செவ்வாய், 13 செப்டம்பர், 2011

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளரான இந்த எல்மர்தான், அந்த வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றிய முழு விவரங்களை விக்கிலீக்ஸுக்கு தந்தவர். இதற்காக இருமுறை கைதானவரும்கூட. வரி ஏய்ப்பை சர்வ தேச அளவில் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ஏராளமாக உள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்து, கேமேன் ஐலேண்ட் போன்ற தீவுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

இந்தியா பெரிய நாடு. எந்த உலக நாட்டிடமும் பேசி தகவலை வாங்கும் திறன் மிக்க நாடு. ஆனாலும் ஏனோ அந்நாட்டு அரசு எந்த ஆர்வமும் இதில் காட்டவில்லை.

உண்மையில் வரி ஏய்ப்பை கடுமையாக ஒழிக்க போராடும் நாடு அமெரிக்காதான். சமீபத்தில் தங்கள் வங்கியில் கறுப்புப் பண கணக்கு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை சுவிஸ் வங்கி அமெரிக்க அரசுக்கு கொடுத்துவிட்டது.

வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் உண்மையான கிரிமினல்கள். அவர்களை இந்தியா போன்ற அரசுகள் நினைத்தால் கண்டுபிடித்து வரி ஏய்ப்பை ஒழிக்க முடியும்," என்றார்.

இந்தியர்களின் கறுப்புப் பண கணக்கு பற்றி ஏராளமான தகவல்களை எல்மர் வெளியிட்டிருந்தாலும், அவர் வெளிப்படையாக அதுகுறித்துப் பேசுவது இதுவே முதல்முறை.

இப்போதைக்கு கறுப்புப் பண கணக்கு வைத்திருப்போர் பெயரை வெளியிட எல்மர் மறுத்தாலும், விரைவில் வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பல கறுப்புப் பண முதலைகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: