் இந்த முக்கியமான பிரச்சினையில்; மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்திற்கு 9 மாதங்கள் கழித்து பதில் எழுதிய ஜெயலலிதா தான்; இன்றைக்கு காவிரிப் பிரச்சினை பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

1991-ம் ஆண்டு கிடைத்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினை; அதற்கு பிறகு 5 ஆண்டுகள் ஆட்சியிலே இருந்தபோது ஓராண்டு கூட அதனை நிறைவேற்றிக் கொடுக்க மனமும், முயற்சியும் இல்லாதவராக - இயலாதவராக இருந்த ஜெயலலிதாதான்; இன்றைக்கு தமிழக அரசுக்கு ஏராளமான அறிவுரைகளை வாரி வழங்கியிருக்கிறார்.

நான்காவது முறையாக நான் முதல்வராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான், 1998-ம் ஆண்டில் 9 மணி நேரம் இடைவிடாமல் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய் தமிழகம்-கர்நாடக அரசுகளுடன் கலந்து பேசி; அதன் விளைவாக காவிரி நதிநீர் ஆணையமும், கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. அதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் அனுமதியையும் பெற்றவன் நான். அப்போது, மத்திய அரசுக்கு தோழமைக் கட்சியாக இருந்தது அ.தி.மு.க. எனினும், பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர் ஆகியோரது கூட்டு முயற்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்து ஏடுகளும் வரவேற்றன.

ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தால்கூட கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும்! என்று 21.3.1991-ல் திருவாய் மலர்ந்தருளிய ஜெயலலிதாதான்; இன்றைக்கு நடுவர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசை குறை கூறியிருக்கிறார்.

2001 முதல் 2006 மே மாதம் வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, எத்தனை ஆண்டுகள் காவிரியில் ஜுன் மாதம் 12-ந் தேதியே மேட்டூர் அணையை விவசாயத்திற்காக திறந்திருக்கிறார்?

2002-ம் ஆண்டில் 6.9.2002 அன்றும்; 2003-ம் ஆண்டில் 7.10.2003 அன்றும்; 2004-ம் ஆண்டில், 12.8.2004 அன்றும்; 2005-ம் ஆண்டில் 4.8.2005 அன்றும் தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவரது ஆட்சியின்போதுதான் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவையை மறந்திட வேண்டிய கொடுமை நிகழ்ந்தது. அப்போதெல்லாம் கர்நாடக அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகை வாங்கி தமிழக விவசாயிகளுக்கு ஜெயலலிதா வழங்கினாரா? அப்படி வழங்கியிருந்தால் இப்போது தமிழக அரசுக்கு அறிவுரை சொல்ல அவர் அருகதை உள்ளவர் ஆவார்.

தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை அண்டை மாநிலங்களில் இருந்து கோரிப் பெற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. இந்த பொறுப்பை நிறை வேற்றிட, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா அரசுகளுடன் சுமுக உறவை வளர்த்துக் கொண்டு, நமக்கு தேவையான தண்ணீரைப் பெற வேண்டிய ஒரு அணுகு முறையைத்தான் கழக அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஜெயலலிதாவைப் போல எந்தப் பிரச்சினையிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியிலும்; ஏனோதானோ என்ற முறையிலும் கழக அரசு நடந்துகொள்ள எப்போதும் நினைத்ததில்லை.

சுமுகமான அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் கழக அரசு, இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாத நிலை ஏற்பட்டபோது, கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பின்வருமாறு கடிதங்கள் அனுப்பியதோடு மட்டும் நின்று விடாமல், கர்நாடக முதல்வருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன .

தலைமைச் செயலாளரிடமிருந்து கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 3.7.2010 அன்றும்; என்னிடமிருந்து கர்நாடக முதல்வருக்கு 18.7.2010 அன்றும்; பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளரிடமிருந்து கர்நாடக அரசு நீர் ஆதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு 24.9.2010 அன்றும் கடிதங்கள் எழுதப்பட்டன. மீண்டும் கர்நாடக முதல்வருடன், நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஆணையிடுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு நேர்முகக் கடிதம் ஒன்றையும் 2.10.2010 அன்று அனுப்பினேன். அதன் பின்னர், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு, இடர்ப்பாடு காலத்தில் தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைப்படி தண்ணீரை விடுவிக்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 4.10.2010 அன்று அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவரும் சூழ் நிலையைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் கர்நாடக முதல்வருக்கு சம்பா பயிருக்கு தேவையான தண்ணீரை விடுவிக்க கடிதம் ஒன்றை, 25.10.2010 அன்று எழுதி, அக்கடிதத்துடன் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி மற்றும் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் 26.10.2010 அன்று கர்நாடக முதல்வரை நேரடியாக சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்த முயற்சிகளுக்கிடையே, மத்திய அரசு தலையிட்டு, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை விடுவிக்க அறிவுறுத்தக் கோரியும், காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட வேண்டியும்; தமிழக முதல்வரிடமிருந்து இந்தியப் பிரதமருக்கு 29.8.2010 நாளிட்டு கடிதமும் மற்றும் அதிகாரிகள் நிலையில் 13.8.2010 மற்றும் 24.9.2010 நாளிட்டு கடிதங்களும் அனுப்பப்பட்டன.

காவிரிப் பிரச்சினையில், கழக அரசு காலத்தே ஆற்றிவரும் பங்களிப்புகளின் ஆழத்தையும், அருமையையும்; ஜெயலலிதாவின் எதிர்மறை அணுகுமுறையையும், ஆணவப் போக்கையும் தமிழக விவசாயிகள் நன்றாக அறிந்து வைத்திருக்கும்போது; சட்டப்பேரவைத் தேர்தலை மனதிலே வைத்துக்கொண்டு, உள்நோக்கத்தோடு காலந்தாழ்த்தி இப்போது அவர் வெளியிடும் பொருளற்ற அறிக்கைகளை எல்லாம் மக்கள் கிஞ்சிற்றும் பொருட்படுத்த மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: