செவ்வாய், 30 நவம்பர், 2010

திமுக, காங். இடையிலான அமைச்சர் பதவி பேச்சுக்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட நீரா, பர்கா

டெல்லி:        2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவுக்காக காங்கிரஸ்  தரப்பிலும், காங்கிரஸுக்காக திமுக தரப்பிலும் புரோக்கர்கள் போல செயல்பட்டுள்ளார் நீரா ராடியா. அவருக்கு உதவியாக இருந்துள்ளனர் பர்கா தத் போன்ற பத்திரிக்கையாளர்கள்.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே அமைச்சர் பதவிகள் குறித்த பேரம் சூடு பிடித்திருந்த நேரத்தில், 2009ம் ஆண்டு மே மாதம் ராடியாவுக்கும், கனிமொழி, ராஜா, பர்கா தத், வீர் சிங்வி உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த பேச்சுக்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.

நீரா ராடியாவுக்காக பர்காவும், பர்காவுக்காக நீராவும் இரு கட்சிகளின் தலைவர்களிடமும் மாறி மாறிப் பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடல்களின் சில முக்கிய பகுதிகள் இதோ...

முதல் தொலைபேசிப் பேச்சு-2009, மே 22ம் தேதி காலை 9.48 மணி

ராடியா- ஹாய், தூக்கத்தைக் கலைத்து விட்டேனா?

பர்கா- இல்லை, இல்லை, ஏற்கனவே நான் எழுந்து விட்டேன். இரவு முழுவதும் சரியாகவே தூங்கவில்லை. இன்னும் பிரச்சினை தொடர்கிறதே..

ராடியா- பிரச்சினை என்னவென்றால் அவர்கள் (காங்), அவருடன் ( கருணாநிதி  ) நேரடியாகப் பேச வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதுதான் இப்போது பிரச்சினை.

பர்கா - ஆமாம், அதேசமயம், அவர்கள் (திமுக) வெளிப்படையாக மீடியாக்கள் மூலம் பேசி விட்டதால் பிரதமர் சற்று நெருக்கடியில் உள்ளார்.

ராடியா - ஆனால், பாலுதான் அதை செய்கிறார். இருப்பினும் அப்படிச் செய்யுமாறு கருணாநிதி அவருக்கு உத்தரவிடவில்லை.

பர்கா - அப்படியா ?

ராடியா - ஆமாம் கருணாநிதி அப்படிக் கூறவில்லை. காங்கிரஸிடம் கூறி விட்டு (திமுகவின் நிலையை) வந்து விடுமாறுதான் கருணாநிதி கூறியிருந்தார்.

பர்கா - ஆனால் பாலு எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விட்டார்.

ராடியா - ஆமாம், அந்த சமயத்தில் மீடியா ஆட்கள் வெளியில் நின்றிருந்தனர்.

பர்கா - அடக் கடவுளே, இப்போது என்ன செய்யலாம், நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும். அதை சொல்லுங்கள்.

ராடியா - நான் அவரது (கருணாநிதி) மனைவியுடனும், மகளுடனும் இரவு நீண்ட நேரம் பேசினேன். பிரச்சினை என்னவென்றால் காங்கிரஸுக்கு பாலுவைப் பிடிக்கவில்லை. பாலுவைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. கருணாநிதியுடன் அவர்கள் (காங்.) நேரடியாகப் பேச வேண்டும். கருணாநிதியுடன் நேரடியாக அவர்களுக்கு நல்ல உறவு உள்ளது.

பர்கா - சரியாக சொன்னீர்கள்.

ராடியா- ஆனால் பாலு முன்போ அல்லது தயாநிதி மாறன்  முன்போ அவர்களால் (காங்கிரஸ் தலைவர்களால்) கருணாநிதியிடம் பேச முடியாது.

பர்கா - ஆமாம்.

ராடியா - எனவே அவர்கள் நேரடியாக பேச வேண்டும். இதற்கு தமிழகத்திலேய நிறைய காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பேசலாம். எனவே நேரடியாக கருணாநிதியிடம் போய் தெளிவாக அவர்கள் பேசி விடலாம். அடுத்த பெரிய பிரச்சினை என்னவென்றால், அழகிரி. பாலுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி தரும்போது, தனக்கு துணை அமைச்சர் பதவி தருவதை அழகிரி விரும்பவில்லை.

பர்கா - சரிதான். ஆனால் பாலுவை நீக்க கருணாநிதி முன்வருவாரா?

ராடியா - பாலுதான் பிரச்சினை என்றால், நிச்சயம் அவரை நீக்க கருணாநிதி முடிவெடுப்பார் என்றே நான் கருதுகிறேன்.

பர்கா - ஆனால் இப்போது பெரிய பிரச்சினை இலாகாக்கள் தொடர்பாகத்தானே?

ராடியா- இல்லை, அவர்கள் இலாகா பற்றி இப்போது சொல்லவில்லை.அதுகுறித்து விவாதிக்கக் கூட இல்லை.

பர்கா- ஆனால் போக்குவரத்து  , மின்சாரம், தொலைத் தொடர்பு, தகவல் தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய துறைகளை திமுக கேட்பதாக காங்கிரஸ் கூறுகிறதே..

ராடியா - நான் சொல்வதை தயவு செய்து கவனியுங்கள்.

பர்கா - சரி

ராடியா - கனிக்கு (கனிமொழி) தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தயாநிதி மாறன் கேபினட் அமைச்சராக இருக்கும்போது நீ இணை அமைச்சராக இருப்பது சரியல்ல என்று கனியிடம் அழகிரி கூறி வருகிறார்.

பர்கா - அப்படியா

ராடியா- அதேசமயம், மாறனும், நான்தான் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரே நபர் என்று அனைவரிடமும் (காங்கிரஸ் வட்டாரத்தில்) கூறிக் கொண்டிருக்கிறார்.

பர்கா - அது எனக்குத் தெரியும்.

ராடியா - ஆனால் அது சரி இல்லைதானே?

பர்கா -இல்லை, அதை நான் அறிவேன்.

பர்கா - ஆனால், மாறன் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று கருணாநிதியிடம் காங்கிரஸ் கூற வேண்டியது அவசியம்.

பர்கா - ஓ.கே. அதுகுறித்து மீண்டும் அவர்களுடன் பேசுகிறேன்.

ராடியா - ஆமாம், யார் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன். பாலுவுக்கு ஒரு ஒதுக்கீடு அவசியம். அதுகுறித்து அவர்களிடம் சொல்வது அவசியம். மாறன் பற்றி நாங்கள் எதுவும் இப்போது பேசவில்லை.

--

2வது அழைப்பு - 2009, மே, காலை 10.47

ராடியா - பர்கா, காங்கிரஸ் தரப்பில் நடப்பதை நேற்றே சொன்னேன். காங்கிரஸ் தரப்பிலிருந்து யார் திமுகவுடன் பேசி வருகின்றனர் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

பர்கா - ஆமாம், அனேகமாக மாறனாக இருக்கும்.

ராடியா - ஆனால் கட்டமைப்புத் துறையை மாறனுக்கோ அல்லது பாலுவுக்கோ தர முடியாது என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பர்கா - இல்லை,அதை அவர்களே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

ராடியா- பிரதமரே அதைச் சொல்லியுள்ளார்.திமுகவுக்கு தொழிலாளர் நலத்துறை, உரத்துறை, கெமிக்கல், தொலைத் தொடர்பு மற்றும் ஐடி தருவதாக கூறியுள்ளனர். ராஜாவுக்கு ஐடி, தொலைத் தொடர்பு தருவதாக கூறியுள்ளனர். இதை கருணாநிதிக்கும் தெரிவித்து விட்டனர்.

பர்கா - அப்படியா !

ராடியா - மாறன் உண்மையைப் பேசுவதில்லை என்பதால் நேரடியாக அவர்கள் கூறியிருக்கக் கூடும்.

பர்கா - இல்லை, மாறன் மூலமாகவே இதை அவர்கள் கூறியிருப்பதாக கருதுகிறேன்.

ராடியா - இப்போது அவர்கள் கனியுடன் பேச விரும்புகின்றனர். பின்னர் அவரது தந்தையுடன் பேச விரும்புகின்றனர். ஏனென்றால் பிரதமருடன் கருணாநிதி பேசியபோது கனிதான் மொழி பெயர்த்துக் கூறினார். அது 2 நிமிடமே நடந்த குறுகிய சந்திப்பு.

நீங்கள் கூறுவதை ஆலோசிக்கிறேன்.அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் கூறினாராம்.

பர்கா - அவர்கள் ஆர்சிஆரிலிருந்து (டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை இல்லம், அதாவது பிரதமரின் இல்லம்) அவர்கள் வந்தவுடன் நான் பேசுகிறேன்.

ராடியா - அவர் (கனிமொழி) என்ன நினைக்கிறார் என்றால் யாராவது ஒரு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், தன்னுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார்.

பர்கா- அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் ஆசாத்துடன் பேசுகிறேன். ஆசாத் வெளியில் (பிரதமர் இல்லத்திலிருந்து ) வந்தவுடன் நான் பேசுகிறேன்.

3வது அழைப்பு - மே 22, பிற்பகல் 3.31 மணி

ராடியா - அவருடன் (கனிமொழி) அவர்கள் பேசுகிறார்களா?

பர்கா - ஆமாம். பேசுகிறார்கள்.

ராடியா - யார், குலாமா (குலாம் நபி ஆசாத்)?

பர்கா - குலாம்தான்.

ராடியா - ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர் (கனி) ஐந்து மணி விமானத்தில் ஏறி அவர் சென்னை போகப் போகிறார். ராஜா மட்டுமே பதவியேற்பு விழாவில் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா) பங்கேற்க கட்சி மேலிடம் கூறியுள்ள போதிலும், தயாநிதி மாறனும் கலந்து கொள்கிறார். இதுகுறித்து கருணாநிதியை சந்தித்த அவர், தன்னை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அகமது படேல் குறிப்பிட்டுக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பர்கா - ஆனால் இது உண்மை அல்ல என்று அகமது கூறியுள்ளார்.

ராடியா -ஆனால் கருணாநிதி பெரும் குழப்பத்தில் உள்ளார்.

பர்கா - இல்லை, கனியும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாமே?

ராடியா - இல்லை, தனது தந்தை சொல்லி விட்டதால் பங்கேற்க கனி விரும்பவில்லை. இதனால் திரும்பப் போகிறார். தந்தை சொல்வதைத்தானே அவர் கேட்க முடியும். குலாமிடம் பேசுகிறீர்களா?

பர்கா - இப்போதே அவரிடம் பேசுகிறேன்.

ராடியா - கனி ஐந்து மணிக்குக் கிளம்புகிறார், ஐந்து மணிக்கு அவருக்கு விமானம், மறந்து விட வேண்டாம்.

4வது அழைப்பு-2009, மே 22, மாலை 6.09

பர்கா - காங்கிரஸின் நிபந்தனை என்னவென்றால், பாலுவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறை கூடாது என்பதே. பாலு என்றில்லை, திமுகவுக்கு அந்தத் துறை கிடையாது. சரியா?

ராடியா - சரிதான். ஆனால் பாலு போன்றோர் தனி நபர்கள் அல்லவே. நேற்று வரை 3 பிளஸ் 4 என்று பேசி வந்தனர். ஆனால் பின்னர் மாறனையும் சேர்த்து 4 பிளஸ் 3 என்று பேசினர்.

பர்கா- ஓ.கே.

ராடியா - தற்போது மீண்டும் 3 பிளஸ் 4 என்ற நிலைக்கே மீண்டும் வந்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்து பேசியதுதானே?

பர்கா - இல்லை, அப்படியானால், இது ஏன் முதலிலேயே அவர்களுக்கு சரி என்று படவில்லை?

ராடியா - அழகிரியால்தான். அழகிரியை அமைச்சராக்குவதாக இருந்தால் அவருக்கு கேபினட் கிடைக்காது. (பர்கா குறுக்கிட்டு அப்படியா என்கிறார்), ஆமாம், அவருக்கு கேபினட் கிடையாது.

பர்கா - அப்படியானால் அழகிரிக்கு என்ன தரப் போகிறார்கள்?

ராடியா - அவருக்கு சுகாதாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதுவும் கூட கேபினட் பொறுப்பு அல்ல. மாறன் கிடையாது, ராஜா கிடையாது, பாலுவும் கிடையாது.

பர்கா - அழகிரிக்கு சுகாதாரத் துறை கொடுத்ததே காங்கிரஸ் செய்த மிகப் பெரிய தியாகம்தான். காரணம், திமுகவுக்கு சுகாதாரத் துறை கிடையாது என்று முதலில் காங்கிரஸ் கூறி வந்தது. இப்போது அவர்கள் விட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால் அழகிரிக்கு சுகாதாரத் துறை, கேபினட் பொறுப்பு தர முடியாதா என்ன?

ராடியா - ஒத்துக் கொள்கிறேன். அப்படியானால் ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவியே கிடைக்கும். அதேபோல பாலுவுக்கும் இணை அமைச்சர் பதவி தானா?

பர்கா - இல்லை இல்லை. பாலுவுக்கு கனரக துறை கிடைக்கலாம். அப்படிக் கிடைத்தால் அழகிரிக்கு உரத்துறை கிடைக்கும். ஒருவேளை பாலுவுக்கு உரத்துறை கிடைத்தால், அழகிரிக்கு இந்த சுகாதாரத் துறை கிடைக்கும்.

ராடியா - மாறனுக்கு தொலைத் தொடர்பு ஐடி துறை.

பர்கா - ஆமாம். ராஜாவுக்கு இணை அமைச்சர் பதவி.

ராடியா - யாருக்கு?

பர்கா - ராஜாவுக்கு, இல்லையா?

ராடியா - இல்லை இல்லை, அப்படி இல்லை, என்னை நம்புங்கள்

4வது அழைப்பு - 2009, மே 22, இரவு 7.23

பர்கா - பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தரப்பில் அனைவரும் பங்கேற்க போய்விட்டனர். எனவே உயர் மட்டத் தலைவர்களுடன் என்னால் பேச முடியவில்லை. இப்போதுதான் திரும்பி வந்துள்ளேன். இனிமேல்தான் தொடர்ச்சியாக பேசப் போகிறேன்.

ராடியா- கனி இப்போதுதான் சென்னைக்குப் போயுள்ளார். இப்போதுதான் அவரிடம் பேசினேன்.

பர்கா - தயாநிதி மாறன் எங்கே?

ராடியா - பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. அவரை கட்சி மேலிடம் அழைத்து விட்டது. அகமது படேல் என்னை பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அவர் கருணாநிதியிடம் சொன்னபோது, அப்படியானால் நீ காங்கிரஸிலேயே சேர்ந்த விடு என்று கருணாநிதி கூறி விட்டார். இதனால் அவர் பங்கேற்கவில்லை.

ராஜாவை மட்டுமே பங்கேற்குமாறு கட்சி மேலிடம் கூறியதால் அவர் மட்டும் பங்கேற்றார். அவரும் கூட 8.40 மணிக்கு விமானம் ஏறுகிறார்.

இவ்வாறு போகிறது தொலைபேசி உரையாடல்.

இந்த அமைச்சர் பதவி தொடர்பாக திமுக, காங்கிரஸுக்கு இடையே மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில் பல புரோக்கர்களும் செயல்பட்டு, இரு தரப்புக்கும் சாதகமான முறையில் சூழ்நிலைகளை மாற்ற உதவியுள்ளனர் என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.

ஆனால், இதில் புரோக்கராக எல்லாம் தான் செயல்படவில்லை என்றும் செய்திகளை சேகரி்க்க பல தரப்பையும் தொடர்பு கொள்வது போலவே நிரா ராடியாவுடன் பேசியதாகவும் பர்கா தத் விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: