புதன், 2 மார்ச், 2011

காங்கிரஸ் கூட்டணி மிரட்டலுக்கு தி.க மூலம் பதிலடி

காங்கிரஸ் தி மு க அரசியல் கூட்டணியில் தொடர்கிற இழுபறி பற்றி திராவிடர் கழகத்  தலைவர் வீரமணி நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேற வேண்டும் என்ற வகையில்  கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
"கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக, ராமாயணக் காதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மீது சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்து விட்டது போல், கற்பனைக் குதிரையில் சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் வெளியிட்ட குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

"தி.மு.க. தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த, ஒரு ஜனநாயக பீனிக்ஸ் பறவை. குட்டக் குட்ட குனியும் போக்குக்குத் தி.மு.க., ஆட்பட்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.

நட்பு பேசிக்கொண்டே, கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல. "நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா; குத்திய பின் ஊதி, ஊதி தின்போம்" என்ற போக்கு நியாயமாகுமா? 1980ல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு திரும்ப வேண்டாம். எனவே, தி.மு.க., சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்." இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் 'தன்மானப் பேச்சு'க்கு பதிலடி போல் வீரமணியின் இந்த அறிக்கை தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், காங்கிரஸ் வட்டாரம் என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: