தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி 23 மற்றும் ஃபிப்ரவரி 27ம் தேதி வழங்கப்படுகிறது.
போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 1995 முதல் நடக்கிறது. இந்தாண்டு 16வது முகாமின் முதல் சுற்று ஜனவரி 23ம் தேதியும், இரண்டாம் சுற்று ஃபிப்ரவரி 27ம் தேதியும் இந்தியா முழுவதும் நடக்கிறது. இம்முகாமின் நோக்கம் நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதாகும். தஞ்சை மாவட்டத்தில் 23ம் தேதி நடக்கும் முதல் சுற்றில் இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 685 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் ஆறாயிரத்து 40 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்கள், 178 மேற்பார்வையாளர்கள், 120 மருத்துவ அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். நகரப்பகுதியில் 128 மையங்கள், ஊரகப்பகுதியில் 1,382 மையங்கள் என 1,510 சொட்டு மருந்து மையங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நகராட்சி மகப்பேறு மையம், நகராட்சி மருந்தகம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்கள், கோவில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் 23ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 24 மணி நேரமும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்துத்துறை என பல துறையினர், தொண்டு நிறுவனம், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் கழுவினர் ஆகியோர் இத்திட்டப்பணியில் ஈடுபடுகின்றனர்.
முகாமில், உள்ளூர், வெளியூர் குழந்தைகள் என ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் நச்சுத்தன்மையற்ற மார்க்கர் பேனா மூலம் அடையாள மை வைக்கப்படும். வேலை நிமித்தமாக, வேறு காரணத்துக்காக தற்காலிகமாக தங்கி இருக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள், நாடோடிகளாக வாழ்வோரின் குழந்தைகளும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க நடமாடும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக