திங்கள், 8 நவம்பர், 2010

இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் அதிபர் ஒபாமா

டெல்லி: மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார்.

18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.

தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.

ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.

தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.

ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: