செவ்வாய், 13 செப்டம்பர், 2011

உள்ளாட்சித் தேர்தலில் பணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் சாதி, மதம் மற்றும் பணத்தின் அடிப்படையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது குறித்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு கலெக்டர் சகாயம் பேசியதாவது, மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

பிரச்சினைகள் ஏற்படும் முன், அசம்பாவிதங்களை தடுக்க காவல் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். உத்தப்புரம், வில்லூர் ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள சாதி பிரச்சினையால் பலமுறை அமைதி குழுக்கள் அமைக்கப்பட்டும், இதுவரை முடிவு காண முடியவில்லை.

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 2 சமுதாய இளைஞர்களை அழைத்து பேசி தீர்வு காண காவல்துறை மற்றும் வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும்.

அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மதம், பணத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் போடும் முறை இருக்க கூடாது. இதை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை: