ஞாயிறு, 6 மார்ச், 2011

தாமஸ் விவகாரத்தில் பிரதமரை குறை கூறும் வேகம் தணிகிறது: எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா புதிய விளக்கம்

மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக தாமசை நியமித்ததற்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் வேகம் தணிகிறது. தாமஸ் நியமனம் தொடர்பாக, பிரதமரை மேலும் கேள்விகள் கேட்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொண்டு, இதர விஷயங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவரை, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மூன்று பேர் கமிட்டி நியமித்தது. ஆனால், "தாமஸ் நியமனம் செல்லாது' என, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "தாமசை நியமித்ததற்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். தாமஸ் நியமனம் செல்லாது என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். இந்த தவறுக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரை இந்த பதவியில் அமர்த்தியதில் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் ஏதும் இல்லை. இது போன்ற தவறு மீண்டும் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும்' என்றார்.

இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் விடுத்த அறிக்கையை நான் ஏற்கிறேன்.இது போதுமானதென்றும் நினைக்கிறேன். இத்துடன் இந்த பிரச்னையை விட்டு, அடுத்த விஷயத்திற்கு செல்ல வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ஜ.,வை சேர்ந்த ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி மற்றும் கட்சியின் தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் "லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனத்திற்கு பிரதமர் பொறுப்பேற்றால் மட்டும் போதாது. பார்லிமென்டில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர். இதனால், சுஷ்மா சுவராஜுக்கும், பா.ஜ., கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இதுபற்றி நேற்று சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: கட்சிக்கும், எனக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. தாமஸ் நியமன விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, பிரதமர் மன்மோகன் ஏற்கனவே கூறியுள்ளார். அதை கோரிக்கையை தான் ஜெட்லி விடுத்துள்ளார்.அதனால், இந்தப் பிரச்னை தொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் நான் பெரியளவில் தெரிவிக்கவில்லை. மேலும், இணையதளத்தில் 140 வார்த்தைகளில் மட்டுமே விஷயங்களை தெரிவிக்க வேண்டும். அதனாலும், விரிவாக எதையும் கூறவில்லை.எனக்கும், ஜெட்லிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதை போல காட்ட மீடியாக்கள் முற்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்பு ஆணையர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதே விஷயத்தை பிரதமர் ஏற்கனவே கூறி விட்டார்.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இருந்தாலும், இந்த லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமன விவகாரம் இனி பெரியளவில் பேசப்படாது என தெரிகிறது. ஏனெனில், பிரதமர் மன்மோகன் சிங்கே தவறுக்கு பொறுப்பேற்று விட்டதால், அவரை இனிமேல் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது குறையும். பிரச்னையின் வேகம் தணிந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சி தலைவர்கள் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: