மும்பை: இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நாளை மும்பை வருகிறார். அவரது வருகையையொட்டி, வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவருடன் அவரது மனைவி மிஷெல், மகள்கள் ஷாஷா, மலியா, தொழிலதிபர்கள், அதிகாரிகள் என மாபெரும் குழு வருகிறது.
மும்பையில் 2 நாட்கள ஒபாமா தங்குகிறார். இதற்காக தாஜ் ஹோட்டல், கிராண்ட் ஹயாத் ஹோட்டல் ஆகியவற்றில் உள்ள 800 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தனது `ஏர் போர்ஸ்-ஒன்' விமானத்தில் மும்பை வரும் ஒபாமா, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொலபா கடற்படை தளத்துக்குச் சென்று, அங்கிருந்து காரில் தாஜ் ஹோட்டலுக்கு செல்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு தாஜ் ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சிலரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
பிறகு காந்தி மியூசியத்தை பார்வையிடும் அவர், மாலையில் வர்த்தக சபைக் கூட்டத்தில் பேசுகிறார்.
7ம் தேதி ஒரு பள்ளிக்குச் சென்று மாணவ-மாணவிகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஒபாமா, பின்னர் புனித சேவியர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்கிறார். அங்கு மெளர்யா ஷெரட்டன் ஹோட்டலில் தங்குகிறார்.
டெல்லியில் மொகலாய மன்னர் ஹூமாயூன் கல்லறையை பார்வையிடும் அவர், பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார்.
8ம் தேதி மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் அளிக்கப்படும் ராணுவ வரவேற்பை ஒபாமா ஏற்றுக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்திக்கின்றனர்.
அதன் பிறகு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசுகிறார்.
9ம் தேதி காலை அவர் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ்,
இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்துதல், சர்வதேச பொருளாதார நிலைமை, தீவிரவாத அச்சுறுத்தல், ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்துவார்.
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்தது தொடர்பான பிரச்சனை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தருவது, அமெரிக்க விசா கட்டண உயர்வு விவகாரம், அணுக்கழிவு மறு சுழற்சி பயன்பாட்டுக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அமெரிக்க வழங்க மறுக்கும் விவகாரம் ஆகிய முக்கிய பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் அடிப்படை கட்டுமானப் பணிகள் பற்றிய பிரச்சனையையும் அமெரிக்காவிடம் மத்திய அரசு எழுப்பும்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் சுகாதாரம், கல்வி, வேளாண்மை, மாசற்ற எரிசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றார்.
இந்தியாவில் ஒபாமாவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. தேசிய பாதுகாப்பு படை, துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் போலீசாருடன் அமெரிக்க அதிபரின் சிறப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஒபாமாவின் பாதுகாப்புக்காக 6 கனரக கவச வாகனங்களும், அதி நவீன தொலைத் தொடர்பு வசதி கொண்ட பிரத்தியேக வாகனமும் மும்பை, டெல்லிக்கு வந்துவிட்டன.
அமெரிக்காவில் இருந்து 30 மோப்ப நாய்களும் வருகின்றன.
மும்பையில் ஒபாமா தங்கி இருக்கும் 2 நாட்களும் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பல் உள்பட 34 போர் கப்பல்கள் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட உள்ளன.
ஒபாமா வருகையையொட்டி, அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான 2 போர் விமானங்களும், 4 ஹெலிகாப்டர்களும் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து விட்டன.
மும்பை, டெல்லியில் ஒபாமாவின் விமானம் தரை இறங்குவதற்கு 6 நிமிடங்கள் முன்பும், தரை இறங்கிய பிறகு 6 நிமிடம் வரையும் வேறு விமானங்கள் தரை இறங்கவோ, அல்லது புறப்பட்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக