வியாழன், 28 அக்டோபர், 2010

15 பில்லியன் டாலர் வர்த்தகம் : மலேசியா இந்திய ஒப்பந்தம்!

கோலாலம்பூர்: வரும் 2015-ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டாலர் தடையில்லா வர்த்தகம் நடைபெறுவதற்கான புதிய ஒப்பந்தத்தில் இந்தியா வும் மலேசியாவும் கையெழுத்திட்டன.

ஜப்பான் சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மலேசிய பிரதமர் முகமது நஜிப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கலாசார ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் வர்த்தகம் உள்ளிட்ட 5 புதிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.

வரும் 2015-ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டாலர் அளவுக்கு இருநாடுகளும் பரஸ்பர வர்த்தகம் செய்வது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது (Comprehensive Economic Cooperation Agreement). இந்த ஒப்பந்தப்படி, இருநாடுகளும் தடையில்லா வர்த்தக உறவை மேற்கொள்ளவிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மலேசிய பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இத்திட்டத்தை அரசாங்கம் மட்டும் தனியாக செயல்படுத்த முடியாது. ஏனெனில் பெரிய அளவிலான திட்டங்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலர் தொகை தேவைப்படுகிறது.

எனவேதான் இதில் தனியார் நிறுவனங்களின் முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தனியார் நிறுவனங்கள் இதில் பங்குபெறும் வகையில் எளிய முறையிலான நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.

இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். வரும் ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியுடன் சேர்ந்து மலேசிய நிறுவனங்களும் வளர வேண்டும். எனவே மலேசிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வரவேண்டும் என வரவேற்கிறேன்.

கருத்துகள் இல்லை: