உத்தர்காண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள இந்திய நுட்பவியல் கழகத்தில் வியாழக் கிழமையன்று நடைபெற்ற லிப்ஸ்டிக் இடும் போட்டி கடும் கண்டனத்திற்குள்ளாகி இருக்கிறது.
ஐஐடி ரூர்கியில் ஆண்டுதோறும் மாணவர் விழா நடைபெறும். இந்த விழாவில் மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும். இந்த ஆண்டு "தாம்ஸோ 10" என்ற பெயரில் அவ்விழா நடைபெற்றது. வியாழக் கிழமையன்று நடைபெற்ற இவ்வாண்டு விழாவில் விசித்திரமான போட்டி ஒன்றுக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் மாணவிகளுக்கு லி்ப்ஸ்டிக் இடவேண்டும். கையால் இடுவது என்று நினைக்க வேண்டாம். மாணவர்கள் லிப்ஸ்டிக்கை தங்கள் வாயில் வைத்தவாறு தங்கள் எதிரே வந்து நிற்கும் மாணவிக்கு லிப்ஸ்டிக் இட வேண்டும். வாயில் வைத்திருக்கும் லிப்ஸ்டிக் கீழே விழாமல் குறைந்த நேரத்தில் நேர்த்தியாக லிப்ஸ்டிக் வரையும் மாணவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்த இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மிகவும் கேவலமான போட்டியை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில் பாரதீய வித்யா பரீஷத், ஹிந்து ஜார்கன் மஞ்ச் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ரூர்கி ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் ஈடுபட்டவர்கள் மீது நிர்வாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐஐடியின் கதவை நாங்கள் பூட்டுவோம் என்று ஏபிவிபி தலைவர் ராஜன் சிங் புந்திர் கூறினார்.
இதனையடுத்து இந்நிகழ்ச்சி குறித்து விசாரிக்க உத்தர்காண்ட் மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து மாணவர்களை ஐஐடி நிர்வாகம் நீக்கி உள்ளதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. ஐஐடியில இத்தகயை நிகழ்ச்சி நடத்தப்பட்டது தமக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று ஐஐடி ரூர்கியின் பதிவாளர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக