சென்னை: SMS எனப்படும் குறுஞ்செய்தி மூலம் பெண்களை உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுக்கும் செல்போன் தகவல்கள் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சென்னை நகரில் வசிக்கும் ஏராளமான செல்போன்களுக்கு வந்த ஆபாச தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த ஆபாச குறுஞ்செய்தி ஏராளமான பெண்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குடும்ப பெண்களை உல்லாசத்துக்கு அழைப்பதுபோல குறுஞ்செய்திகளில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டிலிருந்து ஒரு ஆசாமி சென்னை வந்திருப்பது போலவும், அவர் ஒரு பெண்ணை உல்லாசத்துக்கு அழைப்பதுபோலவும் ஆங்கிலத்தில் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்துதான் ஆபாச தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் வந்தன.
இந்த ஆபாச குறுஞ்செய்திகள் குறித்து சென்னை விபசார தடுப்பு காவல்துறையினருக்கும் மத்திய சைபர் குற்றப்பிரிவு காவல்துறைக்கும் ஏராளமான புகார்கள் குவிந்தன. சைபர்கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த செல்போன் குறுஞ்செய்திகள் மாலத்தீவு நாட்டில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது தெரிய வந்தது.. இதனையடுத்து அந்த நபரை பிடிப்பதற்காக இந்த செல்போனில் பெண் காவலர் ஒருவரை பேச வைத்தனர். ஆனால் மறுமுனையில் யாரும் பதில்ம் பேசவில்லை. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற ஆபாச தகவல்களால் கவுரவமான குடும்ப பெண்கள் பலர் மன நல பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள். செல்போன் மூலமும், ஆன்-லைன் மூலமும் விபசார தொழில் நடக்கிறது. எனவே இதுபோன்ற கலாசார சீரழிவுக்கு செல்போன்களையும், இன்டர்நெட்டையும் தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடல் கடந்து ஆபாச தகவல் அனுப்புவோரை சர்வதேச காவல்துறையின் உதவியோடு பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக