18 வயது இளம் பெண்கள் 1 இலட்சம் முதல் 2 இலட்சம் ரூபாய் வரையில் அவரவர் அழகுக்குத் தக்கவாறு விற்பனை செய்யப்படுகிறார்கள்.
இவை நடப்பது கல்வியறிவிலும் செல்வத்திலும் பின் தங்கியுள்ள பீகார் மாநிலத்திலோ ராஜஸ்தானிலோ அல்ல. இந்தியாவின் கனவுலக நகராக மாறிவரும் மென்பொருள் ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் பெங்களூரு அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தில்தான் இத்தகைய அவலம் தொடருகிறது.
குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கர்நாடகாவின் பிட்னால் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ரூ. 60 ஆயிரத்திற்கு விற்கப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதியன்று புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று சம்பவங்கள் இதுபோன்று நடப்பதாக காவல் துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ஒரு பெண்ணின் அழகும் அவளின் வயதும்தான் அவளுக்கான விலையைத் தீர்மாணிக்கின்றன. 18 வயதுக்குக் குறைவான இனம் பெண்கள் 1 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாய்கள் வரை விலை போகின்றனர். விதவைகளாக இருந்தால் அவர்களின் விலை 50 ஆயிரம் ரூபாய்களுக்கும் குறைவாக இருக்கும். சிலபோது அவர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகக் கூட விற்பனை செய்யப்பட்டுள்ளார்கள் என்று KIDS என்ற கர்நாடகா ஒருங்கிணைந்த வளர்ச்சி சேவை அமைப்பின் தலைவர் பங்கஜா கல்மாத் கூறுகிறார்.
இத்தகைய திருமணங்களை நடத்தி வைப்பதில் ஏஜெண்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர். வடக்கு கர்நாடகாவில் அனைத்து கிராமங்களிலும் இந்த ஏஜெண்டுகளுக்கு துணை ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். தங்கள் கிராமத்தில் ஏழை விதவைகள், திருமணமாகாத இளம் பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்டிர் ஆகியோர் இருந்தால் அந்தப் பெண்களின் குடும்பத்தாரிடம் தங்கள் பேரத்தை தொடங்குகின்றனர். பேரம் படிந்ததும் இளம் பெண்களை வாங்கியவர் அந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் இத்தகைய திருமணங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது என்பது எவருக்குமே தெரியாது. தங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது, தங்கள் தாய்வீட்டிற்கு இப்பெண்கள் வந்து செல்வதோடு சரி என்கிறார் ஆய்வாளர் வீரேந்திர குமார்.
இவ்வாறு காணாமல் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக உறுதி செய்கிறார் பால விகாஸ் அகாடமியின் திட்ட இயக்குநர் மாலதி. இந்தப் பெண்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தால் அது நண்மையே. இல்லை எனில், இந்தத் தவறான செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இளம் பெண்களைக் கடத்தும் ஏஜெண்டுகள் குறிவைப்பது தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையே என்று கூறுகிறார் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பட்டீல்.
தார்வாட் மாவட்டத்தின் 20 கிராமங்களில் தன்னுடைய சேவையைச் செய்து வரும் KIDS அமைப்பின் பங்கஜா, குறைந்தது 10 கிராமங்களில் இது நடைமுறையில் இருப்பதாகக் கூறுகிறார். 2003-2004ஆம் ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயாளிகளைக் கண்டறிவதற்காக தங்களுடைய அமைப்பின் மூலம், லாட்ஜ், தாபா மற்றும் தெருவோர செக்ஸ் தொழிலாளர்கள் சுமார் 1200 பேருக்கு சோதனை செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பெண்கள் இளவயதில் திருமணம் செய்விக்கப்பட்ட பெண்களே. இவர்களை விலைக்கு வாங்கி அழைத்துச் செல்வோர், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குப் பின் இவர்களை மும்பை அல்லது புனேயில் விபாச்சரம் செய்வதற்காக விற்று விடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
வல்லரசுக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் அபலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் விருப்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக