சனி, 18 டிசம்பர், 2010

தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணம் செல்லும்-சுப்ரீம் கோர்ட்

டெல்லி: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இக்கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் பெருமளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை முறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக அரசுக்கும் ஏராளமான புகார்கள் சென்றன.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில்ஒரு நபர் கமிட்டியை தமிழக அரசு நிர்ணயித்தது. இந்த கமிட்டி கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அரசுக்குப் பரிந்துரைத்தது. இதை இந்த ஆண்டு முதலே அமல்படுத்துமாறும் அது அரசுக்குத் தெரிவித்தது. இதை ஏற்ற தமிழக அரசு புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.

ஆனால் இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக கோவிந்தராஜன் கமிட்டி கட்டண விகிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதை விசாரித்த நீதிபதி வாசுகி, கட்டண விகிதத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வில்சன் அப்பீல் செய்தார். அதேபோல பெற்றோர் சங்கங்கள் சார்பிலும் அப்பீல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்ரபால் தலைமையிலான பெஞ்ச் இடைக்காலத் தடையை ரத்து செய்தது. மேலும், நடப்பு ஆண்டு முதலே கல்விக் கட்டண நிர்ணயத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தன.

இந்தச மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிய கல்விக்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் செல்லும்.

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ஏப்ரல் மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: