வியாழன், 28 அக்டோபர், 2010

தெரிந்தும் ஏன் தயக்கம்?

சுனாமி என்ற சொல்லைக் கேட்டாலே அச்சம் தருகிறபடியாக தமிழகம் மிகக் கசப்பான அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்தோனேஷியாவில் புதன்கிழமை நடைபெற்ற ஆழிப்பேரலை தாக்குதலில் 272 பேர் இறந்தனர். 400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. ஆழிப்பேரலையால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 2004-ம் ஆண்டு எப்படி சுமத்ரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஆழிப்பேரலை ஏற்பட்டு 7 நாடுகளில் 2.3 லட்சம் மனித உயிர்களைப் பலிகொண்டதோ அதே பகுதியில், ஆனால் சற்று குறைந்த அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள ஆழிப்பேரலைதான், இப்போது இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள ஆழிப்பேரலை இழப்புகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆழிப்பேரலை இந்தியாவை மீண்டும் தாக்கக்கூடாது என்பது நமது விருப்பம். பிரார்த்தனையும்கூட. ஆனால், அப்படியொரு சம்பவம் மீண்டும் நடந்தாலும் அது நம்மைப் பாதிக்காதபடி செய்துகொள்ள வேண்டிய மதிநுட்பம் நமக்குத் தேவையாக இருக்கிறது.

 எடுத்தவுடன் இயற்கை தனது சீற்றத்தைக் காட்டுவதே இல்லை. பல்வேறு விதமாக உணர்த்துகிறது. மனிதர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள பல வாய்ப்புகளைத் தருகிறது. இப்போதும்கூட, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் கடல்நீர் உள்வாங்கும் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை ஓர் எச்சரிக்கையாகவே கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிறது.

 இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதும், ஆழிப்பேரலை உருவாகி கரைவாழ் மக்களைத் தாக்குவதும் அடிக்கடி நிகழ்வதாக இருக்கும்போது, கடலோர வாழ்விடங்களில் அலையாத்திக் காடுகளை வளர்த்து, ஆழிப்பேரலைகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் அவசியம் வங்கக் கடலோரம் வாழும் அனைத்து மக்களுக்கும் இருக்கிறது.

 அலையாத்திக் காடுகள் அல்லது சுரபுன்னைக் காடுகள் என்று சொல்லப்படும் இக்காடுகள் கடலோரத்தில் வளரும் தன்மையவை. இந்தியாவில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசப் பகுதியில் சுந்தரவனம் எனப்படும் இந்த அலையாத்திக் காடுகள் சுமார் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ளன. இவை கடலோர உயிரினப் பெருக்கத்துக்கு பேருதவி புரிவதுடன், புயல்களின் தாக்கத்தைக் குறைப்பதிலும், ஆழிப்பேரலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பேருதவி புரிகின்றன என்பதுதான் இவற்றின் சிறப்பு.

 தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இத்தகைய அலையாத்திக் காடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இதற்குப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

 தமிழ்நாட்டில் பிச்சாவரம் பகுதியில் மட்டுமே இப்போது அலையாத்திக் காடுகள் உள்ளன. இத்தகைய காடுகள் நாகை பகுதியிலும், வேதாரண்யம் பகுதியிலும் பெருமளவு அழிந்துவிட்டன. அதன் விளைவுகள்தான் நாகப்பட்டினம் பகுதி 2004 ஆழிப்பேரலையின்போது ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிட்டது. உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழலுக்குப் பொருந்தாத தொழில்துறை மற்றும் மனித நடவடிக்கையால் இருபதாம் நூற்றாண்டில் மட்டும் 30 விழுக்காடு அலையாத்திக் காடுகள் அழிந்துவிட்டன என்கிறது ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு. 1980-ம் ஆண்டு முதலாக ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் கேடுகளால் மட்டுமே ஐந்தில் ஒரு பங்கு அலையாத்திக் காடுகள் அழிந்து போயின என்று புள்ளிவிவரம் தருகிறது.

 சென்னையில் அடையாறு மற்றும் கூவம் நதியும்தான் ஆழிப்பேரலையில் மிகப்பெரும் சீற்றத்தை உள்வாங்கி, நகர மக்களைக் காப்பாற்றின. மேற்கு கடற்கரைச் சாலையில் பல இடங்களில் சவுக்குத்தோப்புகள்தான் ஆழிப்பேரலையின் தீவிரத்தைச் சற்று குறைத்தன. இத்தகைய சம்பவங்களை நேரடியாகப் பார்வையிட்ட பின்னரும்கூட, கடலோரங்களில் அலையாத்திக் காடுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது சரியல்ல. எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளைகூட அலையாத்திக் காடுகள் வளர்ப்பு தொடர்பான ஆய்வுகளைச் செய்துள்ளது.

 தமிழகக் கடலோரப் பகுதியில் எங்கெல்லாம் அலையாத்திக் காடுகள் முன்பு இருந்தன, இப்போது எந்தெந்தப் பகுதியில் அலையாத்திக் காடுகளை வளர்க்க முடியும் என்கிற ஆய்வைத் தமிழக அரசு நடத்த வேண்டும். இந்த ஆய்வின் அடிப்படையில் இக்காடுகளை கடலோரத்தில் உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

 கடலோர வாழிடங்களுக்கான ஒழுங்காற்று விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி எந்தெந்தக் கடலோரப் பகுதிகளில் எத்தனை மீட்டர் தொலைவில் வசிப்பிடங்கள் தொழில்கூடங்கள் அமையலாம் என்று விதிமுறைகள் உள்ளன. இந்தச் சட்டத்தை முழுமையாகக் கடைப்படிப்பது நாளை கடலோரம் வாழும் மக்களின் உயிர்காக்க உதவும்.

 ஆழிப்பேரலை வந்தால் அது ஏற்படுத்தும் சேதத்தின் மதிப்பையும், உயிரிழப்புகளையும், அரசு செய்யும் செலவுகளையும் கணக்கிட்டால், இத்தகைய அலையாத்திக் காடுகளை வளர்க்கும் செலவுகள் மிகச் சொற்பமாகத்தான் இருக்கும். இது தெரிந்தும் தயக்கம் காட்டுவது, நமது அறியாமையையும் அரசின் அசிரத்தையையும்தான் காட்டுகிறது.....

கருத்துகள் இல்லை: