புது டில்லி: அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வருகையை முன்னிட்டு புது டில்லியில் வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
வருகிற நவம்பர் 7, 8 - ந்தேதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் ஒபாமா, குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறார். இந்தியா ராணுவத்திற்கு அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து புதிய வகை விமானங்கள் வாங்குவதற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதற்கிடையே ஒபாமா, அவருடைய அதிகாரிகள் குழு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கென புது டில்லியின் சொகுசு ஹோட்டல்கள் அனைத்தும் நவம்பர் 5 ந்தேதி முதல் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. ஒபாமா மற்றும் அமைச்சர்கள் மெளர்யா ஹோட்டலிலும், உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் தாஜ் மற்றும் தாஜ் பேலஸ் ஹோட்டல்களிலும் தங்க உள்ளனர். இவர்களின் ஒரு நாள் ஹோட்டல் வாடகை மணிக்கு 15 இலட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஒபாமாவின் வருகையை முன்னிட்டு, புது டில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஒபாமா மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்களுக்கு வெளிபுற பாதுகாப்பும், அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒபாமாவின் ரகசிய பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உள்புற பாதுகாப்பும் அளிக்க உள்ளனர். மேலும் ஒபாமாவின் அதிகாரிகள் சிலர், டில்லியின் புகழ்பெற்ற சந்தைகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் டில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக