சியோல் சென்றுள்ள பிரதமர் வெள்ளிக் கிழமையன்று நாடு திரும்பியதும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அ.ராசா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2G ஸ்பெகட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அ.ராசாவின் அணுகுமுறையே இந்த இழப்புக்கு முழு காரணம் என்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தன்னுடைய அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து அ.ராசாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
ஊழலுக்கு மத்திய அமைச்சரே காரணம் என்று தலைமைக் கணக்கு அதிகாரியே நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்நிலையில் இத்தகைய அமைச்சரை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்திருக்க மன்மோகன் சிங் அறவே விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
அக்டோபர் மாதத்தின் இறுதியில் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் உத்தேசித்திருந்ததாகவும் தீபாவளி, ஓபாமா வருகை மற்றும் சியோல் பயணம் என தொடர் அழுத்தத்தில் இருந்ததால் இயலவில்லை எனவும் சியோல் பயணத்திலிருந்து திரும்பியதும் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக